அலகாபாத் மாநாடு
பகுதி 2 · 2 / 2
என்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குத் தங்கப் பதக்கத்தைப் பரிசாக அளிக்கின்ற ஒரு முறையை அரசாங்கத்தில் கொண்டு வந்தார்கள். அதை நாங்கள் தொடர்ந்து அமல் நடத்தி வருகிறோம். கலப்புத் திருமணம் என்றால் சும்மா வீட்டுப் பெண்ணுக்கும், ராஸ்திரி வீட்டுப் பையனுக்குமல்ல; யாதவ வீட்டுப் பையனுக்கும் ‘ஜாட்’ வீட்டுப் பெண்ணுக்குமல்ல.
மாப்பிள்ளையோ அல்லது பெண்ணோ இருவரில் ஒருவர் கட்டாயம் அரிசன வகுப்பைச் சேர்ந்தவராக
இருக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் கலப்புத் திருமணம். அவர்களுக்குத்தான் தங்கப் பதக்கம் பரிசு!
40 ஆண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் ஒரு புதிய திருமண முறையை நாங்கள் கண்டிருக்கிறோம். அதற்குச் சுயமரியாதைத் திருமணம் என்று பெயர். அதற்குப் புரோகிதர் வருவது கிடையாது. புரோகிதர் பார்வையாளராகத்தான் வருவார். மந்திரமில்லை; மந்திரம் சொன்னாலும் யாருக்கும் புரிவதுமில்லை. அக்கினி சாட்சியில்லை. சாட்சிகள், கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்; திருமணத்திற்கு வரத் தேவையில்லை! மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
தாலி வேண்டுமென்று விரும்பினால் தாலியும் கட்டிக்கொள்வார்கள். இந்த முறையை பெரியார் ஈ.வே. ராமசாமி அவர்கள் ஆரம்பித்தார்கள்.
இதற்கு ஆரம்பத்திலேயே பலத்த எதிர்ப்பு நாட்டில் இருந்தது. சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டால், புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால், குழந்தை பிறக்காது என்று கூறினார்கள். நான் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவன்தான். எனக்குக் குடும்பக் கட்டுப்பாட்டையும் மீறி ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். புரோகிதத் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் பத்திரமாகக் காசி, ராமேஸ்வரம் என்று அலைகிறார்கள்.
சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்களோ, போதும் போதும்! இனிக் குழந்தைகள் வேண்டாம் என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் திருமண முறை, சட்டப்படி செல்லாத நிலைமை தமிழ்நாட்டில் இருந்தது. 1967-க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தத் திருமணத்தை எல்லாம் சட்டப்படி செல்லுபடி ஆக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு போனோம். ஆனால் வாயளவில் சீர்திருத்தம் பேசுகின்ற
காங்கிரஸ் ஆட்சி எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று சட்டத்தை இயல்பாகவே ஒரு மசோதா கொண்டு வந்து அதை நிறைவேற்றியிருக்கிறோம்.
இனிமேல் நடக்கின்ற சுயமரியாதைத் திருமணங்கள் மாத்திரமல்ல, இதுவரை நடைபெற்றிருக்கின்ற ஆயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என்று அந்த மசோதா கூறியது. அதற்கான ஒப்புதலை அளிக்க மத்திய அரசு முதலில் தயங்கியது. அதற்காக எங்களுடைய சட்ட அமைச்சர் டெல்லியிலேயே தவம் கிடந்தார். கடைசியாக அதற்குச் சம்மதம் கிடைத்தது.
சமுதாயத்தில் நல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதற்குக் கல்வியும் ஒரு கருவியாகும். ஆகவேதான் தமிழ்நாட்டில் புகுமுக வகுப்பு வரையில் நாங்கள் இலவசக் கல்வியை ஏற்படுத்தியிருக்கிறோம்.
பின்தங்கிய மாணவர்களுக்கும் அரிசன மாணவர்களுக்கும் பட்டப் படிப்பில் 70 சதவிகிதம் உதவித் தொகை வழங்குகிறோம். இந்த மாநாட்டின் மூலம் மத்திய அரசுக்கு நான் ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பொழுது மத்திய அரசு வேலை வாய்ப்பில் அரிசனங்களுக்கு மாத்திரம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது. இதைப் பிற்பட்டோருக்கும் அமல்படுத்த மத்திய அரசு முயன்றிட வேண்டும். மத்திய அரசு அரிசனங்களுக்கு வேலை வாய்ப்பில் இடம் அளிப்பது போல, பின்தங்கிய வகுப்பினருக்கும் இடம் ஒதுக்க வேண்டுமென்று இந்த மாநாட்டின் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பொழுது இந்தக் காரியம் மாநில அரசு அளவில் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. பின்தங்கியோர் நலனை அறிய மாநில அளவிலே ஒரு குழுவைப் போட்ட முதல்
மாநிலம் தமிழ்நாடுதான். பின்தங்கிய நலக்குழு செய்த பரிந்துரைகளை எல்லாம் ஏற்றுப் படிப்படியாக நாங்கள் காரியங்களைச் செய்து வருகிறோம்.
பின்தங்கிய மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இவர் களிடையே ஒரு பகுதியினர் உயர்ந்துவிட்டால் சமுதாயம் உயர்ந்து விட்டதாகப் பொருளல்ல. உயர்ந்துவிட்ட அந்தப் பத்துப்பேரும் மிச்சமிருக்கின்றவர்களைக் கை தூக்கி விட்டுப் பயன்பட வேண்டும்.
இப்போது உள்ள நிலைமை என்னவென்றால் ஓர் அரிசனச் சேரியிலே ஒரு வாலிபன் படித்து முன்னேறி உத்தியோகத்திற்குப் போய்விட்டால் உடனே தனது வீட்டை வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறான். அதற்குப் பதிலாக அவன் இந்த இடத்திலேயே குடியிருந்து; தன்னைப் போலவே மற்றவர்களையும் உயர்த்திவிட வேண்டும்.
ஒவ்வொருவனும் உயர்ந்த சாதிக்காரனாக ஆக ஆசை படக்கூடாது. எல்லாரும் மனிதர்களாக ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட வேண்டும்.
அமெரிக்காவிலே கூட நீக்ரோக்களில் சிலபேர் தங்கள் வெள்ளை நிறமாக மாறுவதற்கு ஊசி போட்டுக் கொள்கிறார்கள். சில நீக்ரோக்கள் சுருண்டு கிடக்கின்ற தங்கள் தலைமுடியை நீண்டதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். இதை எதிர்த்து அங்கே உள்ள பெரும் பாலான நீக்ரோக்கள் நாங்கள் நீக்ரோவாக இருப்பதில் தான் பெருமை அடைகிறோம் என்கிற கோஷத்தை இப்பொழுது கிளப்பி இருக்கிறார்கள். ஆகவே மற்றவர்களையும் உயரச் செய்வதிலேயேதான் முனைந்திருக்க வேண்டுமே அல்லாமல் தாங்கள் உயர்ந்தால் போதும் என்று எண்ணி இருக்கக் கூடாது.
சாதி ஒழிய சமத்துவம் நிலைநாட்டப்பட்ட இந்தியப் பூபாகத்தில் பல பெரியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் காந்தி அடிகளை மறக்க முடியாது.
அம்பேத்கரை மறக்க முடியாது. தமிழ்நாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் மறக்க முடியாது. பின்தங்கிய மக்களுக்காகப் பாடுபட்ட ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் அப்படி ஒரு சபதத்தைத் தமிழ்நாடு சட்ட சபையில் எடுத்துக் கொண்டேன். நான் சபதம் எடுத்துக் கொள்வது திரு. ராஜநாராயணனைப்போல வெகு வேகமாக இருக்காது. நான் எடுத்துக் கொள்கிற சபதம் மென்மையான முறையில் இருந்தாலும், உறுதியானதாக இருக்கும்.
நான் சட்டசபையில் எடுத்துக் கொண்ட சபதம், “என்னுடைய ஆட்சிக் காலத்தில் பின்தங்கிய மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் என்னுடைய உயிரைப் பணயமாக வைத்து வாதாடுவேன், போராடுவேன்” என்பதாகும்.
பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காகப் பாடுபட இங்கே நாம் மாநாடு கூடியிருக்கிறோம். இந்த மாநாட்டில் நீங்கள் நல்ல பல தீர்மானங்களை எல்லாம் நிறைவேற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். நெடுந் தொலைவிலிருந்து என்னை இந்த மாநாட்டிற்காக நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நாம் இடையிலே உள்ள தூரத்தால்தான் இடைவெளி அதிகமாக உள்ளவர்களாகக் காணப்படுகிறோம். ஆனால் இதயத்தால் நாம் அதிகத் தூரத்திலில்லாமல் ஒன்றாக இருக்கிறோம்.
என்னைப் புகைவண்டி நிலையத்தில் வரவேற்ற போதும், இங்கேயும் உங்களுடைய உணர்ச்சியை உணர முடிகிறது. உங்களோடு இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடைய தலைவர்கள் பலரும் இங்கே பேச இருக்கின்றார்கள். நான் சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துக்களை மாத்திரம் இந்த மாநாட்டில் கூறி இருக்கிறேன்.
இதிலே நான் அரசியல் நீதியிலே எடுத்துச் சொன்ன சமுதாயக் கருத்தை மத்திய அரசு நிலையிலே வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் மீண்டுமொருமுறை கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் அரிசனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒழுங்காக, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வேண்டும். இது ஒன்று.
அதுபோல மத்திய சர்க்காருடைய உத்தியோகங்களில் இனிமேல் பின்தங்கிய மக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இவ்வளவு இடம் என்று நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். அதையும் மத்திய அரசு, உடனடியாகச் செய்ய வேண்டும்.
இந்த வேண்டுகோளை இந்த மாநாட்டின் மூலம் விடுக்கின்றேன்.
1973-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் அலகாபாத்தில் நடந்த உத்தரப் பிரதேச அரிசன், பிற்பட்டோர் கூட்டத்தில் பிரதிநிதிகள் மாநாட்டில் ஆற்றிய சிறப்புரை.
