இளங்கோவடிகள் (4)
பகுதி 2 · 2 / 2
சிலம்புச் செல்வர் அவர்கள், இளங்கோவடிகள் அந்தக் காலத்திலேயே எப்படி நம்முடைய கொள்கைகளை எழுதியிருக்கிறார்; ஏன் இளங்கோவைக் கான தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் எடுத்துக் காட்டினார். அதைப்போலவே இளங்கோவடிகளை ஒவ்வொருவரும் தன்னுடையவராகவே ஆக்கிக் கொள்கிற வகையில் சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது.
நான்கூட ஏதாவது சீர்திருத்தத் திருமணத்திலே பேசுகிற நேரத்திலே இப்படிச் சொல்லலாம்:-
“சிலப்பதிகாரத்திலே கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடைபெறுகிற திருமணம் ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, தீவலம் வந்து’ எல்லாச் சடங்கும் முறைப்படிதான் நடைபெறுகிறது.
ஆனால் அவர்களுடைய வாழ்வு எப்படியாயிற்று பார்த்தீர்களா? கோவலன் கொலையுண்டான். கண்ணகி கண்ணீர் சிந்தி வேதனைப்பட்டாள். ஆகவே, இந்தச் சடங்கு, சம்பிரதாயத்தோடு நடத்தினாலே நிலைமை இப்படித்தான் ஆகும் என்பதை இளங்கோவடிகள் எவ்வளவு சூட்சுமமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் பார்த்தீர்களா?”
என்று நான் எடுத்துச் சொல்லப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுப்பதற்காக இமயம் செல்கிறான் என்று கூறவந்த இடத்தில் - ஏன் இமயம் செல்கிறான் என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்குப் பதில் சொல்கிற நேரத்திலே இளங்கோவடிகள், “பத்தினிக் கடவுள் எழுத்தற்கே,”
என்கிறார். அதாவது பத்தினிக் கடவுளை எழுவதற்கென்று கல்லெடுக்கத்தான் சேரன் செங்குட்டுவன் செல்கிறான் என்கிறார்.
கல்லெடுத்தால் அதில் சிலை வடிக்க வேண்டும்; சிற்பி எழுதுவதாவது என்று எண்ணலாம். அங்கேதான் இளங்கோவடிகளின் சொல்லளம் பெருகி ஓடுகிறது. கல்லில் எழுதிய எழுத்தாக அந்தப் பத்தினிக் கடவுள் என்றென்றும் இருக்கப்போகிறாள் என்பதை அடக்கிக் கடவுளைக் கல்லிலே எழுதி சேரன் செங்குட்டுவன் செல்கிறான் என்று குறிப்பிடுகிறார்.
இப்படித் தமிழ் வளம், மண் வளம், தமிழர்களுடைய வளம், தமிழ்நாட்டு வளம், சேரனுடைய வீர்ம, வளம் - சேரனுடைய வீர்ம, வளம் - பாண்டியனுடைய வீர்ம, வளம் அத்தனையையும் உள்ளடக்கிவைத்து அந்தக் காவியத்தைப் படைத்திருக்கிறார் இளங்கோவடிகள்.
அப்படிப்பட்ட பெருமை பெற்ற இலக்கியத்தைப் படைத்த இளங்கோவடிகளை நாம் பாராட்டுகிறோம் - புகழ்கிறோம் என்றால்; இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக நாம் உணர்ச்சியைப் பெற வேண்டும், எழுச்சியைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு சிறிய மண்டபத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கிற இடத்தில் இந்த
விழா நடைபெறுகிறது என்றாலும், விழா முடிந்து கலைந்து செல்கிற நீங்கள் உங்களுடைய உள்ளத்தில் எடுத்துச் செல்கிற உணர்ச்சிகளிருக்கின்றனவே அவை அற்புதமானவை.
அந்த உணர்ச்சிகள் உங்களுடனேயே அடங்கி விடாமல், அவை விரிவாக்கப்படடாக வேண்டும். ஒவ்வொருவரும் பத்துப் பேருக்குச் சொல்ல வேண்டும்; பத்துப் பேர் இன்னொரு பத்து பேருக்குச் சொல்ல வேண்டும். அது நூறுபேருக்குப் பெருக வேண்டும். ஆயிரம் பேருக்குப் பெருகிட வேண்டும். இலட்சம் பேர் - ஏன் - தமிழகத்தில் இருக்கிற நாலுகோடி மக்கள் அத்தனை பேரும் பெற வேண்டும். அனைவரும் விவரம் புரிந்தவர்களாக ஆக்கப்படடாக வேண்டும்.
நமக்கென்று இலக்கியங்கள் உண்டு. வரலாறு உண்டு. தன்மான உணர்வுகள் உண்டு. அவைகளைக் கட்டிக்காக்க நம்முடைய இலக்கியங்களைப் பாதுகாத்தாக வேண்டும்; தமிழை வாழ வைக்க வேண்டும்.
சிலம்புச் செல்வர், “தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழுமா? தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வானா?” என்று கேட்டார்.
இந்தக் கேள்வி சாதாரணக் கேள்வியல்ல. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ முடியும்.
தமிழ் வாழ்ந்தால்தான், அந்த மொழிக்குரிய மனிதன் வாழ முடியும்.
இந்த எதிர்ப்புப் போராட்டக் காலத்திலேகூட ஒரு நாள் கோகலே மண்டபத்தில் பேசும்போது பேராசிரியர் அன்பழகன் தமிழ் வாழ வேண்டும் என்று பேசி, அதற்கடுத்துப் பேசிய ராஜாஜி அவர்கள் “தமிழாவது ஒன்றாவது, தமிழன் வாழ வேண்டும். அதற்காகத்தான் நான் இந்தி வேண்டாம் என்கிறேன்.”
என்று கூறினார். நான் பேசும்போது சொன்னேன், “தமிழோ அல்லது தமிழனோ இந்த இரண்டில் யார் வாழ
வேண்டும் என்ற பிரச்சினையைவிட, பால் வாழ்வதா பால்பானை வாழ்வதா என்ற இந்தக் கேள்வியை நாம் கேட்டுக் கொண்டால் பால்பானை வாழ்ந்தால்தான் பால் வாழும்; பால் இல்லாமல் பால்பானை வாழ்ந்து பயன் இல்லை. ஆகவே தமிழா, தமிழனா என்ற சர்ச்சைக்கு நாம் செல்லாமல் பால்பானை காப்பாற்றப்படடாக வேண்டும்,” என்று கூறினேன்.
ஆகவே தமிழ்மொழியைக் காப்பாற்றுகின்ற தமிழன் காப்பாற்றப்படடாக வேண்டும்.
தமிழன் தமிழைக் காப்பாற்றி ஆகவேண்டும். இந்த இரண்டும் காப்பாற்றப்பட்ட வேண்டுமானால் நாம் சிந்தித்தாக வேண்டும்.
தமிழால் படிப்போம் என்ற உறுதி எடுத்துக் கொண்டு அரசு முயற்சி செய்தபோது, அண்ணாவிற்கு முன்பு யார் ஆட்சி பீடத்தில் இருந்து அதே கருத்தைச் சொன்னார்களோ; அவர்களே, அண்ணாவின் கருத்தை நாங்கள் நிறைவேற்ற முயற்சித்தபோது, “தமிழால் படிப்பதா? தமிழ்நாட்டுப் பிள்ளைகள் என்ன ஆவது?”
என்று கூறிப் போர்க் கொடியை மாணவர்கள் கையில் தூக்கிக் கொடுக்கக் காரணமாக இருந்தார்கள்.
அவர்களெல்லாரும்தான் நேற்றைய தினம் கடற்கரையிலே தமிழுக்கு விழாக் கொண்டாடினார்கள்.
‘தமிழகம்’ என்று இந்த மண்ணுக்குப் பெயர் சூட்டச் சங்கரலிங்கனார் ஏறத்தாழ 70 நாட்கள் உண்ணாவிரதமிருந்து செத்தார். தமிழுக்காகச் செத்த அவருடைய பிணத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தார்கள். அந்தப் பிணத்தை வைத்து இருட்டில் இரங்கல் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்றார்கள். அவர் செத்த பிறகும் தமிழ்நாட்டிற்குச் சென்னை ராஜ்ஜியம் என்றுதான் பெயர் இருந்தது. அவருடைய உடல் மண்ணில் சாய்ந்ததும் அதுதான் இருந்தது.
தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சங்கரலிங்கனார் செத்ததை எடுத்துச் சொன்னோம். “இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று கேட்டார்கள்.
“இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் - என்று சிலப்பதிகாரத்தில் இருக்கிறதே” என்று சொன்னோம்.
“அது சரி; இலக்கியத்தில் இருக்கிறதா?” என்றுதான் மீண்டும் கேட்டார்களே தவிர எதுவும் செய்யவில்லை.
இன்று தமிழ்நாடு என்கிற பெயரைப் பெற்று இருக்கிறது இந்த நிலம். இந்த மண்.
“நீ என்ன செய்தாய் தமிழுக்கு?” என்று கேட்கிறார்கள். தமிழ்த்தாயே! அவர்களை மன்னித்துவிடு!!
1973-ஆம் ஆண்டு மே 6-ஆம் நாள் சென்னையில் இளங்கோவடிகள் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.
