உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

ஏழையின் சிரிப்பில்

பகுதி 2 · 2 / 2

இப்படிச் சுலபமாக ஆண்டவன் ஆவதற்கு வழி இருக்கும்போது, அதைப் புறக்கணித்துவிட்டு, மனிதர்கள் ஆண்டவனை எங்கேயோ தேடி அலைகிறார்கள்.

ஏழையின் சிரிப்பில் -

குழந்தையின் மழலையில் - பாட்டாளியின் வியர்வையில் - பெண்ணின் கற்பில் - ஆடவனின் பண்பில் - விவேகியின் விழியில் - விஞ்ஞானியின் அறிவில் -

ஆண்டவன் இருக்கிறான். அதை விட்டுவிட்டு குருட்டு மனிதன் இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடுவதுபோல் சிலர் கடவுளைத் தேடி அலைகிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் கடவுளின் உண்மை விளக்கத்தை அளித்தவர்தான் குருநானக்!

சமுதாயத்தொண்டு காலத்திற்குக் காலம் மாறுகிறது. காட்டு மிராண்டிகளாக இருந்த மக்களுக்கு நாகரிகம் போதிக்கச் சிலர் தேவைப்பட்டது, ஒரு காலம்; நாகரிகம் பெற்றவர்கள் தங்களுக்குள் ஆயிரம் பேதங்களை வளர்த்துக் கொண்டனர். அதைச் சீர்படுத்தச் சிலர் தேவைப்பட்டது, ஒருகாலம்; சீர்திருத்தவாதிகள் சிலர் பலராக வளர்ந்தனர். அந்தப் பலருக்குள் மோதல் ஏற்பட்டு, அதைத் தீர்த்து வைக்கச் சமரசவாதிகள் தேவைப்பட்டது, ஒரு காலம்.

பச்சை மாமிசம் சாப்பிட்ட மனிதன், சமைத்துச் சாப்பிடப் பழக்கப்படுத்தப்பட்டான். சமைத்துச் சாப்பிடும்போது அவனைப் பசிப்பிணியிலிருந்து மீட்பது மற்றொரு வேலையாகி விட்டது.

குழந்தைகளைத் தெய்வம் போல் போற்றுவதும் கொண்டாடுவதும் ஒரு பக்கம்.

அதிகக் குழந்தைகள் பெறாதே என்று குடும்பநலக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் செய்வது மற்றொரு பக்கம்!

என்றும் உலகில் அமைதிப் புறாவைப் பறக்க

இதத்தை மாறுபட்ட சூழ்நிலைகளுக்கிடையேயுதான், மக்கள் பணியாற்றிட மனிதகுல மாணிக்கங்கள் பிறக்கிறார்கள்.

அத்தகு புதிதொளிதான் 1469-ஆம் ஆண்டு மிகுந்த எழிலுடன் கிளம்பியது.

“எல்லா மதங்களும் ஒன்றே! எல்லா மனிதர்களும் ஒன்றே! உண்மை எல்லாவற்றுக்கும் மேலானது! ஆனால் அதற்கும் மேலானது ஒன்றுண்டு; அதுதான் உண்மையின் வழி வாழ்வது.”

இதைத்தான் குருநானக் போதித்தார்.

“ஒரே கடவுள்; சமயச் சடங்குகள் வீணானவை; சாதி வேறுபாடு கூடாது;”

இந்தக் கொள்கைகளை அவர் முழங்கினார்.

ஐந்நூறு ஆண்டுகள், உருண்டு ஓடிவிட்டன. ஆறுகள் திசைமாறி ஓடுகின்றன. அருவிகள் தடம் மாறி விட்டன. மலைகள் இருந்த இடம் பள்ளத்தாக்குகளாக மாறிவிட்டது. கடல் அலைகள் சில நகரங்களை அழித்து விட்டன. மணல் வெளிகள் நந்தவனங்களாகி விட்டன. சந்திரனைத் தன்னிடம் அழைத்த மனிதன் அது வராத காரணத்தால் அதனிடமே சென்று விட்டான்; ஐந்நூறு ஆண்டுகளில் இயற்கையில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டாலும் குருநானக் போன்ற பெரியவர்களின் சீர்திருத்தங்களிலோ, பெயரிலோ எந்த மாற்றமும் இல்லை.

அப்படியே நிலைத்து விட்டார்கள்.

குருநானக்கின் பெயர் சொல்லிப் பறவைகள் பாடுகின்றன.

அந்தப் பாட்டைக் கேட்டு, மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன.

நானக்கின் கீதம் காற்றிலே மிதக்கிறது.

அந்தக் காற்று, தமிழ்நாட்டைத் தழுவுகிறது.

அந்தத் தழுவலிலே நான் என்னை மறக்கிறேன்.

பஞ்சாப் மக்களே! உங்களோடு ஒன்றி விடுகிறேன்.

உங்கள் எதிரே நிற்கிறேன்.

என்னை உங்கள் முன்னிற்க வைத்த பஞ்சாப் முதல்வருக்கு என் நன்றி!

வாழ்க குருநானக் புகழ்!

1969-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் சண்டிகாரில் குருநானக் அவர்களின் 500- ஆவது ஆண்டு பிறந்த தின விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000