உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பாரதி விழா

பகுதி 2 · 2 / 2

“நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா, காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ” - என்கிற இவ்வளவு அழகான தமிழ்ச் சொற்களால் பாரதியாரைப் பற்றி பாரதிதாசன் வர்ணிக்கிறார்; பாரதிக்கு இணை பாரதியேதான் என்று பாரதிதாசனே பலபடப் புகழ்ந்திருக்கிறார்.

பாரதிதாசனுக்குப் பிறகும் பல புலவர்கள் பாரதியாருடைய நடையைப் பேணி, அவருடைய பாணியைப் பின்பற்றிப் பாமரர்களுக்கும் விளங்குகின்ற அளவிற்குப் பாடல்களை எழுதி காட்டுகிற காரணத்தால்தான் பாரதியாருடைய சிறப்பு, மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

விழுதுகள் இல்லாவிட்டால் ஆலமரத்திற்குப் பெருமையில்லை. அதைப்போல இப்படிப்பட்ட பாரதிக்கே பரம்பரை இல்லாமல் போயிருந்தால், பாரதிக்குப் பெருமையில்லாமல் போயிருக்கக்கூடும். ஆகவே விழுதுகளால், ஆலமரம் பெருமையடைவது போல், பாரதியாருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பாரதியார் பரம்பரையால் பாரதி பெரும் பெருமை பெற்று விளங்குகிறார். பாரதியின் வரலாற்றில், எனக்கு முன்னால் பேசியவர்கள் அவருடைய கவிதைச் சிறப்புக்களைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதியார் அவர்கள் சொன்ன கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவைகளா இல்லையா என்பது வேறு. ஆனால் அவ்வளவு அழுத்தம் திருத்தமாக அந்தக் கருத்துக்கள் சொல்லப்பட்டன. பாரதம் எழுதியவருக்கேகூடத் தோன்றாத ஒன்றைப் பாஞ்சாலியினுடைய நாவினில் நடமாட வைத்துப் பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் கூறுகிறார்.

சூதாட்டத்தில் தருமன் தம்பியரை எல்லாம் வைத்து சூதாடித் தோற்றுத் தன்னையும் வைத்துச் சூதாடித் தோற்றுப் பிறகு, கடைசியாகப் பாஞ்சாலியையும் வைத்துச் சூதாடுகிறான்.

அதிலும் தோற்றவுடன் பாஞ்சாலி அழைக்கப்படுகிறாள் சபைக்கு; துச்சாதனன் கூறுகிறான்.

“உன் கணவன் உன்னை வைத்துத் தோற்று விட்டான். வா சபைக்கு!” என்று. அப்போதும் பாஞ்சாலி கேட்கிறாள், “தருமன் என் கணவன்தான்? சூதாட்டத்தில்

தன்னையே தோற்றுவிட்ட பிறகு, என்னை வைத்துச் சூதாடுவதற்கு என்ன உரிமை பெற்றிருக்கிறான்?” என்று பாஞ்சாலி கேட்டதாக - அவள் கேட்டாளோ இல்லையோ - பாரதி கேட்கிறார்.

அவ்வளவு புரட்சிகரமான கருத்தைப் பாரதம் எழுதிய அந்தப் பாவாணரும் சிந்திக்காத கருத்தைப் பாரதியார் சிந்தித்தார். அவருடைய எழுத்திலே எழுச்சி வேகம் மிடுக்கு உணர்ச்சி எல்லாம் இருப்பதைப் போலவே, அவருடைய செயலிலே வீரம், அஞ்சாமை, ஆற்றல் ஆகியவைகள் இருப்பதைப் போலவே அவருடைய வாழ்க்கையிலே பல இடங்களில் நகைச்சுவை துள்ளி விளையாடுவதைக் காணுகிறோம்.

ஒருமுறை புதுவை மாநகரத்தில் அவர் கதாகாலட்சேபம் கேட்டுக் கொண்டிருந்தாராம். கதாகாலட்சேபத்தில் பாடுகின்ற பண்டிதர்கள் “அரகர நமப் பார்வதி பதயே” என்று சொன்னால் இருக்கின்ற பக்தர்கள் எல்லாம் “அரகர மகாதேவ” என்று சொல்வது வழக்கம். வைஷ்ணவ காலட்சேபத்தில் அந்தப் பாகவதார் ஒவ்வொரு முறையும் “கோபிகா காந்தஸ்மரணே” என்று சொல்வார்.

பக்தர்களெல்லாம் “கோவிந்தா கோவிந்தா” என்று சொல்வார்கள். பாரதி உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஐந்து ஆறு முறை பாகவதர் சொல்ல, பக்தர்களும் “கோவிந்தா” என்று சொன்னார்களாம். பாரதி சுற்றுமுற்றும் பார்த்துப் பக்கத்தில் இருந்த ஒருவரை அழைத்து, அவரது காதிலே ஏதோ சொல்லிவிட்டார். மறுபடியும் பாகவதர் “கோபிகா காந்தஸ்மரணே” என்று சொன்னதும் பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்று சொன்னபோது - கூட்டத்தின் நடுவிலிருந்த ஒருவர் எழுந்து “இங்கேதான் இருக்கிறேன்!

என்னையா கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டாராம். அவருடைய பெயர் கோவிந்தன். இது பாரதியார் செய்த குறும்புத்தனம். இப்படியும் அவருடைய வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் உண்டு.

ஆகவே, நகைச்சுவைக்கும் அதிபராக, நல்ல தமிழுக்கும் அதிபராக, வீராவேசத்திற்கும் அதிபராக, விடுதலை வேட்கைக்கும் அதிபராக விளங்கிய பாரதியார் இன்று இல்லை. இன்னும் ஒன்பதாண்டுக் காலத்தில் அவருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாட இருக்கிறோம்.

இந்த நேரத்தில் சிலம்புச் செல்வர் அவர்கள் ஒன்றை ஞாபகப்படுத்தினார்கள்.

பாரதியாரைப் போல தேச விடுதலைக்காக தியாகம் செய்தவர்கள் என்றென்றைக்கும் நமது நினைவில் வைத்துப் போற்றத்தக்கவர்கள் என்று எடுத்துச் சொன்னார்கள்.

அவ்வை சண்முகம் அவர்கள் பெயரால் தெரு ஒன்றின் பெயர் அமைய வேண்டும் என்று சொன்னார்கள்.

நான் ஒருமுறை அண்ணா பாலத் திறப்பு விழாவில் சில பெயர்களைச் சொல்லிவிட்டேன். மாநகர ஆட்சி உரிமையிலே மாநில சுயாட்சி கேட்கின்ற முதலமைச்சர் இப்படித் தலையிடலாமா என்ற கேள்விக்கு ஆளானவன். ஆகவே சிலம்புச் செல்வர் கூறிய கருத்தை மாநகராட்சி மன்றத்திற்கு நான் பரிந்துரையாக வைப்பேன் என்ற உறுதியை மாத்திரம் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். வைக்கப்படும் என்று சொன்னால் அது உத்திரவிடுவதுபோல் ஆகிவிடும்.

ஆகவே பரிந்துரை செய்கிறேன். பரிந்துரை செய்தாலே அது நடைபெறும் என்கிற நம்பிக்கை இருக்கிற காரணத்தால் அது நிறைவேறும்.

வீரவாஞ்சிநாதனைப் பற்றி இங்கே சொன்னார்கள். எனக்கிருக்கும் சங்கடமெல்லாம் நான் சொல்கிறேன் ஒன்றை அல்லது இந்த அரசு சொல்லுகிறது என்ற காரணத்தினாலேயே ஏற்புடையதாக இருந்தாலும், அதற்கு மறுப்புத் தர வேண்டும் என்கிற மனப்பான்மை இந்த நாட்டில் இருக்கிறது.

72-ஆம் ஆண்டிலே டில்லிப் போருக்குத் தமிழக அரசின் சார்பிலே எழுப்பப்பட்ட கடிதத்தில் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்ட ரயில்வே நிலையத்தை மணியாச்சி என்று அமைப்பதற்குப் பதிலாக வீர வாஞ்சி ஜங்ஷன் என்று அழைக்க வேண்டும் என எழுதப்பட்டது. அதற்கு வந்த பதில்தான் இது வட்டார தேசபக்தி. ஆகவே அதற்கு அந்தப் பெயர் வைப்பதற்கில்லை என்பதாகும்.

ஒரு விழாவில் சிலம்புச் செல்வரும், செங்கல்வராயனும் இருந்த நேரத்தில் நான் இதை வெளியிட்டேன்.

இப்படிக் கடிதம் வந்தது தவறு. உடனடியாக வீர வாஞ்சி ஜங்ஷன் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருக்கிற எல்லாக் கட்சிக்காரர்களும் ஆதரவு தெரிவித்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

ஆனால் இந்த அரசு சொன்னது என்ற ஒரே காரணத்திற்காக அதை எதிர்க்கவர்களும் பத்திரிகைகளில் எழுதியவர்களும் உண்டு.

மணியாச்சி என்று இருந்தால்தான் அது ஆஷ்துரையை வீர வாஞ்சி சுட்டுக் கொன்ற இடம் என்று ஞாபகம் வரும். வீர வாஞ்சி நகரம் என்று பெயர் வைத்து விட்டால் ஞாபகம் போய்விடும் என்று புதிய விளக்கங்களெல்லாம் தந்தவர்கள் உண்டு.

அவர்கள் எல்லாம் யார் என்றால், தமிழ்நாடு என்ற பெயரே இலக்கியத்தில் கிடையாது என்று ஒரு காலத்திலே வாதித்தவர்கள். அவர்கள் இந்த அற்புதமான யோசனையை எனக்குச் சொன்னார்கள். இன்னும் சிலர் வேடிக்கையாக “உன் கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மத்திய சர்க்காரைப் போய்க் கேட்கிறாயே! நீ மணியாச்சி என்ற ஊரின் பெயரை வீர வாஞ்சி நகரம் என்று மாற்றிவிடு. பிறகு தானே அவர்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பெயர் வைத்து விடுவார்கள்!”

என்று கூறுகிறார்கள்.

மணியாச்சி என்ற ஊரின் பெயரைக்கூட மாற்றுகிற அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊரின் பெயரைக்கூட மாநில அரசு மாற்ற முடியாது. அதற்கான உத்தரவு மத்திய அரசிடம்தான் பெற வேண்டும். ஏனென்றால் அஞ்சலகம் போன்றவைகள் இருக்கின்றன. மணியாச்சியை வீர வாஞ்சி என்று நாமே வைத்து விட்டால் பிறகு மணியாச்சிக்கு வரும் தபால்கள் எல்லாம் குப்புசாமி, தெற்குத்தெரு, வீர வாஞ்சி நகரம் என்று வந்தால், அது எங்கேயோ அலைந்து திரிந்து அனுப்பிய முகவரிக்கே திரும்பிப் போய்ச் சேரும்.

எனவே மாநில அரசு பெயர் மாற்றினால் பயனில்லை. புதிதாகத் தோன்றுகிற ஊர்களுக்கு வேண்டுமானால் மாநில அரசு பெயர் வைக்க இயலுமே தவிர, இருக்கிறவைகளின் பெயரை மாற்றுகிற அதிகாரம், உரிமைகூட மாநில அரசுக்கு இல்லை. அது மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது; மாநில சுயாட்சிப் பிரச்சாரத்திற்குப் புதியதொரு கருவியை நான் இந்தச் செய்தியின் மூலமாகத் தருகிறேன்.

இப்படிப்பட்ட காரியங்கள் நிறைவேற்றுகிற நேரத்திலே அரசியல் கட்சிச் சார்பற்ற முறையிலே அனைவரும் ஒன்றுகூடிப் பணியாற்றிட வேண்டும். இந்த நல்ல நோக்கங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இதைப் பாரதியாரின் விழாவில் நாம் ஒரு சூளுரையாக மேற்கொள்ள வேண்டும்.

1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் பாரதியார் விழாவில் ஆற்றிய சிறப்புரை.

முதற் பதிப்பு : மே 2000