இராசராசன் சிலை
பகுதி 1 · 1 / 2
இராசராசன் சிலை
அருண்மொழித் தேவன் என்னும் இயற்பெயர் படைத்த மாமன்னன் இராசராச சோழனின் திருவுருவச் சிலை திறப்பு விழா இந்த இடத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த மாமன்னன் கட்டிய பெரிய கோவிலுக்குள்ளே அவனது சிலையை வைக்க வேண்டும் என்ற முயற்சியிலே நாம் வெற்றியினைப் பெறாமல் அவன் அமைத்த ஆலயத்திற்கு எதிரில் அவனது சிலையை நிறுவியிருக்கிறோம்.
அவன் ஆண்ட மண்ணில் - அவன் கட்டிய கோவிலுக்குள் - அவனது சிலையைத் திறந்து வைக்கக் கூடாது என்று மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டதற்காக நண்பர்கள் இங்கே வருத்தத்தோடு பேசினார்கள்.
அவர்கள் இராசராச சோழன் சிலையைக் கோவிலுக்குள் வைக்க அனுமதி மறுத்ததற்குக் காரணங்கள் உண்டு.
கோவிலுக்குள் சிலை அமைப்பு விழா நடத்தினால் - இந்த இலட்சக்கணக்கான மக்கள் கூட்டம் இடம் கொள்ளாது அவதியுறும் என்ற காரணத்தினால்தான், கோவிலுக்குள் சிலை வேண்டாம் வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
சிலம்புச் செல்வர் அவர்கள் பேச்சையில் மாநில சுயாட்சிப் போராட்டத்தைத் தஞ்சைத் தரணியிலே இதே
இராசராசன் சிலையிலிருந்து துவக்குவோம் - என்று குறிப்பிட்டார்.
நமது கோரிக்கை பற்றி, அதன் நியாயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத தலைமை டில்லியில் இருக்கிறது? இல்லை! நமது இந்தியத் தலைமை அமைச்சருக்கு விஷயம் புரியும், சில மத்திய அமைச்சர்களுக்கு விஷயம் புரியாமல் இருந்தாலும்!
இராசராசன் சிலை அமைப்புப் பிரச்சினையையும் - மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் - உரிமைகள் வேண்டும் என்பதையும் நினைக்காமல்தான் முதலில் இருந்தோம். கன்னித் தமிழ்மன்னன் - களம்பல கண்டவன் - கடாரம் வென்றவன் - அவன் செல்லாத நாடு இல்லை - வெல்லாத பூமி இல்லை - சோழன் சென்றான் என்றால் ஆட்சியில் நிலைத்து நின்றான் - என்ற பெரும் புகழுக்குரிய பெருமன்னனின் சிலையை அவன் கட்டிய திருவுடையார் கோவிலில் வைக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது - சாதாரண நிகழ்ச்சி அல்ல!
ஆலயத்தைக் கட்டியவனுக்கு ஆலயத்தில் இடமில்லை - வெளியே வைத்துக்கொள் என்னும் ஆணை கேட்டதும்...
“இதற்குக்கூட உரிமையில்லை என்றால்... நமது மற்ற உரிமைகள் என்ன ஆகும்?” என்ற உணர்ச்சி தமிழர் உள்ளமெல்லாம் அரும்பிடத் தொடங்கியது.
இராசராச சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் உணர்ச்சியின் திருவுருவாகத் திகழ்ந்தான்.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிலை உருவில் இங்கிருந்தாலும் அந்த உணர்ச்சியை நமக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறான்.
சிலையை அமைக்கும்போது, கோவிலுக்குள் இடம் தர மறுத்துவிட்டால் இங்கே சிலை அமைக்கப்படுகிறது - என்ற சொற்றொடரை அமைக்குமாறு சிலம்புச் செல்வர் கூறினார். அவ்விதமே அமைத்திருக்கிறோம்.
ஆனால், தற்பாவிகமாக இங்கே சிலை அமைக்கப்படுகிறது, என்றும் எழுதுமாறு சிலம்புச் செல்வர் கூறினார்; அவ்வளவு தைரியம் எனக்கில்லை!
ஆயினும் - வானளாவ உயர்ந்திருக்கும் இக் கோவிலுக்குள் மாமன்னன் சிலையைப் பிரதமர் இந்திரா அவர்களே நேரில் வந்து திறந்துவைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!
இந்தச் சிலை திறப்புப் பிரச்சினையைத் தொடக்க காலத்தில் நாங்கள் மாநில சுயாட்சிப் பிரச்சினையுடன் இணைக்கவில்லை.
இராசராச சோழன் தோன்றிய சதயத் திருநாளில் நடந்த விழாவின்போது இராசராச சோழன் சிலையைக் கோவிலுக்குள் வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய அரசுக்கு எழுதினோம். அப்போதுகூட மாநில சுயாட்சியோடு இந்தப் பிரச்சினையை முடிச்சுப் போடும் நிலை எழவில்லை. ஆனால் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஆலயத்தைக் கட்டியவனுக்கு அந்த ஆலயத்திலேயே சிலை வைக்கக்கூடாது! இதுதான் மத்திய அரசு நமக்குத் தந்த பதில்.
