சென்னை - சென்னைப் புறநகர் வணிகர்கள் சங்க மாநாடு
பகுதி 2 · 2 / 2
எனவேதான் உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இந்த அரசு உங்களுடைய முறையீடு எதுவானாலும் அவைகளை நிறைவேற்ற என்றைக்கும் தவறியதில்லை. ஒருமுனை வரிதான் எல்லா பொருட்களுக்கும் இருக்க வேண்டுமென்று நீங்கள் கேட்ட நேரத்தில், கடந்த காலத்தில் 76-ஆம் ஆண்டிற்கு முன்பே அந்தத் தொடக்கத்தைச் செய்து, பிறகு 89-ஆம் ஆண்டிலே ஏறத்தாழ அறுபது பொருட்களுக்கு பல முனை வரியை நீக்கி, ஒருமுனை வரியாக ஆக்கி, இப்போது எல்லா பொருட்களுக்குமே ஒருமுனைவரி என்ற நியதியை உருவாக்கியதும் இந்த அரசுதான் என்பதை நீங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து நீங்கள் பாராட்டியிருக்கிறீர்கள்.
இங்கேயும் இன்றைக்கும் நன்றி அதற்காக தெரிவித்திருக்கிறீர்கள்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற உணவுப் பொருட்களான பருப்பு, மிளகாய், தனியா, மஞ்சள், புளி,
சீரகம், பெருங்காயம், வெல்லம், சுக்காய் ஆகியவைகளுக்கும், வெள்ளியினால் ஆன மெட்டி, கொலுசு, அரைஞாண், கையால் செய்யப்பட்ட தீக்குச்சிகள், நெல்லுமி, நொய்யரிசி, தேங்காய் மட்டை ஆகிய பொருள்களுக்கும் 96-97-ஆம் ஆண்டு முழுமையான வரி விலக்கினை நான் அவை முன் வைத்த நிதி நிலை அறிக்கையிலேயே - வரிச்சலுகை அளித்திருக்கிறேன்.
அதைப்போலவே 97-98-ஆம் ஆண்டில் விற்பனை வரி ரத்து செய்யப்பட்ட பொருட்கள் - மீன் உணவு, தேங்காய் ஓடுகளும் துண்டுகளும், நிலக்கடலை ஓடுகள், தயிர், பஞ்சாமிர்தம், கல்விக்கான விளக்கப் படங்கள், சுற்றுலா வழிகாட்டி மற்றும் வரைபடங்கள், பலுவான பெரிய சம்மட்டி, பழைய வெள்ளி மெட்டி, கொலுசு ஆகிய பொருள்களுக்கு நடைமுறையிலே இருந்து வந்த 11 சதவிகித வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அது மட்டுமல்ல; மூங்கிலால் செய்யப்பட்ட தட்டி, முறம், கூடைகள், புற்றுநோய், தொழுநோய், காசநோய் ஆகிய நோய்களின் சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகள், நாட்டு மருந்துகள் ஆகியவற்றின் 39 இனங்கள்; சூரிய ஒளி மின்கலங்கள், 50 ரூபாய்க்குக் குறைவான விலையுள்ள காலணிகள் - இவைகளுக்கு வரி ரத்து முழுமையாகச் செய்யப்பட்டது.
கால்நடைத் தீவனம், தொன்னை, சாம்பிராணி, இயலாதவர்களுக்கான (ஊனமுற்றோர்களுக்கான) மிதிவண்டி, செங்கற்கள், ஓடுகள் செய்வதற்கான களிமண், சென்னா இலைகள், விதை ஓடுகள், நில வாகைச் செடியின் இலைகள், மரவள்ளிக் கிழங்கு கப்பி, திப்பி ஆகிய பொருள்களுக்கு நடைமுறையில் இருந்த 4 சதவிகித வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
கனிமங்கள் - உலோகங்கள், தங்க நகை ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்கின்ற தங்கத்திற்கு
விதிக்கப்பட்டு வந்த 2 சதவிகித விற்பனை வரி முழுவதுமாக இந்த அரசினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கே தம்பி ஆவடி அருணா பேசும்போது குறிப்பிட்டார். 93-94-ஆம் ஆண்டில் வரிகள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் 3,397 கோடி ரூபாய்; 94-95-ஆம் ஆண்டில் இந்த வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 4,164 கோடி ரூபாய். 95-96-ஆம் ஆண்டில் வரிகள் மூலம் வருவாய் 5,023 கோடி ரூபாய். நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும், 93-94-இல், 3,397 கோடி ரூபாய் என்பது ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து 94-95-இல் 4,164 கோடி ரூபாய்.
95-96-ஆம் ஆண்டில் மேலும் ஒரு ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து 5,023 கோடி ரூபாய். ஆனால் 96-97-இல் கழக அரசு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியதின் காரணமாக ஆயிரம் கோடி மேலும் உயரவில்லை. 5,023 கோடி ரூபாய் என்பது 5,137 கோடி ரூபாய் என்ற அளவிற்குத் தான் உயர்ந்திருக்கிறது. இதிலிருந்து என்ன புரிகிறது? அவ்வளவு வரிச் சலுகைகளை இந்த அரசு வழங்கியிருக்கிறது என்பது புரியும்.
இரத்தினவேலு அவர்கள் இங்கே சொன்னார். வரிச் சலுகை அளித்தால் வருவாய் அதிகமாகும் என்று. வரவில்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டு. ஆண்டு தோறும் ஆயிரம் கோடி ரூபாய் ஏறிக் கொண்டே வந்தது. ஆனால் பல வரிச் சலுகைகளை இந்த அரசு வணிகர்களுக்கு அளித்ததின் காரணமாக ஆயிரம் கோடி ரூபாய் உயருவதற்குப் பதிலாக நூறு கோடி ரூபாய்தான் உயர்ந்திருக்கிறது என்றால், அந்த அளவிற்கு வரி இழப்பை, வருவாய் இழப்பை நாங்கள் பொறுத்துக் கொண்டு வணிகப் பெருமக்களுக்குச் சலுகைகளை வழங்கியிருக்கிறோம் என்பதை நான் பெருமிதத்தோடு
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த இழப்பு வந்தாலும் பரவாயில்லை. (பலத்த கைதட்டல்) உங்களுடைய நன்மைதான் எங்கள் நன்மை, அதுதான் நாட்டின் நன்மை என்ற அந்த அடிப்படையிலேதான் இவ்வளவு இழப்பையும் ஏற்றுக் கொண்டு இந்தச் சலுகைகளை இந்த அரசு அறிவித்திருக்கிறது என்பதற்காக இதை நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதுமாத்திரமல்ல; பதிவுச் சான்றினை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளும் சலுகையை இந்த அரசுதான் அளித்தது. வாணிபம் செய்பவர்கள் தங்களுடைய வாணிபத்தை ஆண்டுதோறும் பதிவு செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. அதிலே உள்ள சிக்கல்கள், அதிகார மிரட்டல்கள் இவைகளை யெல்லாம் எடுத்துக் காட்டியதின் காரணமாக இந்த நடைமுறையை மாற்றி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய பதிவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று இந்த அரசு ஆணையிட்டதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
நீங்கள் வைத்திருக்கின்ற கோரிக்கைகளிலே மிக முக்கியமான கோரிக்கைகள்; மாநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம், கடைகளுக்குத் தண்ணீர் வரியாக ரூ.125 முதல் ரூ.345 வரை வசூலிக்கிறது. இதனைப் பரிசீலித்துக் குறைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இதுபற்றி உள்ளாட்சித் துறை அமைச்சருடனும், அதிகாரிகளுடனும் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் (கைத்தட்டல்) என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் ஏன் வந்தது என்று பொதுமக்களும் வருத்தத்தோடு கேட்கிறார்கள். இப்போது ஒரு தேர்தல் தேவையா என்று ஆதங்கத்தோடு கேட்கிறார்கள். அதே
உணர்வு உங்களுக்கும் இருக்கிறது. நீங்கள் தேர்தல் வருவதற்கு முன்பே மாநாட்டிற்குத் தேதி குறித்து விட்டீர்கள். ஆனால் தேதி குறித்த பிறகு தேர்தல் வந்து விட்டது. உங்களுடைய ஆதங்கம் எல்லாம் ஏன் இந்தத் தேர்தல் வந்து தொலைந்தது என்பதுதான். இல்லாவிட்டால் இந்நேரம் முதலமைச்சர் நம்முடைய கோரிக்கைகள் பலவற்றை ஏற்று, இந்த வள்ளுவர் கோட்டத்தில் பேசியிருப்பாரே, அவைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு நமக்குப் பதில் வழங்கியிருப்பாரே என்று நீங்கள் எண்ணியிருக்கிறீர்கள்.
கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தல் நேரத்தில் - வீராசாமி அவர்கள் இங்கே என்னைச் சிக்க வைக்கும் வகையில் - ஒன்றைச் சொன்னார். “நெருக்கடி நிலையின் போது எதையெதை எப்படியெப்படி சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவர் கலைஞர். எனவே இதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை இங்கே சொல்வார்”, என்று குறிப்பிட்டார். எப்படிச் சொல்வது? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. (கைத்தட்டல்) மனம் இருக்கிறது. மார்க்கம் தேர்தலுக்குப் பிறகு தென்படும் (பலத்த கைதட்டல்) என்று கூறி விடைபெறுகிறேன்.
25-1-98 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற சென்னை - சென்னை புறநகர் வணிகர்கள் சங்க மாநாட்டில் ஆற்றிய பேருரை
