டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கு விழா
பகுதி 1 · 1 / 2
டாக்டர் இராதாகிருஷ்ணன்
விருது வழங்கு விழா
வள்ளுவர் கோட்டத்திற்கு இங்கே கட்டி முடித்து பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 89-ஆம் ஆண்டு நான் வந்தேன். பின்னர் இரண்டாண்டு காலத்தில் சில பல நேரங்களில் இங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு சுற்றொப்ப ஏழாண்டு காலத்திற்குப் பின்னர், இன்றைக்கு வள்ளுவர் கோட்டத்திலே உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன்.
இந்த ஏழாண்டுக்குப் பிறகு இப்பொழுது வள்ளுவர் கோட்டம் உண்மையிலேயே வள்ளுவர் கோட்டமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இடையிலே - நான் வேதனையோடு சொல்லிக் கொள்வேன். வள்ளுவர் யாத்த முப்பாவில் மூன்றாவது பால்தான் வள்ளுவர் கோட்டத்திலே கடந்த ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை - நானல்ல - நடுநிலை வார ஏடுகள் ஆதாரப்பூர்வமான புகைப்படங்களோடு வெளியிட்டதை நீங்கள் பார்த்து கண்கலங்கியிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இன்றைக்கு புதிய எழுச்சியோடும் புதிதொளியோடும் வருகை தந்து என்னெதிரே வீற்றிருக்கின்ற உங்களை யெல்லாம் காணும்போது நான் மிகுந்த உற்சாகம்
பெறுகிறேன்; ஊக்கம் பெறுகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்; பெருமிதம் கொள்கிறேன்.
இங்கே டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்ற நாளில் இந்தியத் திருநாடு முழுமையும் ஆசிரியப் பெருமக்கள் கூடி அந்த நல்லவரின் பெயர் போற்றி - அந்த வள்ளலின் திறன் வாழ்த்தி, அதைப் போல எதிர்கால இளைஞர்களையெல்லாம் நல்லவர்களாக, வல்லவர்களாக ஆக்க வேண்டுமென்று சூளுரை மேற்கொள்கின்ற நாளாக இந்த நாளை கருதியிருக்கிறார்கள்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் தன் உரையிலே குறிப்பிட்டதைப் போல டெல்லிப் பட்டணத்திலே ஆசிரியர்கள் தேசிய விருது பெறுகிறார்கள், இந்த நாளில்! இந்த நாளில் தமிழகத்தைப் பொறுத்தவரையிலே ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது என்கிற ஒரு விருது கடந்த ஆண்டு வரையிலே அந்தப் பெயரிலே வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது வழங்கப்பட்ட விழாவிலே - மேடையிலே அமர்ந்திருக்கும்போது எனக்கொரு சிந்தனை.
இவ்வளவு பேர் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர்தான் நல்லாசிரியர்கள் என்றால் மற்றவர்கள் யார்? நல்லாசிரியர்கள் அல்லவா? என்ற கேள்வி எழும். அது ஆசிரியர் சமுதாயத்தை புண்படுத்துகின்ற நிலையை உருவாக்குகின்றது. எனவே இந்த விருதுக்கு நல்லாசிரியர் விருது என்று பெயர் வேண்டாம். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளில் அளிக்கப்படுகின்ற காரணத்தால், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரே இருக்கட்டும் என்று அறிவித்தேன்.
(கைத்தட்டல்)
அந்த அறிவிப்பு எல்லா ஏடுகளிலும் வெளிவந்தது. ஆசிரியப் பெருமக்கள் அதைப் பாராட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு இந்த விழாவிலேகூட ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுமென்றுதான் அழைப்பிதழிலே அச்சடிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று காலையிலே கூட சில பத்திரிகைகளைப் பார்த்தால், நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என்றுதான் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ன? “சன் டி.வி.”யிலே (பலத்த சிரிப்பு) இன்றைக்குப் பிற்பகல் ஒன்றரை மணி அளவில் நான் செய்தி கேட்டபோது ராதாகிருஷ்ணன் விருது என்றே அவர்கள் சொல்லவில்லை.
நல்லாசிரியர் விருது என்றுதான் சொன்னார்கள். அந்தச் செய்தி எனக்கு உள்ளபடியே மிகுந்த வெறுப்பையும் கசப்பையும் ஏற்படுத்தியது.
ஒன்று புழக்கத்திற்கு வர வேண்டும், மனதிலே பதிய வேண்டும் என்று எண்ணிச் செயல்படும்போது ஏற்கெனவே ஏற்றுக் கொண்ட ஒன்றைத்தான் மீண்டும் மீண்டும் சொல்வோம், பதிய வைத்துக் கொள்வோம் என்ற நிலை கூடாது.
உதாரணமாக அண்ணா அவர்கள் மறைந்த பிறகு “மவுண்ட் ரோட்” என்ற சாலைக்கு “அண்ணா சாலை” என்று பெயர் வைத்தேன். இப்போதுகூட உங்களில் பலர்கூட “மவுண்ட் ரோடு” என்றுதான் சொல்வீர்கள். ஏன், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட சிலர் என்னிடத்திலே வரும்போது ‘எங்கேயிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்டால் ‘மவுண்ட் ரோட்டிலிருந்து வருகிறேன்’ என்பார்கள்.
நான் திருத்தி “இல்லையில்லை, அண்ணா சாலை” என்பேன். “ஆமாம்” என்பார்கள்.
இன்னமும் ‘மெட்ராஸ்’ என்றே சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் “சென்னை” என்று சொல்ல தங்களைப்
பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், வெளிநாட்டிலிருந்து வருகிறார்களே, அவர்கள் சென்னை என்றே உச்சரிக்கின்றார்கள். ஜப்பான் நாட்டிலிருந்து, கொரிய நாட்டிலிருந்து, அமெரிக்க நாட்டிலிருந்தெல்லாம் தொழிற்சாலைகள் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன. அந்தத் தொழிலதிபர்கள் என்னைச் சந்தித்து என்னிடத்திலே பேசும்போதும், அந்தத் தொழிற்சாலையிலே பணிபுரிகின்ற மேலாளர்கள், மற்ற அலுவலாளர்கள் வெளிநாட்டுக்காரர்களாகிய அவர்கள் என்னையோ மற்ற அமைச்சர்களையோ சந்தித்துப் பேசும்போதும் “சென்னை” என்றுதான் சொல்கிறார்கள்.
அவர்களுக்கு இருக்கின்ற அந்தப் பற்று தமிழர்களுக்கு எப்போது வரப் போகிறது என்ற வேதனையோடு அவர்கள் சென்னை என்று உச்சரிக்கும் போது மகிழ்ச்சியடைந்தாலுங்கூட, இந்த உணர்வு தமிழர்களுக்கும் வந்தாக வேண்டுமே என்ற அந்தக் கவலையோடு அந்த மகிழ்ச்சியை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து தன்னுடைய அறிவுத்திறனால், ஆற்றலால் உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக, பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். பொதுவாக ஆசிரியர்கள் என்றால், அவர்கள் ஏணிகளாகப் பயன்படக் கூடியவர்கள் என்று சொல்வது வழக்கம். ஏணிகளாக மாத்திரமல்ல, கோபுரத்தின் சிகரங்களாகவும், கலசங்களாகவும் அவர்கள் ஆக்கக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆவார்கள்.
அவர்கள் ஏணியாக இருந்து பல மாணவர்களை ஊக்கப்படுத்தி
நார்கள், ஏற்றிவிட்டார்கள்; பிறகு அந்த ஏணியே கலசமாக மாறி, இந்தியத் திருநாட்டின் கோபுரக் கலசமாக ஒளி விட்டதையும் நாமெல்லாம் அறிவோம்.
என்னுடைய அமைச்சரவையிலேகூட - மன்னிக்கவும் - உங்களுடைய அமைச்சரவையிலேகூட எத்தனை பேர் ஆசிரியர்கள் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் நியமிக்கப்பட்டார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பேராசிரியர், கல்வி அமைச்சர்; முனைவர் தமிழ்க் குடிமகன், தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர்; டாக்டர் பொன்முடி போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்; மறைந்த தங்கபாண்டியன், வணிக வரித்துறை அமைச்சர்; முல்லை வேந்தன், ஆசிரியர், செய்தித்துறை அமைச்சர்; சமயநல்லூர் செல்வராஜ், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்; புலவர் செங்குட்டுவன் கால்நடைத்துறை அமைச்சர் இப்படி ஏழு ஆசிரியர்கள் இந்த அமைச்சரவையிலே இடம் பெற்றார்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று கருதுகிறேன். இதுவரை யாரும் அந்தக் கணக்கைப் போட்டுப் பார்த்து, அதற்காக ஒரு பாராட்டுக் கூட நீங்கள் சொல்லாத காரணத்தால் (பலத்த சிரிப்பு) உங்களுடைய கவனத்திற்கேகூட இது வரவில்லை என்று நான் கருதுகிறேன்.
ஆசிரியர் சமுதாயத்தை நம்பித்தான் நாடு இருக்கின்றது. சமுதாயம் இருக்கின்றது. ஏன் ஒரு நாட்டினுடைய எதிர்காலமே இருக்கின்றது. அதனால்தான் ஆசிரியர்கள் மனம் வேதனைப்படாமல் அவர்கள் விரும்புகின்றவற்றை ஏற்றுக்கொண்டு செய்கின்ற அரசாக ஒரு அரசு இருக்க வேண்டுமென்ற வகையில் இந்த அரசு நடைபோட்டு வருவதை நீங்கள் எல்லாம்
மிக நன்றாக உணர்வீர்கள். இப்பொழுது கூட சில இடங்களிலிருந்து சில குரல்கள் வந்தது - உங்களுக்குத் தெரியும். நீங்கள் கூட அதைப்பற்றி கொஞ்சம் அச்சத்தோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குப் புரியும்.
ஊராட்சி மன்றங்களுக்கு, ஒன்றியங்களுக்கெல்லாம் நிரம்ப அதிகாரங்களைத் தர வேண்டுமென்பதற்காக - அதைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. சில ஆசிரியப் பெருமக்கள், சில ஆசிரியச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கடிதம் மூலமாகவும், நேரிலும் என்னோடு தொடர்பு கொண்டு - என்ன, மீண்டும் எங்களையெல்லாம் ஒன்றியத்திலே கொண்டு போய் இணைத்து விடுவீர்களா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், உங்களை ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
நான் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். என்ன திருத்தம் வந்தாலும் - என்ன அதிகார மாற்றங்கள், ஊராட்சி ஒன்றியத்திற்கும், ஊராட்சி மன்றத்திற்கும் அல்லது மாவட்ட ஊராட்சிக்கும் புதிதாக அமைய இருக்கின்ற குழுவினால் வந்தாலும்கூட நீங்கள் ஏற்கெனவே பெற்ற உரிமையை நிச்சயமாக இழக்க மாட்டீர்கள் என்பதை மிக உறுதியாக உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர் சமுதாயத்தை எதிர்காலத்தின் புரட்சி மலர்களாக, புதிய மணமிக்க மலர்களாக, இந்த நாட்டைக் காக்கும் காவலர்களாக - பொறுப்புள்ளவர்களாக ஆக்க வேண்டிய பெரும் கடமையை ஏற்றிருக்கின்ற உங்களுக்கு - எனக்கு முன்னால் இங்கே பேசிய அமைச்சர் பெருமக்களும், கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்களும்
எடுத்துக் காட்டியதைப் போல, எல்லாவிதமான உதவிகளையும், உரிமைகளையும், நன்மைகளையும் தயங்காமல், தட்டாமல் இந்த அரசு நிறைவேற்றி வந்திருக்கின்றது.
குறிப்பாக அரசு அலுவலர்களோடு இணைந்துள்ள ஆசிரியர் சமுதாயத்தை - அரசு அலுவலர்களுக்கு என்னென்ன உரிமைகள், வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதோ, அதிலே எள்ளளவும் வேறுபாடில்லாமல் உங்களுக்கும் அளிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அந்தக் கருத்திலே என்றைக்கும் மாற்றம் வராது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கின்ற மத்திய அரசின் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வருகின்ற நேரத்திலேகூட, அதற்கேற்ப மாநில அரசு செயல்படுகின்ற நேரத்திலே கூட ஆசிரியப் பெருமக்களை நாங்கள் மறந்து விட மாட்டோம்.
இந்தியாவில் கல்வி கற்றோருடைய மொத்த விழுக்காடு 52.11; அதில் தமிழகத்திலே கல்வி கற்றோருடைய விழுக்காடு 63.72 விழுக்காடாகும். இது மன நிறைவைத் தரக்கூடியதல்ல. இது தோற்றத்திலே மகிழ்ச்சி தந்தாலும்கூட முழுமையான மன நிறைவைத் தரக்கூடியதல்ல. ஏனென்றால் இதைப்பற்றி கணிக்கின்றவர்கள் - பெருகிக் கொண்டு போகின்ற மக்கள் பெருக்கத்தை எண்ணிப் பார்த்து, அதைக் கணக்கிலே எடுத்துக்கொண்டு பார்க்கும்போது இரண்டாயிரமாவது ஆண்டில் இந்தக் கணக்கு மாறி, இந்த விழுக்காடு தமிழகத்திலே ஐம்பது சதவிகிதமாக ஆகக் கூடும் என்ற கவலையைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
மக்கள் பெருக்கம் அந்த அளவிற்கு வேகத்திலே போய்க் கொண்டிருக்கின்றது.
