இளங்கோவடிகள் (2)
பகுதி 1 · 1 / 2
இளங்கோவடிகள் (2)
நம்மை ஆளாக்கிய அண்ணன் உறங்கும் பகுதியில் இளங்கோவடிகளின் சிலை அமைவது எவ்வளவு பொருத்தமானது என்பதை இங்கே பேசியவர்கள் எடுத்துரைத்தார்கள்.
உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற வேளையில் தமிழ்ச் சான்றோர்களுக்கும், தமிழகத்து வீரப் பெருமக்களுக்கும் அண்ணன் தலைமையிலே சிலை வைத்தோம்.
அன்றைக்கே இளங்கோவடிகள் சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கு ஒரு தாண்டுகோல் தேவை என்பதுபோல்...
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் இளங்கோவடிகள் விழா ஒன்றில் சிலம்புச் செல்வரும் மற்றவர்களும் இளங்கோவடிகளுக்குச் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நானும் ஒப்புக் கொண்டேன்.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் இன்னும் சிலை வைக்கப்படவில்லையே என்று அவர்கள் குறிப்பிட்டபோது, நான் இளங்கோவடிகளின் சிலை தயாராகி விட்டது; விரைவில் சிலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தேன்.
அதன்படி இந்த விழா... யார் தலைமை ஏற்று நடத்த வேண்டுமோ அவர் தலைமை ஏற்க - யார் சிறப்புரை ஆற்ற வேண்டுமோ அவர் சிறப்புரை ஆற்றிப் பல்லாயிரக்கணக்காகக் கூடியுள்ள உங்கள் வாழ்த்துக்களோடு நடைபெறுகிறது.
இங்கே பேசிய சிலம்புச் செல்வர் அவர்கள் தமிழ் உணர்ச்சியுடன் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நான் மேடையிலிருந்து காண்கிறேன் - கட்சி சார்பில்லாமல் பலர் இங்கே வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது பரந்த உள்ளத்தைப் பாராட்டுகிறேன். அவர்களது பெருந்தன்மையை மெச்சுகிறேன். தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலப்பதிகாரத்தில் சிலம்புச் செல்வர் அவர்கள் எவ்வளவு ஆர்வமும் எழுச்சியும் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே!
அதே போன்று தி.மு.கழகத்திலுள்ள நாவலரும் மற்ற பிற தமிழ் அறிஞர்களும், எங்களை ஆளாக்கிய அறிஞர் அண்ணா அவர்களும் சிலப்பதிகாரத்தில் அதிக உடன்பாடு கொண்டவர்கள்.
புலவர்கள் மத்தியில் மட்டுமே இருந்த சிலப்பதிகாரத்தை நாடக உருவில் - திரைப்பட உருவில் மக்களிடம் உலவவிட்டு அதில் வெற்றியும் பெற்றோம்; பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறோம்.
இங்கே சீரோடும் சிறப்போடும் இளங்கோவடிகள் சிலை நாட்டப்படும் இதே நேரத்தில்... இளங்கோ யாத்த சிலப்பதிகாரம் காட்டும் காவிரிப்பூம்பட்டினத்தில் - கடலில் அமிழ்ந்து போன காவிரிப்பூம்பட்டினத்தில் - பல புகை பொருட்களும் அதில் இறைந்து கிடக்கும் ரோமானிய நாணயங்களும் இருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில் - சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்று அமைக்கும் பணி உருவாக்கப்பட்டு - அந்தப் பணி வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.
சிலப்பதிகாரக் காவியம் சிலைகள் உருவத்திலேயே அமைக்கப்படும் கலைக்கூடம் அது!
பூம்புகாரில் தொடங்கும் கதையில் கண்ணகி மணக்கோலம் புனைவது முதல்... மதுரையில் வீரத்தோடு வழக்குரைத்த கதை உள்ளிட்டு சேரன் செங்குட்டுவன்
போர்க்கோலம் பூண்டு வடபுலம் சென்று கனகவிசயர் தலைமீது கல்லேற்றிக் கொண்டு வந்து, வஞ்சி மூதூரில் கண்ணகி சிலை அமைத்து வழிபட்டது வரை - சிலைகளாலேயே, சிற்பங்களாலேயே, ஓவியங்களால் காவியம் சொல்லும் வகையில் அமைக்கப்படும் அந்தக் கலைக்கூடம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் அந்தக் கலைக்கூடத் திறப்பு விழா விரைவில் நடைபெறும்... வெளிநாட்டினர் சிலம்பு படிக்காமலேயே சிலப்பதிகாரக் கதையை அறிந்து கொள்ளும் அற்புத முயற்சி அந்தக் கலைக்கூடத்தால் நிறைவேறவிருக்கிறது.
இப்படிப்பட்ட கலைக்கூடம் இந்தியாவிலேயே இதுதான் முதலாவதாக இருக்கும்.
உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியும் சொல்ல விரும்புகிறேன். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் கோவிந்தராசனார் கல்வெட்டுக்களை ஆராய்ந்து வருபவர். குறிப்பாக, இளங்கோவடிகள் பற்றித் தகவல் வாய்ந்திருப்பதாகச் சிலவற்றைக் கேள்விப்பட்டு நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி ஆராய்ந்தார்.
மதுரை மாவட்டத்து எல்லையில் சுருளிமலை என்றொரு மலை உண்டு. அங்கிருந்து ஒரு கல் தொலைவில் - உயர்ந்த பாறை ஒன்றில் மங்கலதேவி கோவிலில் உள்ள ஒரு சிலையைக் கண்டார்! அந்தச் சிலை காளியைப் போல் - துர்க்கையைப் போல் - மாரியம்மையைப் போல் - இலக்குமியைப் போல் - சரஸ்வதியைப் போல் - நான்கு கரங்கள் உள்ள சிலையாக இல்லை! இரண்டு கையுள்ள பெண் சிலையாக அது இருக்கக் கண்டார்.
