உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - சென்னைப் புறநகர் வணிகர்கள் சங்க மாநாடு

பகுதி 1 · 1 / 2

சென்னை - சென்னைப் புறநகர் வணிகர்கள் சங்க மாநாடு

ஏராளமானவர்கள் இந்த மண்டபத்தில் எனக்குச் சால்வைகள் அணிவிப்பதற்காக வரிசையாக நின்று கொண்டிருக்கிறீர்கள். ஏராளமான கோரிக்கைகளையும் இங்கே வைத்திருக்கிறீர்கள். நான் சோதித்துப் பார்ப்பதற்காகத்தான், “பேசி முடித்த பிறகு சால்வைகளை அணிவிக்கலாம்” என்று கூறியிருக்கிறேன்.

நான் பேசி முடித்த பிறகு சால்வை அணிவிப்பார்களா இல்லையா என்பதைச் சோதிப்பதற்காகத்தான் பிறகு அணிவியுங்கள் - என் பேச்சில் நம்பிக்கை இருந்தால், அதற்குப் பிறகு அணிவிக்கலாம் என்று கூறியிருக்கிறேன். (கைத்தட்டல்)

இது கோரிக்கை மாநாடு மாத்திரமல்ல; நன்றி தெரிவிக்கும் மாநாடு என்றும் தொடக்கத்திலே நவமணியும், மற்றவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்; மாநாடு நடைபெறுவது வள்ளுவர் கோட்டத்தில். “நன்றி மறப்பது நன்றன்று” என்று குறள் வாக்கியம் தீட்டிய வள்ளுவர் பெயரால் அமைந்துள்ள கோட்டத்தில் மாநாடு நடைபெறும்போது நன்றி மறந்து இந்த மாநாடு நடைபெறுமென்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

அதற்கேற்ப நன்றி உணர்வோடு உங்களுடைய

வாழ்த்துரைகளையும் பாராட்டுரைகளையும் வழங்கிவிட்டு சில முறையீடுகளையும் வைத்திருக்கிறீர்கள்.

பேசியவர்கள் எல்லாம் ஒன்றைச் சொன்னார்கள். குறிப்பாக மதுரை ரத்தினவேலு, “கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவதற்காகத்தான் முதலமைச்சர் அமைச்சரவையையே இங்கே அழைத்து வந்திருக்கிறார்” என்றார். இதுபோன்ற கோரிக்கைகளை அமைதியாக, கூட்டத்திலே விவாதித்து பெரும்பான்மை முடிவின்படி அறிவிப்பது வழக்கம். இங்கேயே அறிவிக்கலாமா என்று எண்ணிப் பார்த்தேன். 26 அமைச்சர்களில் வந்திருப்பவர்கள் ஏழெட்டு அமைச்சர்கள். எனவே முடிவெடுத்து பெரும்பான்மை பார்த்து அறிவிக்க முடியாத நிலையிலே இருக்கிறேன் என்பதை (பலத்த கைதட்டல்) ரத்தினவேலு அவர்களுக்கும் உங்களுக்கும் முதலிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்காக உங்களுடைய கோரிக்கைகளை யெல்லாம் புறக்கணித்து விட மாட்டேன். (கைத்தட்டல்) இவைகளையெல்லாம் இதயத்திலே ஏந்திக் கொண்டு, உரிய நேரத்தில், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, பெரும்பான்மை, சிறுபான்மை என்றெல்லாம் பார்க்காமல், ஒருமித்த முடிவாக நல்ல முடிவெடுத்து உரிய நேரத்தில் உங்களுக்கு நான் அறிவிப்பேன் என்ற நல்ல செய்தியை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்)

இந்த மாநாட்டிலே எங்களுக்கு வழங்கப்பட்ட ‘பேஜ்’ஜில் தராசுகோல் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கின்றது. வணிக சங்கத்தின் சின்னமாகத் தராசுகோல் உள்ளது. எங்கள் இயக்கத்தினுடைய தொடக்கமே தராசுகோல்தான். நீதிக்கட்சிதான் இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அந்த நீதிக் கட்சியின் கொடியின்

சின்னம் தராசுதான். சமுதாயத்திலே உள்ள பல்வேறு பிரிவு மக்களுக்கும் நீதி தேவை என்பதற்காக நம்முடைய முன்னோர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது, இந்த இயக்கத்திற்காகப் பறக்க விடப்பட்ட அந்தக் கொடியிலே தராசு சின்னத்தைத்தான் அமைத்தார்கள். அந்தத் தராசு சின்னத்தின் வழி வந்தவர்கள் என்ற முறையில் நீங்களும் நாங்களும் ஒரே சாதி என்பதை இங்கே நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

கழக ஆட்சியில் எந்த அளவிற்கு வணிகப் பெருமக்களுக்கு அவர்களுடைய முறையீடுகளைக் கேட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்ற புள்ளி விவரங்கள் எல்லாம் எனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களாக உள்ள என்னுடைய தம்பிமார்களால் இங்கே எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

வணிகர் நல வாரியத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டது. 1975-ஆம் ஆண்டு கழக ஆட்சி நடைபெற்ற போது வணிகர் நல வாரியம் அமைக்கப்படுமென்ற அறிவிப்பை நான் செய்தேன். அதற்காக ஒரு கணிசமான தொகையும் ஒதுக்கப்படுமென்று அறிவித்தேன். ஆனால் அந்த வாரியத்தை அமைத்து முறைப்படி அது செயல்படுவதற்கு முன்பு, கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் வணிகர் நல வாரியத்தைத் தொடர்ந்து நடத்தவோ - அல்லது நடைமுறைப்படுத்தவோ முன்வரவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

பின்னர் 89-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தான், வணிகர் நல வாரியம் மீண்டும் தொடங்கப்பட்டு, அதற்காக ஒரு கணிசமான தொகை இரண்டு கோடி ரூபாய், வணிகர் நல வாரியத்திற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்டு இன்றைக்கு அது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

31-12-97 வரை இந்த வணிகர் நல வாரியத்திலே ஆயுள் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கின்றவர்களுடைய எண்ணிக்கை 24,595 பேர் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 24 ஆயிரம் என்பது விரைவிலே இரண்டு இலட்சம் பேர் என்ற அளவிற்கு உயர வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். உயருமென்று எதிர்பார்க்கிறேன்.

உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 91 முதல் 96 வரையில் ஐந்தாண்டுக் காலத்தில் வணிகர் நல வாரியத்திலே உள்ள உறுப்பினர்களால் செலுத்தப்பட்ட தொகை 35 இலட்சத்து 48 ஆயிரத்து 575 ரூபாயாகும். இப்படி உறுப்பினர்களால் தொகை செலுத்தப்பட்டால் அதற்கு ஈடாக அரசாங்கம் அதே தொகையைச் செலுத்துவது என்பதுதான் வணிகர் நல வாரியத்தின் ஒரு கோட்பாடு. இந்த ஐந்தாண்டு காலத்தில் உறுப்பினர்கள் செலுத்திய தொகைதான் வணிகர் நல வாரியத்தில் 35 இலட்சத்து 48 ஆயிரத்து 575 ரூபாய்.

அரசாங்கத்தின் சார்பில் அதற்கான ஈட்டுத் தொகை வழங்கப்படவே இல்லை. கழக ஆட்சி 96-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகுதான் அப்படி வழங்கப்படவில்லை என்ற செய்தி எங்களுக்கு அறிவிக்கப்பட்டு, அந்த கடந்த கால அரசு செலுத்தத் தவறிய அல்லது செலுத்த மறந்து விட்ட அல்லது செலுத்த விரும்பாத அந்த 35 இலட்சத்து 48 ஆயிரத்து 575 ரூபாய் ஈட்டுத் தொகையை வழங்கியதும் இந்த அரசுதான் என்பதை நான் உங்களுக்கு நினைவு ஊட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வணிக வரித்துறையில் பல முக்கியமான சிறப்பான மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு அந்த மாற்றங்களைச் செய்திருக்கிறோம். அவைகளை யெல்லாம் இங்கே பேசிய அமைச்சர்கள் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். மீண்டும் அவைகளை

யெல்லாம் நான் நினைவூட்ட வேண்டுமென்று விரும்பவில்லை.

விற்பனை வரி விதிப்பு அமைப்பிலே பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அதற்காக வரி சீரமைப்புக் குழு என்ற குழு அமைக்கப்பட்டு, அதிலே வணிகப் பிரதிநிதிகளும், சட்டமன்றத்திலே உள்ள மற்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அங்கம் வகித்து அவர்கள் தந்த சீர்திருத்தங்களையெல்லாம் கூடுமான வரையிலே இந்த அரசு செயல்படுத்தியிருக்கின்றது. நான் அந்த விவரங்களுக்குச் செல்ல விரும்பவில்லை.

நீண்ட நேரம் பேசுகின்ற சூழ்நிலையும் இன்றைக்கில்லை. காரணம் உங்களுக்குத் தெரியும். எவ்வளவு பணிகளுக்கிடையே இந்தப் பணியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள்.

முதல் பதிப்பு 2000