சென்னை - எக்ஸ்னோரா மற்றும் ரோட்டரி நிறுவனங்களின் பாராட்டு விழா
பகுதி 1 · 1 / 2
சென்னை - எக்ஸ்னோரா மற்றும் ரோட்டரி நிறுவனங்களின் பாராட்டு விழா
இன்று எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் சார்பில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்ற இந்தப் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீங்கள் வழங்குகின்ற பாராட்டுக்களைப் பெறுகின்ற பாக்கியத்தைப் பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
பாராட்டியவர்கள் அனைவருமே எனக்குப் பழக்கமானவர்கள்தாம். அவர்களை நான் நன்கு அறிந்தவன். அவர்களும் என்னை நன்கு அறிந்தவர்கள். இந்தப் பாராட்டு விழாவில் தனிச்சிறப்பு என்னவென்றால் தண்ணீர் இல்லை என்று சென்னையை விட்டுச் சென்ற சேஷன் அவர்கள் தண்ணீர் கிடைத்தவுடன் சென்னைக்கு வந்திருப்பதுதான் ஒரு தனிச்சிறப்பு. (கைத்தட்டல்)
சேஷன் பேசும்போது சொன்னார். நான் மற்றவர்களைப் போல, கலைஞரைப் போல அடுக்குமொழியில் பேசமாட்டேன். நான் “அடுக்கு மொழி பேசி அறியேன்” என்றார். அதுதான் ஐயா அடுக்குமொழி. (கைத்தட்டல்) ‘அடுக்குமொழி பேசி
அறியேன்’ என்று அடுக்கிலே சொன்னதுதான் அடுக்கு மொழி. சில பேர் அடுக்கு மொழி என்று கருதிக்கொண்டு தடுக்குமொழி பேசுவார்கள். ஆனால், தங்கள் மொழி தமிழ்மொழி. தங்கள் மொழி நல்ல உணர்வுள்ள மொழி. தங்கள் மொழி உள்ளத்திலே இருந்து வெளிவந்த மொழி.
நான் இந்த மாபெரும் விழா நிகழ்ச்சியில் ஒன்றைச் சொல்லியாகவேண்டும். ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒன்று இருக்குமா? அந்தக் கழகத்தினுடைய சின்னம் உதயசூரியன் என ஒன்று இருக்குமா? அந்தக் கழகத்தினுடைய கொடி அறிஞர் அண்ணா வழங்கிய இருவண்ணக்கொடி இருக்குமா? என்ற ஒரு கேள்வி எழுந்தபோது, தேர்தல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போதெல்லாம் எனக்கு அன்புக்குரிய சேஷன் அவர்களை அவ்வளவாகத் தெரியாது.
ஒரு காலத்திலே தமிழகத்தில் நிர்வாகப் பொறுப்பிலே ஒரு அதிகாரியாக இருந்தவர் என்பது தெரியும். பிறகு, டெல்லி பட்டணத்திலே செல்வாக்கு மிக்க அதிகாரியாக இருந்தார் என்பது தெரியும். பின்னாளில் தேர்தல் ஆணையாளராக அவர் நியமிக்கப்பட்டதும் தெரியும். அவரோடு அடிக்கடி தொடர்பு கொள்கின்ற வாய்ப்போ, பழகுகின்ற வாய்ப்போ எனக்குமிருந்ததில்லை. மிகவும் கண்டிப்பானவர். நேர்மையானவர். தவறு கண்ட இடத்திலேயே திருத்தக் கூடியவர்.
தான் செய்வது தவறு என்பது தெரிந்தாலும் திருத்திக்கொள்ளக்கூடியவர், அதுதான் ஒரு முதன்மையான மனிதனுக்கு அடையாளம். அத்தகையவர் சேஷன் என்பதை மாத்திரம்தான் நான் அறிந்திருந்தேன்.
இந்த வழக்கில் என்ன தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் வாயிலாக வருமோ என்று ஏங்கித்தவித்த காலகட்டம் அது. அந்த வழக்கு நடத்துவதற்காக
டெல்லிக்குப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும், தம்பி முரசொலி மாறனும், அருமை நண்பர் ஆற்காடு வீராசாமியும் டெல்லியிலே முகாமிட்டிருக்கிறார்கள். தீர்ப்பு வெளியாகிற நாளன்று நான் சேலத்திலே இருக்கிறேன். வீராசாமியிடத்திலே பேசும்போது சொன்னேன். “கொடியும் கழகத்தின் பெயரும் இரண்டையும் காப்பாற்றிக் கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் வரும்போது கருணாநிதியைப் பார்க்கமுடியாது” என்று அவரிடத்திலே சொன்னேன்.
இன்றைக்கு உங்கள் முன்னால் கருணாநிதி நின்று கொண்டிருக்கிறான். காவிரியை கொண்டு வந்தான் கிருஷ்ணா தண்ணீரை வாங்கி வந்தான் என்றெல்லாம் புகழுகின்றீர்களே அதற்குக் காரணமாக அன்றைக்கு இருந்தவர் நேர்மையான தீர்ப்பு வழங்கிய நம்முடைய டி.என். சேஷன் அவர்கள் (பலத்த கைத்தட்டல்) என்பதை இதுவரையிலே பாராட்டி பெருமைகொள்ள இடம் வாய்க்காத காரணத்தால், இதுதான் சரியான இடம் அவரை நேருக்கு நேராக வைத்துக்கொண்டு பாராட்டுகின்ற இடம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
அத்தகையவர் காவிரியைப் பற்றியும், கிருஷ்ணாவைப் பற்றியும் விளக்கமாக இங்கே பேசாவிட்டாலும் கூட, அதனுடைய நுட்பங்களைத் தெரிந்து வைத்து, கங்கையையும் காவிரியோடு இணைக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்துச் சொன்னார். கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்ற திட்டம் அவருக்கே தெரியும். மத்தியிலே நீர்ப்பாசனத் துறை அமைச்சராக கே.எல். ராவ் இருந்த அந்தக் காலத்திலேயே தொடுக்கப்பட்டு பேசப்பட்டது. அப்போது காவிரிப் பிரச்சினைக்காக நாங்கள் டெல்லியிலே அன்றைக்கு இருந்த நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடத்தில் நானும், கர்நாடக முதல்வர் வீரேந்திர பட்டேல் அவர்களும் கேரள முதல்வர்கள் ஈ.எம்.எஸ்.
மற்றும் அச்சுத மேனன்
போன்றவர்களும், பாண்டிச்சேரி முதலமைச்சர் அவர்களும் படை எடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் ஒருநாள் கே.எல்.ராவ் எங்களையும் மற்ற தென்னக மாநில முதலமைச்சர்களையும் அவர் இல்லத்திற்கு இரவு நேர விருந்துக்கு அழைத்து விருந்து முடிந்தவுடன் கங்கை காவிரி இணைப்பு என்றால் என்ன? என்பதை விளக்கிச் சொன்னார். விளக்கிச் சொல்லும்போது குறிப்பிட்டார். ஐந்து அல்லது ஆறு இடங்களில் பிரம்மாண்டமான நீரேற்று நிலையங்களை உருவாக்கவேண்டும்.
அப்படி உருவாக்கினால்தான் இடையிடையிலே இருக்கின்ற மேடு பள்ளங்களைச் சரி செய்து, சமமாக்கி பெரும் குழாய்கள் மூலமாக தண்ணீரைக் கங்கையிலிருந்து காவிரிக்குக் கொண்டு வரமுடியும் என்று கூறிவிட்டு முதல் நீரேற்று நிலையம் வடநாட்டிலே உருவாவதற்குத் தேவையான மின்சாரம் எவ்வளவு தெரியுமா? இன்றைக்கு இந்தியா முழுமையும் பயன்படுத்தப்படுகின்ற மின்சாரம் அந்த ஒரு நீரேற்று நிலையத்திற்குத் தேவை என்று சொல்லி இந்தத் திட்டம் வரவேற்க முடியாத திட்டம் என்பதை அன்றைக்கு விளக்கினார்.
ஆனால், இன்றைக்கு திரு. சேஷன் விரும்புவதைப் போல, நீங்கள் விரும்புவதைப் போல கங்கையும், காவிரியும் இணையாவிட்டாலும்கூட முதல் கட்டமாக கோதாவரி, காவிரி போன்ற நதிகளை இணைத்தாலே, பிறகு அடுத்தடுத்து நதிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இந்தியா முழுமையும் ஒரு தேசிய நதிக் கொள்கையை வகுக்கின்ற அளவிற்கு நதிகளை, ஆறுகளை இணைக்கமுடியுமென்று நான் நம்புகிறேன். காரணம், அந்த அளவிற்கு இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சி முகட்டை எட்டியிருக்கின்றது.
அந்த நம்பிக்கையிலேதான் நான் சொல்லுகின்றேன்.
காவிரிப் பிரச்சினை தகராறு ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகிறது. கிருஷ்ணா பிரச்சினைக்குக் கடைசியாக ஒப்பந்தம் போடப்பட்டு நிறைவேறிய காலம் 15 ஆண்டுகள். 30 ஆண்டு காலம் படாத பாடுபட்டு வந்திருக்கின்ற காவிரிக்கும், 15 ஆண்டுக்காலமாக பொதுப்பணியாற்றி வந்திருக்கின்ற கிருஷ்ணா தண்ணீருக்கும் எனக்கு நீங்கள் பாராட்டு சொல்கின்ற அதே நேரத்தில் நான் உங்களுக்கும் பாராட்டு சொல்கின்றேன். இது என்னால் நடந்தது என்று நீங்கள் நம்புவீர்களேயானால், என்னை நீங்கள் இந்தப் பொறுப்புக்குக் கொண்டு வந்து வைத்த உங்களுக்கு அல்லவா நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்.
காவிரிப் பிரச்சினை - சேஷன் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப் போல, பல ஆண்டுக்காலத்திற்கு முன்னே, குறிப்பாக 1924-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்தத்தைச் சொன்னார்கள். அதற்கு முன்பே 1892-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம் மைசூர் மாநிலத்தில் காவிரியைப் பற்றி கவலைப்படுகின்ற அரசுகள் இல்லை. ஐதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் மைசூர் பகுதியை ஆண்டு கொண்டிருந்த நேரத்தில், யுத்த தளங்களில் எதிரிகளைச் சந்திப்பதற்கே இவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.
எனவே, அந்தப் பகுதியிலே உள்ள நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மைகளைச் செய்ததற்கான திட்டங்கள் தீட்டுகின்ற காலம், அவர்களுக்கு கனிந்திருக்கவில்லை. அவர்களுடைய ஆட்சிகளுக்குப் பிறகுதான் உடையார்களுடைய சாம்ராஜ்யம் மைசூர் பகுதியிலே ஆரம்பமாகி அவர்கள்தான் மக்களுக்கு நன்மைகளைச் செய்ய இந்த நீர் ஆதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்று அணைகளைக் கட்டத் தொடங்கினார்கள்.
அப்படிக் கட்டப்பட்டபோதுதான் வெள்ளைக்காரர்களுடைய ஆட்சி வந்துவிட்டது. வெள்ளைக்காரர் ஆட்சியில் தமிழ்நாட்டு விவசாயிகள் தங்களுடைய
குறைகளைத் தெரிவித்த காரணத்தால் அவர்கள் செய்த ஒப்பந்தம்தான் கிருஷ்ண ராஜசாகர் அங்கே கட்டப்பட்டபோது, செய்துகொள்ளப்பட்ட 24-ஆம் ஆண்டு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 34-ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு வரவேண்டிய தண்ணீர் அளவு எவ்வளவு? அது எப்படியெல்லாம் பெறப்பட வேண்டும். 74-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடியாது. முடிவடையாது. 74-ஆம் ஆண்டு உபரியாக வருகின்ற தண்ணீரைக் கணக்கிட்டு இரண்டு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் சரத்துக்கள் அடங்கிய ஒப்பந்தத்தை 24-ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலே இணைத்தார்கள்.
ஆனால், சில பேர் பிரச்சாரம் செய்தார்கள் 24-ஆம் ஆண்டு செய்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது முடிந்துவிட்டது என்று. அந்தப் பிரச்சாரத்தை முதன்மையாக கர்நாடக அரசு செய்கிறது. தமிழ்நாட்டிலே உள்ளவர்களுக்கு அதனுடைய விவரம் முழுமையாகப் புரியாத காரணத்தால் 74-ஆம் ஆண்டோடு இது முடிவடைகிறது என்று அவர்களும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், உண்மை அது அல்ல.
பொறியாளர்கள் அந்தத் துறையிலே நிபுணர்களாக இருந்தவர்கள் அந்த விளக்கத்தைத் தந்து கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விட்ட அந்தக் கால கட்டத்தில் 67-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலே தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தது. அப்பொழுது தமிழகத்துக்குக் கிடைத்த செய்தி ஏற்கனவே ஹேமாவதி உள்ளிட்ட இரண்டு மூன்று இடங்களில் கர்நாடக அரசு அணைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அணைகளைக் கட்டக் கட்ட நம்முடைய பாசன ஆதாரத்தின் பரப்பளவு குறையும்.
எனவே அந்த அணைகளைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்ற
எண்ணம் தமிழகத்திலே எழுந்தது. அப்போது அண்ணா முதலமைச்சர். நான் பொதுப்பணித்துறை அமைச்சர். இன்றைக்குப் பொறுப்பிலே தம்பி துரைமுருகன் இருக்கிறாரே, அந்த பொதுப்பணித்துறை அமைச்சராக அன்றைக்கு நான் இருந்தேன். அண்ணா அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலே என்னை டெல்லிக்கு அனுப்பி பேசச் சொன்னார். அப்போது கே.எல். ராவ் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர். அப்போது கர்நாடகத்தில் முதலமைச்சராகவும், பொதுப் பணித்துறையையும் ஏற்றிருந்தவருமாக வீரேந்திர பட்டேல் இருந்தார்.
அவர், கேரளத்து முதலமைச்சர், பாண்டிச்சேரி முதலமைச்சர் அனைவரும் கலந்துபேசி 68-ஆம் ஆண்டு பேசத் தொடங்கி 98-ஆம் ஆண்டிலே தான் அது இறுதி வடிவத்திற்கு வந்திருக்கின்றது.
இடையிடையே எத்தனையோ நிகழ்வுகள். அண்ணாவிற்குப் பிறகு நான், எனக்குப் பிறகு அருமை நண்பர் எம்.ஜி.ஆர் முதலமைச்சர். அதற்குப் பிறகு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. 96-ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வருகின்ற வரையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டன. இதற்கிடையிலே தான் தஞ்சாவூர் விவசாயப் பெருங்குடி மக்கள் அவர்கள் சங்கத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்திலே ஒரு வழக்கைத் தொடுத்தார்கள். அந்த வழக்கு நடுவர் மன்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வைத்து தொடரப்பட்ட வழக்காகும்.
அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது 89-ஆம் ஆண்டில் நாம் ஆட்சிக்கு வந்திருந்தோம். அப்போது டெல்லியிலே பிரதமராக வி.பி.சிங் வீற்றிருக்கின்றார். நாமும் தஞ்சாவூர் விவசாயிகள் சங்கம் நடத்திய வழக்கில் இணைத்துக் கொண்டோம். உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு வந்தது. இங்கே சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வி.பி. சிங் அவர்கள் என்னிடத்திலே
தொலைபேசி மூலமாகப் பேசினார். சட்டமன்றத்திலே இருந்த நான் அவசரமாகச் சென்று தொலைபேசியில் பேசினேன். அப்போது சொன்னார். மத்திய அரசின் நிலை என்ன? என்று உச்சநீதிமன்றத்தில் கேட்கிறார்கள். மத்திய அரசு வழக்கறிஞர் மூலமாகச் சொல்லியனுப்ப வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டார். நான் சொன்னேன் மாநில அரசின் நிலையை நீங்கள் திட்டவட்டமாகச் சொல்லவேண்டும் என்றேன். என்ன நிலை என்று கேட்டார்.
இனிமேல் பேச்சுவார்த்தையினால் பலன் இல்லை. காரணம் 25 தடவைக்கு மேல் பேச்சியாகி விட்டது. நடுவர் மன்றத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்று சொன்னேன். அப்படியானால் சட்டமன்றத்திலிருந்து ஒரு தீர்மானத்தைப் போட்டு அனுப்புங்கள் என்றார். உடனடியாக சட்டமன்றத்திலே தீர்மானத்தைப் போட்டு நடுவர் மன்றம் தான் தேவை என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதை பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு அனுப்பிவைத்தோம்.
அவர் மத்திய அரசின் வழக்கறிஞர் மூலமாக அதை உச்சநீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னவுடன் உச்ச நீதிமன்றம் இனி பேச்சு வார்த்தைக்குத் தயாரில்லை என்றால் நடுவர் மன்றத்தைத் தவிர இனி வேறு வழி இல்லை. எனவே நடுவர் மன்றம் தொடங்க அதற்கு உத்தரவிட நான் மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறேன் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகு ஒரு மாத காலத்தில் வி.பி. சிங் அவர்கள் நடுவர் மன்றத்தை அமைத்தார்.
