பாரதி விழா
பகுதி 1 · 1 / 2
பாரதி விழா
ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவை முன்னின்று நடத்துவதில் பெரும் ஆர்வம் காட்டிய தலைவர் அவ்வை டி.கே. சண்முகம் இந்த ஆண்டு படமாக மாறிவிட்டார்.
ஆனால் மறைந்தவர்களுக்குப் பெருமை செலுத்துவது என்பது அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதில்தான் அமைந்திருக்கிறது என்பதற்கேற்ப, பாரதியார் சங்கத்தினர் இந்தப் பணியை இந்த ஆண்டு நிறைவேற்றுவதோடு, வருகிற ஆண்டுகளிலும் இப்பணி சிறப்புற நடைபெறும் என்பதற்கான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
இந்த விழா, பாரதியாரைப் போற்றுவது, புகழ்வது என்ற அளவோடு அமையாமல், பாரதியின் எழுச்சிக் கவிதைகளை மேலும் பரப்புகிற அளவுக்கு ஊக்கமும், உற்சாகமும் வழங்குகிற வகையில் அமைகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வரவேற்றுப் பேசிய மகாலிங்கம் அவர்கள் பாரதியின் நூறாம் ஆண்டு விழா 1982-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது என்றும், அந்த விழாவிற்கும் நான் வந்து சிறப்பிக்க வேண்டுமென்றும் அவர் விருப்பத்தை வெளியிட்டார். இதே நிலையில் வந்து சிறப்பிப்பதா? அல்லது வேறு நிலையில் வந்து சிறப்பிப்பதா என்கிற கேள்விக்கு நான் இப்போது பதில் சொல்லாவிட்டாலும் - நிச்சயமாக எந்நிலையில் இருந்தாலும், வருகிற நிலையை மறக்க மாட்டேன் என்பது உறுதியாகும்.
“நீ மாத்திரம் வந்து கலந்து கொள்வாயா? என் சங்கதி என்ன?” என்று சிலம்புச் செல்வர் கேட்க மாட்டார் என்று நம்புகிறேன்.
கடந்த ஒரு வார காலமாக நானும் சிலம்புச் செல்வரும் கலந்து கொள்கிற பல நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன.
நேற்றைய தினம்கூட கலைவாணருடைய விழா ராஜாஜி மண்டபத்தில் நடந்து முடிந்ததும், சிலம்புச் செல்வர், “எப்போது மறுபடியும் சந்திக்கலாம்?” என்று கேட்டுப் பிறகு அவரே நினைவுபடுத்திக் கொண்டு “நாளைக்குத்தான் சந்திக்கப் போகிறோமே” என்றார்.
நான், “இதே பக்கவாத்தியங்களுடன் இங்கேயும் கச்சேரி வைத்திருக்கிறோம்” என்று நகைச்சுவையாகச் சொன்னேன்.
கச்சேரி பழக்கப்பட்டதென்றாலும் பாகவதரும் பக்க வாத்தியங்களும் ஒன்றாக இருந்தாலும்கூட மக்கள் தொடர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்களே - அதற்கு என்ன காரணம் என்றால் - அது வித்துவான்களுடைய திறமையைப் பொறுத்து அல்ல, மக்களுக்கும் கச்சேரி நடத்துகிறவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற உள் உணர்வுதான் - உண்மை உணர்வுதான்! கச்சேரி தொடர்ந்து நடைபெற்றாலும், அலுப்பு சலிப்பு இல்லாமல், சென்னை மாநகர மக்கள் மாத்திரமல்ல; தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இன்றைக்கு இந்தக் கருத்துக்களை ஆயிரம் தடவை சொன்னாலும், அதை அகமகிழக் கேட்கிற ஆர்வத்தைப் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
பாரதியாருடைய பாடல்களை, இசையோடு பாடுவதில் மறைந்த கலைஞர் டி.கே. சண்முகம் எவ்வளவு திறமை வாய்ந்தவரோ அதைப் போலவே, அப்பாடல்களை அவர் எழுதிய உணர்வோடு எடுத்துச் சொல்லுவதில் தலைசிறந்து விளங்குபவர் நம்முடைய சிலம்புச் செல்வர் அவர்கள் ஆவார்கள்.
நான் அண்ணாமலை, எட்டயபுரத்தில் பாரதி பிறந்த இல்லத்தைத் தமிழக அரசு சார்பில் விலை கொடுத்து வாங்கி, அதை வரலாற்றுச் சின்னமாக்கும் விழாவிற்குச் சென்றிருந்தேன். அக்காலத்திற்கு நடுவில், ஆலயத்தின் ஓரத்தில் அமைந்திருந்த அந்த வீட்டிற்குள் பாரதியின் இலக்கியங்கள், அவர் கைப்பட்ட எழுதியவை ஆகியன அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த காட்சியை நான் கண்டேன். அழகாக, பொடிப்பொடியாத அச்சுக் கோர்த்தது போல் அவர் எழுதிய அந்த எழுத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
பாரதியார் பயன்படுத்திய கருவிகள், இரவு நேரத்தில் உலவப் போனால் கையில் எடுத்துச் செல்கிற ஈட்டி போன்ற மிக நீளமான வேல்கம்பு ஆகிய இவைகள் எல்லாம் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.
புரட்சியைப் பற்றிப் பாடுகிறவர்கள், பேசுகிறவர்கள் எல்லாம் புரட்சிக்காரர்களாக இருந்துவிட முடியாது. ஆனால் பாரதியார் பாடினார் - பேசினார் - உண்மையிலேயே புரட்சிக்காரராகவும் இருந்தார்.
வீரர்களுக்குக் களத்திற்குத் தேவையான போர்ப் பாணிகளை எழுதி தருகிற ஆற்றல் புலவர்களுக்கு இருக்கலாம்.
கருணாகரத் தொண்டைமானின் ஆற்றலைப் பற்றி, குலோத்துங்கனின் போர்முறையைப் பற்றி, ஜெயங்கொண்டான் எழுதிய கலிங்கத்துப் பரணியைப் படிக்கிற நேரத்தில் ஒரு புதிய ஆவேசம் நமக்கு ஏற்படுகிற அளவுக்கு அவர் யாத்துத் தந்திருக்கிறார்; என்றாலும் அவர் போர்க்களம் சென்ற புலவர் அல்லர்.
ஆனால் பாரதியார் ஆவேசமான கருத்துக்களை எழுத்தாக்கி, கவிதை முத்தாரமாக ஆக்கி, நமக்குத் தந்தார் என்பது மாத்திரமல்ல; அவரே களத்திலே நின்றார் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
பாரதியார் பாட்டு எழுதிக் கொடுத்து, “இவைகளைப் பாடிக் கொண்டு போர்க்களத்திற்கு நீங்கள் செல்லுங்கள்!” என்று மற்றவர்களை விட்டு ஆழம் பார்த்துத் தான் மட்டும் ஒதுங்கி விட்டவரல்லர்.
தானும் போர்க்களத்திற்குச் செல்கிற மனத் தெளிவைப் பெற்றவர் பாரதியார்.
அவருடைய பாடல்களை ஆரம்பத்திலே மதிக்க மறுத்தவர்களும் உண்டு, அவர்களே பிறகு மதித்துப் பாராட்டிய செய்தியும் தமிழகத்தில் உண்டு. நான் அதைப் பற்றி விரிவாக இந்த நேரத்தில் கூறுவதால், மறைந்தவர்களுக்கு இழுக்குக் கற்பித்த குற்றத்திற்கு ஆளாவேன் என்பதால் அதை நான் விட்டு விடுகிறேன்.
அப்படி மதிக்க மறுத்தவர்களும் - பிறகு அவரை மதித்தார்கள் என்பது பாரதியாருடைய ஆற்றலைக் காட்டுகிறதேயல்லாமல் - விமர்சித்தவர்களுடைய ஆற்றலைக் காட்டவில்லை.
பாரதியார் அவருக்குப் பிறகு எந்த வாரிசும் இல்லை என்று தன் வாழ்வை முடித்துக் கொண்டிருப்பாரேயானால், அவர் பெருங்கவிஞர் என்று போற்றப்பட முடியாது. அவர் ஒரு பெருங்கவிஞர் என்று போற்றப்படுவதற்குரிய சிறப்புகளில் ஒன்றாகத் திகழ்வதுதான், அவரது பாரம்பரியம் ஒன்று, இன்று தமிழ்நாட்டிலே திகழ்வதாகும்.
பாரதிதாசன், பாரதியாருடைய நேர்வாரிசாகக் கனகசுப்புரத்தினமாக இருந்து, பாரதிதாசன் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு பாரதிதாசனாக மாறியவர்.
பாரதியார் பற்றிப் பாரதிதாசன் பாடுகிற நேரத்தில் -
