ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா
பகுதி 2 · 2 / 2
இந்த வசனத்தை, தணிக்கை அதிகாரி வெட்டி விட்டார். ஏன் அதை வெட்டுகிறீர்கள் என்று கேட்டேன். அப்பொழுது தணிக்கை அதிகாரி சொன்னார். “கோபுரம் ஏறி நிற்கும் தலைவர்களே” என்று நீ இராமானுஜரை அல்லவா குறிப்பிடுகிறாய்” என்று சொன்னார். நான் அவ்வாறு நினைத்தே அதை எழுதவில்லை. நான் பொதுவாக கொள்கை முழக்கம் செய்வதற்காக உச்சியில் நிற்பதைத் தான் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன். ஆனால் தணிக்கை அதிகாரி கொள்கை முழக்கம் செய்வதற்காகக் கோபுரம் ஏறி நிற்கும் என்று நீ சொல்வது இராமானுஜரைக் கிண்டல் செய்வது என்று சொன்னார்.
அதற்குப் பிறகுதான் இராமானுஜரைப் பற்றி படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கேற்பட்டது. அந்த வகையில் தணிக்கை அதிகாரிக்கு நன்றி கூற வேண்டியவனாக இருக்கிறேன்.
இராமானுஜர் பல்லாண்டு காலம் வாழ்ந்தார் என்ற பெருமையோடு ஆர்.எம்.வீ. குறிப்பிட்டார். ஒருவர் வாழ்ந்து
எத்தனை ஆண்டுகாலம் என்பதல்ல; வாழ்ந்த காலத்திலே செய்து முடித்தது; செய்ய யத்தனித்தது; செய்துவிட்டுப் போனது இவைகள்தான் முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இராமானுஜர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய பெயரால் இன்று விருது வழங்கப்பட்டிருக்கிறது. என்னுடைய அனுமதியைப் பெறாமலே என்னுடைய பெயராலும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. என்னுடைய இனிய நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பெயராலும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. என்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பெயரால் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருதுகளைப் பெற்றவர்கள் - எழுத்தாளர் சாவி அவர்கள் - இங்கே உரையாற்றும்போதே எவ்வளவு பெரிய நகைச் சுவையாளர் அவர் என்பதை நீங்கள் நேரடியாகக் கண்டீர்கள். அவர் ஒரு எழுத்தாளர் என்பதை விட தேசத் தியாகிகளில் ஒருவர் அவர். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் போது சிறை வாசம் மேற்கொண்டவர். அலிப்பூர் சிறைச்சாலையில் அவர் பல பெருந்தலைவர்களோடு காராக்கிருக வாசத்தை அனுபவித்தவர். அவருடைய எழுத்துக்களில் தமிழ் மணம் கமழும்.
தேசிய மணமும் கமழும். அத்தகைய எழுத்தாளர் எனக்கு நண்பராக இருக்கிறார் என்பதில் நான் பெருமையடைகிறேன். அவருக்கு என் பெயரால் தரப்பட்ட விருதை வழங்கியதில் மேலும் ஒரு பேறு பெற்றவனாக நான் ஆகிறேன்.
நீதியரசர் இஸ்மாயில் அவர்களுக்கு இராமானுஜர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் வழங்குகின்ற பெருமை எனக்கு கிடைத்திருக்கின்றது. தமிழ்நாட்டில் காரைக்குடி சா. கணேசன் அவர்களுக்குப் பிறகு கம்ப
ராமாயணம் என்றால் நீதியரசர் இஸ்மாயில் அவர்களுடைய நினைவுதான் வருகின்ற அளவிற்கு கம்பராமாயணத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். அவ்வாறே தமிழ் இலக்கியத்தோடு, தமிழ் உணர்வோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் அவர். அவருக்கும் விருது வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.
குழந்தைசாமி அவர்கள் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகப் பணியாற்றியபோது மாத்திரமல்ல - அவரே ஒரு பல்கலைக் கழகம் - என்கிற அளவிற்கு தமிழ்க் களஞ்சியமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர். அவர்களை எல்லாம் நானும் இந்த அரசும் தேவையான வகைகளிலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதிலேயிருந்து - அவர்களுக்குப் பயன் என்பதற்காக அல்ல; நாட்டிற்கு, தமிழுக்கு, மொழிக்கு, மக்களுக்குப் பயன் தருவதற்காக அவர்களையெல்லாம் நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்.
அவருக்கு விருது வழங்கியதிலே நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அம்மையார் கவியரசி செளந்தரா கைலாசம் அவர்கள் பல கவியரங்கங்களிலே தன்னுடைய திறமையை நிலைநாட்டியவர்கள். முருகன்பால் மிகுந்த பக்தி கொண்டவர்கள். அவர்களுடைய கவிதைகளில் அநேகமாக எல்லாமே முருகனுடைய பெயரைச் சொல்லித்தான் முடிவுறும். அந்த அளவிற்கு முருகன் பக்தி கொண்டவர்கள். ஒருமுறை ஒரு கவியரங்கத்திற்கு தலைமை வகித்தேன். அதற்கு அம்மையார் அவர்கள் உடல் நலம் இல்லாத காரணத்தால் வர இயலவில்லை. தன்னுடைய மகளை தான் வரமுடியாத காரணத்தால் அந்தக் கவியரங்கத்திலே கலந்து கொள்ள அனுப்பி வைத்தார்கள்.
கவிதையை எழுதி மகளிடம் கொடுத்து
அனுப்பி வைத்தார்கள். நான் அந்த செல்வியை கவிதையைப் படிக்க அழைக்கும் போது “செல்வி! பாடம்மா! நீ கேட்ட தாலாட்டு!” - என்று சொல்லி அழைத்தேன். அது இன்னமும் என்னுடைய நினைவிலே பதிந்து போயிருக்கிறது. பகுத்தறிவுக் கொள்கையிலே எனக்குள்ள கருத்தும், அவருக்குள்ள கருத்தும் - அரசியல் துறையிலேகூட அவருக்குள்ள கருத்தும், எனக்குள்ள கருத்தும் வேறாக இருந்தாலும்கூட - ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற உறுப்பினர்களோடு - அந்தக் குடும்ப உறுப்பினர்களிலே ஒருவராக ஆகிவிடக்கூடிய அளவிற்கு கலந்து பழகக்கூடிய தனிவான உள்ளம் கொண்டவர்கள் அம்மையார் அவர்கள்.
அவர்களுக்கு இந்த நாளில் விருது வழங்குகின்ற பேறு பெற்றமைக்காக நான் மிகுந்த பெருமையடைகிறேன்.
இந்த விருது வழங்கும் விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு நிகழ்ச்சி - நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்களுடைய 72-ஆவது பிறந்தநாள் விழா. இந்த 72 என்றாலே எனக்கொரு அதிர்ச்சி. (கைத்தட்டல்) ஒரு காலத்தில் 72தான் என்னையும் ஆர்.எம்.வீ. அவர்களையும் பிரித்தது. (கைத்தட்டல்) 1972-ஆம் ஆண்டு என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் எனக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இந்தப் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டவர் - அழுத கண்ணீரோடு என்னை அணைத்துப் பிடித்தவாறு இந்த நிலைமையை எப்படியாவது தவிர்த்து விடுங்கள் என்றெல்லாம் எனக்கு அன்றைக்கு அறிவுரை வழங்கியவர்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்டம் மனப்பான்மை எனக்கு இருந்தது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அதைத் தடுத்தவர்கள் எல்லாம் இன்றைக்கு என்னிடமும் இல்லை; அவரிடமும் இல்லை; எம்.ஜி.ஆரை என்னிடமிருந்து பிரிக்க வேண்டு
மென்று யார் அன்றைக்கு கருதினார்களோ, அதற்காக திட்டங்களை வகுத்தார்களோ, அதை நிறைவேற்றிக் கொண்டார்களோ, நான் வேண்டாம், வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருக்கும் போதே செய்தியை பத்திரிகையாளர்களிடம் யார் வெளியிட்டார்களோ அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
ஆனால் அன்றைக்கு நானும் எம்.ஜி.ஆரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று கருதிய என்னுடைய அன்பிற்குரிய சகோதரர் ஆர்.எம்.வீ. அவர்கள் அன்றைக்கு இருந்த அதே நிலையிலேதான் இன்றைக்கும் இருக்கிறார். (கைத்தட்டல்) அவர் என்னிடமிருந்து ஒதுங்கியிருந்த நேரம், பிரிந்திருந்த நேரம்; பலபேர் என்னைக் கேட்டார்கள். “என்ன ஆர்.எம்.வீ. கொள்கையிலே நிரம்பப் பிடிப்புள்ளவர் ஆயிற்றே? உங்களைப் போலவே இளமைக் காலத்திலேயே இந்த இயக்கத்திற்கு வந்தவர் ஆயிற்றே?
நீங்கள் எப்படி ராமசுப்பையா என்கிற கழகத்தினுடைய முதுபெரும் கிழவரை அடிக்கடி நினைவு கூறுவீர்களோ அதைப் போல இவரையும் நினைவு கூறுபவராயிற்றே? அவர் எப்படி நின்று விட்டார் உங்களோடு வராமல்?” என்று கேட்டபோது நான் சொன்னேன். “இதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றேன். “நான் வீரப்பனைப் பாராட்டுகிறேன்” என்று சொன்னேன்.
நண்பர்கள் திகைத்துக் கேட்டபோது நான் அவர்களிடம் குறிப்பிட்டது, “எம்.ஜி.ஆர். அவர்கள் ஆர்.எம்.வீ. அவர்களை மிகவும் நேசிக்கிறார். தனிப்பட்ட முறையிலே ஆர்.எம்.வீ. அவர்களுடைய வாழ்க்கை உயர்வதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் காரணம் என்பதை நானும் அறிவேன்; நாடும் அறியும். (கைத்தட்டல்)
எம்.ஜி.ஆரை விட்டுவிட்டு அவர் என்னோடு வந்திருந்தால்தான் எனக்கு வீரப்பன் மீது அதிருப்தி வருமே தவிர - வராத காரணத்தால் அவர் மீது எனக்கிருந்த அன்பு பல மடங்கு அதிகமாகப் பெருகியிருக்கிறது” என்று அன்றைக்கே சொன்னவன் நான்.
ஏதோ இந்த அவையிலே கூட்டத்திற்காக சொல்கின்ற விஷயமல்ல. என்னோடு நெருங்கியுள்ள நண்பர்களிடத்திலே நான் சொல்லி - வீரப்பன் அவர்களுக்கும் இது அன்றைக்கே தெரியும். அவர் அன்று தொட்டு இன்று வரையிலே எம்.ஜி.ஆர். அவர்களிடத்திலே பல மனமாறுபாடுகள் அவருக்கும் வீரப்பன் அவர்களுக்கும் ஏற்பட்டாலுங்கூட, அவருடைய ஒரே இலட்சியம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். (கைத்தட்டல்) எம்.ஜி.ஆர். அவர்களுடைய வாழ்க்கை ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும் அதைப் பற்றி யார் வந்தாலும் அதற்குத் தடைக்கல்லாக தான் நிற்க வேண்டுமென்று விரும்பியவர்தான் ஆர்.எம்.வீ.
அவர்கள்.
அதிலே அவர்கள் கடைசி வரையிலே உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றார்கள். எம்.ஜி.ஆர். அவர்களுடைய காலத்திற்குப் பிறகு வேண்டுமானால் எம்.ஜி.ஆருடைய எண்ணங்களை, எம்.ஜி.ஆருடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்கு இன்றைக்கு ஆர்.எம்.வீ. அவர்கள் ஒரு பெரும் படையைத் திரட்டி அதற்காகப் பாடுபட வேண்டியிருக்கிறதென்றாலுங்கூட அன்றைக்கு அதில் முழு வெற்றி பெற்றிருக்கிறார். இன்றைக்கும் அதே உறுதியோடு இன்றைக்கு எம்.ஜி.ஆருடைய வாரிசு யார் என்றால் அவருடைய வீட்டிலே இருக்கின்ற மக்கள் அல்ல.
வேறு யாரும் அல்ல; எம்.ஜி.ஆர். அவர்களுடைய உண்மையான வாரிசாக - அழுத்தம் திருத்தமான
வாரிசாக - திட்டவட்டமான வாரிசாக இன்றைக்குத் திகழக்கூடிய ஒரே நண்பர் ஆர்.எம்.வீ. அவர்கள்தான் (பலத்த கைதட்டல்) என்பதை நாடு மிக நன்றாக அறியும்.
அதனால்தான் இன்றைக்கு அறிவியக்கத்தோடு ஆன்மீகத்தை கலக்கிறார் என்று நான் சொல்வதை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்து அதை இங்கே திரும்பச் சொன்னார் - கலைஞர் எப்பொழுது பேசினாலும் - வீரப்பனுக்கு மிகப் பிடித்தமான ஆன்மீகம் என்று சொல்வார் - என்று இங்கே குறிப்பிட்டார்கள். ஆன்மீகமாக இருந்தாலும் அல்லது பகுத்தறிவாக இருந்தாலும் அதில் இரண்டும் தமிழ் உணர்வு இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தமிழில் அர்ச்சனை வேண்டுமென்று சொல்கிறோம். அதைத் தந்தை பெரியாரும் ஆதரித்தார். தமிழிலே அர்ச்சனை செய்யத்தான் வேண்டுமென்பதை பெரியாரும் ஆதரித்தார். அப்போது சிலபேர் பெரியாருக்குத்தான் கோயிலே பிடிக்காதே, பிறகு ஏன் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்கிறார் என்று கேட்டார்கள். என்னையும் கேட்டார்கள். “நீ பெரியாரின் மாணவன் ஆயிற்றே பிறகு ஏன் தமிழில் கோவிலில் அர்ச்சனை செய்கிறாய்?”
என்று கேட்டார்கள். கோவிலைப் பற்றியது கொள்கைப் பிரச்சினை. தமிழ் அர்ச்சனை என்பது மொழிப் பிரச்சினை. உரிமைப் பிரச்சினை. இது உரிமையின் பாற்பட்டது; அது கொள்கையின் பாற்பட்டது. கோவிலுக்குச் செல்வதா வேண்டாமா என்பது கொள்கையின் பாற்பட்டது. அந்தக் கோவில் இருக்கின்ற வரை, அந்தக் கோவிலுக்குள் பயன்படுத்த வேண்டியது தமிழா அல்லவா என்று கேட்டால் தமிழ்தான் என்று சொல்வது என்னுடைய உரிமைப் பிரச்சினை.
இதைப் பெரியாரும் சொன்னார். பெரியார் வழி வந்த நாங்களும் சொல்கிறோம். எனவேதான் ஆன்மீக வாயிலாகவும் தமிழ் வளருமேயானால், தமிழ் உணர்வு
வெளிப்படுமேயானால், தமிழ் உணர்வு மேலும் மேலும் கூர்மைப்படுமேயானால், அந்த ஆன்மீகத்தையும் நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அத்தகைய ஆன்மீகம் வாழ வேண்டும், வளர வேண்டுமென்று விரும்புகிறவர்கள் நாங்கள்.
எப்படியோ தமிழ் உணர்ச்சி இன்றைக்கு மங்கிப் போய்க் கொண்டிருக்கின்ற காலக்கட்டம் - நாமெல்லாம் ஒரே இனம், ஒரு சாதி, தமிழ்ச்சாதி என்பது மறைந்து பல சாதிகளாகப் பிரிந்திருக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் நமக்கு இராமானுஜருடைய ஆன்மீகமும் தேவைப்படுகிறது; அறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவு இயக்கமும் தேவைப்படுகிறது. தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கமும் தேவைப்படுகிறது. உத்தமர் காந்தியடிகளுடைய அகிம்சா தத்துவமும் தேவைப்படுகிறது.
புத்தருடைய சமத்துவக் கொள்கையும் தேவைப்படுகிறது.
இப்படி ஒரு இனம் - ஒரு சமுதாயம் உய்விக்கப்பட வேண்டுமேயானால், ஒரு சமுதாயத்தை வாழ வைக்க வேண்டுமேயானால், ஒரு சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டுமேயானால் எங்கெங்கிருந்து என்ன என்ன கருவிகள் கிடைக்கிறதோ அந்தக் கருவிகளையெல்லாம் பெற்றுத்தான் தீரவேண்டும். அந்தக் கருவிகளை ஒழுங்காகப் பயன்படுத்தினால், செம்மையாகப் பயன்படுத்தினால் நம்முடைய எண்ணங்கள் நிறைவேறும்.
அந்த ஒரு எண்ணத்தின் அடிப்படையிலே ஆர்.எம்.வீ அவர்கள் இன்றைக்கு இந்த ஆழ்வார் மையத்திலே தன்னுடைய முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். அந்த முயற்சிகளுக்கு அவருக்கு இன்றைக்கு வெற்றிகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நாமும் அவரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
72 ஆண்டு - 72ஐ இன்றைக்கு 74 வாழ்த்துகிறது. (கைத்தட்டல்) நம்முடைய மூப்பனார் அவர்கள் தனக்கு வாழ்த்துவதற்கு வயதில்லை என்று சொல்லி - தான் இளைஞர் என்பதை இங்கே நிரூபித்துக் காட்டினார். வாழ்க என்று சொல்ல வயதானவர்களுக்குத்தான் உரிமை என்றில்லை. சின்னக் குழந்தைகள்கூட பெரியாரைப் பார்த்து - பெரியார் வாழ்க என்று சொல்லலாம்; காந்தி அடிகள் வாழ்க என்று சொல்லலாம்; அண்ணா வாழ்க என்று சொல்லலாம். அதைப்போல வயது குறைவாக இருந்தாலுங்கூட அந்த உள்ளத்திலிருந்து வருகின்ற உணர்வுகள்தான் முக்கியம்.
இங்கே அமர்ந்திருக்கின்ற அத்தனை பேருடைய உள்ளமும் மேடையிலே இருக்கின்ற எங்களுடைய உள்ளமும் ஒன்றாகி ஆர்.எம்.வீ. அவர்களை 72 ஆண்டுகள் அல்ல; இராமானுஜர் வாழ்ந்ததுபோல 120 ஆண்டுகளுக்கு மேலும் நீங்கள் வாழ வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.
- முரசொலி 10-9-97
