இளைஞர்கள் கட்டளையிடும் காலம்!
பகுதி 2 · 2 / 2
அவர் சொன்னதைத்தான் இங்கே பிறந்து வாழ்ந்து தமிழ்ப்பாக்கள் ஆயிரக்கணக்கானவற்றை வடித்தெடுத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் சொன்னார்:
“சிற்றாரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கிய நல்வாய்க்காலும் வகைப்படுத்தி நெற்சேர் உழுதுழுது பயன் விளைத்த நிறை உழைப்பு தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?”
என்று கேட்டார்.
அதே கேள்வியைத்தான் இந்தப் பகுதியிலே வாழ்ந்த விடுதலை வீரர்கள் கேட்டார்கள்.
பாரதிதாசனுக்கு ஆசானாக, குருவாக விளங்கிய கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி கேட்டார். ஆனால், அந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
“ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்”- தாகூர் சொன்னார். அந்தச் சிரிப்பை காண்பதற்கு என்ன முயற்சியில் ஈடுபட்டோம்? ஈடுபடாமல் இல்லை. ஆனால் அந்த முயற்சி முற்றக் கனிந்ததா? முழுமையாக வெற்றி பெற்றதா? என்றால் இல்லை என்றுதான் மனச்சோர்வோடு நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை நாட்டிலே இருக்கின்றது.
இது ஒருவருடைய கையிலே மாத்திரம், ஒப்படைக்கப்பட்ட பொறுப்பா? இல்லை.
நம் அனைவரது கையிலேயும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொறுப்பு. அந்தப் பொறுப்பினை நாம் நிறைவேற்றியாக வேண்டும். எல்லாரும் இந்த நாட்டு
மன்னர் என்பது, பாரதுமாமியாக பசப்பு மொழியாகப் பல காலம் பயன்படுத்தப்பட்டதுண்டு. அதே நிலை தொடர்ந்து - அடிப்படைப் பிரச்சினைகள் வருமேயானால், நாம் கேள்விக்குறிகளாக மாறிவிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஜனநாயகம் இந்தியாவிலே தழைத்து ஓங்குகிறது. மக்கள் அரசியலிலே மாறுதல்களை உருவாக்குகிறார்கள். இந்தியத் திருநாட்டில் ஒரு நிலையான அரசை இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றார்கள். இடையிலே இருந்த அரசு நிலைகுலைந்த காரணத்தால், தானும் நிலைகுலைந்து இந்தியாவினுடைய கௌரவத்தையும் நிலை குலைத்த காரணத்தால், புதிய அரசு மீண்டும் உருவாகி இன்றைக்கு நிலையானதாக, பக்கத்து நாடுகள் பார்த்துப் பாராட்டத்தக்கதாக - வெளிநாடுகள் பார்த்து இதுவும் ஒளிமிகுந்த நாடுதான் என்று போற்றத் தக்கதாக, அமைதிகின்ற கௌரவமிக்க நாடாக இன்றைக்கு இந்த நாடு மாற வேண்டும் என்ற கவலை உள்ள அரசாக இன்றைக்கு இருக்கின்ற அரசு இருந்தாலும் - இன்னும் பல பிரச்சினைகள்; மத்திய அரசானாலும் சரி; இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகளானாலும் சரி சந்திக்க வேண்டியிருக்கின்றது.
அப்படிச் சந்திக்கின்ற நேரத்தில் ஒவ்வொரு மாநில அரசும் தன்னுடைய நிலையையும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. அப்படிச் சிந்திக்கின்ற அரசுகளில் ஒன்றாக நம்முடைய புதுவை மாநில அரசு இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். நண்பர் மாண்புமிகு அமைச்சர் சிவகுமார் இங்கே பேசும்போது சொன்னார். இந்தக் கல்லூரிக்கு நீண்ட காலம் என்னை அழைத்து நான் வரமுடியாமல் போய், இந்த மாணவர் தலைவர் சிவகுமார் அழைத்தபோது வந்திருக்கிறேன் என்று சொன்னார்.
பெருமாள்ராஜா பேசும்போது சொன்னார், எங்கள் சிவகுமார் இப்படி அதிக நேரம்
பேசுக என்று கட்சியின் தலைவருக்கு கட்டளையிடலாமா? என்று கேட்டார். “இளங்கன்று பயம் அறியாது” என்பது பெருமாள்ராஜா அவர்களுக்கு தெரியாது போலும். அது மாத்திரம் அல்ல. சிவகுமாரைப் போன்ற இளைஞர்கள் கட்டளையிடவும், என்னைப் போன்றவர்கள் அதனை நிறைவேற்றவும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைஞர்கள் கட்டளையிடும் காலம்தான் இந்தக் காலம். ஆனால், அந்தக் கட்டளை நல்ல அறிவார்ந்த உள்ளத்திலே இருந்து பிறக்கக்கூடிய கட்டளையாக இருக்க வேண்டும். அந்த ஆணையை நல்ல முதிர்ச்சி பெற்ற மூளையிலிருந்து முளைக்கக் கூடிய ஆணைகளாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்டளைகளை நிறைவேற்ற என்றென்றைக்கும் நான் தயாராக இருக்கின்றேன் என்பதைக் கூறிக்கொள்வேன். காரணம், நான் திரும்பிப் பார்க்கிறேன். என்னுடைய மாணவப் பருவத்தை.
பெருமூச்சுவிடவில்லை. ஆகா! அப்படி இளைஞனாக இருந்தோமே; இப்படி ஆகிவிட்டோமே? என்று தலையிலே கைவைத்துப் பார்த்துக் கொள்ளவில்லை.
என்னுடைய மாணவப் பருவத்திலோ, இளமைப் பருவத்திலோ நானும் பலருக்குக் கட்டளை இட்டு இருக்கின்றேன்.
என்னுடைய ஊருக்கு வந்த கிருபானந்த வாரியாருக்கே கட்டளையிட்டு இருக்கின்றேன்.
ஆனால் அந்தக் கட்டளைகளெல்லாம் ஏன் பிறந்தன? ஆணைகளெல்லாம் ஏன் பிறந்தன? மொழியைக் காப்பாற்ற - பகுத்தறிவைப் பயன்படுத்த - மூடநம்பிக்கையை வீழ்த்த அன்றைக்கு ஏற்பட்ட உணர்வின்
அடிப்படையிலே தோன்றிய கட்டளைகள்தான் அந்த கட்டளைகள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்தக் கையிலேதான் 1938-ஆம் ஆண்டு புலி-வில்-கயல் என்ற மூன்று சின்னங்களும் பொறித்த தமிழ்க்கொடி ஏந்திக் கொண்டு ‘இந்தியைத் திணிக்கக் கூடாது; கட்டாய இந்தியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று திருவாரூர் வீதியில் பள்ளிச் சிறுவனாக நான் பவனிவந்தேன்.
ஏறத்தாழ 14 வயதுச் சிறுவனாக இருந்த காலத்திலே, அன்றைக்கு ஏந்திய ‘இந்தித் திணிப்பை எதிர்ப்போம்’ என்ற அந்தக் கொடி இன்னமும் என்னுடைய கையிலேயிருந்து கீழே போடவில்லை என்பதையும், என்றைக்கும் இந்தக் கொடி தனியது என்பதையும் தமிழ் வாழ - தமிழ்ச் சமுதாயம் செழிக்க - தமிழ் இலக்கியங்கள் போற்றி பாதுகாக்கப்பட - தமிழர்களுடைய வரலாறு மங்காமல் மறையாமல் என்றும் நிலைத்து நிற்க கருணாநிதி அன்றைக்குத் தூக்கிய அந்தக் கொடி என்றென்றும் தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் தங்களுடைய கையிலே ஏந்தி அதற்கென தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்து நாம் மொழியால் தமிழர் இனத்தால் திராவிடர் - நாட்டால் இந்தியர் என்கிற அந்த உணர்ச்சியோடு, உலகத்தால் மனிதர் என்கிற அந்த மனிதாபிமான எண்ணத்தோடு நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
5.10.80 அன்று புதுவை தாகூர் கலைக்கல்லூரி விழாவில் ஆற்றிய உரை.
