ஆம்பூர் சம்பங்கி இல்ல மணவிழா
பகுதி 2 · 2 / 2
தி.மு.கழகம் என்கிற இந்த இயக்கம் ஓர் அரசியல் இயக்கமாக முதலில் தொடங்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை பெரியார் அவர்களோடு இணைந்த திராவிடர் கழகம் என்ற அந்தப் பாசறையிலே பயின்றவர்கள் நாங்களெல்லாம். அவருடைய வாழ்த்துக்களோடு - அவருடைய அறிவுரைகளோடு - அவருடைய கண்டிப்புக்களை ஏற்றுக் கொண்டு கடமையாற்றியவர்கள் திராவிடர் கழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களும் நானும் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியரும் இங்கே வீற்றிருக்கின்ற கழகத்தின் தளகர்த்தர்கள் பலரும் அத்தனை பேரும் தந்தை பெரியாருடைய இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றிக் கொண்டிருந்தவர்கள்.
தமிழகத்தில் மத ஒற்றுமை வேண்டும் - ஜாதி வேற்றுமை கூடாதென்ற நிலை - சமுதாயத்தில் நல்லிணக்கம் இவைகளெல்லாம் வேண்டுமென்பதற்காகப் பாடுபட்ட ஒரு பேரியக்கத்தில் எங்களை இளமைக் காலத்திலே ஒப்படைத்துக் கொண்டவர்கள். அந்த இயக்கம் செய்து வந்த பிரச்சாரம், எடுத்துரைத்த கொள்கைகள் - மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்த லட்சியங்கள் இவைகளெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டுமேயானால் சமுதாய இயக்கமாக இருந்தால் மாத்திரம் போதாது என்கிற அந்த எண்ணத்தோடுதான் தி.மு.கழகம் அரசியல் ரீதியாக விளங்க வேண்டுமென்ற ஒரு கருத்தை திருச்சியில் 1956-இல் நடைபெற்ற தி.மு.கழக மாநில மாநாட்டில் கூடியிருந்த கழகத் தோழர்களும் பொது மக்களும் அறிஞர் அண்ணா அவர்களுக்கு வலியுறுத்துகின்ற வகையிலே வாக்களித்து, தேர்தலில் நீங்கள் ஈடுபட வேண்டுமென்று அன்றைக்கு மக்கள் மன்றம் ஆணையிட்டது; தி.மு.கழகம் என்கிற ஜனநாயக பேரியக்கத்தின் தொண்டர்கள் ஆணையிட்டார்கள்.
அந்த ஆணையை ஏற்றுக் கொண்டு 57-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.கழகம் தேர்தல் களத்திலே இறங்கியது. அப்பொழுது அண்ணா தலைமையில் பதினைந்து பேர் சட்ட மன்றத்தில் இடம் பெற்றோம். அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் ஐம்பது பேர். அதற்குப் பிறகு 67-இல் நடைபெற்ற தேர்தலில் அண்ணா தலைமையில் ஆட்சியே அமைந்தது. அண்ணா அவர்கள் - நாம் செய்த துர்ப்பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக - இரண்டாண்டு காலத்தில் நம்மைவிட்டுப் பிரிந்திடவும் அதற்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற பொறுப்புக்களை நாம் ஏற்று நடத்திடவும் ஆட்சிப் பொறுப்பிலே சில காலம் இருந்தோம்.
ஆட்சிப் பொறுப்பிலே மூன்று முறை இருந்து நான்காவது முறையாக இன்றைக்கு தி.மு.கழகம் இடம் பெற்றிருக்கிறதென்றால் தமிழ்நாட்டு மக்கள் என்னதான் கழகத்திற்குச் சோதனை வந்தாலும் அந்தச் சோதனைகள், அடக்குமுறை வடிவத்திலே வந்தாலும் மிசா வடிவத்திலே வந்தாலும் எந்த வடிவத்திலே வந்தாலும் அவைகளையும் தாங்கிக் கொண்டு அது தேர்தல் தோல்வி என்ற வடிவத்திலே வந்தாலும் கூட அதையும் பொருட்படுத்தாமல் இந்தக் கழகத்தின் கொடியைத் தூக்கிப் பிடிக்கின்ற இலட்சோப லட்சம் உடன்பிறப்புக்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். (பலத்த கைத்தட்டல்) என்றைக்கும் இருப்பார்கள்.
அதற்குக் காரணம் சம்பங்கி போன்றவர்கள், இராமு போன்றவர்கள், வடஆற்காடு மாவட்டத்திலே உள்ள கழக மாவீரர்கள், தமிழகம் முழுவதும் உள்ள தளகர்த்தர்கள் அவ்வளவு பேரும் உழைத்த உழைப்பு - அவர்களால் உருவாக்கப்பட்டு ஆங்காங்கு இன்றைக்கும் இருக்கின்ற தி.மு.கழகத்தின் உடன் பிறப்புக்கள், அவர்கள் ஆற்றி வருகின்ற பணிதான் இதற்கெல்லாம் காரணமாகும்.
என்னென்ன சாதனைகளை இந்த அரசு செய்து வருகின்றதென்பதைப் பட்டியலிட்டுக் காட்டத் தேவையில்லை. நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். விளம்பரங்கள் மூலமாக இவைகளைச் சொல்வதெல்லாம் உங்களுக்காக அல்ல. பொதுமக்களுக்காக அல்ல. சிலபேர் இன்றைக்கும் தி.மு.கழக ஆட்சியை வீழ்த்த வேண்டும், வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று கூத்தாடிக் கொண்டிருக்கிறார்களே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்கான சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களே, அவர்களுக்கு அவைகளை அடையாளம் காட்ட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் தி.மு.கழக அரசின் சாதனையும் இந்த ஆட்சி மக்களோடு எந்த அளவுக்குத் தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் நாம் எடுத்துக் காட்டுகின்றோம்.
இன்றைக்கு இந்த மணவிழாவிற்கு நாங்கள் வந்திருக்கிறோம் என்றால் தம்பி துரைமுருகன் என்னோடு சென்னையிலிருந்து வந்ததாகக் கருதிக் கொண்டிருப்பீர்கள். சென்னையிலிருந்து ரயிலில் வந்த காரணத்தால்! ஆனால் துரைமுருகன் கடந்த மூன்று நாட்களாக இருந்த இடம் தஞ்சை மாவட்டம், எதற்காக என்றால் துரைமுருகனும், உள்ளாட்சித்துறை அமைச்சர் தம்பி கோ.சி.மணி இருவரும் தஞ்சை மாவட்டத்தில் நடைபெறுகின்ற பணியினைப் பார்த்திட ஊக்கப்படுத்திட அங்கே சென்று திரும்பியிருக்கின்றார்கள்.
அங்கே அந்தப் பணி நடைபெறுகிறதென்றால் தஞ்சை மாவட்டத்திற்காக மாத்திரம் நடைபெறுகின்ற பணி அல்ல. அது மொத்த தமிழகத்திற்காக நடைபெறுகிற பணி. கடந்த ஆண்டு பன்னிரெண்டு கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற பணி. அதைத் தொடர்ந்து அதை மேலும் விரிவாக்குகின்ற பணியாக இருபது கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற பணி அந்தப் பணி.
இந்தப் பகுதியில் வெளிவந்த ‘இந்து’ ‘எக்ஸ்பிரஸ்’ போன்ற பத்திரிகைகளில் கூட அந்தப் பணியைப் பற்றி எழுதியுள்ளதை நீங்கள் படித்திருக்கக்கூடும். அந்தப்பணி சோழ மன்னர் காலத்தில் கூட நடைபெறாத பணி என்று அவைகள் வர்ணித்திருக்கின்றன. வரலாற்றில் இதுவரையிலே சொல்லப்படாத பணி என்று வர்ணித்திருக்கின்றன.
காவேரி தோன்றி காவேரி ஆறு கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து சேலம், மேட்டூர், திருச்சி, தஞ்சை இந்தப் பகுதியெல்லாம் காவேரி தீரம் என்று சொல்லப்படுகின்ற அளவுக்குப் பரவி தஞ்சை, திருச்சி, தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாயிகளை அது வாழ வைத்துக் கொண்டிருக்கிறதென்றாலும் கூட அதனுடைய கிளை ஆறுகள் அதனுடைய வாய்க்கால்கள் இவைகளெல்லாம் சீர்படுத்தப்படாமல் பல்லாண்டுக் காலமாக இருந்த காரணத்தால் வருகின்ற தண்ணீர் முழுமையாக வயல்களுக்குப் போய்ச் சேர முடியாத பல்வேறு தடுப்புக்கள் ஆங்காங்கு இருந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்து கடந்த ஆண்டு அந்த வாய்க்கால்களை எல்லாம் சிறிய நதிகளையெல்லாம் ஆழப்படுத்த வேண்டுமென்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் காரணமாக கடந்த ஆண்டு வயல்கள் பயன்பெற்றது மாத்திரமல்ல. வந்த வெள்ளத் தண்ணீர் போவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த காரணத்தால் தஞ்சை மாவட்டமே தப்பித்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
அந்தப் பணியை மேலும் தொடர்ந்துதான் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பல கிலோமீட்டர் தூரம் அந்த வாய்க்கால்களையெல்லாம் வகைப்படுத்த இருபது கோடி ரூபாய் செலவிலே பணிகள் வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவைகளைப்
பத்திரிகைகள் பாராட்டியிருக்கின்றன. அந்தப் பணி முடிவுற்றால் வருகின்ற தண்ணீர் வீணாகாமல் வயல்களுக்குச் சென்று மேலும் அதிக விளைச்சலை தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெறுகின்ற காரணத்தால் தமிழகத்தினுடைய உணவு தேவை நிறைவு செய்யப்பட அது வட ஆற்காடானாலும், சேலம் ஆனாலும், கோவை ஆனாலும், வேறு எந்த மாவட்டமானாலும், எல்லா மாவட்ட மக்களுக்கெல்லாம் பயன் பெறுகின்ற வகையில் தஞ்சை மாவட்டம் செழிப்பாக ஆவதற்காக இந்தக் காரியம் இன்றைக்குச் செய்யப்படுகிறது.
எனவே மக்களுக்கு அன்றாடம் ஆற்ற வேண்டிய பணி என்ன என்பதைச் சிந்தித்து செயல்படுகின்ற ஒரு ஆட்சி இன்றைக்கு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிலபேருக்கு அவசரம்; சிலபேருக்குத் துடிப்பு; சிலபேருக்கு பாரதக் கதையில் வருகின்ற காந்தாரியின் நினைப்பு. அதன் காரணமாக இந்த ஆட்சியை அகற்ற வேண்டுமென்றெல்லாம் இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
என்னை பத்திரிகையாளர்கள் சந்திக்கும்பொழுதெல்லாம் கேட்கிறார்கள். எங்கே சந்தித்தாலும் ஒரு விழாவிற்குச் சென்றால் அந்த விழா மேடையில் ஏறும்போதும் சரி, அல்லது நான் பயணம் செய்கின்ற விமானத்திலிருந்து இறங்கும் போதும் சரி, ரயிலில் ஏறும் போதும் சரி, காரிலே ஏறும் போதும் சரி, காரை விட்டு இறங்கும் போதும் சரி என்னை பத்திரிகைக்காரர்கள் சூழ்ந்து கொண்டு “என்ன சார் ஆட்சியைக் கலைப்பதாகச் சொல்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
கலைக்கக்கூடாதென்பதற்கான காரணங்களையெல்லாம் இப்போது நான் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்றுதான் நான் சொல்கின்றேன்.
ஆட்சி என்பது வரும் போகும். அண்ணா சொன்னதைப் போல பதவி என்பது மேலே போட்டிருக்கின்ற துண்டை போன்றது. அது கீழே விழுந்தாலும் மனிதன் நடமாடலாம். ஆனால் கொள்கை என்பது கட்டியிருக்கின்ற வேட்டியைப் போன்றது. அதை இழந்துவிட்டு மனிதன் நடமாட முடியாது.
எனவே கொள்கைக்காக வாழ்கின்ற நாங்கள், கொள்கைக்காக இருக்கின்ற இயக்கம். இந்த இயக்கம் இருந்தால் போதும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். எங்களுடைய லட்சியம். அந்த இலட்சியத்திலிருந்து தி.மு.கழகத்திலிருந்து யாரும் தங்களை என்றைக்கும் விடுவித்துக் கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட உறுதி வாய்ந்த இந்த இயக்கத்தினுடைய ஒரு பெரும் தூணாக இந்தப் பகுதியிலே விளங்கியவர் என்னுடைய ஆருயிர் நண்பர் சம்பங்கி ஆவார்.
அந்த சம்பங்கியின் இல்லத்தில் இன்றைக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ள இந்த குலவிளக்குகள் கொழுந்து விட்டு எரிந்து இந்தக் குடும்பத்தினுடைய பெருமையை மேலும் மேலும் பரப்பிட நல்ல முறையிலே பயன்படும் என்ற நம்பிக்கையோடு மணமக்களை வாழ்த்துகிறேன்.
ஆம்பூர் சம்பங்கி இல்ல மணவிழாவில் ஆற்றிய உரை
