தேசிய இளைஞர் கொண்டாட்டத் தொடக்க விழா
பகுதி 2 · 2 / 2
“பாரத நாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” இவை கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாரதியின் தங்கச் சொற்கள். இந்தச் சொற்கள் நம்முடைய கடமையை நமக்கு நினைவூட்ட வேண்டும். புகழ் பெற்றிருந்த காலநிலைக்கு இந்தியாவை மீண்டும் கொண்டு செல்வதுதான் அந்தப் பணி.
இங்கே கூடியிருக்கும் நீங்கள், நாங்கள் எல்லாம் சுதந்திரம் பெற்றதற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் சுதந்திரத்தின் பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நாம் சுயநலமின்மையாலும் தியாகத்தினாலும் சுதந்திரத்தைப் பெற்றோம். கடுமையாகப் போராடிப் பெறப்பட்ட அந்தச் சுதந்திரத்தை நாம் காப்பாற்றுவதுடன் கடந்த காலத்தின் புகழ்பெற்ற நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும்.
அதற்கு ஓய்வில்லாத முயற்சிகள் தேவை. நாம் அமைதியாகவும் துணிவோடும் அதற்காகப் பணியாற்றுவோம். தேவையற்ற விஷயங்களில் நாம் நம்முடைய காலத்தையும் சக்தியையும் விரயமாக்காமல் இருப்போம்.
உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பறவைகள் தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கலில் கூடுவதைப் போல் இந்தியா முழுவதிலும் உள்ள பிரதிநிதிகள் இந்த விழாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இங்கே கூடியுள்ளனர். நட்பு, சமாதானம் மற்றும் வளர்ச்சிதான் அந்த நோக்கங்கள். மனிதகுலத்தைச் சேர்ந்த அனைவரையும் சமமாக நடத்தும்போதுதான் இந்தக் கொள்கைகளை நிறைவேற்ற இயலும்.
அடிப்படை மனித மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாவிட்டாலும் நீடித்த நட்புறவைச் சாதிக்க முடியாது. இந்த வகையான ஒரு விழா, இந்தியர்களிடையே ஒன்றுபட்ட மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும்.
குறிப்பாக நலிந்த பிரிவினரை அவை சென்றடைய வேண்டும். அத்தகைய நலிந்த பிரிவினருக்கு நீங்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய உண்மையான வேண்டுகோளாகும். சக்தியும் முயற்சிகளும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏழைகளின் நலனை மேம்படுத்த அரசாங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏழைகளின் நலனை மேம்படுத்த அரசாங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது துணைபுரியும்.
இளமை அற்புதமான சக்தியையும் ஆற்றலையும் பெற்றுள்ளது. நாட்டை உருவாக்குவதில் பயனளிக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். திட நம்பிக்கையுடன் கூடிய துணிவு இருக்கும்போது முன்னேற்றப் பாதையில் உள்ள இடையூறுகள் நீர்க் குமிழிகள் போல்
மறைந்துவிடும். தற்காலிகக் கவர்ச்சி உங்களுடைய முன்னேற்றத்திற்கான பயணத்திலிருந்து உங்களை திசை திருப்பி விடக் கூடாது. தற்காலிக இலாபங்கள் சமாதானத்திற்கும் வளர்ச்சிக்கும் அழைத்துச் செல்லாது.
ஆற்றல் மிக்க உயிரோட்டமுள்ள நாடாக இந்தியாவை உருவாக்கும் இலட்சியத்தை நோக்கி இளைஞர்கள் உறுதி பூண்டு உழைக்க வேண்டும் என்பது என்னுடைய பெரும் விருப்பமாகும்.
இந்தியாவில் உள்ள மொத்த இளைஞர்களில் கிராமப்புற இளைஞர்கள் 78.4 சதவிகிதம் பேர் ஆவர். அதனால்தான் எங்கள் தமிழக அரசு கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இருபத்தையாயிரத்துக்கு மேற்பட்ட இளம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சாலைகளைப் பராமரிப்பதற்காக 10 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மக்கள் நலப் பணியாளர்களாக பதிமூன்றாயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் அறுநூறு இளம் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ஆயிரம் இளைஞர்கள் தொழில்நுட்ப உதவியாளர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எங்கள் மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் படையில் சமீபத்தில் இணைந்தனர்.
மேலும் பத்தாயிரம் இளைஞர்களும், இளம் பெண்களும் எங்கள் போலீஸ் படையில் சேர்க்கப்பட உள்ளனர்.
பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் மற்றும் சித்த மருத்துவம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவிகித இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திர தீபத்தை இளைய தலைமுறையினரின் கரங்களில் ஒப்படைத்து உள்ளனர். இதை ஒரு மெழுகுத்திரியாகக் கருதக் கூடாது. இது கோடிக்கணக்கான மக்களுக்கு ஒளி கொடுக்கும் ஒரு தீபம். அந்தப் பணியைச் சாதிக்க சுதந்திரப் பொன் விழா கொண்டாடும் இவ்வேளையில் நாம் உறுதி ஏற்போம்.
இந்த மகிழ்ச்சியான வேளையில் எங்கள் அரசு ‘தமிழ்நாடு இளைஞர் நலக் கொள்கை’யை உருவாக்கி வருகிறது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கே கூடியுள்ள அனைவரும் இந்த விழாக் காலத்தில் இங்கே மகிழ்ச்சியுடன் தங்கியிருக்க வாழ்த்துகிறேன்.
இன்று விவேகானந்தரின் பிறந்தநாள் என்பதால் அவருடைய புகழ்பெற்ற சொற்களான
“எழு, விழி, இலட்சியத்தை எட்டும்வரை நில்லாதே”
என்ற சொற்களைக் கூறி என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
12-1-98 அன்று சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் தேசிய இளைஞர் கொண்டாட்டத் தொடக்க விழாவில் தலைமை உரை
