சென்னை - எக்ஸ்னோரா மற்றும் ரோட்டரி நிறுவனங்களின் பாராட்டு விழா
பகுதி 2 · 2 / 2
நடுவர் மன்றம் அமைத்தவுடன் நம்முடைய அரசின் சார்பிலே ஒரு கோரிக்கை வைப்போம். நீங்கள் முழுமையான தீர்ப்பு அளிப்பது பிறகு இருக்கட்டும். முதலில் இடைக்காலத் தீர்ப்பை வழங்குங்கள் என்று
கேட்டோம். நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னது. மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றோம். அதிகாரம் இல்லை என்கிறார்கள் அதிகாரம் உண்டா? இல்லையா? என்று நீங்கள்தான் சொல்லவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலே கேட்டோம். உச்சநீதிமன்றம் உடனடியாகச் சொன்னது. இடைக்கால நிவாரணம் அளிக்க நடுவர்மன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை வைத்து மீண்டும் வாதாடினோம்.
பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் வந்த ஆட்சியிலே நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு கிடைத்தது. 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கவேண்டும். மாத வாரியாக எத்தனை டி.எம்.சி. என்றெல்லாம் கணக்கிட்டு ஜூன் மாதத்தில் இவ்வளவு, ஜூலையில் இவ்வளவு என்று ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் முடிய ஒரு கணக்கை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பாக வழங்கியது.
அதை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் தமிழக மக்கள் கேட்டார்கள். ஆனால், கர்நாடக அரசு நிறைவேற்ற இணங்கவில்லை. மறுத்து விட்டது.
அந்த வாக்குவாதம் கடந்த 7, 8 ஆண்டுகளாக நடைபெற்று இப்போது ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாடுதான் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் முன்னிலையில் நானும், கர்நாடக முதலமைச்சரும், பாண்டிச்சேரி முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் ஒன்றாக அமர்ந்து 9 மணி நேரம் வாதாடி எனக்குத் துணையாக தம்பி துரைமுருகனும், சட்ட அமைச்சர் ஆலடி அருணாவும் வந்திருந்து அவர்களும் என்னுடன் சேர்ந்து வாதாடி, அதிலே கிடைத்த பயன்தான் நமக்கு
மாத்திரமல்ல. நான்கு மாநில விவசாயிகளுக்கும் கிடைத்த பயன்தான் இந்த உடன்பாடு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்)
இதை வெற்றி என்று சொல்லி கர்நாடகத்தோடு வம்புக்கு இழுத்துவிடலாம் என்று சிலபேர் கருதியதுண்டு. ஆனால், நான் இதை வெற்றியாகக் கருதவில்லை. ஏனென்றால்,
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்து ஒன்று பல ஆயிடினும்..
என்பதைப் போல கன்னடமானாலும், களி தெலுங்கானாலும், கவின் மலையாளமானாலும் எல்லாம் தென்னக மாநிலங்கள்தாம் என்ற காரணத்தினால் இதை நான் வெற்றி என்று கூறவில்லை. இப்போதும் வெற்றி என்று கருதவில்லை. ஆனால், இந்த உடன்பாடு கருணாநிதி தமிழ்நாட்டுக்குச் செய்துவிட்ட துரோகம் என்று சிலரால் இன்றைக்கும் பேசப்படுகிறது. அப்படிப் பேசுகின்றவர்கள் தெரிந்து பேசுகிறார்களா? தெரியாமல் பேசுகிறார்களா? என்று எனக்குத் தெரியும்.
உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ? எனக்குத் தெரியாது. நல்ல உடன்பாடு என்று தெரிந்தே பேசுகிறார்கள். குஜ்ரால் காலத்திலே போட்ட அந்த திட்ட வரைவை இப்போது நிறைவேற்றவேண்டும். வாஜ்பாய் காலத்து திட்ட வரைவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று வாஜ்பாய் தலைமையிலே இருக்கின்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் இது துரோகம் என்று சொல்கிறார்கள். அதாவது, வாஜ்பாயும், கருணாநிதியும் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
நான் வாஜ்பாய் அவர்கள் எடுத்த நிலையை - மத்திய அரசு எடுத்த நிலையை எல்லா நிலைகளையும் ஆதரிப்பவன் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். தமிழர்களுக்கு எது நல்ல நிலையோ அந்த நிலையை, நாட்டுக்கு எது நல்ல நிலையோ அந்த நிலையை, ஜனநாயகத்திற்கு எது நல்ல நிலையோ அந்த நிலையை ஆதரிப்பவன்தான் இன்றும் என்றும் எப்போதும் கருணாநிதி என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். அந்த வகையிலேதான் இந்த உடன்பாடு இன்றைக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
கர்நாடக முதலமைச்சராலும், கேரள முதலமைச்சராலும், பாண்டிச்சேரி முதலமைச்சராலும் தமிழக அரசினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது இந்த உடன்பாடு. இதில் என்ன துரோகம் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எட்டு ஆண்டு காலமாக நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன கர்நாடகம் இந்த உடன்பாட்டின் ஒப்பந்தத்தின் முதல் சரத்தே “நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அதன்படி...”
என்று எழுதுகிற சூழ்நிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால் இதற்குப் பெயர் துரோகமாக இருக்கமுடியுமா? என்பதைத் தயவு செய்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். அதிலும் தஞ்சாவூரிலே பிறந்து காவிரித்தண்ணீரைக் குடித்து, தஞ்சாவூர் மண்ணிலே வாழ்ந்து, தஞ்சாவூர் மண்ணிலே விளையாடி, தஞ்சாவூர் மண்ணிலே விளைகின்ற நெல்லில் இருந்து கிடைக்கின்ற அரிசியைச் சோறாக்கித் தின்று உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த மண்ணுக்குச் சொந்தக்காரனான நான் தமிழர்களைக்
காட்டிக்கொடுத்தேன், துரோகம் செய்தேன் என்று கூறுவது அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படலாம். உண்மை அது அல்ல என்பதை நிரூபிக்கின்ற வகையிலேதான் இன்றைக்கு எக்ஸ்னோரா சார்பில் உண்மையான தொண்டுள்ளம் படைத்தவர்கள் இருக்கின்ற பாசறையான எக்ஸ்னோரா சார்பில் இந்த வாழ்த்தும், பாராட்டும் எனக்கு வழங்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.
சிலர் துரோகி என்கிறார்கள். நீங்கள் நல்ல காரியம் செய்தாய் என்று பாராட்டுகிறீர்கள். சுருக்கமாகச் சொன்னால் சிலர் காயப்படுத்துகிறார்கள். நீங்கள் இன்றைக்கு மருந்து போட்டிருக்கிறீர்கள். அதற்காக என்னுடைய நன்றியை நிர்மல் அவர்களுக்கும் எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த உங்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுரை வழங்கிய பாசமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அதைப்போலவே கிருஷ்ணா தண்ணீர். கிருஷ்ணா நீர் வருவதற்கு என்.டி.ஆரோடு, சென்னாரெட்டியோடு, ஜனார்த்தனரெட்டியோடு, சந்திரபாபு நாயுடுவோடு இப்படி நான்கைந்து முதல்வர்களோடு பேசியிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் நானே நாலைந்து முதலமைச்சர்களோடு பேசியிருக்கிறேன். இந்த கிருஷ்ணா நதி நீரைப் பற்றி, இதற்காகக் கடிதம் எழுதி மத்திய அரசோடு தொடர்பு கொண்டவர், 1948-ஆம் ஆண்டிலேயே அன்றைக்குச் சென்னை மாகாணத்தினுடைய பிரிமியராக இருந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார்தான் இதைப்பற்றி எழுதியுள்ளார்.
அதற்கு முன்பே இதைப்பற்றி பேசப்பட்டதுண்டு. பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது. 53-ஆம் ஆண்டு, 63-ஆம் ஆண்டுகளில் எல்லாம் கிருஷ்ணா தண்ணீரைப் பற்றி பேசப்பட்டதுண்டு.
ஆனால், இதற்காகக் கடிதம் எழுதி மத்திய அரசு உடனடியாக இதை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டவர் ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள். அதற்குப் பின்னர் அது கிடப்பிலே போடப்பட்டது. தொடர்ந்து வந்த முதலமைச்சர்கள் எல்லாம் முயற்சி எடுத்துக்கூட நிறைவேறவில்லை.
என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் அவர்களும், இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி முன்னிலையில், சென்னைக் கடற்கரையில் கிருஷ்ணா தண்ணீர் திட்டத்தை அறிவித்து ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக எத்தனை முறை நானும், நண்பர் வீராசாமியும் மற்றவர்களும் பொதுப்பணித்துறை அமைச்சரும் ஆந்திரத்திற்குச் சென்றிருக்கிறோம். எத்தனை முறை அந்த அமைச்சர்களோடு பேசியிருக்கிறோம்.
எத்தனை முறை அந்த அதிகாரிகளோடு வாதாடியிருக்கிறோம். அதைப்போல அவர்களும் எத்தனை முறை இங்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சென்ற ஆண்டு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் பூராணிகர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் நம்முடைய போதாத காலம் மழை வெள்ளத்திற்கு இலக்காகி நாம் எண்ணியவாறு முழுமையாகக் கிடைக்காமல், ஒரு ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, பல ஏற்பாடுகள் செய்து இன்றைக்கு முழுமையாக ஒப்பந்தப்படி எந்த எந்த மாதங்களில் நமக்குத் தண்ணீர் வரவேண்டுமோ, அந்த வகையிலே அந்தத் தண்ணீர் சென்னைக்கு வரத்தொடங்கி விட்டது.
நேற்றைய தினம் ஒரு விழா. நேற்றைக்கு முன்தினம் ஒரு விழா, நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டத்திற்குப் பக்கத்திலே உள்ள இடத்தில் இந்தப் பகுதிக்கெல்லாம்
ஏறத்தாழ 3 லட்சம் மக்களுக்குப் பயன்படக்கூடிய அளவிற்குக் கிருஷ்ணா தண்ணீர் மற்றும் சென்னைக் குடிதண்ணீர் திட்டத்திற்காக ஒரு மாபெரும் தொட்டி இங்கே திறந்து வைக்கப்பட்ட விழா. நான் அந்த விழா முடிந்து திரும்பிச் செல்லும்போது பார்த்தேன். அந்தத் தொட்டியின் உயரத்தையும் பார்த்தேன். வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கின்ற தேரின் உயரத்தையும் பார்த்தேன். அந்தத் தேரை பார்க்கும்போது எனக்கு எத்தனையோ நினைவுகள்.
வள்ளுவர் கோட்டத்தினுடைய மண்டபம் எப்படி இருக்கவேண்டும் என்று சிற்பிகள் கேட்ட நேரத்தில் நான் திருவாரூர் தேர் போல இருக்கவேண்டும் என்று இந்த வரைபடத்தை வரைந்து கொடுத்தவனே நான்தான். ஆனால், நேற்றைக்கு இந்தத் தொட்டியினுடைய உயரத்தைப் பார்க்கும்போது எனக்கு அதைவிட இந்தத் தொட்டி உயர்வாகத் தெரிந்தது. அது தெய்வீகம் வாய்ந்ததுதான். திருவாரூர் தேர், அந்த தெய்வீகத்தைவிட உயர்ந்ததாக தொட்டி தெரிந்ததற்குக் காரணம், இது ஆயிரக்கணக்கான தெய்வங்களை வாழ வைக்கக்கூடிய தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கின்ற தொட்டி என்ற காரணத்தால்.
அதைப் போலவே சேப்பாக்கம் தொகுதியில் ஒரு பெரிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா. அதிலும் கிருஷ்ணா தண்ணீரைப் பயன்படுத்தி சென்னை வாழ் மக்களுக்குத் தம்பி ஸ்டாலின் இங்கு எடுத்துக்காட்டியதைப் போல 70 லிட்டரிலிருந்து ஒருவருக்கு 100 லிட்டர் வரை தரக்கூடிய அளவிற்கு பெருகியிருக்கின்ற அந்தத் திட்டத்தினுடைய விழா. நேற்றும் நேற்று முன்தினமும் இந்த விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன.
தொடர்ந்து சென்னை மாநகரத்திலே எத்தனை தொட்டிகள் திறக்கப்பட வேண்டுமோ அவ்வளவும் திறக்கப்பட்டு, சென்னை நகரத்தின் குடிநீர் தேவையை
முழுமையாக ஈடு செய்யப்பட இருக்கிறது. நேற்றைக்கு ஒன்றை அறிவித்தேன். நீண்ட காலத் திட்டம். அதற்கான முயற்சிகள் வேகமாக, தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இடையிலே சற்று தொய்வு விழுந்துவிட்டது என்றாலும்கூட அந்த முயற்சி இப்போது மேலும் மேலும் வேகமாகத் தொடங்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கூவம் நதியையும், பக்கிங்ஹாம் கால்வாயையும், அடையாறையும் இந்த மூன்று ஆறுகளையும் சுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்தி சிங்காரச் சென்னை, சிங்காரச் சென்னை என்று அடிக்கடி மேயர் சொல்லிக் கொண்டிருக்கின்றாரே, உண்மையிலேயே சிங்காரச் சென்னையை உருவாக்குவதற்கு இந்த மூன்று நதிகளையும் சென்னை மாநகர் என்ற நகரின் கழுத்திலே மூன்று முத்தாரங்களாக அணிவிக்கின்ற அந்தக் காட்சியைக் காணவேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்ட நாள் அவா.
அந்த ஆவல் விரைவிலே நிறைவேறும் என்று நான் நம்புகின்றேன்.
நிர்மல், அவர் இன்றைக்கு இந்த விழாவை நடத்தி அவருடைய தொண்டு இயக்கத்திலே இருக்கின்ற ஆயிரக்கணக்கான கிளை உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும் இங்கே அழைத்து எனக்குப் பாராட்டுக்களைக் குவித்திருக்கின்றார். நிர்மல் என்றாலே தூய்மை என்று பொருள். நிர்மலமான என்று சொல்கிறோமே. நிர்மல் என்றாலே தூய்மை என்று பொருள். எக்ஸ்னோரா என்பது இந்த அமைப்பின் பெயர். இதைப்பற்றி கலைவாணர் அரங்கத்திலே கடந்த ஆண்டு பேசும்போது குறிப்பிட்டேன்.
எக்ஸ்னோரா என்றால் என்ன என்று கேட்டேன். X என்பதற்கு எக்ஸலண்டு என்று நிர்மல் சொன்னார். N,O என்பதற்கு நாவல் - புதுமையானது என்று சொன்னார். R,A, என்பதற்கு ரேடிக்கல் அதாவது மாற்றம் என்று சொன்னார். நான்
அப்பொழுது பேசும்போது சொன்னேன். எக்ஸ்னோராவில் எக்ஸ் இருக்கிறது. நோ இருக்கிறது. ரேடிக்கல் இருக்கிறது. இந்த ரேடிக்கல் எப்போதும் இருக்கும். எக்ஸ் என்றால் முன்னாள் ஆகிவிடும். எக்ஸ் மினிஸ்டர் என்றால் முன்னாள் அமைச்சர், எக்ஸ் சேர்மன் என்றால் முன்னாள் தலைவர் என்று ஆகிவிடும். எனவே, இந்த ரேடிக்கலுக்கு எக்ஸ் இல்லை. எக்ஸ் “நோ”. எக்ஸ்னோ “ரா”, ரேடிக்கல் என்ற நான் அன்றைக்கு அந்த விழாவிலே விளக்கியிருக்கின்றேன்.
(பலத்த கைத்தட்டல்)
எனவே, தொண்டுள்ளம் வாய்ந்த தூயவர்கள் பல பேரைக் கொண்டு நடத்தப்படுகின்ற இந்த இயக்கம் இலட்சக்கணக்கானவர்களை, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளடக்கி நாட்டுக்கு நல்ல பணிகளைச் செய்து வருகின்ற இயக்கம் அவர்களால் நான் பாராட்டப்படுவது என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த பெரும் சிறப்பு, தனிச் சிறப்பு என்று கூறி என்னுடைய நன்றியை உங்களுடைய பாதமலர்களுக்குக் காணிக்கை யாக்கி என் உரையை நிறைவு செய்கிறேன்.
26-9-98 அன்று சென்னையில் எக்ஸ்னோரா மற்றும் ரோட்டரி நிறுவனங்களின் பாராட்டு விழாவில் ஆற்றிய உரை
