அன்னை வேளாங்கண்ணி ஆலய வெள்ளி விழா
பகுதி 2 · 2 / 2
ஓடிச்சென்று மருத்துவச்சியாக பணியாற்றியதும் - ஏழைத் தம்பதியர் குறை போக்க இயேசுவை அணுகிய செயலும் இயேசு சிலுவையிலே அறையப்பட்டவுடன் சிலுவையின் அடியிலே துணிவோடு நின்று தைரியமாக சமாளித்த அந்தச் சிறப்பும்” விவிலியம் கூறுவதுபோல அன்னை மரியாளின் சிறப்பாகும்.”
அந்த உறுதி, துணிவு, தாய்மை, பாசம் இவைகளோடு நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அன்னை வேளாங்கண்ணி ஆலய வெள்ளிவிழா நேரத்திலே நாம் மேற்கொள்ள வேண்டிய சூளுரையாகும்.
சிலர் கேட்கலாம். நாங்கள் அழைத்தால் வர மறுக்கிறாய்? இஸ்லாமியர் அழைத்தால் செல்கிறாய்; கிறித்தவர்கள் அழைத்தால் செல்கிறாய்; என்று கேட்கலாம். நாங்கள் என்பது நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்று எண்ணுகிற நேரத்தில்தான் நாங்கள் என்ற சொல்லுக்கு பொருள் உண்டு.
நாங்கள் என்பதிலே - நான் என்னைத் தமிழன், திராவிடன் என்று சொல்லிக் கொண்டாலுங்கூட, அவர்கள் சொல்வதைப் போல இந்து மதக்காரன், இந்து மதத்தைச் சேர்ந்தவன் - ஆனால் இந்து மதத்திலே இருப்பவர்கள் எங்களை அழைக்கின்ற நேரத்தில் எல்லோரும் சமம், வாருங்கள் என்று அழைத்தால் அடியின்றி செல்வேன். நீயும், நானும் ஒன்று ஆண்டவன் முன்பு என்று அழைத்தால் தட்டாமல் செல்வேன். ஆண்டவன் படைப்பிலே மேல் சாதி, கீழ் சாதி என்று
இல்லை; எல்லாம் ஒரே சாதிதான் மனித சாதிதான் என்று சொல்லி அழைத்தால் கட்டாயம் செல்வேன்.
நான் இந்துக் கடவுள்களுடைய விழாக்களிலே கலந்து கொள்ள வேண்டும் அல்லது வேண்டாம் என்ற இந்தப் பிரச்சினையில் நான் என்றைக்கும் என்னைச் சிக்க வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.
ஒரு முதலமைச்சர் - தம்பி ஜெய்ப்பியார் இங்கே சொன்னதைப் போல - எல்லோருக்கும் பொதுவானவன் தான். எனக்கென்று சில கொள்கைகள் உண்டு. ஆனால் நான் எல்லோருக்கும் பொதுவானவன். எல்லோருக்கும் பொதுவானவனாக இருக்கின்ற காரணத்தால்தான் நான் இஸ்லாமியர்கள் அழைத்தால் அந்த விருந்துக்கும் செல்கிறேன்; கிறித்துவப் பெருமக்கள் அழைத்தால் அந்த விழாவிற்கும் வருகிறேன்; மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், கபாலீஸ்வரர் கோவிலிலும் சமபந்தி விருந்துக்கும் செல்கிறேன்.
எல்லோருக்கும் பொதுவானவன்தான் நான்.
சிலபேர் அழைக்கும்போது நாங்கள் மற்ற மதங்களை வாழவிட மாட்டோம் என்று சொல்லாவிட்டாலும் செயலால் உணர்த்தி அழைக்கின்ற நேரத்தில் நான் அங்கே செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் செய்கின்ற பாவங்களுக்கு நானும் பங்குதாரராக ஆகிவிடக் கூடாது என்ற காரணத்தால், நான் அந்த அழைப்புக்களை ஏற்றுக் கொள்வதில்லை. (கைத்தட்டல்)
அஃதென்னியில் நான் எல்லோருக்கும் பொதுவானவன் தான். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலே நான் சென்று விருந்து அருந்தவில்லையா? என்னோடு எதிர்க்கட்சித் தலைவரும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மற்றும் பல்வேறு சமயத் தலைவர்களும் கலந்து கொள்ளவில்லையா? இங்கே கபாலீஸ்வரர் கோவிலில் நானும்
தலைவர் மூப்பனார் அவர்களும், குன்றக்குடி அடிகளாரும், நல்லகண்ணு அவர்களும், பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்களும் தாய்மார்களும் அமர்ந்து உணவருந்தவில்லையா? அந்தச் சமத்துவம் எங்கிருக்கிறதோ, அந்த இடத்திற்கு நான் செல்ல என்றைக்கும் மறுக்க மாட்டேன்.
இங்கே நான் படித்துக் காட்டினேனே - வெள்ளி விழா மலரிலே இருக்கின்ற வாசகம் -
“கடவுள் நம்பிக்கையும் பக்தி முயற்சிகளும் கண்மூடித் தனமான செயல்களால் கேலிக்குள்ளாகி வருகின்றன.”
என்ற அந்த வாசகம் இருக்கிறதே. இந்த அடிப்படையிலே தான் நான் அன்றைக்கு பராசக்தியில் எழுதினேன்.
“கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது”
என்று வசனம் எழுதினேன். அதை இந்த அடிப்படைத் தத்துவத்தின் படிதானே நான் அன்றைக்கே 45 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.
எனவேதான் இந்த மார்க்கம் எங்கள் மனதைக் கவருகிறது. ஒருமுறை ஒரு மத விழாவிற்கு - மத விழா என்றால் மதத்தை மாத்திரம் பரப்புகின்ற அல்லது மற்ற மதங்களை வெறுக்கின்ற மத விழா அல்ல. ஒரு நிகழ்ச்சிக்கு திருவாரூருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்திருந்தார்கள். அண்ணாவிற்கு முன்பு பேசியவர்கள் தங்கள் மதத்தைப் பற்றிய சில அற்புதங்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
இறுதியாக பேசிய அறிஞர் அண்ணா சொன்னார்கள். “அற்புதங்கள் இருப்பதற்காக உங்கள் மத விழாவிற்கு நான் வரவில்லை; இந்த விழாவிற்கு நான் வரவில்லை.
அற்புதங்கள் நிகழ்த்துவதென்றால், அத்தகைய ஆண்டவன் எங்களிடத்திலே ஆயிரக்கணக்கிலே இருக்கிறார்கள். எங்கள் ஆண்டவன் நெற்றிக் கண்ணைத் திறந்தாலே திரிபுரமும் எரியும். எங்கள் ஆண்டவன் ஒரு வேலாயுதத்தை விட்டால் பல மலைகளைக் குடையும்; எனவே நான் அற்புதங்களுக்காக வரவில்லை. அன்புக்காக வந்திருக்கிறேன். நீங்கள் உலகத்தை வழிநடத்திச் செல்கிற அமைதிக்காக வந்திருக்கிறேன். நீங்கள் மக்களையெல்லாம் மக்களாகப் பாவிக்கின்ற அந்த எண்ணத்தை மதித்து நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்கள்.
எனவே, அந்த அண்ணா வழியில் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் வாக்கியத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகமெங்கும் பரப்பி, அதையே மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும், அந்த அளவிற்கு பின்பற்றினாலே நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகள் தொலைந்து நல்ல சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும்.
பாரதியாருடைய கனவை, வடலூர் ராமலிங்கனாருடைய கனவை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய கருத்தை, உத்தமர் காந்தியடிகளுடைய எண்ணத்தை இவைகளை எல்லாம் நாம் ஓங்கச் செய்ய முடியும் என்ற அந்த உண்மையை அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னார்கள் என்றால், இந்தக் கருத்தெல்லாம் உங்களைப் போன்றவர்களிடமிருந்து, இங்கே வீற்றிருக்கின்ற அருட்தந்தை அவர்களின் உரையிலேயிருந்து நம்முடைய விழாவிற்கு முன்னிலை ஏற்றிருக்கின்ற பேராயர் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்களே.. எங்களுக்கெல்லாம் வாழ்த்து வழங்கினார்களே, அந்த வாழ்த்துக்களிலே பொதிந்து கிடக்கின்ற கருத்துக்களிலே
யிருந்து நாங்கள் பெற்ற எண்ணக் கருவூலங்களாகத்தான் அவைகளை எல்லாம் எண்ணுகிறோம்.
கிறித்துவ மதச் சின்னமாக நீங்கள் பயன்படுத்துவது சிலுவை. அது இயேசுநாதருடைய தியாகச் சின்னம். தியாகச் சின்னம் மாத்திரமல்ல. அந்தச் சின்னத்தை உற்று நோக்கினால் “கூட்டல்” (+) அடையாளம். மனிதர்களை எல்லாம் ஒன்றாக கூட்டுகின்ற சின்னமாக அந்தச் சின்னம் அமைந்திருக்கின்றது. (பலத்த கைதட்டல்) எனவேதான் ஒன்றோடொன்று இணைக்கின்ற - ஒன்றோடொன்று கூட்டுகின்ற - அந்த சின்னத்தின் மகிமையை உணர்ந்திருக்கின்ற ஒரு மதத்தை - ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற உங்களையெல்லாம் நான் பாராட்டுகிறேன்.
நீங்கள் எடுக்கின்ற விழாவிலே நானும் கலந்து கொள்கிற பேறு பெற்றமைக்காகப் பெருமையடைகிறேன். இங்கே வீற்றிருக்கின்ற பெரியவர்கள், இளைஞர்கள், அருமைத் தாய்மார்கள், சகோதரிகள் அனைவருடைய நல்ல எண்ணத்தையும் நான் பெற்று இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்றால் - நான் ஆற்ற வேண்டிய கடமைகளை முழுவதும் ஆற்றிவிட்டேன் என்கிற ஆணவத்தோடு இதை நான் உணரவில்லை. இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் பல இருக்கின்றன என்ற அடக்க உணர்ச்சியோடு, அப்படி ஆற்றுவதற்கான வலிமையை எனக்குத் தாருங்கள்; அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் வெள்ளி விழாவிலே கலந்து கொண்டிருக்கின்ற நீங்கள் அந்தத் திறனை எனக்குத் தாருங்கள்; அந்த ஆதரவை எனக்கு வழங்குங்கள்.
அப்படி வழங்குவீர்களேயானால் மேலும் மேலும் என்னுடைய காலம்வரையில் என் பணி உங்களுக்காகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் என்ற செய்தியை இந்த நல்ல விழாவிலே விடுத்து, அன்பான வரவேற்பிற்கும், பாராட்டுதல்களுக்கும், புகழுரைகளுக்கும் நான் ஏற்பவன்தானா என்பது கேள்விக்குறியாக இருந்தாலுங்கூட ஏற்பவனாக நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
- முரசொலி 9.9.97
