உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - திரையுலகம் நடத்திய பாராட்டுவிழா

பகுதி 2 · 2 / 2

நேரம் அதிகமாகி விட்டது. இந்த இடத்தைப் பொறுத்த வரையில் வடநாட்டைச் சேர்ந்த ஆனால், தமிழ்நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிற குஜராத் மாநிலத்தின் நண்பர்கள் விழா ஒன்றை இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நமக்காக, நம்முடைய நெருக்கடியை உணர்ந்து அவர்களாகவே முன்வந்து, அவர்கள் வடக்கே உள்ளவர்களாக இருந்தாலும்கூட, தெற்கே உள்ளவர்களுக்கு இல்லாத அந்த அக்கறையோடு (பலத்த கைதட்டல்) இனிமேல் வடக்கு தெற்கு என்று பேசாதீர்கள் என்று எனக்கு அறிவுரை சொல்வதைப் போல, இந்த இடத்தையும் அவர்கள் தாராளமாகத் தந்து, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தங்களுடைய நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்வதாகக் கூறி, அது மாத்திரமல்ல.

முதலமைச்சர் நிதிக்காக ஒரு இலட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட காசோலை ஒன்றையும் இங்கே வழங்கியிருக்கின்றார்கள். அந்தக் காசோலையைப் பிரித்து பார்த்து எவ்வளவு என்று எண்ணிப்பார்த்தேன். ஏனென்றால்,

எல்லாம் ஒன்று ஒன்று ஒன்று என்று ஒரு லட்சத்து பதினோராயிரத்து நூற்றி பதினொன்று என்று இருந்தது.

அந்தக் காசோலையை நான் உற்றுப் பார்த்தபோது, சிவாஜி முகத்தைத் திருப்பிக்கொண்டு, இன்னும் அந்த பொருளாளர் நினைப்பு போகவில்லையா என்று கண்களால் கேட்டார். (சிரிப்பு) ஏனென்றால் அவர் இங்கே குறிப்பிட்டதைப் போல, நானும் அவரும், ஏதோ இன்றைக்குப் பத்து ஆண்டுக்காலம், இருபது ஆண்டுக்காலம் என்றல்ல. அவர் இங்கே சுட்டிக்காட்டியதைப் போல், தஞ்சைத் தெருக்கள், திருவாரூர்த் தெருக்கள் குடந்தைத் தெருக்கள், சென்னைத் தெருக்கள் என்று ஒரு காலத்திலே அலைந்து திரிந்தவர்கள்.

விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்தவர்கள். அறிஞர் அண்ணா அவர்கள் எங்களையெல்லாம் இணைத்து, எங்களைத் தம்பிகளாக ஏற்றுக் கொண்ட அந்தக் காலக் கட்டத்தில், கலைத்துறையின் மூலமாக கொள்கைப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்துப் பணியாற்றிய அந்தக் காலகட்டத்தில், நானும் சிவாஜியும் சேர்ந்து இயக்கப் பிரச்சாரங்கள், நாடகங்கள் சிலவற்றிலே கலந்து கொண்டிருக்கின்றோம்.

தூக்குமேடை நாடகம், வாழ முடியாதவர்கள் நாடகம் என்று இப்படிப் பல நாடகங்கள். அந்த நாடகங்களிலே நடித்தபோதுதான், நெல்லை மாவட்டத்திலே சங்கரன் கோவிலில் தஞ்சை மாவட்டத்தின் புயல் நிதிக்காக நாடகத்தை நடத்தியபோது, நானும் சிவாஜியும் அங்கு போயிருந்தோம். காலையிலே போய்ச் சேர்ந்தோம். நாடகத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மேடைக்குப் பக்கத்திலே ஒப்பனை அறைகளை

அமைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே ஒப்பனை செய்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு நாடகம் நடக்கிற இடத்திற்குப் போனால், அந்த இடத்திலே நாடக மேடைக்குப் பின்புறத்திலே வழிகிடையாது. நாடகம் பார்க்க வந்திருக்கின்ற மக்களைத் தாண்டித்தான் போக வேண்டும். நானும் சிவாஜியும் மற்ற நடிகர்களும் தலையிலே முக்காடு போட்டுக்கொண்டு, மக்கள் குழுமியிருந்த அந்தப் பகுதியைக் கடந்து மேடைக்குச் சென்றோம்.

நடித்தோம்.

நடித்த பிறகு, எங்களை உண்மையிலே நாடகம் நடத்தியவர்கள் முக்காடு போட வைத்துவிட்டார்கள். 4000 ரூபாய் அன்றைக்கு நாடகத்திலே கிடைத்த மிச்சத் தொகையை எடுத்துக் கொண்டு, புயல் நிவாரண நிதிக்காக நடத்திய நாடகத்தின் எஞ்சிய தொகையை நாடகம் நடத்தியவர் எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டார். எப்படி நாங்கள் திரும்பி வருவதென்று தெரியவில்லை. “வாழ முடியாதவர்கள்” நாடகத்தை நடத்திய நாங்கள் ஊருக்குத் திரும்ப முடியாதவர்கள் ஆனோம்.

அப்போதுதான் தங்கப்பழம், கே.வி.கே. சாமி, சிவசாமி என்ற நண்பர்கள் நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் சென்னைக்குத் திரும்பி போவதற்காகவாவது ஒரு நாடகத்தை தூத்துக்குடியில் நடத்துங்கள் என்று எங்களை அழைத்துச் சென்றார்கள். காலையிலே விளம்பரம் செய்து மாலையிலே நாடகத்தை நடத்திவிட்டு, அதிலே மிச்சப்பட்ட தொகையைக் கொண்டு சென்னைக்கு திரும்பி வந்தோம். இப்படிச் சோதனையான காலத்தில், வேதனையான காலத்தில், இந்த இயக்கத்திலே என்னோடு ஒத்துழைத்து அண்ணா

அவர்களுக்குத் தம்பியாகவும், பெரியாருக்கு மாணவனாகவும் திகழ்ந்தவர்தான் என்னுடைய ஆருயிர் நண்பர் சிவாஜி அவர்கள். அந்த அன்பும் பாசமும் வற்றிவிடவில்லை. வற்றாது. எந்தக் காலத்திலும் வற்றாது என்பதற்கு அடையாளமாக அவருடைய உள்ளம் திறந்த பேச்சு இங்கே அமைந்திருந்ததை நீங்கள் கண்டீர்கள்.

நான் மகிழ்ச்சியோடு இங்கு வந்து பேசவேண்டும் என்றிருந்தேன். ஆனால், என்னைக் கண்ணீர்விட வைத்துப் பேச என்று சொன்னார். எத்தகைய உணர்ச்சிக் குமுறலோடு இங்கு வந்தேன் என்பதும், தம்பி பிரபுதான் கைதாங்கலாக இந்த ஒலிபெருக்கிக்கு முன்னால் அழைத்து வரமுடிந்தது என்பதும் நீங்களெல்லாம் அறிவீர்கள். அந்த அளவிற்கு உணர்ச்சிப்பிழம்பாக நான் ஆகிவிட்டேன். தன்னுடைய வயதை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

கமல் குறிப்பிட்டதைப்போல, பகுத்தறிவாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள இயலாது, ஏனென்றால், யார் வயதையும் யாரும் எடுத்துக் கொள்ளமுடியாது. நானும் சரி, சிவாஜியும் சரி, பல்லாண்டுக் காலம் வாழவேண்டுமென்று நீங்கள் வாழ்த்துவீர்களேயானால், இங்கே அமர்ந்திருக்கின்ற நீங்களெல்லாம்கூட, அத்தகைய வாழ்த்துக்களைப் பெற்றவர்கள்தாம். அத்தகைய பரிசுகளை, பாராட்டுக்களைப் பெற்றவர்கள்தாம். இதுபோன்ற விழாக்களில் கதாநாயகர்களாக அமர்ந்தவர்கள்தாம்.

எனவே, பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துவது, ஒருவருடைய இயற்கையான முடிவிற்குப் பிறகுகூட, பல்லாண்டு காலம் மக்கள் மனதிலே அவர்களுடைய பெயர் நிலைப்பதுதான் பல்லாண்டு காலம் வாழ்க என்பதற்குப் பொருள். (பலத்த கைதட்டல்) என்னுடைய ஆருயிர் நண்பா!

ஆரம்ப கால நண்பா! கலை உலகத்திற்குக் கிடைத்த கற்கண்டே, கருவூலமே, சிவாஜியே நீயும், நானும் அடிக்கடிச் சந்திக்கிறோமா, இல்லையா? என்று பலபேருக்குத் தெரியாது. சந்திப்பு என்று பத்திரிகைகளில் வராத காரணத்தால்; நமக்குள்ளே எத்தனையோ வேறுபாடுகள் என்று வியாக்கியானங்கள் நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வியாக்கியானங்களையெல்லாம் மீறி, நீயும் நானும் ஒன்று தான். இரு உருவங்கள் ஒரே உள்ளம். ஒரே உயிர் என்ற அளவிலே நாம் இருக்கின்றோம்.

இன்று காலையிலேயே என் தாய் அஞ்சுகத்தம்மையார் நினைவையொட்டி வெளியிடப்பட்ட மலர் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. அதிலே சிவாஜி என் அம்மாவைப் பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். அஞ்சுகத்தாய் வேறு. என் தாய் வேறா? எனக்கும் கலைஞர் மு.க.வுக்கும் இரண்டு பேருக்கும் ஒரே தாய்தான். அந்த தாய் அஞ்சுகத்தாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றார். அதைப் போலத்தான் சிவாஜியின் தாய் என் தாய் அவருக்குத் தாய். நாங்கள் இருவரும் தமிழ்த்தாயின் மக்கள்.

உங்களின் சகோதரர்கள்.

இந்த இனிய எழுச்சி விழாவிற்குக் கர்நாடகத்திலே இருந்து வருகை தந்துள்ள முதலமைச்சர் ஜே.எச். பட்டேல் அவர்கள் இங்கே குறிப்பிட்டார். என்னை விட அந்தச் சிலை வயதான தோற்றத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால், அவர் எனக்குக் கடிதம் எழுதும் போதெல்லாம். My Dear Old Man, How are you என்றுதான் எழுதுவார். ஆங்கிலத்தில் எழுதும்போது அப்படித்தான் எழுதுவார். அந்தக் கடிதத்தை யாரோ தவறாகப் பார்த்து விட்டு, இப்படிச் சிலை செய்துவிட்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது.

(பலத்த சிரிப்பு) கர்நாடக முதலமைச்சரை ஏன் இங்கு அழைத்தோம். ஏன் அழைக்கப்

பட்டிருக்கிறார். நாம் அழைத்து அழைத்து வராமல் இருந்த ஒன்றே வந்துவிட்டபிறகு, (பலத்த கைதட்டல்) அதைத் தந்தவரை அழைக்கவேண்டாமா என்பதற்காகத்தான் அவரை அழைத்திருக்கின்றோம். அவருக்கும், அவரோடு வந்த அமைச்சர் ஆனந்தத் அவர்களுக்கும், இந்த விழாக்குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாக்குழுவினர் எத்தகைய சிரமங்கள் எடுத்துக் கொண்டு இந்த விழாவை நடத்தினார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர்கள் பட்டபாடு வீண்போகவில்லை. இந்த விழாவைக் கடந்த 20-ஆம் தேதியே வைத்துக்கொள்ளலாம் என்று நான் தேதி கொடுத்திருந்தேன். கே.ஆர்.ஜி.யும் எ.வி.எம். சரவணனும், சிந்தாமணி முருகேசனும் மற்றவர்களும் பாரதிராஜாவும் என்னைச் சந்தித்தபோது, 27-ஆம் தேதிதான் வசதியாக இருக்கும் என்று சொன்னார்கள்.

நான் அப்போது சொன்னேன். மழைக்காலம் நெருங்குகின்ற காலக்கட்டம். எனவே 20-ஆம் தேதியே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். இல்லை இந்தத் தேதிதான் என்று பிடிவாதம் பிடித்தார்கள். சில வேளைகளில் நான் சொல்வதையும் கேட்கவேண்டும் என்பதை இதில் இருந்தாவது புரிந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆனால், குறிப்பிட்ட இடத்தில் நேரு ஸ்டேடியம் திறந்த வெளியில் இந்த விழா நடைபெற்றிருந்தால், இன்றைக்கு விழா நடைபெற்றிருக்க முடியாது. இயற்கையின் சீற்றத்தால், பொழிகின்ற மழையினால் விழா நடைபெற்றிருக்க முடியாது.

அங்கே நடைபெறாமல், இந்த விழா இங்கே நடைபெறுவதற்கு உதவியவர்களுக்கு என்னுடைய

இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். (பலத்த கைதட்டல்) எந்தத் தடைகள் வந்தாலும், “தடைக் கற்கள் உண்டென்றாலும் தடந்தோள் உண்டெனச் சிரிப்பாய்” - என்றான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அதைப்போல தடைக்கற்கள் எத்தனை வந்தாலும், அதைத் தாண்டிச் செல்கின்ற தடந்தோள் கொண்டவர்கள் நம்முடைய கலை உலகத்து நண்பர்கள் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கின்றார்கள். அவர்களுக்கும், என்னை வாழ்த்திய கலை உலகப் பெருமக்களுக்கும் அவர்கள் வயதிலே சிறியவர்களாக இருந்தால், அவர்களின் கையைப்பிடித்து நான் என்னுடைய ஆனந்தக்கண்ணீரைப் பொழிகிறேன்.

என்னைவிட வயதிலே பெரியவர்களுடைய கால்களில் என் கண்ணீர் முத்துக்களை உதிர்த்து அவர்களையெல்லாம் வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

27-9-98 அன்று சென்னையில் திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000