டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கு விழா
பகுதி 2 · 2 / 2
என்னதான், தமிழ்நாடு இந்தியாவிலேயே, குடும்ப நலத்திட்டத்திலே முன் வரிசையிலே இருக்கிறது என்று சொன்னாலுங்கூட, கட்டுக்கடங்காத அளவிற்கு மக்கள் பெருக்கம் இன்றைக்குப் பெருகிக் கொண்டேயிருக்குமானால், எல்லோருக்கும் கல்வி கொடுப்பது என்பது இயலாத ஒன்றாக ஒரு அரசுக்கு ஆகிவிடும். எத்தனையோ மடங்கு கல்வித் துறையிலே இன்றைக்கு நாம் அதிகமாகச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த முழுப்பயன்களும் மாணவச் செல்வங்களுக்குப் போய்ச் சேருவதற்கு ஏற்ற கருவியாக இருக்கின்றவர்கள் என் எதிரிலே அமர்ந்திருக்கின்ற ஆசிரியப் பெருமக்களாகிய நீங்கள்தான் என்பதை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்.
அந்தக் கடமை உணர்வை நீங்களும் மறக்கக் கூடாது என்பதை இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
கல்வி சமூக மாற்றத்திற்கு ஒரு கருவி என்ற வகையிலேதான் (Education is a tool for social change) ஒரு மேல்நாட்டு அறிஞன் குறிப்பிட்டான்.
இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகை
“அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்”
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் மக்கள் கல்வி வாய்ப்புகளை உரிய முறையில் பெற இயலாத சூழ்நிலை நிலவியது உண்மை. ஆனால், அந்தக் கல்வி வாய்ப்புகளை பெற்றிருந்தவர்கள் கல்லாதவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த வரலாறும் உண்மை. அந்தக் காலக் கட்டத்திலேதான் - தமிழகத்தைப் பொறுத்தவரை 1916-ஆம் ஆண்டுவாக்கில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றம் கொண்டது.
அந்தத் தோற்றத்திற்குப் பிறகுதான் எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு வேண்டும்; வேலைவாய்ப்பு வேண்டும் என்ற உரிமைக்குரல் விண்முட்ட எழுந்தது. அந்த உரிமைக் குரல்களின் முன்னோடிகளாக இருந்த திராவிட இயக்கத்தின் தலைவர்களை யாரும் மறந்துவிட முடியாது. அவர்களுடைய உழைப்பின் வடிவம்தான் என் எதிரே அமர்ந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெருமக்கள் என்று சொன்னால் அதை யாரும் மறுக்கவும் முடியாது; மறக்கவும் முடியாது.
அந்த இயக்கத்தின் தோன்றலாக இருக்கின்ற அரசுதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கழக அரசு என்பதை நீங்கள் மறந்துவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.
கோத்தாரிக் கல்விக் குழு ஒரு கருத்தைச் சொன்னது. “இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளிலே தீர்மானிக்கப்படுகிறது” என்று! தந்தை பெரியார் அவர்கள் உங்களைப் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் - “நாடு மக்களால் உருவப்படுகிறது; மக்கள் ஆசிரியர்களால் உருவப்படுகிறார்கள்” என்று தந்தை பெரியார் சொன்னார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், “ஆசிரியர்கள் இன்று ஏங்கினால் நாளைக்கு நாடு ஏங்கும்” என்று சொன்னார்கள். இவர்கள் வழிநின்றுதான் இன்றைக்கு நானும், கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்களும் உங்களுக்காகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்; பணி புரிந்து கொண்டிருக்கிறோம்.
உங்களுடைய தேவை எந்த அளவிற்கு இந்த அரசினால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை யெல்லாம் கருதிப் பார்த்துத்தான் இடைநிலை ஆசிரியர்களாகத் தேர்வு செய்வதிலேகூட, நியமிக்கப்படுவதிலேகூட, இருந்த தொல்லைகளை எல்லாம் - நீங்கள் உங்கள்
சங்கங்களின் சார்பாக எங்களுக்கு எடுத்துரைத்த நேரத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு பெற்றவர்களின் முன்னுரிமை அடிப்படையிலேதான் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் என்கிற கொள்கையை அழுத்தந்திருத்தமாகக் கடைப்பிடித்து, ஏற்கெனவே இருந்த ஊழல் முறைக்கு பிரயாணச் சீட்டுக் கொடுத்து அனுப்பி விட்டு இன்றைக்கு நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற அளவுக்கு கிட்டத்தட்ட முதற்கட்டமாக சென்ற ஆண்டு 13,140 இடைநிலை ஆசிரியர் பணி உங்கள் வீட்டின் கதவைத் தட்டி உங்களுக்கு வழங்கப்பட்டது என்பதை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள்.
அதைப்போல இந்த ஆண்டிலும், அதே முறையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமைப்படி 10,384 இடைநிலை ஆசிரியர்கள் பணிகள் இன்றைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஐந்தாண்டுக் கால ஆட்சியில் - கடந்த காலத்தை நினைவூட்ட நான் விரும்பவில்லை - இருந்தாலும் வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. உங்களில் பலபேர் வரலாற்றைப் போதிக்கின்ற ஆசிரியர்கள் இருக்கிறீர்கள். எனவே, பழைய சரித்திரங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.
கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் - ஐந்தாண்டு முடிவடைகின்ற நேரத்தில் - 8,450 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத்திரம்தான் வேலை தரப்பட்டது. அதுவும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்து கொண்ட முன்னுரிமை அடிப்படையிலே அல்ல. அது வேறு முன்னுரிமையின் படி. (பலத்த சிரிப்பு) அது என்ன முன்னுரிமை என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், 96, 97-ல் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும் இடம் இல்லாமல் 23,524 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் பெருமிதத்தோடு இங்கே தெரிவித்துக் கொள்வேன்.
அது மாத்திரமல்ல; காலியாக இருந்த பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் எல்லாம் பணியிலே அமர்த்தப்பட்டுள்ளார்கள். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 686 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு 821 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட, பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
அதே போல பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் கடந்த ஆண்டில் 629 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். இந்த ஆண்டில் 600 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுகிறார்கள்.
அதைப் போலவே தலைமை ஆசிரியர் பணிகள் - இந்தப் புதிய ஆசிரியர் நியமனங்கள் மாத்திரமல்லாமல் முந்தைய ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப் படாமலே இருந்தன. ஆனால், பல உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் - இதன் காரணமாக நிர்வாகச் சீர்கேடுகளுக்கு உள்ளாகி விடுவதைக் கண்ட இந்த அரசு - நம்முடைய கல்வித்துறை வாயிலாக செய்த பெரும் கடமையாக - உயர்நிலைப் பள்ளிகளில் 192 தலைமை ஆசிரியர்களையும், மேல்நிலைப் பள்ளிகளில் 428 தலைமை ஆசிரியர்களையும் நியமனம் செய்து ஆணையிட்டது.
இந்த நடப்பு ஆண்டிலும்கூட 231 உயர்நிலைப்
பள்ளிகளுக்கும், 225 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொன்று; கடந்த ஆட்சியில் ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கிய விதத்தில் - அப்பொழுது நியமிக்கப்பட்டவர்களே 8,450 பேர்தான். அதிலே குறிப்பாக பெரும்பான்மையான பெண்கள் தொலைதூரங்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கெல்லாம் பணி அமர்த்தப்பட்டார்கள். மாறுதல் செய்வது எதற்காக என்பது உங்களுக்குத் தெரியும் (சிரிப்பு). அதனுடைய மாமம் உங்களுக்குப் புரியும் (பலத்த சிரிப்பு). மாறுதல் செய்தால், மறுபடியும் மீண்டும் பழைய இடத்திற்கே மாறுதல் கேட்பார்கள்.
மாறுதல் கேட்க வருகிற நேரத்தில் எங்களுக்கு என்ன ஆறுதல் என்று கேட்பவர்களும் உண்டு. அதற்காகவே மாறுதல்கள் நடைபெற்ற காலம் அது.
ஆனால் இப்படி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்களை எல்லோரும் அவரவர்களும் தங்களுடைய சொந்த ஊருக்கு மாறுதலிலே செல்லும் வண்ணம் கடந்த ஆண்டு பிப்ரவரி திங்களிலே சிறப்பு ஆணை ஒன்று வெளியிட்டதும் இந்த அரசு தான் என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். (கைத்தட்டல்)
அதைப்போல உயர்கல்விக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து கற்க வேண்டும், அப்போதுதான் அவர்களிடம் கற்கும் மாணவர்கள் சிறந்த அறிவுள்ளவராக திகழ முடியும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் எந்த காலத்திலும் மாணவர்கள்தான் - அவர்கள் ஆசிரியர்களாக ஆனாலும் கூட - அவர்கள் மாணவர்கள் தான். ஒவ்வொரு நாளும் காலையிலே பள்ளிக்குச் சென்று பாடம் நடத்துவதாக இருந்தால் முதல் நாள் இரவே அவர்கள் பாடம் படித்துக் கொண்டு சென்றால்தான் அந்த மாணவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்க முடியும்.
முதல்நாள் இரவு பாடம் படிப்பவர்களுக்காகச் சொல்கிறேன். யாராவது படிக்காமல் இருந்தால், இனிமேல் படிப்பீர்கள் என்ற அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன்; அந்த வேண்டுகோளோடு சொல்கிறேன். மறுநாள் காலையிலே பள்ளியிலே சென்று பாடம் நடத்துவதாக இருந்தால், முதல்நாள் இரவு படித்தாக வேண்டும். என்ன பாடம் நாளைக்குப் போதிக்கப் போகிறோம்? என்ன பாடம் கற்றுத் தரப் போகிறோம்? என்பதை முதல்நாள் படித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
நான் முதலமைச்சர்தான். நீங்கள் ஆசிரியர்கள். நம்முடைய கல்வி அமைச்சர், மற்றவர்கள் எல்லாம் இங்கே பேசுகிறோம் என்றால் - ஆசிரியர்கள் மாநாடுதானே, அங்கே போய் ஏதாவது பேசிவிட்டு வரலாம் என்ற அலட்சியப் போக்கிலே வராமல் நாங்களும் என்ன இங்கே பேசுவது என்பதைப் படித்துக் கொண்டுதான் வருகிறோம். (பலத்த கைதட்டல்)
அதைப்போல மாணவர்களுக்கு என்ன கற்றுத் தருவது என்பதைப் படித்துக்கொண்டு வர வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அதுமாத்திரமல்ல; இன்னும் எதிர்காலத்திலே அவர்களுக்கு என்னென்ன சொல்லித் தரலாம் என்பதைப் படிக்க வேண்டுமென்ற காரணத்தினால், அதைக் கருத்திலே கொண்டு, ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் பணியாற்றும் காலத்தில், உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் விதத்தில், ஆசிரியர்கள் பெறும் உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கும் புதிய ஒரு புரட்சிகரமான திட்டத்தை 69-ஆம் ஆண்டிலேயே அறிவித்து நடைமுறைப்படுத்தியதும் இந்த அரசுதான் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு அலுவலர்களைப் போலவே வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வசதி 35,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, அந்தக் கடன் வசதியை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் விரிவு
படுத்தி ஆணையிட்டதும் இந்த அரசு தான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இவைகள் எல்லாம் ஆசிரியர்களுக்காகச் செய்யப்பட்ட நல் உதவிகள், தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்ற உதவிகளிலே ஒரு கட்டம். அதைப்போல - பேராசிரியர் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல - மாணவர்கள், மாவட்ட அளவில், மாநில அளவில் பிளஸ் 2 தேர்வுகளிலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளிலும் - முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்கள் இங்கே பரிசு பெறவிருக்கிறார்கள்.
இங்கே பரிசு பெறாத இன்னொரு பட்டியலும் இருக்கிறது. அந்தப் பட்டியல் என்னவென்றால், ஒரு வீட்டிலே இதுவரை பட்டதாரிகள் இல்லாமல் முதலாவதாக ஒரு பட்டதாரி மாணவன் - முதல் பத்து மதிப்பெண் எடுத்தால் - அந்த மாணவர்களுக்கு தொழிற்கல்விகளிலே ஒவ்வொரு பிரிவிலும் பத்து மாணவர்கள் வீதம் - அரசாங்கமே செலவு செய்து அந்தத் தொழிற்கல்வியை அவர்களுக்கும் தரும் என்கின்ற அந்த நிலை ஏற்பட்டுப் பட்டுள்ளது.
இந்தப் பட்டியலிலே இடம் பெற்றவர்கள் இன்று பரிசு பெறவில்லை. அவர்கள் எல்லாம் அடுத்து ஒரு நிகழ்ச்சியிலே பரிசுகளைப் பெறுவார்கள். அவர்களுக்கு அரசு அளிக்க உறுதி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு அவர்களுடைய கல்வி வாய்ப்புகளை அரசு கவனிக்கக் கூடிய அந்த நிலையை எடுத்துள்ளது என்பதையும் எடுத்துக் கூறி, பரிசு பெறுகின்ற - டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறுகிற ஆசிரியப் பெருமக்களுக் கெல்லாம் என்னுடைய வாழ்த்துக்களைக் கூறி, பரிசையும் அரசு உதவிகளையும் பெறுகின்ற மாணவச் செல்வங்களுக் கெல்லாம் என்னுடைய பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- முரசொலி 6-9-97
