உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இளங்கோவடிகள் (1)

பகுதி 1 · 1 / 2

இளங்கோவடிகள் (1)

இன்றைய இளங்கோவடிகள் விழாவில் சிலம்புச் செல்வர் அவர்கள் எழுதிய ‘கோவலன் குற்றவாளியா?’ என்ற அரிய நூலினை வெளியிடுகின்ற நல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்காக என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கோவலன் குற்றவாளியா?’ என்று கண்ணகி பாண்டியன் அவையிலே கேட்டு, ‘அவன் குற்றவாளியல்லன்’ என்று பாண்டியனே ஒப்புக் கொண்ட பிறகு, இப்பொழுது சிலம்புச் செல்வர் ஏன் இந்தப் புதிய பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார் என்று இன்று மாலையில் என் கைக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததும் - தலைப்பைப் பார்த்தவாறு கேட்டுக் கொண்டே - இந்தப் புத்தகத்தைப் பிரித்தேன்.

பிரித்துப் படித்த பிறகுதான் எதிலுமே அவசரம் கூடாது என்று என் மனசாட்சி எனக்குப் பதிலளித்தது.

வீட்டிலே படிக்கத் தொடங்கிய இந்த நூலை, இங்கே மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் படித்து முடித்து விட்டேன்.

அவர்கள் என்னைத் தவறாகக் கருதக்கூடாது; தங்களுடைய பேச்சைக் கவனிக்காமலேயே இதைப் படித்து முடித்திருக்கிறேனோ என்று! அவர்களுடைய பேச்சையும் கவனித்தேன். இடையிடையே சிலம்புச் செல்வரோடும் உரையாடிக் கொண்டிருந்தேன். என்னென்ன பேசினோம் என்று அவர்கள் என்னிடத்திலே கேட்டால் திரும்பவும் சொல்லவேன். இவ்வளவுக்கும்

மேலாக, அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலேயே, இந்தப் புத்தகத்தை ஒழுங்காகப் படித்தாயா - என்று கேட்டால் எந்த இடத்தில் எதைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று, அவர்கள் என்னிடத்தில் பரீட்சை வைத்தாலும், அந்தப் பரீட்சையிலே வெற்றி பெறக்கூடிய அளவுக்கு இதைப் படித்து முடித்திருக்கிறேன். ஏனென்றால் சில ஆண்டுகளாக அட்டாவதானம் செய்து பழக்கப்பட்டு வருவதால் இந்த மாதிரிப் பணியினை என்னால் செய்ய முடிகின்றது.

சிலம்புச் செல்வர் அவர்கள் இந்நூலின் முன்னுரையிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். “இன்றைய தினம் இலக்கியம் சார்ந்த பட்டிமன்றங்கள் குக்கிராமங்களில்கூட நடைபெறுகிற அளவுக்கு இலக்கியத்திலே மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்று!

“கோவலன் குற்றவாளியா?” என்ற கேள்வியை அடுத்து அதற்குப் பதிலளிக்க வேண்டிய சிலம்புச் செல்வர் எந்த ஓர் இடத்திலும், எந்த ஒரு பாண்டியன் அவைக்களத்திற்கும் செல்லவே இல்லை.

கண்ணகியின் சார்பில் நின்றோ அல்லது பாண்டியனின் சார்பில் நின்றோ கோவலனின் சாவுக்குக் காரணமான பொற்கொல்லனின் சார்பில் நின்றோ - அவர் தன்னுடைய கருத்துக்களை எங்கும் எடுத்துச் சொல்லவில்லை.

கோவலன் குற்றவாளியா என்று அவர் ஆராய்ந்திருப்பது - கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியின்பால் ஏன் சென்றான் என்கிற அந்த ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு - கோவலன் எவ்வளவு கலையுணர்வு படைத்தவன்; எந்த அளவுக்கு இலக்கிய நயம் உணர்ந்தவன்; எவ்வளவு மொழியறிவு கொண்டவன்; எவ்வளவு வீரம் செறிந்தவன் என்ற அனைத்தையும் தொகுத்துக் காட்டி, மாதவியின்பால் அவன்கொண்ட அன்பு காமத்தின் பாற்பட்டதல்ல; கண்ணகியிடம் பெற முடியாத இன்பத்தைப் பரத்தை ஒருத்தியிடம் பெறலாம்

என்ற எண்ணத்தோடுகூடியது அல்ல; பரத்தையர் வாழ்ந்த பகுதியிலே, மாதவி வாழ்ந்த காரணத்தால் - இவன் பரத்தன் என்று சொல்லப்பட்டான்; இவன் பரத்தையைப்போல் நடந்து கொள்ளவில்லை. மதுரையிலே இவன் சிலம்பு விற்கச் சென்றபோதும் இளங்கோவடிகள் இவன் சென்று திரும்பிய இடங்களில் பரத்தையர் தெருக்களைக் குறிப்பிடுகின்ற காரணத்தால் இவன் கவுந்தியடிகளிடம் பொய் கூறிவிட்டுப் பரத்தையர் இல்லம் சென்று வந்தான் என்று சொல்லப்படுகின்ற அந்தக் குற்றச்சாட்டுப் பொருந்துவதல்ல என்றெல்லாம் தனக்கே உரிய மிடுக்கு நடையோடு இந்த ஏட்டிலே வாதாடி வெற்றி கண்டிருக்கிறார்.

இவ்வளவும் இந்நூலின் பல பக்கங்களில் குறிப்பிடப்படுகிற விஷயம் ஆகும். இப்பொழுது ஒத்துக் கொள்வீர்கள் இந்த நூலை முழுதும் படித்திருக்கிறேன் என்பதை!

இந்த உணர்வு - கோவலன் குற்றவாளியா என்ற கேள்வி - அவர் உள்ளத்திலே ஏன் எழுந்தது? நான் எண்ணிப் பார்த்தேன். இதுதான் எனக்கும் அவருக்கும் எப்படியோ ஏற்பட்டுவிட்ட பாசத் தொடர்பு. அது எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று இளங்கோவடிகள் விழாவிலே பேச வேண்டும். இது தொடர்பான புத்தகம் ஏதாவது இருந்தால் கொண்டுவந்து நண்பர் ஆனந்தம் அவர்களிடம் கேட்டுப் பெற்றேன். அப்படிப் பெற்ற புத்தகத்தின் பெயர், “சிலப்பதிகாரம், சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்” எனும் தலைப்பில் திரு. சுந்தரம் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் அது.

அதைப் படித்து முடித்துவிட்டு சரியாக ஐந்தே முக்கால் மணிக்கு இல்லம் வந்தேன். என் அந்தரங்கச் செயலாளர் ‘கோவலன் குற்றவாளியா?’ என்கிற இந்தப் புத்தகத்தை என்னிடம் தந்தார்.

திரிகூட சுந்தரம் எழுதிய புத்தகத்தைப் படித்து விட்டு நண்பர் ஆனந்தம் அவர்களிடம் வருகிற வழியில், “இப்படியும் ஒரு புத்தகமா? கோவலனையும் - தமிழக வரலாற்றையும் - சமுதாயத்தினையும் இழித்துக் கூறுகிற புத்தகமா? அதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினுடைய தமிழ் நூல் வெளியீடாக வெளியிட வேண்டுமா?”

என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த எனக்கு, வீட்டுக்கு வந்ததும் விடை காத்திருந்தது என்றால், எனக்குச் சோர்வு தருகின்ற நேரத்திலெல்லாம், அறிந்து நீக்குகின்ற ஒருவர் இருக்கிறார் என்றால்; அவர் சிலம்புச் செல்வர் என்று தான் கருதிக் கொள்ள வேண்டும்.

முதற் பதிப்பு : மே 2000