உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

அலகாபாத் மாநாடு

பகுதி 1 · 1 / 2

அலகாபாத் மாநாடு

உத்தரப் பிரதேசம் இந்தியாவில் பெருமை வாய்ந்த ஒரு மாநிலமாகும். பண்டித நேருவினுடைய குடும்பம் இந்த மாநிலத்திற்குப் பெருமை சேர்த்தது என்று கூறலாம். இந்தியாவின் அடித்தள மக்களுடைய குரலைப் பிரதிபலிக்க டாக்டர் லோகியாவும் இந்த மாநிலத்திலேதான் பிறந்தார். இந்தப் புகழ்பெற்ற ஊரான அலகாபாத்திற்கு வந்ததில் நான் பெருமை அடைகிறேன்.

யமுனையும், கங்கையும் கலக்குமிடமான திருவேணி சங்கமம் இங்கு இருக்கின்றது. இந்த மாநாட்டில் பின்தங்கியோரும், தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்திருக்கிறார்கள். அதாவது யமுனையும், கங்கையும் கலந்திருப்பது போல நீங்கள் கலந்திருக்கிறீர்கள்.

திருவேணியில் சரஸ்வதி நதியும் கலப்பதாகச் சொல்லுவார்கள். ஆனால் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல நானும் பிரித்துப் பார்க்க முடியாதபடி, உங்களோடு கலந்திருக்கிறேன்.

தமிழர்கள், மலையாளிகள், வங்காளிகள், பஞ்சாபிகள், மராட்டியர்கள், இந்தியர்கள் என்று மொழி வாரியாக ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. ஆனால் தாழ்த்தப்பட்டோர், பின்தங்கியோர் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதுமுள்ள மக்களுக்கு ஒரே தன்மைதான் வேண்டும். அதற்குப் பெயர்தான் சுயமரியாதைத் தன்மை.

பிரம்மாவினுடைய முகத்தில் பிறந்தவன் பிராமணன்; பிரம்மாவினுடைய தோளிலே பிறந்தவன் சத்திரியன்; பிரம்மாவினுடைய தொடையிலே பிறந்தவன்

வைசியன்; பிரம்மாவினுடைய காலிலே பிறந்தவன் சூத்திரன். அதாவது நாலுமெல்லாம் காலிலே பிறந்தவர்கள் என்பது சிலருடைய கற்பனை. அதையே வாதத்திற்கு ஒப்புக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். கடவுளுடைய உடம்பில் எல்லா அவயவங்களும் ஒன்றுதான். இதில் எந்த அவயவத்தில் யார் பிறந்தாலும் எல்லாரும் மனிதர்கள்தான்.

தமிழ்நாட்டில் ஒரு மரம் இருக்கிறது. அதற்குப் பெயர் அத்திமரம். அதுபோன்ற மரம் வேறு பெயரில் உங்கள் மாநிலத்தில்கூட இருக்கலாம். அந்த மரத்தில் இலைகளிலும் காய் காய்க்கும். கிளையிலும் காய் காய்க்கும். அடிமரத்திலும் காய் காய்க்கும். எல்லாக் காய்களையும் அத்திக்காய் என்றுதான் சொல்லுவோம். அதைவிட்டு, உச்சியில் காய்த்த காயை ஆப்பிள் காய் என்றும், அடிமரத்தில் காய்த்த காயை திராட்சை என்றும், வேரிலே காய்த்த காயை ஆவக்காய் என்றும் சொல்ல மாட்டோம்.

அதைப் போலவே கடவுளுடைய உடம்பில் எந்த இடத்திலே பிறந்தாலும் அவன் மனிதனே தவிர, சாதி வாரியாகப் பிரிக்கப்படக் கூடியவன் அல்ல.

இன்றைய தினம் சமுதாயத் துறையில் ஒரு பெரும் புரட்சியை நாம் எதிர்பார்க்கிறோம். இந்தப் புரட்சி உருவாக வேண்டுமென்று அரசியல் சட்டத்திலேயே நாம் முன்னுரை எழுதி வைத்திருக்கிறோம். சமுதாய நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி இவைகள் எல்லாம் வழங்கப்பட வேண்டுமென்று அரசியல் சட்டத்தின் முன்னுரை கூறுகிறது. சமத்துவம், தோழமை, சமவாய்ப்பு இவைகளெல்லாம் தேவை என்று அரசியல் சட்டத்தின் முன்னுரை எடுத்துச் சொல்கிறது.

ஆனால் அந்த முன்னுரையில் நாம் பொருளாதார நீதிக்கும் அரசியல் நீதிக்கும் முயன்றதுபோல் சமுதாய நீதிக்கு முயலவில்லை.

சமுதாய நீதிக்கான அரிச்சுவடிப் பாடத்தைக்கூட நாம் இன்னும் முடிக்கவில்லை. சமநீதி, சமவாய்ப்பு

இவைகள் வழங்கப்பட வேண்டுமென்று யோசிக்கிற நேரத்தில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓட்டப் பந்தயத்தில் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றவனைக் கொஞ்சம் முன்னால் நிறுத்தி ஓடச் செய்வதைப் போல சமுதாயத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டாக வேண்டும்.

அப்படிப்பட்ட சலுகைகளை வழங்கிச் சமநிலையை உருவாக்குவதற்கு எங்களுடைய தமிழ்நாட்டில் முயற்சி செய்து வருகிறோம். அந்தக் காரியங்களை நாங்கள் முழுவதும் செய்து முடிக்காவிட்டாலும் அதில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் வேலை வாய்ப்பு, கல்வி வசதி அளித்தல் இவைகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம். கல்விச் சலுகையைக் கலைக் கல்லூரிகளில் மாத்திரமல்லாமல், மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் நாங்கள் வழங்குகிறோம்.

இப்படி நாங்கள் பின்தங்கிய மக்களுக்கும் அரிசன மக்களுக்கும் வழங்குகின்ற சலுகையினுடைய விகிதாசாரம் 49 சதவிகிதமாகும்.

வேலை வாய்ப்புகள் மூலமும், கல்வி மூலமும் பொருளாதார நீதியில் சமுதாயத்தில் உயர்வைத்தான் கொண்டு வர முடியும். ஆனால் சமூக நீதி பெறுவதற்குச் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் உள்ள கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட வேண்டும்.

உதாரணம் வேண்டுமென்றால், தாழ்த்தப்பட்ட தோழன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக முடியும். ஆனால் கோவிலில் ஓர் அர்ச்சகராக ஆக முடியாது. அப்படி அர்ச்சகராக ஆக முடியாத நிலைமை எங்கள் மாநிலத்தில் இன்னமும் இருக்கிறது.

ஆகவே ஆண்டவனைப் பூசிக்கின்ற அர்ச்சனை தலைச் செய்வதில் தேர்ச்சி பெறுகின்ற தகுதி படைத்த யாராக இருந்தாலும், அவர்கள் எந்தச் சாதிக்காரராக இருந்தாலும் அர்ச்சகராக ஆகலாமென்று இப்பொழுது நாங்கள் சட்டத்தைப் போட்டிருக்கிறோம்.

அந்தச் சட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அர்ச்சகராக வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். சட்டம் மட்டும் போதாது. சட்டத்தின் பின்னால் சமுதாய மனமும் மாற வேண்டும். அதற்காகவும் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்குக் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் அளிப்பதோடு, அவர்களுடைய தன்னம்பிக்கையும் வளர்க்கப்பட வேண்டும். சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் அவர்கள் சம உரிமையோடு பங்கு பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் நந்தன் என்று ஓர் அரிசன பக்தன் இருந்தான். அவன் ஆண்டவனைத் தரிசிக்கக் கோவிலுக்குச் செல்ல நினைத்தான். அவன் தாழ்ந்த சாதி என்ற காரணத்தால் நெருப்பிலே குளித்துவிட்டு உள்ளே வரவேண்டுமென்று உத்தரவு போட்டார்கள். அவன் நெருப்பிலே குளித்தான். நெருப்பிலே குளித்த பின்பு வெளியே வந்தானா? வரவில்லையா? என்று எனக்குத் தெரியாது.

யாதவர்களுடைய கடவுளான கிருஷ்ணனைப் பற்றிக்கூட ஒரு கதை சொல்லுவார்கள். அவன் திறமை படைத்தவன். பெரிய ராஜதந்திரி என்றெல்லாம் புராணம் சொல்கின்றது. ஆனால் அவன் யாதவ வகுப்பைச் சேர்ந்தவன். ஆகவே சத்திரியர்கள்தான் நாட்டை ஆளலாம் என்று சொல்லி அவனுக்கு ஆளும் உரிமை இல்லை என்று கூறிவிட்டார்கள்.

அதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த கிருஷ்ணன் இங்கே ராஜ்யத்தை அமைக்க முடியாமல்,

குஜராத்திற்குச் சென்று அங்கே ‘துவாரகா’ என்று புதிய ராஜ்யத்தை அமைத்தான். ஆக, சாதி வித்தியாசம் கிருஷ்ணன் என்ற அவதாரத்தையும் விட்டுவிடவில்லை.

மராட்டிய வீரன் சிவாஜியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவன் எதிரிகளை முறியடித்தவன்; மாபெரும் நாட்டை உருவாக்கியவன். ஆனால் பட்டம் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று உயர்சாதிக்காரர்களால் அவன் தடுக்கப்பட்டான். அவன் ‘யாகம்’ செய்து சத்திரியனாக மாறினால்தான் அரசாளத் தகுதி உடையவன் என்று சொல்லப்பட்டது. ஆகவே சாதி வித்தியாசம் சரித்திரக் காலந்தொட்டு இருந்து வருகின்ற ஒரு சாபக்கேடு.

சாதியை ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்ட உதட்டளவு பேசக்கூடாது, செயலில் காட்ட வேண்டும். ‘நீ செய்து காட்டி இருக்கிறாயா?’ என்று நீங்கள் என்னைக் கேட்பீர்கள்.

என் தந்தை செய்த தவறிய காரியத்தை நான் தந்தையாக இருந்து செய்திருக்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு என்னுடைய மகனுக்கு ஓர் அரிசனப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தேன். அந்த வகையில் நான் அரிசனங்களுக்குச் சம்பந்தி.

முதற் பதிப்பு : மே 2000