அன்னை வேளாங்கண்ணி ஆலய வெள்ளி விழா
பகுதி 1 · 1 / 2
அன்னை வேளாங்கண்ணி
ஆலய வெள்ளி விழா
இந்த நல்ல மாலை நேரத்தில் இங்கே நடைபெறுவது வெள்ளி விழா நிகழ்ச்சி பற்றிய உரைகளா? அல்லது கவியரங்கமா? என்று தெரியாத அளவிற்கு ஒரு திகைப்பு. ஏனென்றால் வரவேற்றவர்கள், வாழ்த்தியவர்கள், வாழ்த்து மடல் படித்தவர்கள், அடுத்து யார் பேசுவார் என்று சொன்னவர்கள் அத்தனை பேருமே, கவிதை நடையிலே தங்களுடைய பேச்சுக்களை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நானும் கவியரங்கம் கேட்டு நீண்ட நாளாகிறது. எனவே இன்றைக்கு அந்த அரிய வாய்ப்பை அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திலே பெற்றிருக்கிறேன்.
அதற்காக என் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சற்றொப்ப 25 ஆண்டுகளுக்கு முன்பு மணியை ஒலிக்கின்ற பணியினை நான் நடத்தியிருக்கிறேன். அந்த மணியோசை மாறாமல், இன்றைக்கும் வெள்ளி விழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்கிற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன்.
தம்பி பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப்போல இந்த 25 ஆண்டுகளில் நான்காவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்
பேற்றிருக்கிறேன் என்றால், என்னுடைய தனிப்பட்ட ஆற்றல், வலிமை என்றெல்லாம் சொல்வதைவிட மேடையிலும், எதிரே அமர்ந்திருக்கின்ற உங்கள் நல்ல உள்ளங்களுடைய வாழ்த்துதான் இன்றைக்கு நான் உங்கள் முன் முதலமைச்சராக நின்று கொண்டிருப்பது.
அன்னை வேளாங்கண்ணி என்றும், அல்போன்ஸ் சொன்னார். கலைஞருக்கு தாயிடத்திலே பற்று உண்டு - மாதா பக்தி உண்டு - என்றார். ஆம், அஞ்சுகத் தாயிடமும் பக்தி உண்டு. அன்னை சிவகாமியிடமும் பக்தி உண்டு - காமராஜரைப் பெற்ற காரணத்தால். (கைத்தட்டல்) அன்னை சத்யாவிடமும் பக்தி உண்டு - அருமை நண்பர் எம்.ஜி.ஆரைப் பெற்ற காரணத்தால். (கைத்தட்டல்) அன்னை வேளாங்கண்ணியிடமும் பக்தி உண்டு. அற்புத மனிதர் ஏசுநாதரைப் பெற்ற காரணத்தால்.
(பலத்த கைதட்டல்)
தாய்மையை மதிக்கத் தெரியாதவர்கள் இந்தத் தரணியிலே உள்ள மக்களால் ஏற்கத் தகாதவர்கள். தாயின்றி எதுவும் இல்லை. அந்தத் தாய்ப் பாசத்திற்கு நிகரானது எந்தப் பாசமும் இல்லை. தாய்ப் பாசத்திற்குப் பிறகுதான், படிப்படியாக வருகின்ற மற்ற பாசங்கள். ஆனால், எந்தப் பாசமும் தாய்ப் பாசத்தை தோற்கடிக்க முடியாத பாசங்கள். அந்த பாச உணர்வோடுதான் பல்லாயிரம் பேர் இந்த விழாவிலே கூடியிருக்கிறோம்.
அதுவும் அன்னை வேளாங்கண்ணி என்று இதை அழைக்கின்ற நேரத்தில் தனிப்பட்ட ஒரு சுயநலமும் எனக்குண்டு. ஏனென்றால் வேளாங்கண்ணி ஆலயம் இருப்பது எங்கள் தஞ்சை மாவட்டத்திலேதான். (கைத்தட்டல்) தரணி முழுதுமிருந்து கிறித்துவ பெருமக்கள் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தைத் தேடி தஞ்சை மாவட்டத்திற்குத் தான் வருகிறார்கள்.
எனவே தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் எங்கள் மாவட்டத்திலே இருக்கின்ற அன்னை வேளாங்கண்ணி சென்னையிலும் உங்களால் போற்றப்படுகிற - புகழப்படுகிற தாயாக - வணங்கப்படுகிற தாயாக - வாழ்த்தப்படுகிற தாயாக இருப்பதைக் காண நான் மிகுந்த பெருமையடைகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இடத்திற்குப் பெயர் “பெசண்ட் நகர்”. சென்னையிலே ஏற்கெனவே இது “பெசண்ட் நகராக” இல்லை, ஒரு “பேஷண்ட்” (Patient) நகராக இருந்தது. (பலத்த சிரிப்பு) “பேஷண்ட்” (Patient) நகராக இருந்ததை, பெசண்ட் நகராக மாற்றுகின்ற முயற்சியிலே கடந்த காலத்திலே கழக அரசு ஈடுபட்டது.
வீட்டு வசதி வாரியம் ஒன்றை நான் முதலிலே பொறுப்பிலே இருந்தபோது உருவாக்கி அந்த வாரியத்தின் சார்பாக சென்னையைச் சுற்றிப் பல புறப் பகுதி நகரங்களை உருவாக்க முயன்றபோது அப்படி உருவான நகரங்கள்தான் கே.கே.நகர், அண்ணா நகர், மறைமலை நகர் என்ற நகரங்கள். அந்த அடிப்படையிலே உருவானதுதான் இந்தப் பெசண்ட் நகர்.
உங்களிலே பெரியவர்கள் நினைவு வைத்திருக்கக் கூடும். காலை நேரங்களில் கடற்கரையிலே உலவுவதற்காக நான் செல்வதுண்டு. இன்றைய காமராஜர் சாலை கடற்கரையிலே உலவச் சென்றால் எனக்கு வசதியில்லை. காரணம், என்னைச் சுற்றி பத்து பேர் வந்து விடுவார்கள். இன்னும் பலபேர் அங்கேயே மனுக்களைக் கொடுக்கவும் தொடங்கி விடுவார்கள்.
அதனால் இந்த நீண்ட கடற்கரையில் ஒதுக்குப் புறமாக ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே சென்று ஒவ்வொரு நாளும் உலவலாம் என்று நான் தேர்ந்தெடுத்த
இடம் தான் எலியட்ஸ் கடற்கரை. தேர்ந்தெடுத்து இங்கே நான் வந்து உலவுவதற்காகத் தொடங்கிய போது, கடற்கரை முழுதும் குப்பைக் கூளங்கள், ராவணன் மீசை என்று அழைக்கப்படுகிற முள் பந்துகள், கால்பந்து போல பெரிய அளவிற்கு நெருஞ்சி முள், பூதாகரமாக உருவெடுத்ததைப் போல - அந்தப் பெரிய முட்கள் பரந்து கொண்டே இருக்கும். பந்துபோல கடற்கரையிலே ஓடிக்கொண்டே இருக்கும். அப்போது எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அமைத்த ‘சீரணிப்படை’ என்று ஒன்று இருந்தது.
அந்தச் சீரணிப் படையை அழைத்து “இந்த ராவணன் மீசை என்று சொல்லப்படுகின்ற முட்களை எல்லாம் அகற்றுங்கள் - இந்த இடத்தை தூய்மைப் படுத்துங்கள்” என்று நான் அன்போடு கேட்டுக் கொள்ள அவர்களும் ஒரு வார காலத்திற்குள்ளாக அதை நிறைவேற்றி இந்தப் பகுதியிலே உள்ள உங்களைப் போன்ற மக்கள் எல்லாம் நல்ல ஒத்துழைப்புத் தந்த காரணத்தால் கடற்கரை இந்தப் பகுதியிலே தூய்மையானது.
இந்தப் பகுதியிலே உள்ள மீனவர்கள் தங்களுடைய ஒத்துழைப்பைத் தந்தார்கள். தூய்மையான இந்தக் கடற்கரையிலேதான் தூய்மையின் சின்னமாக அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அமைந்திருக்கின்றது.
இந்த ஆலயத்தினுடைய வளர்ச்சியிலே எனக்கு முக்கிய பங்கு உண்டோ இல்லையோ, தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புதான் இந்த ஆலயத்தை எழுப்பிய நேரத்தில் ஆலய மணியை நான்தான் வந்து ஒலிக்கச் செய்ய வேண்டுமென்று பேராயர் அருளப்பா அவர்கள் ஆணையிட்டார்கள். அதை நிறைவேற்றி வைத்தேன். இந்த வெள்ளி விழாவிலே கலந்து கொள்ள வேண்டுமென்பதை அருட்தந்தை லாரன்ஸ் அவர்கள் ஒரு திருமண விழாவிற்கு நான் இங்கே வந்த போது குறிப்பிட்டார்கள்.
அப்போதே நான் சொன்னேன். வெள்ளி விழா - பொன் விழா - பவள விழா - வைர விழா - என்று எந்த விழாவானாலும் நான் முதலமைச்சராக இல்லாமல் தமிழ் நாட்டிலே நடைபெற முடியாது; சட்டமன்றத்தின் வெள்ளி விழாவையும் நான்தான் முதலமைச்சராக இருந்து நடத்தினேன்; இந்திய சுதந்திர வெள்ளி விழாவையும் நான்தான் முதலமைச்சராக இருந்து நடத்தினேன்; இப்போது சுதந்திரப் பொன் விழாவும் நான் முதலமைச்சராக இருக்கிற நேரத்தில் தான் வந்திருக்கின்றது.
அதைப்போல அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வெள்ளி விழாவும் நான் முதலமைச்சராக இருக்கும் போதுதான் வந்திருக்கிறது.
எனவே நான் பல இடங்களிலே சொல்லியிருக்கிறேன். என்னை நீங்கள் “விழா முதலமைச்சர்” என்று சொல்லலாம். விழா முதலமைச்சர் என்றால் "FESTIVAL CHIEF MINISTER" என்று அர்த்தமல்ல. விழாத முதலமைச்சர் (கைத்தட்டல்) - விழாமல் இருப்பது என்னுடைய வலிமையால் அல்ல. உங்களுடைய தாங்குதலால் (கைத்தட்டல்) நான் விழாமல் இருப்பேன் என்ற நம்பிக்கை. அதைத்தான் இங்கே தம்பி பீட்டர் அல்போன்ஸ் சொன்னார்.
அவர் ரொம்ப பேராசையோடு சொன்னார். நூறாண்டு காலம் நானே முதலமைச்சராக இருக்க வேண்டுமென்று அவர் மிகவும் பேராசைப்பட்டார். இயற்கை ஒவ்வொருவருக்கும் ஒரு கால வரம்பை நிர்ணயித்திருக்கின்றது. ஆனால் அந்தக் கால வரம்பிற்குள்ளாக அவர்கள் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் என்பதைத்தான் அது இந்து மதம் ஆனாலும், கிறித்துவ மதம் ஆனாலும், புத்த மதம் ஆனாலும், இஸ்லாமிய மார்க்கமானாலும் அத்தனையும் அதைத்தான்
நமக்கு கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தக் கடமையை நாம் ஆற்றியாக வேண்டும். அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில் நம்முடைய உள்ளத்திலே எத்தகைய தூய்மை இருக்க வேண்டும் என்பதனை இங்கே வெளியிடப்பட்டுள்ள வெள்ளி விழா மலரில் நான் கண்டேன். விளிம்பு கட்டி, அந்த அருமையான மொழிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
“கடவுள் நம்பிக்கையும் பக்தி முயற்சிகளும் கண்மூடித்தனமான செயல்களால் கேலிக்குள்ளாகி வருகின்றன குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது ஆன்மீகக் குருடர்களால், ஆன்மீகம் சிதைந்து போகும்; இதனால் மதம் மதிப்பிழந்து போகிறது மனிதம் சிதைந்து போகிறது; நமது தவறான வாழ்க்கை முறைகளால் மனிதம் சிதைந்து போகின்றது சிந்தியுங்கள்!”
என்ற இந்தப் பொன்மொழி வெள்ளிவிழா மலரிலே விளிம்பு கட்டி வெளியிடப்பட்டிருப்பதை நான் படித்துப் பார்த்தேன்.
அந்த மலரிலே அன்னை வேளாங்கண்ணியைப் பற்றிக் குறிப்பிடும்போது-
“அன்னை மரியாவின் சிறப்பு, இயேசுவைப் பெற்றெடுத்தது என்பதோடு முற்றுப்பெறவில்லை கருவுற்ற எலிசபெத்துக்கு
