டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக தொடக்க விழா
பகுதி 1 · 1 / 2
டாக்டர் அம்பேத்கர்
பல்கலைக்கழக தொடக்க விழா
இன்று ஓர் இனிய நாள். இதயமெல்லாம் பூரிக்கின்ற நாள். நீண்ட நெடுநாளைய கனவு நிறைவேறுகின்ற நாள். இந்த நாளை மேலும் சிறப்பிக்கின்ற வகையில் நம்முடைய குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். நான் அவரை தமிழக மக்களின் சார்பாக வருக! வருக! வருக! என்று வாயார - மனமார வரவேற்கிறேன்.
இந்தியாவினுடைய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று முதல் தடவையாகத் தமிழகத்திற்கு வந்துள்ள அவர்கள் இந்தியாவிலேயே முதன் முதலாகத் தொடங்கப்படுகின்ற அண்ணல் அம்பேத்கார் பெயரால் தொடங்கப்படுகின்ற சட்டப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைப்பது மேலும் ஒரு சிறப்பு என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தியாவிலே உள்ள மாபெரும் அரசியல் தலைவர்களில் பெரும் பொறுப்பிலே இருந்தவர்கள் என்றில்லாமல் மக்கள் பாராட்டுகின்ற அரசியல் தலைவர்களில் இரண்டு நாராயணன்கள் என்னைக் கவர்ந்தவர்கள். ஒருவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்; (கைத்தட்டல்) மற்றொருவர் கே.ஆர். நாராயணன். (பலத்த கைத்தட்டல்) இந்த இரு நாராயணன்களுமே ஏழையெளிய மக்கள் பால் அன்பு கொண்டவர்கள். எளிய - எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவர்கள்.
மேதகு கே.ஆர். நாராயணன் அவர்கள் இந்தியாவிலேயே பெரிய மாளிகையான ராஷ்ட்ரபதி மாளிகையில் இன்றைக்கு வாழ்ந்தாலுங்கூட அவருடைய எண்ணம் எல்லாம் அன்றைக்குச் சொல்வார்களே - கிரெம்ளின் மாளிகையிலே உலவினாலும், லெனினுடைய எண்ணம் எல்லாம் ஏழையெளிய மக்கள்பால்தான் இருக்குமென்று; அதைப்போல் இவருடைய எண்ணம் எல்லாம் இந்தியத் திருநாட்டிலே உள்ள சாதாரண, சாமான்ய, ஏழையெளிய நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையே சுற்றி வருகின்ற எண்ணங்களாகும்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்கள் இன்று வருகை தந்திருப்பது நமக்கெல்லாம் பெரும் மகிழ்வைத் தருகின்ற ஒன்றாகும்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இன்றைக்கு இங்கே தொடங்கப்படுகிறதென்றால் - சென்னையிலே சட்டக் கல்லூரி முதன்முதலாகத் தொடங்கப்பட்டது 1891-ஆம் ஆண்டு. அதற்குப் பிறகு 83 ஆண்டுகளுக்குப் பிறகு தான் 1974-ல் நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த அந்தக் காலக் கட்டத்தில் இரண்டாவது சட்டக் கல்லூரி தமிழ்நாட்டில் மதுரையில் தொடங்கப்பட்டது. பிறகு 1979-ல் திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
1996-ல் கடந்த ஆண்டு - நெல்லையிலே மற்றொரு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரி ஒன்றைத் தவிர, அரசின் சார்பிலே ஐந்து சட்டக் கல்லூரிகள் தமிழகத்திலே இருக்கின்றன. இந்தக் கல்லூரிகள் எல்லாம் ஆங்காங்குள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகத்தோடும் சார்ந்து இயங்க வேண்டிய நிலையிருந்த காரணத்தால், உள்ள இடர்பாடுகளையெல்லாம் எண்ணி, எல்லா சட்டக் கல்லூரிகளும்
ஒரே பல்கலைக் கழகத்தின் கீழ் சார்ந்து வாழ வேண்டும்; இயங்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்தியாவிலேயே முதல் முயற்சியாக, முதல் தடவையாக, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தை இன்றைக்கு நாம் தொடங்கியிருக்கிறோம்.
இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அம்பேத்கருடைய பெயரை இன்றைக்கு சட்டப் பல்கலைக் கழகத்திற்குத்தான் வைத்தோம் என்றில்லை. 1990-ஆம் ஆண்டில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா நடைபெற்ற அந்தக் காலக்கட்டத்தில், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்ற பெயரைச் சூட்டினோம் என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.
1972-ஆம் ஆண்டிலேயே அரசினர் கலைக் கல்லூரி ஒன்றினை பெரம்பூர் பகுதியில் தொடங்கிய போது அதற்கும் அம்பேத்கர் அவர்களுடைய பெயர் சூட்டப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
அது மாத்திரமல்ல; நம்முடைய மாநிலத்திலே மாத்திரமல்ல; அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தீர்மானம் செயல்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி மக்கள் தங்களுடைய குரலையெழுப்பியபோது அதற்கு ஆதரவுக் குரலாக இந்தியாவிலேயே ஒரேயொரு மாநிலம்தான் குரலெழுப்பியது. அதுதான் தமிழ்நாடு.
(கைத்தட்டல்)
அன்றைக்கு நான் வேண்டுகோள் விடுத்தேன். லட்சக்கணக்கான தந்திகள் மராட்டிய அரசுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தேன். அவ்வாறே லட்சக்கணக்கான தந்திகள் மராட்டிய மண்டல அரசுக்கு அனுப்பப்பட்டன. மராட்டிய
மாநில ஆளுநர் திரு. அலெக்சாண்டர் அவர்களும் அன்றைய முதலமைச்சராக இருந்த திரு. சரத்பவார் அவர்களும் எனக்கு உடனடியாக பதில் அனுப்பினார்கள். தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று பதில் அனுப்பினார்கள். அவ்வாறே நிறைவேற்றினார்கள்.
இந்த அளவிற்கு அம்பேத்கருடைய கருத்துக்களோடு எங்களுக்கு உள்ள ஈடுபாட்டிற்குக் காரணமே எங்களை ஆளாக்கிய தந்தை பெரியார் அவர்களும், வழிநடத்தி, வழிகாட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களும் எந்தக் கொள்கைகளை எங்களுக்குக் கற்றுத் தந்தார்களோ அதே கொள்கையுடையவர் அம்பேத்கர் என்ற காரணத்தினால் எங்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களிடத்திலே தணியாத ஆர்வமும், ஈடுபாடும் என்றென்றும் உண்டு. (கைத்தட்டல்)
சாதி சமயங்கள், மத பேதங்கள், உயர்வு தாழ்வு இவைகள் எல்லாம் அகற்றப்பட வேண்டுமென்பதையும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதையும் இலட்சிய மூச்சாகக் கொண்டிருக்கிற எங்களுக்கு அம்பேத்கருடைய பல கருத்துக்கள் மேலும் ஆர்வத்தைத் தூண்டி விடக்கூடிய கருத்துக்களாக அமைந்திருக்கின்றன.
அவர் சொல்லுகிறார்:
"There is no doubt, in my opinion, that unless you change your social order you can achieve little by way of progress. You cannot mobilize anything on the foundations of Caste. You cannot build up a nation; you cannot build up a morality. Anything that you will build on the foundations of caste, will crack and will never be a whole".
