இளங்கோவடிகள் (2)
பகுதி 2 · 2 / 2
அந்தச் சிலைகூட - இங்கே உள்ள இளங்கோவடிகள் சிலையைப்போல் பெரிதாக இல்லாமல் இருக்கிறது. இமயத்திலிருந்து கனகவிசயர் தூக்கி வந்த கல் - எவ்வளவு சிறியதாக இருக்குமோ அந்த அளவில் - சிறிய உருவில் அந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது!
அது மட்டுமல்ல; அந்தச் சிலை செய்யப்பட்ட கல் அந்தப் பகுதியிலுள்ள மலைகள் - பாறைகள் இவற்றைச் சார்ந்ததாகவும், இமயத்துக் கல்லைப் போன்று இருப்பதாகவும் கோவிந்தராசனார் என்ற அந்தப் பேராசிரியர் அறிவித்திருந்தார். இதைக் கேள்விப்பட்டு நானும் நாவலரும் அவரை அழைத்து உரையாடி, விவரங்கள் அறிந்து, அந்தக் கோவில் இருக்கும் பகுதி கேரளநாட்டைச் சார்ந்தது என்ற எண்ணத்தால் இது பற்றிக் கேரள முதல்வர் அச்சுதமேனனுக்குக் கடிதம் எழுதினோம்!
“இந்தச் சிலை பற்றிய ஆராய்ச்சியை உங்கள் பகுதியிலே தொடர்ந்து செய்ய அனுமதி எங்கள் ஆராய்ச்சிப் பகுதியினருக்கு வேண்டும்” எனக் கடிதம் எழுதியிருந்தோம்.
கேரள முதல்வர் அச்சுதமேனன் அதற்குப் பதில் தந்திருந்தார்.
“ஏற்கெனவே இதுபற்றி நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அதன் தொடர்பாக உங்களது ஆராய்ச்சியை நடத்தலாம்!” என்று அவர் பதில் அனுப்பியிருக்கிறார். விரைவில் நல்ல முடிவு எடுத்து அவர் அறிவிப்பார் என்று நம்புகிறேன்.
இளங்கோவடிகள் வாழ்த்திய அச்சிலையை - கனகவிசயர் சுமந்து வந்த அந்தச் சிலையை - தமிழர் தம் வீரம் பேசும் அதே சிலையை - நாம் காணக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
சென்னையில் இளங்கோவடிகளுக்குச் சிலை அமைப்பது பற்றி, அழிந்த ‘புகார்’ பற்றி, இங்கே சிலம்புச் செல்வர் குறிப்பிட்டார்.
இளங்கோவடிகளே தமது காப்பியத்தைப் புகாரில் தான் துவக்குகிறார்.
அண்ணா கல்லறைக்குப் பக்கத்தில் கம்பனும் இளங்கோவடிகளும் இருப்பது, ‘துவாரபாலகர்கள்’! போல் இருப்பதாகச் சிலர் குறை கூறுகிறார்கள்!
எங்களைத் தாக்குபவர்கள் ஒரு புதிய முறையைக் கையாளுகிறார்கள்.
எங்களை இறக்கிப் பேசிட - காத்துப் பேசிட - அண்ணாவை உயர்வாகப் புகழ்ந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால், இதே ராஜ தந்திரத்தோடு பத்தாண்டுகாலம் இருந்தாலாவது பலன் கிடைக்கும்! ஆனால் அடுத்த மாதமே சுயரூபத்தைக் காட்டிவிடுகிறார்கள்! அண்ணா என்ற பெயரைப் பார்த்து கம்பனும் - இளங்கோவும் - என்று கேட்டு விட்டார்கள்! பாவம், அவர்களது ராஜ தந்திரம் பலவீனமானது!
அண்ணா அவர்கள் இருந்து இந்த விழாவினைக் காணவில்லையே என்று வருத்தப்பட்டார், சிலம்புச் செல்வர்! நானும் இந்த எழில்மிகு விழாவைப் பார்க்கிறேன்; அதில் எழுச்சியோடு வந்து கலந்து கொண்ட உங்களையெல்லாம் பார்க்கிறேன்; இந்த விழாவை வாழ்த்த வந்த பைந்தமிழ் மனம் கொண்டோரையும் பார்க்கிறேன்!
ஆனால் எனது நெஞ்சம் - பேதை நெஞ்சம் - ஒரு கனவு காண்கிறது!
அந்த வெண் மணற் பரப்பில் நீள் துயில் கொண்ட அண்ணன் ஒரு நிமிடம் எழுந்து வந்து...
“தம்பிகளே! நான் நினைத்ததையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள்!” என ஒரு வார்த்தை சொன்னால் போதும்!
அண்ணன் எழுந்து வராத துயிலில் இருக்கிறார். அண்ணன் வழியில் இங்கே பல்லாயிரக்கணக்கில் தமிழ் நெஞ்சங்கள் கூடியிருந்து வாழ்த்துகின்றன. அந்த வாழ்த்துக்களில் “அண்ணன் இருக்கிறார் - அண்ணன் இருக்கிறார்!” என மகிழ்ந்து இந்த விழாவை நடத்துகிறோம்!
1971-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் அண்ணா சதுக்கத்தில் இளங்கோவடிகள் சிலையினைத் திறந்து வைத்து ஆற்றிய உரை.
