ஆம்பூர் சம்பங்கி இல்ல மணவிழா
பகுதி 1 · 1 / 2
ஆம்பூர் சம்பங்கி இல்ல மணவிழா உரை
என்னுடைய ஆருயிர் நண்பர் ஆம்பூர் சம்பங்கி இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலும், சம்பங்கியின் பேத்தியும் தம்பி மனோகரனின் செல்வியுமான சங்கீதாவுக்கும் இராதாகிருஷ்ணனுடைய செல்வன் பாலாஜிக்கும் நடைபெறுகின்ற இந்த வாழ்க்கை ஒப்பந்த விழாவில் அவர்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ்ந்து நாட்டுப் பணி பல புரிந்து இந்தக் குடும்பத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்ற வகையில் விளங்கிட வேண்டுமென்று என் இதயமார்ந்த வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடும்பத்தில் நடைபெறுகின்ற மணவிழா நிகழ்ச்சிகளிலெல்லாம் நான் கலந்து கொள்வதை நம்முடைய கழகத்தின் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி இங்கே சுட்டிக்காட்டினார். மனோகரனின் திருமணத்திற்கும் நான்தான் தலைமையேற்று மணவிழா நிகழ்ச்சியை அன்றைக்கு நடத்தி வைத்தேன். இன்றைக்கு மனோகரனுடைய மகள் திருமணத்தையும் நானேதான் தலைமையேற்று மணவிழா நிகழ்ச்சியை நடத்தி வைத்துக் கொண்டிருக்கின்றேன். இப்படியே போனால்
மனோகரனுடைய பேரன், பேத்தியின் திருமண விழாவிலும் கலந்து கொள்கின்ற அளவுக்கு இந்தக் குடும்பத்திலே எனக்குப் பற்றும் பாசமும் உண்டென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மனோகரனுடைய தங்கையும் ஆனந்தனின் தங்கையுமான செல்வியின் திருமண விழாவிலேயும் நான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றேன். சம்பங்கியின் மற்றொரு மகன் தம்பி ராஜுவினுடைய திருமணத்திலும் கலந்து கொண்டு மணமக்களை நான் வாழ்த்தியிருக்கின்றேன். எனவே இந்தக் குடும்பத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது என்பது இயற்கையான ஒன்று என்பதற்கு இவைகளெல்லாம் சான்றுகளாகும்.
ஆம்பூர் என்றால் சம்பங்கியையும், இராமுவையும் என்னால் மறக்க முடியாது. 1950-ஆம் ஆண்டு வாக்கில் ஏறத்தாழ 48 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை நான் சென்னையில் சந்தித்தேன். அதற்கு முன்பு இவர்தான் சம்பங்கி என்றோ, இவர்தான் ராமு என்றோ இவர்களை எனக்குத் தெரியாது. அப்போது நான் ‘மணமகள்’ படத்திற்கும் ‘பராசக்தி’ படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தேன்.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் நீங்கள் வீட்டிலிருந்து வசனம் எழுதினால் உங்களுக்குத் தொந்தரவு இருக்கும் என்று கூறி அவருடைய செயலாளர் செல்லமுத்து என்பவரை என்னோடு அனுப்பி சென்னை மாநகரத்தில் வடசென்னை பகுதியில் செலக்ட் ஹோட்டல் என்ற ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்து அங்கே அமர்ந்து நீங்கள் தனிமையாக வசனம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதைப்போல இதே வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பூட்டுத் தாக்கிலே பிறந்த பெருமாள் அவர்கள் எடுத்த ‘பராசக்தி’
படத்திற்கு அங்கேதான் சில காட்சிகளுக்கான வசனத்தை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அறைக்கு எதிர் அறையிலே இரண்டு இளைஞர்கள் அங்கிருந்தவாறு என்னைச் சந்திப்பதற்கு அந்த ஹோட்டலில் பணியாற்றுகின்ற பையன் மூலமாக, சொல்லி அனுப்பினார்கள். அந்தப் பையன் என்னிடம் வந்து ‘ஏதோ வடஆற்காட்டிலிருந்து இரண்டு பேர் வந்து இங்கே தங்கியிருக்கிறார்கள். உங்களைச் சந்திக்க வேண்டுமாம்’ என்று அந்தப் பையன் என்னிடத்தில் சொன்னான்.
‘வரச் சொல்’ என்றேன்.
பிறகு இருவரும் வந்தார்கள். வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அதாவது நான் சம்பங்கி, இவர் இராமு என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். திராவிட இயக்கத்திலே அவர்களுக்குள்ள பற்றை என்னிடம் விளக்கினார்கள். அன்றைக்கு செலக்ட் ஹோட்டலில் ஏற்பட்ட அந்தச் சந்திப்பு சம்பங்கியும், இராமுவும் மறைகிற வரையில் எந்த அளவுக்கு நீடித்தது என்பதையும் அவர்களுக்குப் பிறகும் கூட எப்படி நீடித்துக் கொண்டிருக்கிறதென்பதையும் நீங்களெல்லாம் நேரடியாக உணர்கிறீர்கள்.
இங்கே நண்பர் முல்லை வடிவேலு எடுத்துக்காட்டியைப் போலவும் தம்பி துரைமுருகனும் மற்றவர்களும் இங்கே குறிப்பிட்டுக் காட்டியதைப் போலவும் இந்த வட்டாரத்திலே திராவிட இயக்கத்தை, தி.மு.கழகம் எனும் இந்த அரசியல் இயக்கத்தை வளர்ப்பதற்கும், வலிமைப்படுத்துவதற்கும் சம்பங்கியும், ராமுவும் எவ்வளவு பணியாற்றினார்கள் என்பதை நான் மிக மிக நன்றாக உணர்வேன். அதனால்தான் சம்பங்கியோ, ராமுவோ ஆம்பூர் தொடர்பாக எந்த நிகழ்ச்சிக்கு எப்போது அழைத்தாலும் நான் வரத் தயங்கியதே இல்லை.
அவர் இங்கே கட்டிய ஹோட்டல் திறப்பு விழாவுக்குக்கூட
நான் வந்தேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். நான் இல்லாமல் இந்த இல்லத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறக்கூடாதென்பது அவருடைய பிடிவாதமான கொள்கை; எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவது என்னுடைய கடமை என்ற அளவிலேதான் அன்றும் சரி இன்றும் சரி இந்த இல்ல நிகழ்ச்சிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றேன்.
தம்பி ஆனந்தன் கழகத்திலே மிகுந்த பற்றோடு நகரச் செயலாளர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு பணியாற்றி வருகின்றார். வட ஆற்காடு மாவட்டத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு என்று பல மாவட்டங்களையெல்லாம் ஒப்பிட்டுக் காட்டி பல மாவட்டங்களோடு எனக்குள்ள கட்சித் தொடர்பையெல்லாம் எடுத்துச் சொல்லி அவைகளையெல்லாம் மீறுகிற வகையிலே இங்கே நான் அதிக நண்பர்களைப் பெற்றிருக்கிறேன் என்று துரைமுருகன் இங்கே குறிப்பிட்டார்.
அதிக நண்பர்களைப் பெற்றதும் இந்த மாவட்டத்திலேதான்; அதிலே சில நண்பர்களை இடையிலே இழந்து மீண்டும் திரும்பப் பெற்றதும் இதே மாவட்டத்திலேதான் என்பதை அவர்களுடைய பெயர்களை நான் சொல்லாமலே நீங்களெல்லாம் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன். அது எதைக் காட்டுகிறதென்றால் “நீரடித்து நீர் விலகாது” என்ற அந்தப் பழமொழியைத்தான் அது சுட்டிக் காட்டுகின்றது. அப்படிப்பட்ட இந்த உணர்வுப்பூர்வமான, உறவு பூர்வமான நட்பின் அடிப்படையில் அமைந்த இந்தத் தொடர்புடைய மாவட்டத்தில் உங்களையெல்லாம் காணும்பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன், பெருமிதம் கொள்வேன்.
அந்தப் பெருமிதத்தை இன்றைக்கும் நான் காணுகின்றேன்.
இங்கே மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சகி பேசும்பொழுதும், கழகத்தின் பொருளாளர் பேசும் பொழுதும் இது ஒரு மணவிழாவாக அல்ல ஒரு மாவட்ட மாநாடு போல இங்கே பெருந்திரளாக நீங்கள் குழுமியிருக்கின்றீர்கள் என்று குறிப்பிட்டார்கள். சிலபேர் நடத்துகின்ற மாநாடுகள் இந்த மணவிழா அளவுக்கு இருக்கின்ற காரணத்தால் மணவிழாவே இன்றைக்கு மாநாடுகளாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தி.மு.கழகம் வென்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அதை யாராலும் வீழ்த்த முடியாத ஒரு சக்தி என்பதற்கு இங்கே நீங்கள் குழுமியிருக்கின்ற ஒன்றே போதுமான ஆதாரமாகும்.
இந்த மாவட்டத்திலும், இந்தத் தொகுதியிலும் கழக அரசு ஆற்றியுள்ள சாதனைகளை எல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். அதிலும் குறிப்பாக நண்பர் அப்துல் லத்தீப் அவர்கள் இங்கே நான் சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி எங்கே ஒருவேளை மறந்துவிடுவேனோ என்பதற்காகவோ அல்லது சட்டமன்றத்தில் சொன்னதை நிறைவேற்றாமல் போய்விடுவேனோ என்பதற்காகவோ உங்களையெல்லாம் சாட்சியாக வைத்துக் கொண்டு மீண்டும் அவைகளை நினைவுபடுத்தியிருக்கின்றார்.
நினைவுபடுத்தத் தேவையில்லை. துரைமுருகன் அந்தத் துறையின் அமைச்சர் என்கிற பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால் அவைகளையெல்லாம் நிச்சயம் தம்பி துரைமுருகன் நிறைவேற்றிக் கொடுப்பார் என்று அப்துல் லத்தீப் அவர்களுக்கும் உங்களுக்கும் நான் இங்கே மீண்டும் ஒருமுறை உறுதி கூறுகின்றேன். நிறைவேற்றாவிட்டால் அப்துல் லத்தீப் பாடு துரைமுருகன் பாடு என்று விட்டு விட மாட்டேன். அதில் நானும் பொறுப்பேற்றுக் கொள்வேன் என்பதை நான் அவருக்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கின்றேன்.
