உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இளங்கோவடிகள் (1)

பகுதி 2 · 2 / 2

நான் இதைக் கற்பனையாகச் சொல்லவில்லை. திரிகூட சுந்தரம் எழுதிய புத்தகத்தைப் படித்துச் சோர்வு ஏற்பட்ட போது, அதை நீக்கியது சிலம்புச் செல்வருடைய இந்தப் புத்தகம்தான். அதுவரைக்கும் சிலம்புச் செல்வர் எழுதி இன்று வெளியிடப் போகும் புத்தகம் என்ன புத்தகம்? இதில் எவற்றை ஆராய்ந்திருக்கிறார்? எப்படிப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்களுக்கெல்லாம் பதிலளித்து இருக்கிறார்? என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வரைக்கும் எனக்குத் தெரியாது.

திரிகூட சுந்தரம் புத்தகத்தில் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த மக்கள், செல்வத்தில் திளைத்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் செல்வத்தை யெல்லாம் காமத்தில் ஆழ்வதற்கே பயன்படுத்தினார்கள். அவர்கள் இழிந்த ஒழுக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சில சான்றுகள் உண்டு. இது திரிகூட சுந்தரம் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.

அது மாத்திரமல்ல, மாதவிக்கு அவளுடைய அரங்கேற்றம் முடிந்த பிறகு தலைக்கோல் போன்ற பல பரிசுகளெல்லாம் அளிக்கப்பட்டு இறுதியாக, ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் அளிக்கப்படுகின்ற நேரத்தில் இளங்கோவடிகளுடைய வரிகளை எடுத்துச் சொல்லி, இதைவிட இழிவான ஒன்று தமிழகத்தில் இருக்க முடியாது என்று அவர் ஆற்றிய உரையும் இந்தப் புத்தகத்திலே அச்சிடப்பட்டிருக்கிறது.

“விதிமுறை கொள்கையின் ஆயிரத்தெண் கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள்” - இது இளங்கோவடிகள் எழுதியது. இதற்குத் திரிகூட சுந்தரம் தருகின்ற விளக்கம் - “நாடகக் கணிகையர் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னை ஒரு நாளைக்குப் பரிசமாகப் பெறுதல் வழக்கு. இதனினும் இழிவான செயல் வேறுண்டோ? அரசன் கலைகளை வளர்க்கும் முறை இதுதானோ? மாதவியினுடைய ஆடலும் பாடலும் இத்துணைப் பொருள் பெற்றதற்கு என்று கூறாமல் அவளுடைய அழகான உடல் இத்துணைப் பொன் விலை பெற்றதுக்கு என்று கூறுவது அரசியல் தர்மமா?”

என்று கேட்கிறார்...

நான் படித்த தமிழில் இவ்வளவு பகைவர் பொழிப்புரை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. “விதிமுறை கொள்கையின் ஆயிரத்தெண் கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள்.” நடனமாடுவோருக்கு ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் தருவது விதிமுறையாக இருக்கலாம். அதை ஒரு முறையாகப் பெற்றாள் என்று இருக்கலாம். ஆனால், அதை அவள் உடலுக்காக அரசன் கொடுத்தான் என்று, சோழ மன்னனையும் இழிவுபடுத்தி, மாதவியையும் இழிவுபடுத்தி, அவர்கள் இருவரையும் இழிவுபடுத்தியதால் இளங்கோவடிகளையும் இழிவுபடுத்தித் திரிகூட சுந்தரம் சொல்லியிருக்கிறார்.

அவர் தனது கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால் இந்தக் கருத்துக்களெல்லாம் இளங்கோவடிகளை - கண்ணகியை - கோவலனை - மாதவியை - மொத்தமாகச் சிலப்பதிகாரத்தைப் - பொன்னே போல்

போற்றி, இதுவன்றோ தமிழர்களுக்கு மிச்சமாக இருக்கின்ற ஒரே வரலாறு - இதுவன்றோ சேர நாட்டைச் சோழ நாட்டைப் பாண்டிய நாட்டைப் படம் பிடித்துக் காட்டுகின்ற ஒரே ஓவியம் என்று பாதுகாத்து வைத்திருக்கின்ற இந்தக் கருவூலத்தையும் இழிவுபடுத்தி விட்டால், பிறகு தமிழ்மொழியின் வரலாற்றை அறிந்திட என்னதான் இருக்கிறது என்பதைத் தயவு செய்து எண்ணிப் பார்த்திட வேண்டும்.

அந்த மனக் கவலையை அகற்றுகின்ற நூல்தான் இந்தச் சிறிய நூல். ஒருவேளை சிலம்புச் செல்வர் அவர்கள், ‘சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவு’களைக் கேட்டு விட்டோ அல்லது படித்துப் பார்த்து விட்டோ கூட இந்த நூலை எழுதியிருக்கலாம்.

ஏனென்றால் சில இடங்களில் இதுபோல் கருத்துக்கள் சொல்பவர்களை அவர் மறைமுகமாகத் தாக்கியிருக்கும் வரிகளையும் இந்தப் புத்தகத்தில் பார்த்தேன்.

கோவலன் குற்றவாளியா? என்று கேட்டு அவனுடைய வாழ்க்கையில் - அவனுடைய பண்பில் - கலையுணர்வில் - கட்டிக் காத்த நாகரிகத்தில் - அவன் கற்ற மொழியில் - அவன் உணர்ந்த இலக்கியத்தில் எவ்வளவு சிறப்புக்கள் உண்டோ அவ்வளவு சிறப்புக்களையும் அள்ளித் தெளித்திருக்கின்ற அந்த அரிய நூலை இன்று வெளியிட்டிருக்கின்றனர்.

திரு. ஏ.பி. நாகராசன், இளங்கோவடிகளுடைய பிறந்தநாளும் தெரியவில்லை, மறைந்த நாளும் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். இளங்கோவடிகளுடைய பிறந்த காலம் அவர் சிலப்பதிகாரத்தை எழுதி முடித்த காலம்! என்றுமே மறையாதவர்களுக்கு மறைந்த நாள் ஏது? ஆகவே, ஒருநாள் கண்டுபிடிக்கக்கூடிய நாள்; அதாவது பிறந்தநாள். இன்னொன்று கண்டுபிடிக்க முடியாத நாள்; அதாவது மறைந்த நாள்!

“சென்ற ஆண்டு இளங்கோவடிகளுடைய விழாவில், இந்த ஆண்டு இளங்கோவடிகள் சிலையைத்

திறப்பதாகச் சொன்னீர்கள். அதை நினைவூட்டுகிறேன்” என்று திரு. ஏ.பி. நாகராசன் அடக்க உணர்வோடு சொன்னார். நண்பர் சஞ்சீவி அவர்களும் சிலை பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அவர்களுக்கும் உங்களுக்கும் சொல்வேன், சிலை தயாராகி ஏழு நாட்கள் ஆகின்றன. நான்கூடப் பார்த்து விட்டு வந்து ஏழு நாட்கள் ஆகின்றன. முன்பு ‘மவுண்ட் ரோடு’ என்றும், இப்போது ‘அண்ணா சாலை’ என்றும் அழைக்கப்படும் இடத்திலேதான் சிலை தயாராகிக் கொண்டிருக்கிறது.

பாரதியார் சிலையைச் செய்தவர்தான் இந்தச் சிலையையும் செய்கிறார். உலகத்தாரையே இதையும் செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். விரைவில் சிலம்புச் செல்வருக்குச் சிலையைக் காட்ட இருக்கிறேன். ஆக சொன்னது எதையும் செய்யாமல் விட்டுவிட மாட்டேன் என்பதை மாத்திரம் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் ஒரு மாதத்திற்குள் சிலையைத் திறந்துவிடலாம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

அதைப்போலவே அழிந்துவிட்ட காவிரிப் பூம்பட்டினத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றுக்காக அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கே சிலப்பதிகாரக் கதை முழுவதையும் சுவரிலே சிற்பமாகச் செதுக்குவதற்கான ஏற்பாடுகளெல்லாம் நடைபெற்று, அதுவும் இந்த ஓராண்டுக் காலத்திற்குள்ளேயே முடிவடையக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1971-ஆம் ஆண்டு மே 10-ஆம் நாள் இளங்கோவடிகள் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.

முதற் பதிப்பு : மே 2000