உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - திரிபுரா ஒருமைப்பாட்டு தினக் கூட்டம்

பகுதி 1 · 1 / 2

சென்னை - திரிபுரா ஒருமைப்பாட்டு தினக் கூட்டம்

இங்கே நிகழ்ச்சியின் தலைவர் தோழர் செளந்தரராஜன் அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை வழி மொழிவதற்காக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன். இந்தத் தீர்மானத்தை இந்த மேடையில் இருக்கின்ற அனைவரும் வழி மொழிந்திருக்கின்றோம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கூட்டணி, இந்தக் கூட்டணி.(கைத்தட்டல்) இந்தக் கூட்டணி வழி மொழிகின்றதென்றால், தமிழகமே வழிமொழிகிற தென்று பொருள்.

(பலத்த கைத்தட்டல்)

இந்தியாவில் எந்தவொரு மூலையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தாலும், முதல் குரல் கொடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடுதான். நெருக்கடி நிலை (Emergency) பிரகடனப் படுத்தப்பட்டபோது வட மாநிலங்களில் உள்ள தலைவர்கள்தான் கைது செய்யப்பட்டார்கள். லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் கைதானார்கள். ஆனால் அன்றைக்கு அது கண்டு கொதிப்படைந்து பெருந்தலைவர் காமராஜர் அவர்களும்,

தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும்தாம் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.

அதைப்போல, பீகாரில் அண்மையில் ஆட்சியைக் கலைக்க முற்பட்டபோது, 356-ஆவது பிரிவைப் பயன்படுத்த வேண்டாமென்று கூறி, அந்தப் பரிந்துரை குடியரசுத் தலைவர் வரையிலே சென்ற சூழ்நிலையில் - அதை எதிர்த்து முதலாவதாகக் குரல் கொடுத்ததும் தமிழ்நாடுதான்.

மத்தியப் பிரதேசத்தில் - காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற மாநிலத்திலே கிறித்தவப் பெண்கள், கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததும், துடித்தெழுந்து அதற்காக அணிவகுப்புகளை நடத்தி, எதிர்ப்பைக் காட்டியதும் தமிழ்நாடுதான்.

எனவே இந்தியாவில் எந்தப் பகுதியில் அநீதி நடைபெற்றாலும், அநியாயம் நடைபெற்றாலும் ஜனநாயகத்திற்குக் கேடுவு, சீரழிவு ஏற்படுகிறதென்று தெரிந்தாலும் துடித்தெழக்கூடிய மாநிலம் தமிழ்மாநிலம் என்ற வகையில்தான் இன்றைக்குச் சின்னஞ்சிறு பிரதேசமான திரிபுராவில் ஏற்பட்டிருக்கின்ற தீங்கினை அகற்ற தமிழகம் இங்கே குழுமியிருக்கின்றது.

ஓர் அரங்கத்தில் நடைபெறுகின்ற கூட்டம்தான் இது என்றாலும்கூட, இது மாநில மக்கள் அனைவருடைய எண்ணங்களையும் ஏகோபித்து எடுத்துச் சொல்கின்ற கூட்டம் என்பதை நாம் அறிகிறோமோ இல்லையோ மத்திய அரசின் புலனாய்வுத்துறை மிக நன்றாக அறிந்திருக்கும்.

இந்தத் தீர்மானத்தை நான் ஒருமுறைக்கு இருமுறையல்ல. பல முறை படித்துப் பார்த்தேன். இந்தத்

தீர்மானத்தை பிரதமர் வாஜ்பாய் அவர்களே படித்துப் பார்த்தால் கூட, ஆத்திரப்படமாட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிறைவேற்றுகின்ற ஒரு தீர்மானம்-தி.மு.கழகம் போன்ற கட்சிகள் ஆதரிக்கின்ற ஒரு தீர்மானம், எப்படி இருக்குமென்று எண்ணிப் பார்த்தால், அல்லது மத்தியிலே உள்ள அமைச்சர்கள் எதிர்பார்த்தால் அவர்கள் எதிர்பார்க்கின்ற சூடு, இந்தத் தீர்மானத்திலே இல்லை. சூடு இல்லாவிட்டாலும் சொரணை இருக்கின்றது என்ற வகையிலே இந்தத் தீர்மானம் இங்கே வகுக்கப்பட்டு, நம்முடைய வழிமொழிதலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

நானும் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தேன். எந்தவொரு இடத்திலாவது திரிபுரா பிரச்சினையிலே மத்திய சர்க்கார் நடந்துகொள்வது, வாஜ்பாய் சர்க்கார் நடந்து கொள்வது, பா.ஜ.க. அரசு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்ற ஒரு சொல் இருக்குமா என்று நான் துருவித்துருவிப் பார்த்தேன், இல்லை. இல்லாததற்குக் காரணம் தீர்மானத்தின் நோக்கம் பா.ஜ.க. அரசைக் கண்டிப்பது என்பதற்காக அல்ல; இங்கே நாம் பிரதானப் படுத்துவது திரிபுரா பிரச்சினை.

அதனால் தான் தீர்மானத்தினுடைய இறுதியில் - “எனவே, திரிபுரா மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உடனடியாக கூடுதல் இராணுவப் படைப் பிரிவுகளையும், நிதி உதவிகளையும் செய்து திரிபுரா மாநில ஒருமைப்பாட்டையும் நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென்று இக்கூட்டம் இந்தியப் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது” - என்றுதான் தீர்மானத்தின் முடிவுரை இருக்கின்றது.

வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது - என்று கூட சொல்லவில்லை. அவர்களுக்கு எங்கே ஒருவேளை அது

வலித்து (கைத்தட்டல்) காரியம் நடைபெறாமல் போய் விடுமே என்கிற கவலை! நம்முடைய ஒட்டு மொத்தக் கருத்தே - இதிலே இன்னொரு வாக்கியத்திலே அடங்கியிருக்கின்றது. “திரிபுராவின் இந்தப் பிரச்சினை அம்மாநிலப் பிரச்சினை மாத்திரமல்ல; நாட்டின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட பிரச்சினையுமாகும். இந்தத் தேசத்தின் பிரச்சினையுமாகும்” - என்று குறிப்பிட்டதிலேயிருந்தே இந்தக் கூட்டத்தின் நல்ல நோக்கமும், இந்தத் தீர்மானத்தின் நல்ல நோக்கமும் உங்கள் அனைவருக்கும் புரியும் - அங்கே புரியும்-அங்கே புரிகிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது (பலத்த கைத்தட்டல்) புரிய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

திரிபுராவிலே என்ன நடைபெறுகின்றது? தீர்மானத்திலே அந்த வாசகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. - “மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பிமல்சின்ஹா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், அவர்தம் குடும்பத்தினர், பழங்குடி மக்கள் உட்பட முப்பது பேர் கடந்த ஆறு மாதத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 25-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளார்கள்” - என்று தீர்மானத்திலே கூறப்பட்டுள்ளது. இப்படி கடத்தப் படுவதை அனுமதித்தால், ஆதரித்தால், பாராட்டினால் பிறகு நாமும் கடத்தப்படுவோம்.

(கைத்தட்டல்) அதை மறந்துவிடக் கூடாது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியுமென்பார்கள். இன்றைக்குத் திரிபுராவிலே இருக்கின்ற சுகாதார அமைச்சர் கடத்தப்படுகிறார். அதே தொகுதியிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாஜூ பான்ரியாங் அவர்களின் மகன் ரஞ்சித்திரியாங் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்படுகிறார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் நரேந்தர்பூர் தேயிலைத் தோட்டத்தில் காட்டுமிராண்டித்தனமாக ஐந்து அலுவலர்கள் கொல்லப்படுகிறார்கள். தடை செய்யப் பட்ட திரிபுரா தேசிய விடுதலை முன்னணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் ஆகஸ்ட் திங்களில் முதல் வாரத்தில் மாத்திரம் இருபது பேரைக் கடத்திச் சென்றிருக்கின்றார்கள். இதில் மார்க்சிஸ்ட் ஆதரவாளர் ரதிஷியாம்ஷா என்பவரும், பள்ளி மாணவர் தீபக் மஜும்தாரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பிரீப் மலாகர் என்ற வியாபாரி சந்தி பஜார் பகுதியில் இருந்த அவருடைய வீட்டிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறார்.

முதல் பதிப்பு 2000