உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

ஏழையின் சிரிப்பில்

பகுதி 1 · 1 / 2

ஏழையின் சிரிப்பில்

பெருமைக்குரிய குருநானக்கின் ஐந்நூறாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ்நாட்டு மக்களுக்குத் திருக்குறள் என்ற அறநூலைத் தந்தவர் திருவள்ளுவர். அவருடைய இரண்டாயிரம் ஆண்டு விழாக் கொண்டாடப்படும் இந்த ஆண்டில் குருநானக்கின் ஐந்நூறாம் ஆண்டுவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபுக்கும் தமிழ் நாட்டுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கின்றன.

எனக்கும் உங்கள் முதலமைச்சர் குர்னாம்சிங்கிற்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை மட்டும் நான் குறிப்பிடவில்லை. சாதி, மத, மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்னும் கருத்தைத் தமிழ்நாட்டில் வள்ளுவர் வழிநின்று அறிஞர் பெருமக்கள் கூறி வருகின்றார்கள். பஞ்சாபிலும் குருநானக் வழி நின்று அதே கருத்தை நீங்கள் முழங்கி வருகின்றீர்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். பஞ்சாப் வீரன் பகத்சிங்கும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டான். எங்கள் தமிழ்நாட்டில் வெள்ளையர்களின் கொலை வெறிக்கு ஆளான, ஊமைத்துரை - பெரிய மருது - சின்னமருது - ஆகியோரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். உடலெல்லாம் புல்லரிக்கிறது; அந்த வீரர்கள் இரத்தம் சிந்திய மண்ணை வணங்குகிறேன்.

எங்கள் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தார்

சங்கரலிங்கனார். உண்ணாவிரதத்திலேயே அவர் இறந்து போனார். இப்போது அல்ல; பத்து வருடங்களுக்கு முன்பு!

இங்கேயும் உண்ணாவிரதம் இருந்த பெருமான் என்ற பெரியவர் உயிர் துறந்தார்.

பிரச்சனையில் நான் நுழைய விரும்பவில்லை. அந்த வீரர் பிறந்த இந்த மண்ணை நான் மண்டியிட்டுத் தொழுகின்றேன்.

ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குருநானக் தன்னுடைய கொள்கைகளை நிறைவேற்றுவதில் எவ்வளவோ சிரமங்களைச் சந்தித்தார். சிறைச்சாலையில் கூட அடைக்கப்பட்டார். அதுவும் அவருக்கு வசதியாகப் போயிற்று. அங்குள்ள கைதிகளிடையே தமது கொள்கைகளைப் பரப்பினார். இலட்சியவாதிகளுக்குச் சிறைச்சாலையைவிட விருப்பமான இடம் வேறு எதுவுமில்லை. சில நேரங்களில் முதல் மந்திரிப் பதவியைவிட, முன்பு நான் அடிக்கடி போய் வந்த சிறைச்சாலையே எனக்கு மேலாகத் தெரிகின்றது.

குருநானக், சிறையையும் சிந்தனைச் சோலையாக மாற்றினார். அப்படிப்பட்ட ஆற்றலை அவர் இளம் வயதிலேயே பெற்றிருந்தார். சூரியன் உதிக்கும்போதே இருளை விரட்டிக் கொண்டுதான் உதிக்கிறது. அது போலவே குருநானக் தமது சிறுவயதில் வளரும் போதே மூடநம்பிக்கை இருளை விரட்டிக் கொண்டு வளர்ந்தார்.

இளைஞர் நானக்கிற்குப் பூணூல் போடுவதற்கு அவருடைய வீட்டார் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். அதை அவர் மறுத்தார்.

‘அன்பையும், மனிதாபிமானத்தையும், அறிவையும் நூலாகத் திரித்து அணிந்து கொள்ளுங்கள். அந்தப் பூணூல்தான் புனிதமானது. இது தேவையில்லை’ என்று இப்படிவிளக்கம் சொன்னார் நானக்.

ஒருமுறை, அவர் களைப்பு மிகுதியால் கடவுள் சந்நிதானத்திற்கு நேராக காலை நீட்டிக் கொண்டு தூங்கி விட்டார். அது கண்டு மதவாதிகள் திடுக்கிட்டனர் - அவரை எழுப்பிக் கண்டித்தனர். ‘கடவுள் எங்கே இல்லையோ அந்தப் பக்கமாக என் காலைத் திருப்பி விடுங்கள்’ என்று அவர் தெரிவித்தார்.

கண்டித்தவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

இந்து, முஸ்லீம் ஆகிய இரு மதங்களை இணைத்து அவர் ஒரு புதுமதம் உருவாக்கினார்.

எங்கள் தமிழ்நாட்டில் சேலம் என்ற ஒரு மாவட்டம் இருக்கிறது. அங்கே இரண்டு மாஞ்செடிகளை ஒன்றாக இணைத்து வளர்ப்பார்கள். அதில் கிடைக்கும் பழத்திற்கு ஒட்டு மாம்பழம் என்று பெயர். மிகுந்த சுவையாக இருக்கும் அந்தப் பழம்! அந்த மாம்பழம் போன்றதுதான் சீக்கிய மதமும்.

பெரியவர்களுக்கு விழா எடுப்பது மட்டும் போதாது. குருநானக் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு கல்லூரி அமைக்கிற முயற்சிக்குத் தமிழக அரசு ஆக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் நானக் விழாவில் அடிக்கடி நாங்கள் மகிழ்வுடன் கலந்து கொண்டிருக்கின்றோம்.

விழா, மகிழ்ச்சி, கொண்டாட்டம் இவைகளோடு நின்று விடாமல் பெரியவர்கள் வகுத்த நெறியில் நின்று நாமும் வாழ வேண்டும், சமுதாயத்தையும் வாழ வைக்க வேண்டும்.

நாட்டில் எத்தனையோ மதவாதிகள் தோன்றினார்கள். இன்னும் சாதிச் சிக்கல் தீரவில்லை.

எத்தனையோ பகுத்தறிவுவாதிகள் தோன்றினார்கள். இன்னும் மூடநம்பிக்கை ஒழியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன? அதை நாம் ஆராய வேண்டும். நல்ல மருந்து இருந்தும் நோய் தீரவில்லை என்றால் என்ன காரணம்?

டாக்டர் கொடுத்த மருந்தை நோயாளி சாப்பிடவே இல்லை என்றால் நோய் தீராது!

பெரியவர்கள் வகுத்த கொள்கைகள் புத்தகங்களில் இருந்தால் மட்டும் போதாது! அவைகளைப் படிக்க வேண்டும்; படித்தபடி நடக்க வேண்டும்; மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும்.

சூரியன் ஒளியைத் தருகிறான், அதில் விதைப்பவர்கள் விதைத்துக் கொள்ளவேண்டும். வானம், மழையைத் தருகிறது! அதை வயலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஒளியோ, மழையோ, மனிதனின் கையைப் பிடித்து இழுத்து, ‘ஏ சோம்பேறி! என்னைப் பயன்படுத்திக் கொள்’ என்று கெஞ்சுவதில்லை. அதைப் போலவே பெரியவர்கள் ஒளி வழங்கினார்கள்; கருத்துமழை பொழிந்தார்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டோம். அது நம் குற்றமே தவிர அவர்கள் குற்றமல்ல.

அன்பையும் மனிதாபிமானத்தையும் கொண்டு தின்றவன் ஆண்டவனை ஏப்பம் போல் வெளியே விட்டு விடுகிறான்.

அன்பையும், மனிதாபிமானத்தையும் வாரி வழங்குகிறவன் ஆண்டவனைத் தனக்குள் அடக்கி வைத்துக் கொள்கிறான். அவனே, ஆண்டவன் ஆகிவிடுகிறான்.

முதற் பதிப்பு : மே 2000