சென்னை - திரிபுரா ஒருமைப்பாட்டு தினக் கூட்டம்
பகுதி 2 · 2 / 2
அதே ஆகஸ்ட் திங்கள் இறுதியில் திரிபுராவில் இரண்டு நாட்களில் தீவிரவாதிகள் 11 பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். செப்டம்பர் திங்கள் இறுதியில் மூன்று பேர் கொல்லப்படுகிறார்கள். மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடத்தப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்தத் தீவிரவாத தேசிய முன்னணியினர் ஒரு பேருந்தையே கடத்திச் சென்றிருக்கிறார்கள். அதிலிருந்த ஆண் பயணிகளைப் பேருந்திலிருந்து இறங்கி ஓடுமாறு உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்தப் பயணிகள் நான்கு கிலோ மீட்டர் தூரம் ஓடியிருக்கிறார்கள். அப்படி ஓடியதில் சிலர் மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களை வன்முறையாளர்கள் அடித்துத் துன்புறுத்திக் கீழே விழுந்த ஒருவனை சுட்டுக் கொன்றும் இருக்கிறார்கள். இந்தக் கொடுமையையெல்லாம் பார்த்த திரிபுராவினுடைய முதலமைச்சர் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த திரு.
மாணிக் சர்க்கார் அவர்கள் மிகவும் விட்டுக் கொடுக்கும் நிலையில், திரிபுராவிலே உள்ள தீவிரவாதிகள் மத்திய அரசோடு நேரடியாகப் பேச்சுவார்த்தை
நடத்த விரும்பினால்கூட, அதிலே திரிபுரா அரசு குறுக்கிடாது. வீம்போ, கெளரவமோ பார்க்காமல் நாங்கள்தான் பேச வேண்டுமென்று இல்லாமல், திரிபுராவிலே எப்படியாவது அமைதி ஏற்படவேண்டும். அங்கே பாதுகாப்புக்கு ஊனம் ஏற்படக் கூடாது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எந்த விதமான பழுதும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இதிலே திரிபுரா அரசு குறுக்கிடாது என்று தெரிவித்திருக்கிறார்.
அப்படி ஒரு பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறுமேயானால் அதில், தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் தீவிரவாதிகள் மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அதற்கான கூட்டத்தை, தானே ஏற்பாடு செய்து கொடுக்கிறேன் என்றும், பரந்த மனப்பான்மையோடு மாநில முதலமைச்சர் இறங்கி வந்து கூறுகின்ற சூழ்நிலையில் மாநில அரசின் கோரிக்கையையோ அந்த மக்களுடைய சங்கடங்களையோ, நடைபெறுகின்ற கொடுமைகளையோ காதில் போட்டுக் கொள்ளாமல் மத்திய அரசு இன்னமும் மெளனம் சாதிப்பது முறையல்ல என்பதுதான் இந்தக் கூட்டத்தின் மூலமாக எடுத்துக் காட்டுகின்ற செய்தியாகும்.
மத்தியிலே இருக்கின்ற அரசு, இராணுவம் தாருங்கள் என்று கேட்டால் அங்கேயிருந்த இராணுவத்தின் ஒரு பகுதியையும் எடுத்துக்கொள்கிற சூழ்நிலைதான் அமைந்திருக்கின்றது. இதை இந்தக் கூட்டத்திலே நாம் எடுத்து விளக்குவதின் மூலமாக திரிபுரா என்கிற ஒரு சின்னஞ்சிறிய பகுதி - ஏறத்தாழ 28 லட்சம் மக்கள் வாழும் பிரதேசம்தான் - திரிபுரா - சென்னையை விட குறைவான மக்கள் தொகைதான்
திரிபுராவில். அந்தத் திரிபுரா 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 49-ஆம் ஆண்டு சமஸ்தானத்திலிருந்து சுதந்திர மாநிலமாக இயங்கி வருகின்ற திரிபுரா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கே நான்காவது முறையாகப் பதவிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது என்பதை மைதிலி சிவராமன் இங்கே குறிப்பிட்டார். ஒருவேளை நான்காவது முறையாகப் பதவிப் பொறுப்புக்கு வந்த காரணத்தால், அவர்களுடைய வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை.
ஏனென்றால் தமிழ்நாட்டிலும் நான்காவது முறையாக வந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக (கைத்தட்டல்) ஆட்சியின் முறையீடுகளை மத்திய சர்க்கார் கவனிப்பதாகத் தெரியவில்லை.
இங்கே அன்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் காதர்தாஸ் அவர்கள் அவருடைய குறையைச் சொல்ல இங்கே வந்தால் நான் அவர் மூலமாக நம்முடைய குறையைச் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். (கைத்தட்டல்)
தீவிரவாதத்தைத் தமிழகத்திலே ஒடுக்குவதற்காக மத்திய அரசு சில உதவிகளைச் செய்ய வேண்டுமென்று தமிழக அரசு கேட்டது. கோயம்புத்தூரில் மத்திய அரசின் அதிரடிப் படையினுடைய பட்டாலியன் ஒன்றை நிரந்தரமாக நிறுவ வேண்டுமென்று கேட்டு பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் அதற்கான வழி பிறக்கவில்லை. மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து, செலவுகளைப் பகிர்ந்து கொண்டு இரண்டு இந்திய ரிசர்வ் பட்டாலியன்களைத் தமிழகத்திலே நிறுவ வேண்டுமென்று நான் மத்திய உள்துறை அமைச்சர் திரு.
அத்வானி அவர்களிடமே கேட்டு பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் நிறைவேறவில்லை.
அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டி ஆகிய இயக்கங்கள் பிற மாநிலங்களிலிருந்தும் செயல்படுவதால், அகில இந்திய அளவில் அவற்றைக் தடை செய்ய வேண்டுமென்று 18.3.98 அன்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது இன்னும் நிறைவேற்றப் படவில்லை.
காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ஆண்டு தோறும் பத்துக் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கவேண்டுமென்று உள்துறை அமைச்சரிடத்திலே நேரிலேயே சந்தித்துப் பல மாதங்களுக்கு முன்பு கேட்டேன். இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
வெடிபொருள் கட்டுப்பாட்டுச் சட்டம் மத்திய அரசின் சட்டமாகையால், வெடி பொருளை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்குக் கடுமையான வழிமுறைகளை மத்திய அரசு விதிக்க வேண்டுமென்று 21.3.98 அன்று மாநில அரசின் சார்பாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பினேன். இன்னும் இது நிறைவேற்றப்படவில்லை.
இவைகளையெல்லாம் சொல்வதற்குக் காரணம். மாநில அரசுகளுடைய கோரிக்கைகளை உடனடியாகக் கேட்டே தங்களுடைய மரியாதைக்குக் குறைவு என்று எண்ணுகின்ற மத்திய அரசுகள் இருக்கின்ற வரையில் இதுதான் நிலைமை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த மனப்போக்கை மாற்றுவதற்குத்தான் மாநில அரசுகள் சுயாட்சித் தன்மையோடு விளங்க, மத்தியிலே அமைகின்ற அரசு கூட்டாட்சித் தன்மையோடு இருந்திட வேண்டுமென்று நாம் பல காலமாகக் கோரிக்கை எழுப்புகிறோம்.
அந்தக் கோரிக்கைக்கு உடன்பாடான கட்சிகளுடைய கூட்டணிதான் இந்த மேடையிலே அமைந்திருக்கின்றது. இந்தக் கூட்டணியின் குரல்
இன்றைக்குத் திரிபுராவிற்காக எழுப்பப்படுகிறதென்றால் திரிபுரா மக்களுடைய நல்வாழ்விற்காக, இந்தியாவினுடைய பாதுகாப்பிற்காக எழுப்பப்படுகின்ற குரல், இங்கேயுள்ள இந்தக் கட்சிகளுடைய ஆதாயத்திற்காக அல்ல என்பதை உணர்ந்து மத்திய அரசு - உடனடியாக ஆவன செய்ய வேண்டும். இராணுவத்தை அனுப்ப வேண்டும். இருந்த இராணுவத்தைத் திரும்பப் பெற்றதை, திரும்பவும் அங்கே அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாநில அரசு கோருகின்ற பலமான பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
திரிபுராவும் இந்தியாவிலே உள்ள ஒரு பகுதிதான் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். அந்த நினைவூட்டலுக்காகத்தான் இந்தக் கூட்டம் என்பதைத் தெரிவித்து, இந்தத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும் வழிமொழிகிறேன் என்று கூறி விடைபெறுகிறேன்.
3-11-98 அன்று சென்னையில் திரிபுரா ஒருமைப்பாட்டு தினக் கூட்டத்தில் ஆற்றிய உரை
