தேசிய இளைஞர் கொண்டாட்டத் தொடக்க விழா
பகுதி 1 · 1 / 2
தேசிய இளைஞர் கொண்டாட்டத் தொடக்க விழா
முதலில் இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர். பொம்மை, தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோரை நான் பாராட்ட விரும்புகிறேன். முதலில் நான் உங்கள் அனைவருக்கும் இனிய வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். புராதனமான புகழ்பெற்ற மாநிலமான தமிழ்நாட்டில் நீங்கள் கூடி இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநிலம் சர்வதேச சகோதரத்துவம் என்ற கொள்கையை உலகுக்கு வழங்கியது. இங்குதான் கணியன் பூங்குன்றனார் என்ற தமிழ்ப்புலவர்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்று உலகிற்கு அறிவித்தார்.
இங்குதான் பெரும்புலவர் திருவள்ளுவர்,
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு”
என்ற குறள் மூலம் கற்றறிவாளர்கள் ஒவ்வொரு நாட்டையும் தங்கள் சொந்த நாடாக்கிக் கொள்வர், என்று உலகிற்கு அறிவித்தார்.
வரலாற்றிலும், புராணங்களிலும் கதாநாயகர்கள் அவர்கள் இளைஞர்களாக இருந்தபோது செய்த சாதனைகளுக்காகவே நினைவு கூறப்படுகின்றனர்.
பாண்டியன் நெடுஞ்செழியன் இளைஞனாக இருந்த போதுதான் தலையாலங்கானத்தில் ஒரே நேரத்தில் ஏழு அரசர்களுடன் போரிட்டு வென்று ‘தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ என்று பெயர் பெற்றான்.
குருஷேத்திர யுத்தத்தில் இளைஞனான அபிமன்யு அர்ஜூனனை விட மிகுந்த வீரத்தை வெளிப்படுத்தினான்.
துரோணரின் சீடராக இருந்தபோதுதான் அர்ஜூனன் புகழ்பெற்ற போர் வீரனாக உருவானான்.
இராமாயணத்தில் இளைஞனாக இருந்த இந்திரஜித் மற்ற எந்தப் பாத்திரத்தையும் விட அதிக வீரச் செயல்களைப் புரிந்தான்.
உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் நவீன காலத் தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், பண்டித நேரு, பெரியார், அண்ணா, காமராஜர் ஆகிய எல்லோரும் அவர்கள் இளைஞர்களாக இருந்தபோது தான் பொது வாழ்வில் நுழைந்தனர்.
இராமாயணத்திலிருந்து ஒரு கதையை நினைவூட்ட விரும்புகிறேன். இராமன், இலக்குமணன், பரதன், சத்ருக்கனன் ஆகிய நால்வரும் சிறுவர்களாக ‘துணிப் பந்தை’ப் பயன்படுத்தி வில்லையும், அம்பையும் வைத்து
விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு துணிப்பந்து கூனியின் முதுகைத் தாக்கி விட்டது. அதைப் பார்த்து சிறுவர்கள் சிரித்தனர். இந்த அவமான நிகழ்ச்சியின் காரணமாக கூனி, இராமர் மீது வெறுப்பை வளர்க்கத் தொடங்கினாள்.
கூனியின் பழிவாங்கும் உணர்வையும் அதைத் தொடர்ந்து அந்த இதிகாசத்தில் நடந்த சம்பவங்களையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பழமொழி உருவானது. அதுதான் ‘விளையாட்டு வினையானது’.
ஆனால் விளையாட்டு எப்போதும் வினையாகி விடுவதில்லை. அது ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் கவிஞர் பாரதி,
“ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா”
என்று குழந்தைகளை அழைத்தார்.
இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் இங்கே உள்ளனர். ஐக்கிய இந்தியர் மீது நாம் கொண்டுள்ள உறுதியை மீண்டும் உறுதி செய்வதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். சாதி, ஏற்றத் தாழ்வு, மொழி ஆகிய வேறுபாடுகளை நீங்கள் புதைத்து விட்டீர்கள், உங்களில் நான் ஒரு சிறிய அழகான இந்தியாவைக் காண்கிறேன்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் தேசிய இளைஞர் திருவிழா கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமாகும். இந்தியாவை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதில் இளைஞர்கள் மீது அவர் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்.
நாகரிகம் இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ளது. நம்முடைய தாய்நாடு மற்றவர்களுக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்பித்தது. புராதன காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கடல் பயணம் செய்வோர், கிழக்கிலும் மேற்கிலும் நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்தனர்.
தமிழ் மொழி சிறந்த மொழிகளில் ஒன்று. அது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அது எங்கள் அறிவுடைமை மேம்பாட்டிற்கு ஆதாரமாகத் திகழ்கிறது.
இந்தியா விஞ்ஞானத்திலும் கலைகளிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. நாம் நம்முடைய பாரம்பரியம் பற்றிப் பெருமை கொள்ள முடியும்.
