ஆதித்தனார் பிறந்தநாள் விழா
பகுதி 1 · 1 / 2
ஆதித்தனார் பிறந்தநாள் விழா
ஆதித்தனார் அவர்களுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் ‘முத்திரை’ என்ற ஒரு விருதினை எனக்கு வழங்கிச் சிறப்பித்துள்ள நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், இந்த விருதினை வழங்கிய ஆளுநர் பேரன்பிற்குரிய, பெருமதிப்பிற்குரிய மேதகு பாத்திமா பீவி அவர்களுக்கும் என்னுடைய நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதுடன் நம்முடைய சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியை எனக்கு வழங்கியுள்ளார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் ராஜராஜ சோழன் பெயரால் நான் எழுதிய “தென்பாண்டிச் சிங்கம்” என்ற வரலாற்று நாவலுக்குப் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசினை வழங்கிய சங்கர் தயாள் சர்மா அவர்கள் எனக்கு அவருடைய அன்பின் காரணமாகப் பட்டத்தையும் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியிலே ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் தரப்பட்டது. அதனை நான் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சான்றோர்கள் சிலருடைய பெயரால் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அவர்களுடைய பெயரால் அவ்வப்போது சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து, மாணவர்களும் மற்றவர்களும் பயன் பெறுகின்ற வகையிலே செலவழித்திடுங்கள் என்று அந்தத் தொகையைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கே தந்து விட்டேன்.
வழங்கியவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தார். திருப்பித் தந்து அவர்களிடமே!
இப்பொழுது நிலைமை அப்படி இல்லை. (பலத்த சிரிப்பு) இன்று காலையில் சிவந்தியின் அண்ணன் ராமச்சந்திர ஆதித்தன் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஏழைப் பெண்களுடைய திருமண உதவித் திட்டம் - மூவலூர் ராமாமிர்தம் அவர்களுடைய பெயரால் வழங்கப்படுகின்ற திட்டத்திற்கு நான் விடுத்த வேண்டுகோளின்படி - பலர் கோடிக்கணக்கில், இலட்சக் கணக்கில் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்றாலும் - காலையிலே ஒரு இலட்சம் ரூபாயை அந்த நிகழ்ச்சியிலே வழங்கினார்கள்.
காலையில் ஒரு நிகழ்ச்சியும், மாலையிலே ஒரு நிகழ்ச்சியும் நடைபெறுவது எவ்வளவு எங்களுக்கு இலாபகரமானது என்பதற்கு (சிரிப்பு) இதைச் சொல்கிறேன். காலையிலே இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதை நான் முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து - ஏழைப் பெண்களின் திருமண நிதிக்கு இது பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டேன்.
அதைப்போலவே இப்பொழுது சிவந்தி அவர்கள் இந்த விழாவிலே எனக்காக வழங்கியுள்ள ஒரு இலட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்கு வழங்கப்படும் (பலத்த கைதட்டல்) என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக் கூறிவிட்டதால் சிவந்தியின் கோட்டா முடிந்து விட்டது என்று பொருள் அல்ல. (பலத்த சிரிப்பு) கோடிக்கணக்கில் கொடுத்தவர்கள் எல்லாம் எதிரே அமர்ந்திருக்கிறார்கள் என்பது சிவந்திக்கு தெரியும். எனவே ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்துகின்ற அளவிற்கு பொற்கிழியும், என்னை மேலும் உற்சாகப்படுத்துகின்ற அளவிற்கு முத்திரை என்ற விருதும்
வழங்கியுள்ள - ஆதித்தனார் பிறந்த நாளில் நடைபெறுகின்ற - இந்த இலக்கிய பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை நடத்துகின்ற நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய ஆளுநர் அவர்களும் மற்றும் வாழ்த்துரை வழங்கியவர்களும் தமிழகத்திலே அரிச்சுவடி கூட படிக்காத பாமர மக்கள் - ரிக்ஷா ஓட்டுபவர்களாக, தெருவிலே அலைந்து திரிபவர்களாக, ஏன் என்பது என்ன எழுத்தென்பது என்ன என்பதை அறியாதவர்களாக உள்ளவர்களுக்கெல்லாம் அரிச்சுவடி வாத்தியாராக இருந்தவர் மறைந்த ஆதித்தனார் என்பதை இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
தினத்தந்தி பத்திரிகையின் மூலமாக அந்தத் தொண்டை எழுத்துச் செய்திகள் மூலம் அறிவில் குட்டையான மனிதர்களையெல்லாம் நெட்டையான மனிதர்களாக ஆக்கிய பெருமை ஆதித்தனாருக்கு உண்டு. அவர்கள் “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்ற முழக்கத்தோடு “நாம் தமிழர்” இயக்கத்தை உருவாக்கி நடத்தியவர்கள். காலையிலேகூட குறிப்பிட்டேன். அப்படி நடத்திய இயக்கத்தை 1958-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு அமைப்புக் கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆதித்தனார் அவர்கள் “நாம் தமிழர் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான ஒரு முன்னணிப் படை” என்று அறிவித்தார்கள்.
அப்படி அறிவித்த பிறகு அவரும் நானும் ஆகாய விமானத்தில் திருச்சி பயணம் சென்றபோது, அந்த விமானத்திலே வேறு யாருமே பயணிகள் இல்லாத சூழ்நிலை - இரண்டே பேர்தான் - எவ்வளவு லாபகரமாக அந்த விமானம் நடைபெற்றிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இரண்டே பேர் செல்லும்போது
ஆதித்தனார் அவர்கள் என்னருகே வந்து அமர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறியிருந்தாலும், தேர்தலில் ஈடுபடுகின்ற நேரத்தில் அதற்குத் தேவையான நிதியை வசூலிக்க வேண்டாமா? தேர்தல் ஆணையத்திற்கு முரண்பட்டு அல்ல; சட்டத்திற்கு உட்பட்டு செலவழிக்கக்கூட பணம் வேண்டாமா?”
என்று கட்சியின் பொருளாளனாக நான் இருந்த காரணத்தால் என்னிடத்தில் அவர்கள் வலியுறுத்திச் சொன்னார்கள்.
அந்தப் பயணத்திற்குப் பிறகு நான் அறிஞர் அண்ணா அவர்களிடத்திலே ஆதித்தனார் சொன்னதை எடுத்துச் சொல்லி - சென்னை கடற்கரையிலே நடைபெற்ற லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக் கூட்டத்தில் - அண்ணா அவர்கள் முன்னிலையிலே சொன்னேன். “67-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியை நான் தேர்தல் நிதியாகச் சேர்ப்பேன் அண்ணா அவர்களின் வாழ்த்துக்களோடு” என்று குறிப்பிட்டேன்.
கூட்டம் முடிந்த பிறகு அண்ணா அவர்களின் காரில் நாங்கள் வந்தபோது அண்ணா சொன்னார். “என்ன, கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கிறதா? பத்து லட்சத்தை நாம் எப்படி திரட்டுவது? முடியுமா?” என்று கேட்டார். ஆதித்தனார் என்னிடம் வலியுறுத்தியதை அண்ணாவிடம் நான் எடுத்துக் கூறி, அன்று முதல் தேர்தல் நிதி திரட்டுகிற பணியிலே ஈடுபட்டு, இரண்டு அல்லது மூன்றாண்டு காலம் அந்தப் பணியை வெற்றிகரமாக நடத்தி - நாடகங்கள் நடத்தியும, கூட்டங்களில் நிதி உதவி பெற்றும், விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கழகத்தின் மாநில மாநாட்டில் பதினோரு இலட்சம் ரூபாயை அண்ணா அவர்களிடத்திலே நான் ஒப்படைத்தேன் என்றால் அதற்கு வாழ்த்தளித்துப் பக்க பலமாக இருந்தவர் அண்ணா என்றாலுங்கூட, அதற்கான
ஊக்கத்தை அளித்தவர் மறைந்த பெரியவர் ஆதித்தனார் என்பதை நான் சொல்லித்தான் தீர வேண்டும்.
இப்படி அரசியல் துறையிலே நானும் அவரும் நெருங்கிப் பழகுகின்ற காலக் கட்டம் இருந்தது. ஆட்சிப் பொறுப்பை அண்ணா ஏற்றவுடன் பேரவைத் தலைவராக ஆதித்தனார் பொறுப்பேற்றார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு என்னுடைய தலைமையிலே அமைந்த அமைச்சரவையிலே ஆதித்தனார் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் தமிழர்களுக்காக நடத்திய கிளர்ச்சிகள் ஒன்றிரண்டு அல்ல. நெல்லைச் சீமையிலே பனைமரத் தொழிலாளர்களுக்காக கிளர்ச்சி நடத்தி கைதானவர். செங்கற்பட்டு விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்தியதோடு கைதாகி, கையிலே விலங்கிடப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டவர்.
இன்னொன்று எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமை. 65-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் ஆதித்தனார் அவர்கள் கோவையிலே தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டார். நான் பாளையங்கோட்டையிலே தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டேன். அன்றைக்கு தமிழகத்திலே பாதுகாப்புச் சட்டத்தின்படி தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ஆதித்தனார். மற்றொருவர் நான். (கைத்தட்டல்) இருவரும் விடுதலை பெற்ற பிறகு, சந்தித்துப் பேசி தி.மு.
கழகத்தின் அரசியல் மேம்பாட்டிற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளை எல்லாம் அண்ணாவிடம் சொல்லி, அண்ணா அவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு ஆதித்தனார் அவர்களை நேசித்த அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இன்றைக்கும் என்னுடைய நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
பத்திரிகைத் துறையிலே ஒரு புதுமையை புகுத்தினார். எனக்கு முன்னால் இங்கே உரையாற்றி
