உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

ஆதித்தனார் பிறந்தநாள் விழா

பகுதி 2 · 2 / 2

யவர்கள் எல்லாம் எடுத்துக் காட்டினார்களே, அவர் பத்திரிகையிலே செய்தி எப்படி போட வேண்டும், எது செய்தி? என்பதைப் பற்றி ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார், எது செய்தி தெரியுமா? ஒரு நாய் மனிதனைக் கடித்துவிட்டது - என்பது செய்தியல்ல. பிறகு எதுதான் செய்தியென்றால் - ஒரு மனிதன் நாயைக் கடித்து விட்டான் - இதுதான் செய்தி என்று தலைகீழ்ப் புரட்சியை பத்திரிகைத் துறையிலே செய்தவர்.

தினத்தந்தி என்பது அவர் இறுதியாகக் கண்ட வெற்றி என்றாலுங்கூட - முதலிலே அவர் பெற்ற தோல்வி ‘தமிழன்’ என்ற பத்திரிகையிலே தொடங்கியது. தமிழன் அவ்வளவு உணர்ச்சியுள்ளதாக இருந்த காரணத்தால் அந்தப் பத்திரிகை அப்போது தோல்வியைத் தழுவியது. அந்தப் பத்திரிகையைக் கூட கையால் செய்யப்பட்ட காகிதங்களைக் கொண்டு நடத்திய பெருமை ஆதித்தனார் அவர்களுக்கு உண்டு.

பத்திரிகைத் துறை மூலம் பெரும் புரட்சியை நடத்தி, இன்றைக்கு அவருடைய மக்கள் - ராமச்சந்திர ஆதித்தன் ஆகட்டும், சிவந்தி ஆதித்தன் ஆகட்டும், அவர்களுடைய பிள்ளைகளாகட்டும் - ஒரு பெரிய குடும்பம் - பத்திரிகை குடும்பம் - ஆதித்தனார் குடும்பம் - தமிழுக்கு, தமிழர்களுக்காக கொண்டாற்றிக் கொண்டிருக்கிற பாரம்பரியமிக்க குடும்பமாக இன்றைக்கு இருக்கிறதென்றால் அது தினத்தந்தி ஆனாலும், மாலைமுரசானாலும், மாலை மலரானாலும், கதிரவன் ஆனாலும், தினகரன் ஆனாலும் இவைகள் எல்லாம் ஆதித்தனாருடைய குடும்பத்திலிருந்து தமிழர்களை வாழவைக்க, தமிழ் உணர்வை உருவாக்க வந்த படைக்கலன்களாகும்.

அந்த ஏடுகள் நடத்துகின்ற குடும்பத்தின் சார்பில், தமிழ்க் குடும்பத்தின் சார்பில், தமிழர்கள் மீது பற்று கொண்டுள்ள குடும்பத்தின் சார்பில் முத்திரை விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதிலே வாழ்த்தியவர்கள் யார் யார் என்று பார்த்தால் - நம்முடைய நீதியரசர் டாக்டர் எம்.எம். இஸ்மாயில் அவர்கள் வாழ்த்தினார்கள். துலாக்கோல் கொண்டு அளந்து - நீதியை எப்படி அளந்து தீர்ப்பு வழங்குவார்களோ-அதைப்போல-அவர் கடைசியாக-“நீ முத்திரிஞர் தான்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

அது நான் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்ப்போ அல்லவோ? அப்பீல் செய்யக்கூடிய தீர்ப்போ என்னவோ எனக்குத் தெரியாது. அவர் அத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

நான் தமிழ்ப் புலமை மிக்கவன் அல்ல. தமிழில் இலக்கிய இலக்கணங்களை முற்றாக நான் கற்றவன் அல்ல. அதனால்தான் தம்பி வைரமுத்து இங்கே எடுத்துக் காட்டியதைப் போல - திருச்சி வானொலியிலே ஒரு கவியரங்கத் தலைமை ஏற்க அழைத்தபோது, நான் அந்தத் தலைமை உரையிலே குறிப்பிட்டேன். விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றிய கவியரங்கம் அது. கட்டபொம்மன், ஊமைத்துரை, இப்படிப்பட்ட வீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கதையையெல்லாம் உள்ளடக்கிய கவியரங்கம் அது.

அதில் தலைமைக் கவிதை பாடும்போது நான் சொன்னேன். எனக்கு இலக்கிய, இலக்கண வளம் கிடையாது. இருந்தாலும் கவியரங்கத் தலைமை வகிக்கிறேன் என்று குறிப்பிட்டுவிட்டு - “தளை அறுத்தோர் கதை பாடுவதால், தளை தட்டும் என் பாட்டும்” என்று சொன்னேன்.

அதுகூட சில பத்திரிகைகளில் தளை, தளை என்றே வந்து கொண்டிருக்கின்றது. அது ஒரு சங்கடம் எனக்கு!

ஆனால் அன்று நான் பாடினேன். “தளை அறுத்தோர் கதை பாடுவதால், தளை தட்டும் என் பாட்டும்”, “யாப்பின்றிப் போனாலும் போகட்டும், இந்நாடு, மொழி காப்பின்றிப் போதல் கூடாது” என்று நான் திருச்சி வானொலி கவியரங்கில் முதன் முதலாக

தலைமையேற்றுப் பாடிய பாடலிலேயே எனக்குத் தளை, சீர், யாப்பு, தொடை இவைகள் எல்லாம் இலக்கண இலக்கிய வரம்புக்கு உட்பட்டுக் கற்றுத் தெரியாத காரணத்தால்; வெறும் உணர்ச்சிகளையே கவிதைகளாக்கிப் பாடுகிறேன் என்ற உண்மையை நான் அன்றைக்கு ஒத்துக் கொண்டேன். இருந்தாலுங்கூட நான் புலமை மிக்கவன்தான் என்று நம்முடைய டாக்டர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவரே தமிழின் அடிப்படையிலே எனக்கு அந்தச் சான்றினை வழங்கி இருக்கிறார்.

நான் பொருத்தமுடையவனோ இல்லையோ, அவர் வழங்கிய காரணத்தால் வருத்தமுடன் ஏற்றுக் கொள்கிறேன். (கைத்தட்டல்)

டாக்டர் வ.செ. குழந்தைசாமி அவர்கள் - அவர் சென்னையிலும் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தார்; பிறகு இவருடைய திறமையைக் கண்டு, அவருடைய ஆற்றல் கண்டு புதுடெல்லியிலே இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழகத்திற்கும் துணை வேந்தராக அன்றைக்கு நியமிக்கப்பட்டார். பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களில் பல சிறப்புக்களும், பெரும் ஆற்றலும் வாய்ந்தவர் குழந்தைசாமி அவர்கள். அவர் இங்கே ஆற்றிய உரை கண்டே நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

நானோ பல்கலைக் கழகம் என்ன, கல்லூரிக்கே செல்லாதவன். கல்லூரிக்கே செல்லாத என்னை அவர் உரையின் மூலம் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியனாகவே பட்டம் பிடித்து இங்கே காட்டியிருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். அவையடக்கத்திற்காக அவர் என்னை, பல்கலைக் கழகப் பேராசிரியனாக ஆக்கினாலும் கூட, நான் நன்றியோடு அதை ஏற்று மகிழ்கிறேன்.

என் தம்பி வைரமுத்து, என்னை தமிழ் ஆசான், தமிழ் ஆசான் என்றழைத்தே எனக்குப் பெருமை தேடித்

தருபவர். எப்படியென்றால் அவருடைய கவிதை யாற்றலை, அவருடைய புலமையை, அவருடைய திறனை, அவருடைய கற்பனை வளத்தை, அவருடைய புதிய சிந்தனைகளை இன்றைக்கு தமிழகம் போற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது - அவர் என்னை ஆசான் என்று சொல்வதால் எனக்கு எவ்வளவு பெருமை! எனவே அவர் எனக்கு மாணவனோ இல்லையோ, அவர் என்னை ஆசான் என்றழைப்பதின் மூலம், என்னை மேலும் ஒருபடி தமிழ்ச் சமுதாய மக்களின் மத்தியிலே, தமிழ் கற்றவர்கள் மத்தியிலே உயர்த்தி வைத்திருக்கின்ற காரணத்திற்காக மானசிகமாக தன்னை என்னுடைய மாணவனாக ஆக்கிக் கொண்ட தம்பி வைரமுத்துக்கு நான் காலமெல்லாம் கடமைப்பட்டவன்.

(கைத்தட்டல்)

இந்த விருது எனக்குக் கிடைத்திருப்பதற்கான காரணங்களைச் சொன்னார்கள். மொழியிலே நான் கொண்டுள்ள பற்று, அரசியலில் நான் ஏற்றுள்ள நிலை, அண்ணாவின் தம்பியாக இருந்து, இருப்பது - பெரியாரின் தொண்டனாக நான் வாழ்ந்து, இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பது - பகுத்தறிவுக் கொள்கையில் எந்த நேரத்திலும் யாரோடும் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக நிற்பது - சமூக நீதி, மாநில சுயாட்சி, இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் ஆக வேண்டுமென்ற அந்தக் குறிக்கோள் - இவைகளில் நெஞ்சுறுதியோடு, நானும் இருந்து, என் தலைமையிலே இருக்கின்ற இயக்கத்தையும் வழிநடத்திச் செல்வது என்பதை - இங்கே பாராட்டி, வாழ்த்திய அனைவரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

நம்முடைய மேதகு ஆளுநர் அவர்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு; “ஒரு வாய்ப்பு” என்று சொல்கிறேன் (கைத்தட்டல்) வேறு வார்த்தைகள் தேவையில்லை என்பதால்! பெண்களுடைய முன்னேற்றம், பெண்களுக்கான உரிமை, பெண்கள் பல

பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென்று உச்சக்கட்டக் குரல் இந்தியத் திருநாட்டிலே எழுந்திருக்கும்போது அதை தமிழகத்திலே நாம் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகத்தினுடைய ஆளுநராக ஒரு பெண்மணியே வாய்த்திருப்பதும், அதுவும் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவராக வாய்த்திருப்பதும், அதுவும் நீதியரசராக பொறுப்பேற்றிருந்தவர் வாய்த்திருப்பதும் அவர்கள் வாயால் என்னை வாழ்த்தியிருப்பதும் என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும்.

இத்தகைய வாய்ப்புகளையெல்லாம் உருவாக்கித் தந்த நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களை என்ன பாராட்டினாலும் தகும். நான் 1924-ஆம் ஆண்டு பிறந்தேன். பிறந்தபோதே என் வீட்டில் கள்வர்கள் புகுந்து, என் தாயின் தாலிச் சரடு உட்பட அத்தனையையும் திருடிச் சென்றார்கள். அப்பொழுதும் நான் அழாமல் இருந்த காரணத்தால் தப்பித்தேன். அழுதிருந்தால் என் குரல்வளையில் கட்டை விரலை வைத்து நசுக்கியிருப்பார்கள். நல்ல வேளையோ அல்லது என் போதாத காலமோ அழாமல் இருந்து விட்டேன்.

இன்றைக்கு சுகம், துக்கம் இவைகளையெல்லாம் அனுபவிப்பது மாத்திரமல்ல. அவைகளுக்கிடையே மொழிக்கும் நாட்டிற்கும் தொண்டாற்றுகிறேன் என்கிற அந்த இன்பத்தைப் பெறுகிறேன் அல்லவா? அதற்காக அந்தக் கள்வர்களின் கட்டை விரலை வாழ்த்துகிறேன், என் கழுத்திலே அதை வைத்து அழுத்தாமல் இருந்ததற்காக!

என்னோடு இணைந்து இன்றைக்கு என்னுடைய சகோதரர் நாவலாசிரியர் - எழுத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பொறித்துக் கொண்டிருப்பவர் - பிரபஞ்சன் அவர்களும் விருது பெற்றிருக்கிறார். அவருடைய அண்ணன் என்ற முறையில் நான் அவரை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். அவருக்கு விருது

வழங்கிச் சிறப்பித்த சிவந்தி அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் நான் இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டுமென்று வாழ ஆசைப்படுகிறேன். ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டுமென்பதற்காக அல்ல. அதிகாரங்களை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக அல்ல. தமிழுக்குத் தொண்டு செய்வதற்காக, என்னுடைய கண்கள் இறுதியாக மூடும் வரை, அண்ணாவின் இதயத்தை எடுத்துச் சென்று மீண்டும் அண்ணாவிடத்திலே ஒப்படைக்கின்ற அந்தக் காலம் விரைவிலே வந்துவிடாமல் நான் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்து இன்னும் ஆற்ற வேண்டிய தொண்டினை ஆற்றி - இங்கே தரப்பட்ட முத்திரிஞர் என்ற பட்டத்திற்குரியவனாக என்னை ஆக்கிக் கொள்கிற வரையில் வாழ வேண்டுமென்று இயற்கையை வேண்டி என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

- முரசொலி 28.9.97

முதற் பதிப்பு : மே 2000