இளைஞர்கள் கட்டளையிடும் காலம்!
பகுதி 1 · 1 / 2
இளைஞர்கள் கட்டளையிடும் காலம்!
தாகூர் கலைக் கல்லூரியில் இன்று நடைபெறுகிற விழா மாணவர் பேரவையினுடைய தொடக்க விழாவா அல்லது கோரிக்கை விழாவா என்று - தெரியாமல் நான் இங்கே அமர்ந்திருந்தேன். காரணம், மாணவர் தலைவர் சிவகுமார் ஆற்றிய வரவேற்பு உரை முழுவதும் இன்னின்ன சலுகைகள் வழங்க வேண்டும்; கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அமைச்சர்களிடத்திலே கேட்டுக் கொண்டு - தனது வரவேற்புரையை அமைத்துக் கொண்டார்.
கல்லூரிப் பேரவையின் தொடக்க விழாவிற்கு நான் வந்து பேசவேண்டும் என்று மாத்திரம் எண்ணியிருப்பார்களேயானால் அவர்கள் அமைச்சர்களை அழைக்காமல் என்னைக்கூட அழைத்திருக்க முடியும்.
இளைஞர் விழா நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. விலைவாசி ஏறிக் கொண்டே போவது சுட்டிக் காட்டப்பட்டது. அதற்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்கிற நிலை இங்கே எடுத்துக் காட்டப்பட்டது. பல்கலைக்கழகம் வேண்டும் - அதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இவைகளெல்லாம் மாணவர்களுக்கு மிகமிகத் தேவையான பிரச்சினைகள்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. பல்கலைக் கழகம் புதுவை மாநிலத்திற்கு மிக விரைவிலே வரும் என்பதை நான் மாண்புமிகு முதலவரோடு உரையாடிய நேரத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர் அருமை நண்பர் சண்முகம் அவர்களோடு கலந்து பேசிய நேரத்திலும் உணர முடிந்தது.
மாணவர்கள் இன்றைக்கு இந்த மாநிலத்திலே உள்ள பிரச்சினைகள் மாத்திரம் அல்ல - அண்டை மாநிலத்திலே உள்ள பிரச்சினைகள் மாத்திரம் அல்ல - இந்தியத் திருநாட்டிலே இருக்கிற பிரச்சினைகளும், இந்தியத் திருநாட்டை பாதிக்கக்கூடிய அளவிற்கு உலக அரங்கிலே எழுந்துள்ள பிரச்சினைகளையும், எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டத்திலே இருக்கின்றீர்கள்.
மாலை நேரத்திலே வானொலியிலே என்ன செய்தி சொல்லப்பட்டதோ என்று ஆவலோடு எதிர்பார்க்கின்ற அளவிற்கு, வானொலிச் செய்தி கேட்டீர்களா? என்ன செய்தி சொன்னார்கள் என்று வானொலி கேட்டவர்களை பார்த்து கேட்கின்ற அளவிற்கு, இரண்டு நாடுகள் இன்றைக்கு போர் முனையிலே நிற்கின்ற காட்சியை நாம் ஏடுகளிலே பார்க்கின்றோம். ஈரான்-ஈராக் இரண்டு நாடுகளிலும் குண்டுமாரி பொழியப்படுவதும், உலகத்திற்கே பெட்ரோல் வழங்கக்கூடிய அளவிற்கு அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய இந்த நாடுகளில் பெட்ரோல் கிணறுகள் எல்லாம் குண்டுகள் விழுந்து அழிக்கப்படுகின்ற நிலைமைகள் நாள்தோறும் வளர்ந்த வண்ணம் இருக்கின்றன.
யுத்த காலத்தில் அவர்களுடைய நகரங்களை நாங்கள் பிடித்துவிட்டோம் என்பதும் இவர்களுடைய நகரங்களை நாங்கள் பிடித்துக் கொண்டு விட்டோம்
என்பதும் வழக்கமாக வாடிக்கையாக வரும் செய்திகள்தான் என்றாலும்கூட, நம்முடைய இந்தியத் துணை கண்டத்தினுடைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் ஈரான் அதிபருக்கும் ஈராக் அதிபருக்கும் கடிதங்கள் எழுதியுள்ளார் என்று பத்திரிகையிலே பார்த்தேன். உடனடியாக போரை நிறுத்தி ஒரு சமரசமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு இரு நாடுகளும் முன்வாருங்கள் என்று கேட்டுக் கொண்டு பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இந்தியத் திருநாட்டின் சார்பாக தன்னுடைய வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்கள்.
இதிலே ஈரான் போக்கு சரியா? அல்லது ஈராக் நாட்டினுடைய போக்கு சரியா, என்கிற பிரச்சினையில் நான் ஈடுபடத் தயாராக இல்லை. நாம் ஈடுபட வேண்டியதும் இல்லை. அவைகளெல்லாம் ஆய்வுகளுக்கு, விமர்சனங்களுக்கு உட்பட்டவையாகக் கூட இருக்கலாம். ஆனால் நமக்கு வேண்டியது - யாருடைய போக்கு சரியோ, தவறோ அதைப்பற்றிக் கவலை இல்லை - இரு நாடும் இந்தப் போரை நிறுத்துவதன் மூலம், உலகத்திலே ஒரு அமைதியை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் உலகத்தின் அமைதியிலே அக்கறை கொண்ட அத்தனைத் தலைவர்களுக்கும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.
நாம் எங்கேயோ இருக்கிறோம் - இந்திய நாட்டினுடைய ஒரு கோடியிலே, புதுவை மாநிலத்திலே, ஒரு சின்னஞ்சிறு மாநிலத்திலே இருக்கிறோம் என்கிற எண்ணம் இல்லாமல், உலகத்தில் எந்தப் பகுதியிலே அமைதிக்குப் பங்கம் விளைகிறது என்றாலும் அது நம்மையும் பாதிக்கும். அங்கே போர்முனையிலே உள்ளவர்களை - அருகிலே உள்ளவர்களை அவர்களுடைய
உயிரைப் பாதிக்கக்கூடிய அளவிற்குத் தாக்குதல்கள் நடைபெறலாம். ஆனால், இங்கே நமது எதிர் காலத்தைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு - இந்தியாவினுடைய பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு - இந்தியாவினுடைய வசதிகளைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு - வாய்ப்புகளைப் பாதிக்கக் கூடிய அளவிற்கு அந்தப் போராட்டத்தினால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதைத்தான் நான் உங்களுக்குக் குறிப்பாகச் சொல்வேன்.
எங்கேயோ நடக்கிறது நமக்கென்ன என்ற எண்ணம் என்றைக்கும் நமக்கு ஏற்படக்கூடாது. அதைப் போலவே யாருக்கோ நடக்கிறது நமக்கென்ன என்கிற நினைவு நமக்கு ஏற்படக்கூடாது. யாருக்கு? அல்லது எங்கே என்ன நடைபெற்றாலும் அதில் நமக்குத் தொடர்பிருக்கிறது என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
அதைத்தான் நம்முடைய முன்னோர்கள் - நமக்குச் சொன்னார்கள் - யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்று!
எல்லா ஊரும் நமது ஊரே; எல்லோரும் நமது உறவினரே என்று எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அந்தப் பரந்த மனப்பான்மைக்கு நாம் முழுமையாக ஆட்பட்டு விடுவோமேயானால், நமக்கென்று ஒரு மொழி கிடையாதா? நமக்கென்று ஒரு இனம் கிடையாதா? நமக்கென்று ஒரு தேசியம் கிடையாதா? என்கிற அந்தக் கேள்விகளை நாம் மறந்து விட்டோம் என்று ஆகிவிடும். பரந்த மனப்பான்மை மனிதாபிமானத்தினுடைய அடிப்படையிலே உலகத்தில் எந்த மூலை முடுக்கிலே யாருக்கு எந்தத் தீங்கு ஏற்பட்டாலும், என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அது நம்மையும் பாதிக்கிறது என்ற மனிதாபிமான அடிப்படையிலே அந்த உணர்வுகள் இருந்தாக வேண்டும்.
அதே நேரத்தில் நம்முடைய மொழியைக் காக்க நம்முடைய சமுதாயத்திலே முன்னேற்றம் காண - நம்முடைய நாடு வாழ - நலிவு தீர நம்முடைய முயற்சிகள் என்ன என்பதை யோசித்தாக வேண்டும். இந்தக் கல்லூரியில் படித்து, முன்னேறி, பட்டம் பெற்று, தேர்விலே வெற்றி பெற்று வெளியே செல்கிற மாணவர்கள் முழு மனநிறைவோடு வெளியேற முடியுமா? அவர்கள் வாங்கிய மதிப்பெண்களுக்காக நான் சொல்லவில்லை. அவர்கள் முதல் தரத்திலே வெற்றி பெற்றார்களா?
இரண்டாவது கட்டமா? மூன்றாவது கட்டமா? என்ற அந்த ஆராய்ச்சிக்கு செல்லவில்லை. அவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு பிறகு, பட்டத்தைப் பெற்று வெளியே செல்கிற நேரத்தில் பேரானந்தத்தோடு செல்கிறவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கத்தோடு செல்கிறவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? இதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு இந்திய பூபாகம் முழுவதும் எல்லா இடங்களிலும் இளைஞர்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகை வளர்கிறது. பொருளாதாரத்திலே பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஒரு சிலர் இந்தியாவினுடைய பொருளாதாரத்தை தங்களுடைய கைகளிலே வைத்து ஆதிக்கம் செலுத்துகின்ற காரணத்தால், அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் மிகப் பலர் வாட வேண்டியிருக்கின்றது.
இந்தக் கல்லூரிக்குப் பெயர் தாகூர் கல்லூரி. அந்தத் தாகூர் சொன்னார் - ‘ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்’ என்று சொன்னார்.
