உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இளங்கோவடிகள் (4)

பகுதி 1 · 1 / 2

இளங்கோவடிகள் (4)

இளங்கோவடிகள் விழாவில் பேசுகின்ற பேச்சுக்களில் அரசியல் வாடை வீசுகிறதே என்று சிலர் எண்ணலாம். இளங்கோ அரசியலைப் பற்றியும் எழுதியிருக்கிற காரணத்தினால் நான் பேசுவது தவறல்ல என்று கருதுகிறேன்.

இங்கே பேசிய கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம் வெகு அழகாக இளங்கோவடிகளின் அரசியலை இந்த நேரத்திற்கு ஏற்ப வாகைமாகக் கையாண்டார். தொடர்ந்து பேசிய நண்பர்களும், நமது சிலம்புச் செல்வர் அவர்களும் இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலைகளை இளங்கோவடிகளின் இலக்கியத்தோடு இணைத்து உரையாற்றினார்கள்.

சில நூல்களுக்கு நயம் கூறுகிற நேரத்தில், எழுதியவர்களுக்கே தெரியாத நயம், சொல்பவர்களுக்குத் தெரியும். அதைப்போல, பேசியவர்களே எண்ணாத நயங்களைப் புரிந்து கொண்டு நீங்கள் கையொலி செய்தீர்கள்.

பழைய காங்கிரஸ் கட்சி நண்பர்கள் நேற்று நடத்திய முத்தமிழ் விழாவை நானும் வரவேற்கிறேன்.

விழாத் தலைவர்கள் தமிழின் பெருமையைச் சிலப்பதிகாரத்தின் மேன்மையை - வள்ளுவத்தின் வாய்மையை - அகம், புறம், சங்க இலக்கியங்கள் ஆகிய இவைகளின் சிறப்பை எடுத்துக் கூறியிருந்தால் விழாவிலே கலந்து கொண்ட மக்கள் பயன் பெற்றிருக்கக் கூடும்.

அடுத்த ஆண்டு அவர்கள் விழா நடத்துகிற நேரத்திலாவது இத்தகைய தலைப்புகளில் அங்குச் சொற்பொழிவாற்றச் செய்து, அந்த விழா எல்லா வகையிலும் சிறப்பாக அமையப் பாடுபட வேண்டுமென நான் எனது யோசனையைத் தெரிவிக்கின்றேன்.

தமிழை வளர்ப்பதும், தமிழில் பேசுவதும், தமிழைப் போற்றுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாத்திரம் சொந்தமல்ல; அது காங்கிரஸ் கட்சிக்கும் சொந்தம் என்று அவர்கள் அந்த விழாவிலே பேசியிருக்கிறார்கள்.

நூற்றுக்கு நூறு அதை அப்படியே நான் ஒத்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியிலும் தமிழ் பேசுகிறவர்கள் இருந்தார்கள் என்பதற்கு உதாரணம்தான் நமது சிலம்புச் செல்வர் அவர்கள்.

காங்கிரஸ் கட்சியிலே தமிழில் எழுதியவர்கள் - தமிழில் பாடியவர்கள் - தமிழால் உணர்ச்சி ஊட்டியவர்கள் பலர் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நான் சார்ந்த இயக்கம் தலைவணங்கித் தன்னுடைய மரியாதையைத் தெரிவித்திருக்கிறது; இன்றைக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடையாளம்தான் - கடற்கரையிலே நின்று கொண்டிருக்கிற கவியரசர் பாரதியார் சிலை.

ஆனால், காங்கிரஸ் போன்ற வேறொரு கட்சியிலே இருக்கிற தமிழார்வம் படைத்தவர்களை - தமிழ்ப்புலவர்களை - தமிழ்க் கவிஞர்களை - தமிழ்ச் சான்றோர்களை நானோ, சிலம்புச் செல்வரோ, மற்றவர்களோ பாராட்டுகிற அதே நேரத்தில் எந்தக் கட்சியில் இருந்தாலும் தமிழ் உணர்ச்சியை ஊட்டுகின்றவர்களை - தமிழ்ப்புலமை உடையவர்களைத் தமிழில் ஆற்றல் பெற்றவர்களைப் பாராட்டுகின்ற; அவர்களுக்கு மரியாதை

செலுத்துகின்ற அந்தத் தன்மை எல்லா கட்சிக்காரர்களுக்கும் வந்தாக வேண்டும்.

பாரதியாருக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துகிறோம். விழா எடுக்கிறோம்; “நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாரதியாரைப் பற்றிப் பாடினார்.

அந்தப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சென்னையிலே மறைந்தார்; அவரது உடலைப் புதுவைக்கு எடுத்துச் சென்று அங்கு அடக்கம் செய்தோம்.

அன்றைய தினம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எல்லாக் கட்சிக் கொடிகளும் புதுவையிலே அரைக்கம்பத்திலே பறக்கவிடப்பட்டன - நேற்றைய தினம் முத்தமிழ் விழாக் கொண்டாடிய (பழைய காங்கிரஸ்) கட்சியினரின் கொடியைத் தவிர!

நான் இதைச் சொல்வதற்குக் காரணம் - தமிழிலே கட்சி மாச்சரியங்கள் கூடாது; மொழி வளர்ப்பதிலும் கட்சி அரசியல் கூடாது - அதையும் அரசியலாக ஆக்கிவிட்டால் எப்படித் தமிழ், திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் சொந்தம் என்று வாதிடுவது தவறோ, எப்படித் தமிழ், தமிழரசுக் கழகத்திற்குத்தான் சொந்தம் என்று வாதிடுவது தவறோ, அதைப்போல, அதைவிடப் பெரிய தவறு - ஏதோ ஒரு கட்சி தனக்குச் சொந்தம் என்று கூறுவதாகக் கற்பனை செய்து கொண்டு அதைத் தாக்குவதற்காகப் பெரிய விழாவைப் பயன்படுத்துவது மிகப் பெரிய தவறு.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ அல்லது தமிழரசுக் கழகத்திற்கோ முத்தமிழைப் பற்றிப் பேசுகிற தகுதி இருக்கிறதா இல்லையா என்று கேட்பவர்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா?

இந்தக் கேள்விகளை நீட்டிக்கொண்டே போனால் ஒரு நகைச்சுவை கிடைக்கும். அவர்களில் சிலரை

அமைத்துச் சிலப்பதிகாரத்தில் சில கேள்விகளைக் கேட்டால் - உதாரணமாக “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் - திங்களைப் போற்றுதும் - திங்களைப் போற்றுதும்” என்று எழுதிய இளங்கோவடிகள் அடுத்து என்ன “போற்றுதும்” எழுதினார் என்று கேட்டால் “செவ்வாய் போற்றுதும் செவ்வாய் போற்றுதும்” எழுதினார் என்று சொல்லக்கூடிய சிலரும் அங்கே இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் இன்று நம்மைப் பார்த்துப் பழிக்கிறார்களே என்று எண்ணும்போதுதான் வருத்தமாகவே இருக்கிறது.

மங்கை முகத்தைப் பாடிட, இளங்கோவடிகள் எழுதுகிற நேரத்தில் -

“கயலெழுதி, வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்!”

இளங்கோவடிகள் கவிதை இது, நம்மைக் கேட்டால் பொருள் சொல்வோம். உனக்குத் தமிழ் தெரியுமா, நீதான் தமிழை வளர்த்தாயா என்று சொல்பவர்களை நாம் கேட்டால் அவர்கள் நம்மைத் திருப்பிக் கேட்பார்கள் இப்படி.

“கயலெழுதலாம் சரி; வில் எழுதலாம் சரி; எப்படிக் காரெழுத முடியும்? எந்தக் காரை எழுதினான்? - செவர் வட்டா? அம்பாசிடரா?” என்று கேட்கின்ற அதிமேதாவிகளெல்லாம் இன்றைய தினம் தி.மு.கழகத்திற்கோ தமிழரசுக் கழகத்திற்கோ தமிழ் தெரியுமா, இலக்கியம் தெரியுமா என்று கேட்கிற அளவிற்கு நாடு வந்திருக்கிறது.

இன்று நடைபெறுகிற இந்த விழா, இளங்கோவடிகளின் பெருமையை ஆண்டுதோறும் எடுத்துச் சொல்லுகின்ற விழாவாகவே அமைந்து முடிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சில சூளுரைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவசியத்தை எடுத்துச் சொன்னார்கள்.

அந்தச் சூளுரை சாதி ஒழிவதாக இருக்க வேண்டும். கசப்புணர்வுகள் நம்மிடமிருந்து நீங்குவதாக இருக்க வேண்டும்; உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்காக இருக்க வேண்டும் என்றெல்லாம் எடுத்துக் காட்டினார்கள்.

முதற் பதிப்பு : மே 2000