உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - திரையுலகம் நடத்திய பாராட்டுவிழா

பகுதி 1 · 1 / 2

சென்னை - திரையுலகம் நடத்திய பாராட்டுவிழா

கலை உலகப் பெருமக்கள் தம்பி எ.வி.எம். சரவணன், கே.ஆர்.ஜி., சிந்தாமணி முருகேசன் மற்றும் விழாக்குழுவிலே இடம்பெற்றுள்ள பாசமிகு நண்பர்கள், அவர்களோடு உடன் இருந்து ஒத்துழைத்த தம்பி கவியரசு வைரமுத்து, இவர்கள் அனைவருக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவாஜி பேசும்போது, பெரியவர் பலர் இருக்கும்போது என்னை ஏன் இந்த விழாவிற்குத் தலைமை ஏற்க அழைத்தீர்கள் என்று கேட்டார். பெரியவர்கள் இருக்கலாம். ஆனால், கலை உலக விழாவிற்குத் தலைமை ஏற்க உரியவர் ஒருவர்தான். (பலத்த கைதட்டல்) எனவே தான் சிவாஜி இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கிறார்.

வரவேற்புரையாற்றிய இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்களும், வாழ்த்துரை வழங்கிய பாரதிராஜா அவர்களும், இடையிலே ஏற்பட்ட சில தடங்கல்களை எல்லாம் குறிப்பிட்டார்கள். பல தடைகளுக்குப் பிறகு இந்த விழா நடைபெறுவதாகச் சுட்டிக் காட்டினார்கள்.

ஒன்றை நினைவூட்ட விரும்புகின்றேன். ஒரு போராட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்தில் சொல்கிறேன். ஒரு போராட்டத்தில் நான் சிறையிலே அடைக்கப்பட்டு, திருச்சி சிறைச்சாலையில் இருந்து வெளிவந்தேன். என்னை வரவேற்க, பேரறிஞர் அண்ணா அவர்கள் திருச்சி சிறைவாசலில் காத்திருந்து வரவேற்றார். அன்று திருச்சியிலே எனக்குப் பாராட்டுக் கூட்டம். மறுநாள் சென்னையிலே அண்ணா தலைமையிலே பாராட்டுக்கூட்டம்.

அண்ணா சொன்னார். “நீ திருச்சியிலே பேசி விட்டு, நாளைக்குக் காஞ்சிபுரம் வந்துவிடு. அங்கே வீட்டில் உனக்கு விருந்து. இருவரும் சேர்ந்து சென்னை பாராட்டு விழாவுக்குச் செல்லலாம்,” என்று சொன்னார். அவ்வாறு திருச்சி விழாவிலே கலந்து கொண்டுவிட்டு மறுநாள் காலையிலே காஞ்சிபுரம் சென்று மதிய உணவு அண்ணா வீட்டில் அருந்திவிட்டு, மாலையிலே இருவரும் புறப்பட்டுச் சென்னைக்கு விழாவிற்கு வந்தபோது, வருகிற வழியிலே இப்போது இருக்கின்ற அண்ணா அறிவாலயத்திற்குப் பக்கத்திலே உள்ள அன்பகத்தில் இருந்து எங்களை வரவேற்று ஊர்வலம் புறப்பட்டது.

அண்ணாவும், நானும் ஒரு ரதத்திலே அமர்த்தி வைக்கப்பட்டு, ஊர்வலம் கடற்கரைக்குச் சென்றது. கடற்கரையிலே திருவிழா நடைபெறுகிறது. அண்ணா பாராட்டிப் பேசினார். இரவு பத்து மணிக்கு அண்ணாவும், நானும் இல்லத்திற்குத் திரும்பினோம்.

அப்பொழுது என்னுடைய அன்னையார் அஞ்சுகம் அம்மையார் அவர்கள் எங்களை வரவேற்று, கூடத்திலே அமரவைத்தார். “என்னம்மா சொக்கியமா?” என்று அம்மாவைப் பார்த்து அண்ணா கேட்டார். அப்பொழுது அம்மா, அண்ணா அவர்களைப் பார்த்து சொன்னார். “என் தம்பி நீங்கள் நேற்று வேலூர் சிறையிலிருந்து

விடுதலையானீர்கள். விடுதலையானவுடன் காஞ்சிபுரம் வந்து அம்மாவைப் பார்த்தீர்கள். ஆமாம்! அம்மாவைப் பார்த்து விட்டு, மறுபடியும் திரும்பி வேலூருக்குச் சென்று கூட்டத்தில் பேசினீர்கள் இல்லையா?” என்று கேட்டார். “ஆமாம் அம்மா” என்றார் அண்ணா.

“உங்களை உங்கள் அம்மா ஒரு நாள் கஷ்டப்பட்டு பெற்றிருக்கிறார்கள் போலும். நான் என் பிள்ளையை 26 நாள் கஷ்டப்பட்டுப் பெற்றேன். அதனால்தான் என் பிள்ளை திருச்சியிலே விடுதலை பெற்று, திருச்சிக் கூட்டத்திலே பேசிவிட்டு, காஞ்சிபுரம் வந்து, சென்னைக்கு வந்தும் வீட்டுக்கு வராமல் உங்களோடு கடற்கரைக் கூட்டத்தில் பேசிவிட்டு இப்போதுதான் வந்திருக்கிறான்” என்று சொன்னார்கள்.

அப்போது அண்ணா கலகலவென்று சிரித்தார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நான் பிறப்பதற்கே 26 நாள் கஷ்டம். பிறப்பதே ஒரு போராட்டம். பிறப்பதற்கே ஒரு போராட்டம் நடத்தி வெளிவந்தவன். ஒரு விழாவிலே கலந்துகொள்வதென்றால், அதற்கு எவ்வளவு தடைகளைக் கடந்து வர வேண்டும். வாழ்க்கையே போராட்டமாக அமைந்த காரணத்தினாலேதான், நான் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டினேன்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, எனக்கு வெள்ளியால் ஆன உருவச்சிலை, தங்கச்சங்கிலி, கடிகாரம் போன்ற பல பொருள்களை அளித்திருக்கின்றார்கள். எங்கும், எந்த மேடையிலும் இப்படிப்பட்ட தங்கச்சங்கிலிகளை அணிவித்ததுண்டு. நான் மேடையிலே அவைகளை அணிந்துகொண்டு பேசியதில்லை. ஆனால், அதை இப்போது கழற்றக் கூடாது என்பது என்னுடைய ஆருயிர் நண்பனுடைய ஆணை. பக்கத்திலே இருந்து கழற்ற விடாமல்

பார்த்துக் கொண்டார். எனவேதான் அணிந்துகொண்டு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.

கலை உலகத்திலே உள்ள பெருமக்களுக்கு, இங்கே அமர்ந்து இருக்கின்ற தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினி ஆனாலும், சுப்ரீம் ஸ்டார் தம்பி சரத்குமார் ஆனாலும், அல்லது என்னாலே புகழ்ந்துரைக்கப்பட்ட கலைஞானி தம்பி கமல் ஆனாலும், எழுச்சிக்கலைஞர் தம்பி விஜயகாந்த் ஆனாலும் அவர்களைப் போன்ற வேறு பல கலைஞர்கள் ஆனாலும், அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை. அவர்களோடு சேர்ந்து 45-46-ஆம் ஆண்டில் இருந்து வளர்ந்தவன் என்கின்ற முறையிலும், அவர்களெல்லாம் பிறக்காத நேரத்திலேகூட, அவர்களெல்லாம் குழந்தைப் பருவத்திலே இருந்த காலத்திலேகூட, கலை உலகத்திலே ஈடுபாடு கொண்டவன் என்ற காரணத்தாலும், இன்றைக்கு 75-வது வயது நடைபெறுகிறது என்ற காரணத்தாலும், திரை உலகத்தைப் பொறுத்த வரையில், கலை உலகத்தைப் பொறுத்தவரையிலே 50 ஆண்டுகளைக் கடந்து விட்டவன் என்ற காரணத்தாலும், இந்தப் பொன்விழா, பவளவிழா இரண்டு விழாக்களையும் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய சிறந்த உள்ளத்திற்கு, பரந்த உள்ளத்திற்கு, பெருந்தன்மை வாய்ந்த உள்ளத்திற்கு, நான்தான் கடமைப்பட்டிருக்கிறேன் அல்லாமல், அவர்கள் யாரும் எனக்குக் கடமைப்பட்டவர்கள் அல்ல.

திரை உலகத்தைப் பொறுத்தவரையில், இன்று நான் மகிழ்ச்சியடைகின்ற அளவிற்குப் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தொழிலுக்கு அத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்றால் அது விவாதத்துக்குரிய ஒன்று. அதற்கு ஏற்பட்ட இடையூறுகளையெல்லாம்

அவர்கள் என்னிடத்தில் எடுத்துச் சொல்லி, ஒரு அரசு எந்த அளவிற்கு அதற்கான உதவிகளைச் செய்ய முடியுமோ, அந்த உதவிகளைச் செய்கின்ற பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன் என்றாலும் கூட, முழுமையாகத் தமிழ்த் திரையுலகம், வெளிச்சத்திற்கு இன்றைக்கு வந்துவிட்டது; இருள் முழுமையாக மறைந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. காரணம், எத்தனையோ சொல்லலாம். அவைகளையெல்லாம் இங்கே விளக்க விரும்பவில்லை நேரமாகிவிட்டது.

ஒன்றை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவின் மூலமாகக் கலை உலகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். (பலத்த கைதட்டல்) கலை உலகத்திலே வேற்றுமைகள் தோன்றாதா? தோன்றிய வேற்றுமைகள் அப்படியே சிரஞ்சீவித்தனம் வாய்ந்ததாக இருக்காதா? என்றெல்லாம் எதிர்பார்த்தவர்களுக்குப் பதிலளிக்கின்ற வகையில், உங்கள் அனைவரையும் ஒன்று சேர இந்த மேடையில் பார்ப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன்.

நீங்கள் தந்த வெள்ளிச் சிலையை விட, நீங்கள் வழங்கிய பரிசுகள் அனைத்தையும்விட, நீங்கள் வழங்கிய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அத்தனையும் விட, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக மேடையில் அமர்ந்திருக்கின்ற காட்சியைத்தான் நான் கண்ணுளிர பார்க்கின்றேன். மனங்குளிர மகிழ்கின்றேன். இந்தக் காட்சி தொடரவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

இங்கே உரையாற்றிய பாலுமகேந்திரா அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். பள்ளிக்கூடப் பாடங்களில் திரைக்கலையை ஒரு பாடமாக வைக்கவேண்டும் என்று சொன்னார். அவர் சினிமாவை ஒரு பாடமாக வைக்க

வேண்டும் என்று சொன்னார் என்றாலும், திரைக்கலையை ஒரு பாடமாக வைக்கவேண்டும் என்றுதான் அதற்குப் பொருள். அதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்ளலாம் என்பது குறித்து, கல்வி அமைச்சர் பேராசிரியர் இங்கு இருக்கிறார். அவரோடு கலந்து அதையும் ஒரு பாடமாக வைப்பது நலம் என்று கருதுகிறேன். ஏனென்றால், இப்போது இருக்கின்ற பாடங்களை எல்லா மாணவர்களும் விரும்பிப் படிக்க பள்ளிக்கூடத்திற்கு வருவதில்லை. அந்தப் பாடத்தை வைத்தாலாவது (பலத்த சிரிப்பு, கைதட்டல்) மாணவர்கள் அனைவரும் விரும்பி, பள்ளிக்கூடத்திற்கு வரமாட்டார்களா?

என்கின்ற அந்த ஆசையில் பாலு மகேந்திரா சொன்ன யோசனையைப் பரிசீலிப்போம் நல்ல யோசனைதான் என்று நான் கூற விரும்புகின்றேன்.

முதல் பதிப்பு 2000