ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா
பகுதி 1 · 1 / 2
ஆழ்வார்கள் ஆய்வு
மைய விழா
ஆழ்வார்கள் ஆய்வு மையத்திற்கு நான் வந்ததைப் பற்றி விமர்சிப்பதற்கு சில பேர் இருக்கிறார்கள் என்று விழா நாயகர் ஆர்.எம்.வீ. அவர்கள் இங்கே எடுத்துக் கூறினார்கள். இது முதல் தடவையாக இருந்தால் விமர்சிப்பதில் அர்த்தம் உண்டு. நான் ஆழ்வார் மையத்திற்கு வந்திருப்பது இது இரண்டாவது முறை. எனவே முதல் தடவையிலேயே அத்தகைய விமர்சனங்களுக்கெல்லாம் விடையளித்துவிட்ட காரணத்தினால், இரண்டாவது முறை வந்திருக்கும் போது விளக்கமோ விடையோ அளிக்கத் தேவையில்லை என்று நான் கருதுகிறேன்.
நான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் - அந்த நிகழ்ச்சியைப் பொறுத்து - இதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டுமென்று என் மனசாட்சியின்படி எண்ணுகிற நேரத்தில் - சில நிகழ்ச்சிகளுக்கு பெரியாரிடம் அனுமதி பெறுவேன்; சில நிகழ்ச்சிகளுக்கு அறிஞர் அண்ணாவிடம் அனுமதி பெறுவேன். சில நிகழ்ச்சிகளுக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அனுமதி பெறுவேன். அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடம் அனுமதி பெற்று வந்திருக்கிறேன்.
எப்படியென்றால் புரட்சிக் கவிஞர் அவர்கள் இராமானுஜரைப் பற்றிப் பாடிய வரிகள் அந்த அனுமதியை எனக்கு வழங்கியிருக்கின்றன.
“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய் இராமானுசனை ஈன்ற தன்றோ?”
என்று புரட்சிக் கவிஞர் பாடியிருக்கிறார்.
பக்தி, முத்தி இவைகள் எல்லாம் ஒருசிலருடைய சொத்தாகக் கருதப்பட்ட காலக்கட்டத்தில் அதை பொதுவுடைமையாக ஆக்கிய பெருமை - பக்தியைக் கூட பொதுவுடைமையாக ஆக்கிக் கொடுத்த பெருமை தமிழகத்திலே ஒருவருக்கு உண்டென்றால், அது இராமானுஜருக்குத்தான் உண்டு என்பதை தன்னுடைய கவிதை வாயிலாக எடுத்துக் காட்டியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
எனவே நான் இராமானுஜரைப் பாராட்டுகின்ற விழாவிற்கு வந்ததைப் பற்றி சிலபேர் ஆச்சரியப்பட்டால் அவர்களுக்கு நான் சொல்கின்ற பதில் - பழைய பதில் ஒன்றுண்டு. நம்முடைய நீதியரசரும், குழந்தைசாமி அவர்களும், செளந்தரா அம்மையார் அவர்களும், செல்லப்பன் போன்றவர்களும் அடிக்கடி கலந்து கொள்கின்ற காரைக்குடி கம்பன் விழாவில் நானும் இரண்டொரு முறை அழைக்கப்பட்டிருக்கிறேன். சா.க. என்று அரசியல்வாதிகளாலும், இலக்கியவாதிகளாலும் அன்போடு அழைக்கப்பட்ட காரைக்குடி கம்பனடிப் பொடி எனப்படும் சா.
கணேசன் அவர்கள் என்னை அந்த விழாவிற்கு அழைத்திருக்கிறார்.
நான் அப்படி அழைக்கப்பட்ட போது முதல் நிகழ்ச்சியில் சொன்னேன். “கம்பன் விழாவிற்கு கருணாநிதி வருவது ஆச்சரியமாக இருக்கிறதே, என்று சிலபேர் இங்கே சுவரொட்டி போட்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கின்ற பதில் இதுதான். கம்பன் விழாவிற்கு கருணாநிதி வருவது ஆச்சரியமல்ல.
கருணாநிதியை கம்பன் விழாவிற்கு அழைத்திருப்பதுதான் ஆச்சரியம்” - (கைத்தட்டல்) என்று நான் பதில் சொன்னேன்.
கம்பனுடைய இலக்கியத்தைப் பற்றி தமிழகத்தில் ஒரு சர்ச்சை எழுந்ததுண்டு. அந்தச் சர்ச்சையின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களும், ஆர்.பி. சேதுப்பிள்ளை அவர்களும் சொற்போர் நடத்தியதும் உண்டு. அந்தச் சர்ச்சையின் அடிப்படையிலே அண்ணா அவர்களும் பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் சொற்போர் நடத்தியதுண்டு. அந்தச் சொற்போர், தமிழகத்திலே பெருமளவிற்குப் பேசப்பட்டதுண்டு. தந்தை பெரியார் அவர்கள் கம்பராமாயணத்திற்கு எதிராக குரல் கொடுத்த அந்தக் காலக் கட்டத்தில் அண்ணா அவர்கள் அத்தகைய சொற்போர் மேடைகளிலே சேதுப்பிள்ளை அவர்களையும் சோமசுந்தர பாரதியார் அவர்களையும் எதிர்த்து வாதாடினார்.
அப்படி வாதாடியபோது கூட அண்ணா அவர்கள் தன்னுடைய முடிவுரையாக அந்த வாத அரங்குகளில் எதை எடுத்து வைத்தாரென்றால், “நான் கம்பனுடைய தமிழைச் சுவைக்கிறேன்; கம்பனுடைய தமிழைப் பாராட்டுகிறேன்; கம்பனுடைய கதையிலே நான் குற்றம் கண்டாலுங்கூட, கம்பனுடைய கதையைச் சுவைப்பவன் அல்ல என்றாலுங்கூட, அவருடைய கவிதையை, தமிழை, தமிழ் அழகை, தமிழ் எழிலை, அந்த இலக்கியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றுதான் அண்ணா அவர்கள் கம்பனைப் பற்றி தன்னுடைய கருத்தை அன்றைக்கு வெளியிட்டிருக்கின்றார்கள்.
ஆனால் இராமானுஜரைப் பற்றிச் சொல்கிற நேரத்தில் - அவருடைய இலக்கியத்தை, அவருடைய கருத்தை என்ற போது இலக்கியத்தையும் ஏற்றுக் கொள்கிறவனாக - அவருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்கிறவனாக நான் இருக்கின்ற காரணத்தால் - இராமானுஜரைப் பாராட்டுகின்ற இந்த விழாவில் நான் கலந்து கொள்வது என்னுடைய கடமை.
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிய பாடல்கள் - இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு பெரிய நூலாக - அதற்கு பொருளுரை எல்லாம் எழுதி நம்முடைய தம்பி ஜெகத்ரட்சகன் வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகம் வருகிற வரையிலே நான் கூட ஜெகத்ரட்சகன் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பீடு சற்று வித்தியாசமானதுதான். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு - அவர் கடந்த ஆண்டு இந்த அரங்கத்திலே ஆற்றிய உரையைக் கேட்ட பிறகு - ஆழ்வார்களுடைய பாடல்கள் ஜெகத்ரட்சகனை எந்த அளவிற்கு - ஒரு நல்ல தமிழறிஞராக மாற்றியிருக்கிறது என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்து அப்போதே பாராட்டியவன் நான்.
எனவே அந்த ஆழ்வார்களுடைய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திராவிட வேதம் என்று யாரால் சொல்லப்பட்டதென்றால், இராமானுஜரால் சொல்லப்பட்டது. அந்தத் திராவிட வேதம் இன்றைக்கு வைணவக் கோவில்களில் எல்லாம் பாடப்படுகிறது, படிக்கப்படுகிறது என்றால், அதற்கு மூலக் காரணமாகத் திகழ்பவர் இராமானுஜர்தான்.
அவர் ஆன்மீகவாதிதான். ஆன்மீகவாதி என்றாலுங்கூட, அந்த ஆன்மீகத்தோடு கலந்து அவர் அளித்த கருத்து சாதாரணமானதல்ல. இங்கே நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல, உத்தமர் காந்தியடிகள் ஆலயப் பிரவேசம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து - அதை நிறைவேற்றுவதற்கு முன்பு - 850 ஆண்டுகளுக்கு முன்பு, அதை கர்நாடக மாநிலத்திலே நடத்திக் காட்டியவர் இராமானுஜர் அவர்கள் ஆவார்கள்.
கர்நாடக மாநிலத்தில் திருநாராயணபுரம் என்று அன்றைக்கு அழைக்கப்பட்டு - இன்றைக்கு மேலக் கோட்டை என்று அழைக்கப்படுகின்ற அந்த ஊர்க் கோவில்களில் ஆதிதிராவிடர்கள் - தாழ்ந்த சாதிக்காரர்கள் நுழையக் கூடாது என்ற தடையை அகற்றி - ஆலயப் பிரவேசத்தை காந்தியடிகளுக்கு 850
ஆண்டுகளுக்கு முன்பு நடத்திக்காட்டிய பெருமை ஒரு வருக்கு உண்டு என்றால் அது இராமானுஜர் ஒருவருக்குத்தான் உண்டு. அத்தகைய சீரிய, செழுமிய, புரட்சிகரமான கருத்துக்களுக்குச் சொந்தக்காரராக அவர் விளங்கினார்.
அவர் திருவரங்கத்திலே வாழ்ந்த காலக் கட்டத்தில் உறங்காவல்லிதாசர் என்று ஒருவர் அவருடைய பிரதம மாணவராக இருக்கிறார். அவருடைய கருத்துக்களைப் பிரச்சாரம் செய்ய 700 பேர் இருந்தார்கள். அந்த 700 பேருமே வேடர் குலத்தைச் சேர்ந்தவர்கள் - தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள், அவர்களை வைத்துத்தான் அவர் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும்; பக்தி ஒரு குலத்தவருக்கு மாத்திரம் உரியதல்ல; எல்லோருக்கும் உரிய ஒன்று என்கிற அந்தக் கருத்தை, அவர்களை வைத்துத்தான் பிரச்சாரம் செய்தார்.
அவர்களிலே ஒருவர்தான் உறங்காவல்லிதாசர் என்பவர்.
ஒருநாள் ஆற்றிலே குளித்துவிட்டு இராமானுஜர் வீதி வழியாக வரும்போது உறங்காவல்லிதாசருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த அந்தணர்கள் வெகுண்டெழுந்தார்கள். அவர்களைப் பார்த்து இராமானுஜர் சொன்னார் - ஒருவனுக்கு கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, சாதிச் செருக்கு இந்த மூன்றும் கூடாது; உங்களிடத்திலே கல்விச் செருக்கு இல்லை; உங்களிடத்திலே செல்வச் செருக்கு இல்லை; ஆனால் சாதிச் செருக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டாமல், அவர் மிகுந்த சாதுர்யமாகச் சொன்னார் - “நான் அழைத்து வருகிறேனே, இந்த உறங்காவல்லிதாசன் - வேடன்தான்; சாதாரண குலத்தில் பிறந்தவன்தான்; அவனிடத்திலே கல்விச் செருக்கும் இல்லை; செல்வம் இல்லை, ஆகவே அந்த செல்வச் செருக்கும் இல்லை; அவனிடம் சாதிச் செருக்கும் இல்லை; காரணம், அவன் உயர்ந்த சாதிக்காரன் அல்ல; எனவே சாதிச் செருக்கும் இல்லை” என்று சொன்னார்.
சொன்னவுடனே அந்தணர்
களுக்கெல்லாம் அது புரிந்தது. தங்களை திருத்திக் கொண்டார்கள் என்பது இராமானுஜருடைய வாழ்க்கை வரலாற்றிலே ஒரு பகுதி.
இங்கே நீதியரசர் பேசும்போது திருக்கோட்டியூர் இராமானுஜர், தான் குருவென்று ஏற்றுக்கொண்ட, திருக்கோட்டியூர் நம்பியிடத்தில் பாடம் கற்க எவ்வளவு சிரமங்களை ஏற்றுக் கொண்டார் என்று குறிப்பிட்டார்கள். திருவரங்கத்திலிருந்து ஒரு முறை அல்ல; இருமுறை அல்ல; 18 முறை திருக்கோட்டியூருக்குச் சென்றிருக்கிறார் திருக்கோட்டியூர் நம்பியைச் சந்திக்க! ஒவ்வொரு முறையும் சந்திக்க நம்பி மறுத்துவிட்டார். 18-வது முறைதான் திருக்கோட்டியூர் நம்பி அவரைச் சந்தித்து - அந்த மந்திரத்தை அவருடைய காதுகளில் ஓதி - “இதை உனக்கு ஓதியிருக்கிறேன்; நீ மோட்சத்திற்குச் செல்வாய்; வீடு பேறு அடைவாய்; இதை நீ யாருக்காவது சொன்னால் நரகத்துக்குத்தான் போவாய்; உனக்கு மோட்சம் கிடைக்காது” - என்று அவரை மிரட்டி வைத்தார்.
அப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டு வெளியே வந்த - 18 முறை பல கஷ்டங்களைச் சந்தித்து - கடைசியாகப் பெற்ற அந்த மந்திரத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு இராமானுஜர் தான் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் என்று - எல்லோருக்கும் அந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டுமென்று - திருக்கோட்டியூர் கோபுரத்திலே ஏறி நின்று அந்த மந்திரத்தை திருக்கோட்டியூரிலே உள்ள எல்லா மக்களுக்கும் சொன்னதாகவும் - அதைப் பார்த்து குருநாதர் கோபித்துக் கொண்டதாகவும் - என்னிடத்தில் சத்தியம் செய்து கொடுத்து விட்டு அதை மீறிவிட்டாயே என்று சினம் அடைந்ததாகவும் - உடனே இராமானுஜர் குருநாதரைப் பார்த்து - “நீங்கள்தான் சொன்னீர்கள்; இதைக் கேட்டவருக்கு மோட்சம் கிடைக்கும்; அந்த ரகசியத்தை நான் வெளியிட்டால் எனக்கு நரகம் கிடைக்கும் என்று சொன்னீர்கள்; நான் பல மக்களுடைய மோட்சத்தைத் தான் விரும்புகிறேன்; அதற்காக நான் நரகத்திற்குச்
சென்றாலும் பரவாயில்லை; என்னைத் தியாகம் செய்து கொள்கிறேன்” - என்று குறிப்பிட்டார் என்பதும் இராமானுஜருடைய வரலாறாகும்.
எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் எழுதிய “திரும்பிப்பார்” என்ற ஒரு திரைப்படத்தில் - ஒரு உரையாடல், திருந்தவே முடியாதவனாக இருந்த ஒரு தீயவன் கடைசியாக திருந்தி தன்னைப் பற்றி - தன்னுடைய குறைகளைப் பற்றி தானே உணர்ந்து அதை வெளிப்படுத்தும் போது - குமுறிக் கொண்டு சொல்கிறான், “திரும்பிப்பார்; திரும்பிப்பார்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரும்போது, “கொள்கை முழக்கம் செய்வதற்காக கோபுரம் ஏறி நிற்கும் தலைவர்களே, அந்தக் கொள்கையிலிருந்து எத்தனை முறை வழுக்கி விழுந்திருக்கிறீர்கள்; திரும்பிப் பாருங்கள்” என்று சொல்வான்.
நடிகர் திலகம் சிவாஜி அந்தப் பாத்திரத்தை ஏற்றிருப்பார்.
