தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 8
பகுதி 7 · 7 / 7
ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 40 மாணவர்கள் வீதம், 1,200 பள்ளிகளில் ஆண்டு முடிவில் சுற்றொப்ப 48,000 மாணவர்கள் கணினி பயின்றவர்களாக வெளியேறுவார்கள், வெளியே வருவார்கள் என்பதையும் எடுத்துக்கூறி, அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதிலே வந்த இடைக்காலத் தடையை இந்த அவை அறியும். ஆனால் அன்றைக்கு இந்த அவையிலே நான் நடந்துகொண்டதன் காரணமாக மாத்திரமல்ல, உண்மையின் காரணமாகவும், நீதியின் காரணமாகவும் அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி சொல்லி யிருக்கிறார், “மனுதாரருடைய நலனுக்காக - (அதாவது எதிர்த்து வழக்குப் போட்டார்களே, அந்த மனுதாரருடைய நலனுக்காக, இந்தத் திட்டத்தைத் தள்ளி வைக்க முடியாது.
அரசின் இந்தப் பொன்னான நோக்கத்தால் (மேசையைத் தட்டும் ஒலி). 48,000 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்பதை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. தமிழக அரசின்மீது இந்த நீதிமன்றம் நம்பிக்கை வைத்திருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி). இதெல்லாம் பெருந்தன்மைக்குக் கிடைக்கின்ற பரிசுகள். தமிழக அரசின்மீது நீதிமன்றம் நம்பிக்கை வைத்திருக்கின்றது. சமூக நீதிக் காவலனாகப் பாடுபடும் அரசு, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களிடையே படித்து வந்தவர்கள் நலனில் கவனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன்.
பல நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் இதையும் சொல்ல வேண்டியதான் இருக்கிறது. காரணம் திரு. ரங்கநாதன் ஆரம்பித்து வைத்துவிட்டார். அதனால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த காலத்திலே தொழில் துறையிலே ஏற்பட்ட பல பின்னடைவுகள், சில முறைகேடுகள் இவைகளைப் பற்றி ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொள்ள, பலமுறை சொல்லியிருந்தாலும் கூட, மனிதனுக்கு மறதி அதிகம். மறந்துவிடக்கூடாது என்பதற்காக நீங்களும் ஞாபகப்படுத்திக் கொள்ள, நானும் ஞாபகப்படுத்திக்கொள்ள, (மேசையைத் தட்டும் ஒலி) எல்லோரும் ஞாபகப்படுத்திக்கொள்ள, பொது மக்களும் ஞாபகப்படுத்திக்கொள்ள இதை நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.
கிரானைட் குத்தகை விடுவதிலே ஏற்பட்டது சம்பந்தமாக ஒரு வழக்கு. ஏற்கெனவே இந்த அரசு கிரானைட் குத்தகையிலே உள்ள ஊழல்களுக்காக தனி நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்திருக்கிறது. அந்த வழக்கிற்கான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையிலே, அந்த வழக்கிலே குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் தொழில்துறை அமைச்சர் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அந்த வழக்கையே quash செய்ய வேண்டும் என்று ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவை விசாரித்த பிறகு, உயர்நீதிமன்ற நீதிபதி என்ன தீர்ப்பு அளித்தார் என்பதை இங்கே சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். அந்த ஆணை எப்படிப் பிறப்பிக்கப்பட்டது? எந்த ஆணையின் அடிப்படையில் அந்தத் தவறு நடைபெற்றது? 39 என்கிற ஒரு விதி. அரசாணை எண் 97, தொழில் துறை, நாள் 8-3-1993 மூலம் முந்தைய அரசு தமிழ்நாடு சிறு கனிம விதிகளில், விதி 39 என்ற புது விதியை ஏற்படுத்தி, குவாரி குத்தகைகளை விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் வழங்கியது.
1989 ஆம் ஆண்டில் கழக அரசின் தொழில் துறை பிறப்பித்த ஆணையின் படி அரசுக்கு வருமானம் வர வாய்ப்புகள் இருந்தும், (கவனிக்க வேண்டும்) நாம் போட்ட ஆணையின்படி அரசுக்கு நிறைந்த வருமானம் வர வாய்ப்புகள் இருந்தும், உயர் நீதிமன்றத்திலே உரிமம் வழங்குவது குறித்த பல வழக்குகள் நிலுவையிலே இருந்தும், குத்தகைதாரர்கள் அரசு கோரும் தொகையைச் செலுத்த விருப்பம் தெரிவித்து கடிதங்கள் கொடுத்திருந்தும் - ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் எல்லாம் விருப்பம் தெரிவித்து கடிதங்கள் கொடுத்திருந்தும் - வனத் துறை நிலத்தில் உரிமம் வழங்க மத்திய அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் இருந்தும், அந்த விதியையும் மீறி, அப்போதைய அட்வகேட் ஜெனரலும், அரசு தலைமைச் செயலாளரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தும், வேண்டாமென்று தடுத்துக் கூறியிருந்தும், அரசுக்கு ஒரே ஒரு குத்தகை மூலமாக மட்டும் 12 கோடி ரூபாய் வருமானம் வர வாய்ப்பு உள்ளது எனக்
கோப்பிலே கருதி, செயலாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தும், அவை அனைத்தையும் புறக்கணித்து, தமிழ்நாடு சிறு கனிம விதிகள் 1959-இல், புதுவிதி 39, முந்தைய அ.தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கூறிய விதி 39-ன்கீழ், 9 மாவட்டங்களில் 125 கிரானைட் குத்தகைகள் 196.80 ஹெக்டேர் பரப்பில் வழங்கப்பட்டன. விதி 39 என்றால், அரசினுடைய விருப்புரிமையின்படி Nomination முறை, அதுதான் 39; இணைக்கப்பட்ட விதி. பின்னர், அதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 95 கோடி ரூபாய். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று அப்போது தொழில் அமைச்சராக இருந்த திரு. சின்னசாமி, சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்.
அவரது கோரிக்கையைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தன்னுடைய தீர்ப்பில் என்ன குறிப்பிட்டிருக்கிறது தெரியுமா?
“ஏராளமான தொகைகளை வசூல் செய்து கொண்டு குத்தகை உரிமங்கள் வழங்குவதற்காக, சுயலாபம் கருதி தமிழ்நாடு சிறு கனிம விதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, முதல் தகவல் அறிக்கையைத் தள்ளுபடி செய்வதற்கு எந்தவிதமான அடிப்படையுமில்லை.”
மேலும் சொல்கிறார், நீதிபதி :
"The accused has granted leases to the private individuals without fixing any lease amount for granite quarry in pursuance of the conspiracy hatched between them."
“குத்தகைதாரர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட சதித் திட்டத்தின் காரணமாக, குத்தகைத் தொகை எதுவும் நிர்ணயம் செய்யாமல் குற்றம் சாட்டப்பட்டவர் தனி நபர்களுக்குக் குத்தகை உரிமையை வழங்கியுள்ளார்.” High Court Judge சொல்கிறார். மேலும் சொல்கிறார் :
"The persons to whom the granite leases have been granted, have paid huge amounts as bribe which has been corroborated by
many of the witnesses who have also mentioned the denomination of the currency in separate slips, which also have been recovered from the house of the accused."
கரன்சி நோட்டு யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்ற அந்த நம்பரோடு தனித் தனித் தாள்களில் எழுதி வைத்திருக்கிறார்களாம். இவையெல்லாம் தொழில் அமைச்சராக இருந்தவருடைய வீட்டிலேயிருந்து கிடைத்தது.
“குத்தகை உரிமம் பெற்றவர்கள் பெரும் தொகைகளை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட துண்டுச் சீட்டுகளில் எந்தவகையான கரன்சி நோட்டுகள் கொடுக்கப்பட்டன என்று குறித்து வைத்து இருப்பதிலிருந்தும், சாட்சிகளின் வாக்கு மூலங்களிலிருந்தும் இது தெளிவாகின்றது.
அடுத்து, "Mr. Dyaneswaran in his own handwriting has written statement of accounts showing how much amount he has been receiving from the lessees as pecuniary advantage. There is overwhelming evidence against the petitioner and others."
“சுயலாபத்திற்காக எவ்வளவு தொகை குத்தகைதாரர்களிடமிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் திரு. தியானேஸ்வரன் தன்னுடைய கைப்படவே கணக்கு எழுதி வைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராக ஏராளமான சாட்சியங்கள் உள்ளன.”
மேலும், "The records and circumstances indicate that the entire fraud had taken place with his full knowledge and involvement."
அதாவது, “இந்த முழு பித்தலாட்டமும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் முழு ஈடுபாட்டோடும், அங்கீகாரத்தோடும்தான் நடைபெற்றிருக்கிறது என்று ஆவணங்களும், சூழ்நிலைகளும் சுட்டிக்காட்டுகின்றன” என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
மேலும், நீதிபதி, தன்னுடைய தீர்ப்பில் தொடர்ந்து சொல்கிறார் :
".... the money due to the Government has been siphoned off by them and as a result of which they had pecuniary advantage to the extent of several crores."
அப்படிப்பட்ட ஒரு அரசு இருந்த நிலையெல்லாம் மாறி, இந்த அரசு இந்தத் தொழில் துறையில், உங்களுடைய அன்பான ஆதரவோடும், பொதுமக்களுடைய அன்பான ஆதரவோடும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி).
இந்தக் கிரானைட் தொழிலைக்கூட மேலும் ஊக்கப்படுத்த இப்போது நாம் விதிகளையெல்லாம் மாற்றி, 8-ஏ என்ற திருத்தம் கொண்டு வந்து, ஏலம் விடுகிற முறைகளையெல்லாம் செய்திருக்கிறோம். அதிலேகூட இன்னும் அதிகம் வருவாய் வருவதற்கு இந்த அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. நாம் இப்போது நம்முடைய பற்றாக்குறையை எல்லாம் சமாளிக்க பல வழிமுறைகளையெல்லாம் நிதிநிலை அறிக்கையினுடைய விவாதத்தின்போது, என்னுடைய பதிலுரையிலே குறிப்பிட்டிருக்கிறேன்.
கிரானைட் தொழிலை மேலும் ஊக்குவிக்க, இப்போது ‘டாமின்’, இடம் நிலம் இருக்கிறது அல்லவா? அந்த நிலத்திலே ஒரு பகுதியை, பொது ஏலத்திலே - டாமினே வைத்துக் கொண்டு தூங்காமல், கிடப்பிலே போடாமல், அந்த ‘டாமின்’ நிலத்தைக்கூட எடுத்து, அதனைப் பொது ஏலத்திலே விட்டு, அதன் மூலமாகவும் அரசு வருவாயைத் தேடலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்து, காலை முதல் இதுவரையில் அரிய கருத்துக்களைச் சொல்லி, என்னை ஊக்கப்படுத்திய எல்லா உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து அமைகிறேன்.
வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர்.
**திரு. சோ. பாலகிருஷ்ணன் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய தமிழகத்தில் உப்பளத் தொழில் என்பது ஒரு ஆபத்தான நிலையிலே இருப்பதை இங்கே
குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய மாவட்டத்தில் 5,000-க்கு மேற்பட்ட ஏக்கரில் உப்பளம் நடந்து கொண்டு இருக்கிறது. பழைய அரசாங்கத்தில் 29 ரூபாய் ஒரு ஏக்கருக்கு குத்தகைத் தொகையாக இருந்த பணத்தை 429 ரூபாயாக ஆக்கியதன் மூலம், தனியார் எல்லாம் இன்று கோர்ட்டுகளிலே ஸ்டே வாங்கி விட்டார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் நடத்துகின்ற அந்த உப்பளத் தொழிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய், அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு கட்டாயம் இருப்பதால், அந்தத் தொழில் மூடப்படக்கூடிய ஒரு அபாய நிலை இருக்கிறது.
நான் ஏற்கனவே, இதைப் பற்றி நிதிநிலை அறிக்கையிலே பேசியிருக்கிறேன். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இதற்கு ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி, அந்தப் பழைய 29 ரூபாயாகவே அதை ஆக்க வேண்டும். இந்தியாவில் வேறு எங்குமே இவ்வளவு அதிகப்படியாக இல்லை. 29 ரூபாய் என்று இருந்ததை 429 ரூபாயாக ஒரு ஏக்கருக்கு குத்தகையாக ஆக்கியிருக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தப் பெரிய தொகையை ரத்து செய்து, அந்த உப்பளத் தொழில் நிரந்தரமாக நடைபெறுவதற்கும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்வதற்கும் உதவுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறிய நல்ல கருத்தை இந்த அரசு அலட்சியப்படுத்தாது. 400 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டிருந்தால் அது அதிகம்தான். பழைய அளவிற்கு 29 ரூபாய் என்ற அளவிற்கு குறைக்க முடியா விட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மற்றவர்களும் ஒத்துக்கொள்கின்ற அளவிற்கு அதைக் குறைப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உப்பளத் தொழில் மாத்திரம் அல்ல, தமிழகத்தில் அப்பளத் தொழிலும் கெடாமல் இந்த அரசு பார்த்துக் கொள்ளும். (மேசையைத் தட்டும் ஒலி).
