இராசராசன் சிலை
பகுதி 2 · 2 / 2
இதுபோன்று 1966-ஆம் ஆண்டிலும் அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சியின் முதல்வர் பக்தவத்சலம் அவர்கள். “வேலூர்க் கோட்டைக்குள்ளே மிகப் பெரிய ஆலயம் இருக்கிறது; அதற்குள்ளே ஆண்டவன் சிலை இல்லை - ஆகவே அங்கே ஒரு சிலை வைக்க வேண்டும். அதோடு, வேலூர்க் கோட்டையைப் பராமரிக்கும் பொறுப்பை மாநில அரசுத் தொல்பொருள் காப்புத் துறைக்கு அளிக்க வேண்டும்” என்று டெல்லிக்குக் கடிதம் எழுதினார்.
முடியாது - என்பதுதான் டெல்லி தந்த பதில்! முடியாது என்னும் பதில் முன்னேற்றக் கழக ஆட்சிக்கு மட்டும் கிடைக்கும் பதில் அல்ல, காங்கிரஸ் ஆட்சிக்கும் கிடைத்த பதில் அதுதான்.
வேலூர்க் கோட்டையில் ஆண்டவனை வைப்பதாயிருந்தால் - தஞ்சைக் கோயிலில் தமிழகத்தை ஆண்டவனை வைப்பதாயிருந்தால் - ‘முடியாது’ என்னும் பதிலைதான் அவர்கள் சொல்லி வருகிறார்கள் என்பதைக் கண்ணுற்ற பிறகும் இராசராசசோழன் சிலை அமைப்பு பற்றிக் கேலி பேசுகிற பெரியவர்களும் நாட்டில் இருக்கிறார்கள்.
அதிலும் - “நான் தமிழன்; தமிழால் முடியாதா?” என்றெல்லாம் முன்பு கேட்டவர்கள் இப்போது இராசராசனுக்குச் சிலையா? அவனை நேரில் பார்த்தவர்கள் யார்? என்று கேட்கிறார்கள்.
63 நாயன்மார்களுக்கு நாம் சிலை வைத்திருக்கிறோமே - அவர்களை நேரில் பார்த்தவர் யார்? உள்ளதை உள்ளபடி கண்டவர் யார்? - அவர்களுக்கு எப்படிச் சிலை வைக்கப்பட்டது?
ஆனால், இராசராச சோழனைப் பொறுத்தவரை, தஞ்சைக் கோயிலுக்குள்ளேயே அவனுடைய உருவம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.
அந்த ஓவியத்தை வைத்து - எந்தச் சிற்ப நுணுக்கமும் கெடாமல் சிறப்பாக அமைக்கப்பட்ட சிலைதான் இது.
‘சிலை அமைக்கிறாயே - அவனை நீ நேரில் பார்த்தாயா?’ எனக் கேட்டபோர் திருவள்ளுவர் சிலை அமைத்தபோது இந்தக் கேள்வியை எழுப்பவில்லை.
இன்னும் சிலர் கேட்கிறார்கள், இந்தச் சிலை திறந்தால் வறுமை போய்விடுமா என்று?
நாம் திருப்பிக் கேட்க முடியும், “இந்தச் சிலை திறக்காமல் இருந்தால் வறுமை போய்விடுமா?” என்று.
இந்தச் சிலை வைக்காவிட்டால் நாளைக்கே வறுமை குறைந்துவிடும் என்று அவர்கள் கூறியிருப்பார்களானால் சிலையெடுப்பு விழாவைக்கூடக் கைவிட்டிருக்கலாம்.
இவ்விதம் நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்போரின் தலைமைப் பீடமாகிய டில்லியில் ராமலீலா ஆண்டுதோறும் நடக்கிறதே அங்கே இந்தக் கேள்வி எழவில்லை.
ஆண்டுதோறும் புனிதமான சுதந்திர நாள், குடியரசு நாள் விழாக்கள் நடைபெறுகின்றன.
இத்தகைய விழாக்கள் எடுத்தால் வறுமை போய்விடுமா என்று யாரும் கேட்கவில்லை.
இன்னும் பத்து ஆண்டுகள் போராடினால்தான் வறுமை போகும் என்று அவர்கள் வரையறுத்துக் கூறுகிறார்கள்.
ஆயினும் ராமலீலா நடைபெறுகிறது அங்கே. குடியரசுத் தலைவர் அங்கே வருகிறார்! இந்த ராமலீலா விழா மட்டும் 80 இலட்சம் ரூபாய் செலவாகிறது என்று கூறுகிறார்கள்.
இந்த விழா எடுப்பதில் வறுமை தொலைந்து விட்டதா என்று யாரும் கேட்கவில்லை.
குடியரசு நாளும் - விடுதலை நாளும் - எவ்வளவு உணர்ச்சியையும் உள்ளக் கிளர்ச்சியையும் தோற்றுவிக்கின்றனவோ-அந்த விழாக்கள் எவ்வளவு தூய்மையானவையோ - புனிதமான - உணர்ச்சிகரமானவையோ - அவ்வளவு தூய்மையானது - புனிதமானது - உணர்ச்சிகரமானது இந்த விழாவும்.
சிலை எடுப்பது என்பது இந்த நாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் இருக்கும் பணிதான். வெளிநாடுகளில் சிலையில்லாத பெருநகரங்கள் இல்லை, என்பதை வெளிநாடு சென்றவர்கள் உணர்வார்கள்.
1972-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் தஞ்சையில் இராசராசன் சிலை திறப்பு விழாவில் ஆற்றிய உரை.
