உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக தொடக்க விழா

பகுதி 2 · 2 / 2

அதாவது...

“உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல், நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் - அது உடைந்து சிதறி உருப்படாமல் போய்விடும்.”

மேலும் அம்பேத்கர் கூறுகிறார்...

"The only question that remains to be considered is, How to bring about the reform of the Hindu social order? How to abolish caste? This is a question of supreme importance. I am convinced that the real remedy is inter-marriage. Fusion of blood, can alone create the feeling of being kith and kin, and unless this feeling of kinship, of being kindred, becomes paramount the separatist feeling - the feeling of being aliens - created by caste will not vanish."

“இப்போது நாம் பரிசீலிக்க வேண்டிய பிரச்சினை இதுதான். இந்த சமூக அமைப்பில் சீர்திருத்தம் செய்வது எப்படி? சாதியை ஒழிப்பது எப்படி? இது முக்கியமான பிரச்சினையாகும்.

சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி, கலப்பு மணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இரத்தக் கலப்பின் மூலம்தான் உற்றார், உறவினர் என்ற உணர்வு ஏற்படும். இந்த உணர்வு ஏற்பட்டு வலுவடைந்தாலன்றி சாதியினால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை உணர்வும் ஒருவருக்கொருவர் அந்நியராக நினைப்பதும் மறையவே மறையாது.”

"The real remedy for breaking Caste is inter marriage. Nothing else will serve as the solvent of caste. You are right in holding, the caste will cease to be an operative force, only when inter-dining, and inter-marriage, have become matters of common course."

“சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு, கலப்புத் திருமணமே. வேறு எதுவும் சாதியை ஒழிக்க முடியாது. சமபந்தி போஜனமும், கலப்புத் திருமணமும் சாதாரண நடைமுறைகளாகும்போதுதான் சாதியின் சக்தி அழியும்.”

இது அம்பேத்கருடைய பொன்மொழி. இந்த அணுகுமுறை இன்றைக்கும் சுதந்திரப் பொன்விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்தக் காலக் கட்டத்திலும் நம்மால் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டிருப்பதை நான் உணராமல் இல்லை.

எனவேதான் இந்த அரசு 74-ல் நான் பொறுப்பிலே இருந்த அந்தக் காலக்கட்டத்திலேயே கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்த - கலப்புத் திருமணம் செய்து கொள்கின்ற தம்பதிகளுக்கு ஒன்றரைப் பவுன் தங்கப் பதக்கம் பரிசளிக்கப்படுமென்று அண்ணா வழிநின்று அறிவித்து செயல்படுத்தினோம்.

கலப்புத் திருமணம் என்றால் செட்டியாரும், முதலியாரும் செய்து கொள்கின்ற திருமணம் அல்ல. அய்யரும், அய்யங்காரும் செய்து கொள்கின்ற திருமணம் அல்ல. இருவரில் ஒருவர் மணமகனோ அல்லது மணமகளோ தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அதற்குப் பெயர்தான் கலப்புத் திருமணம் என்ற முறையிலேதான் இந்தப் பதக்கம் பரிசு வழங்கப்பட்டது.

1989-90- இல் இந்தக் கலப்புத் திருமணத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று நான் பொறுப்பிலே இருந்த போது கழக ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது. கடந்த

ஆண்டு 1996- இல் அந்த 5 ஆயிரத்தை 10 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி கலப்புத் திருமணம் செய்து கொள்கின்ற தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது.

இப்பொழுது மதுரையிலே நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாட்டிலே அறிவித்திருக்கிறேன். கலப்புத் திருமணத்தில் ஆணோ அல்லது பெண்ணோ இருவரில் ஒருவர் ஆதி திராவிடராக இருந்தால் இருபதாயிரம் ரூபாய் அவர்களுக்கு நிதி வழங்கப்படும் அரசின் சார்பில் என்று அறிவித்திருக்கிறேன்.

அதுமாத்திரமல்ல; சமபந்தி விருந்துகளும் இன்றைக்கு தமிழகத்திலே பல ஆலயங்களில் - பல பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன. இவைகள் எல்லாம் பெரியார் வழியைப் பின்பற்றி, அண்ணாவின் வழியைப் பின்பற்றி, காந்தியடிகளின் கருத்துக்களைப் பின்பற்றி, அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய கருத்துக்களைப் பின்பற்றி நடைபெறுகின்ற செயல்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொன்றையும் நம்முடைய குடியரசுத் தலைவருடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழகத்திலே இந்த ஆண்டு ஐம்பது இடங்களில் ஒவ்வொரு இடங்களிலும் 200 வீடுகள் - எல்லா சமூகங்களையும் சேர்ந்தவர்கள், ஆதி திராவிடர் உள்ளிட்ட உயர்ந்த சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எல்லா சமுதாயத்தினரும் அங்கே குடியிருக்கக்கூடிய அளவிற்கு “சமத்துவபுரம்” என்ற ஊர்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த ஆண்டு அந்தப் பணி தொடங்கவிருக்கிறோம் என்பதையும் நான் இங்கே எடுத்துச் சொல்லி,

இந்த நல்ல விழாவில் - இனிய விழாவில் - ஒப்பற்ற விழாவில் - நம்முடைய குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் அவர்களையும், ஆளுநர்

அவர்களையும், மற்றும் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவரையும் உங்களையும் வருக! வருக! என்று வரவேற்று இந்தப் பல்கலைக் கழகத்திற்கு என்னுடைய இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- முரசொலி 21-9-97

முதற் பதிப்பு : மே 2000