தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 6
பகுதி 5 · 5 / 5
பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் ஒரு துணை நகரமும் அமைக்கப்படும். சென்னையிலேயே தொழில்கள் உருவாகின்றன என்பதை ஓரளவுக்கு மாற்றுவதற்காக இந்த இரண்டு துணை நகரங்களும் பயன்படுத்தப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
ஏற்கெனவே, 1989-90-91-ல் கழக அரசு பொறுப்பில் இருந்தபொழுது, தனியார் பின்னலாடைத் தொழில் வளாகம் ஒன்றை (பனியன் தொழில் வளாகம்) திருப்பூரை ஒட்டியுள்ள முதலிப் பாளையத்தில் அமைக்கத் திட்டம் வகுத்து, குறுகிய காலத்திலேயே அப்பணியும் முடிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். அதேபோல, அனைத்து வசதிகளும் கொண்ட தொழில் மையங்களைத் தனியார் சேர்ந்து உருவாக்க முயன்றால், அதற்கு அரசு நிறுவும் தொழில் வளாகங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழங்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், நெய்வேலி, வடசென்னை ஆகிய இடங்களில் அமைந்த அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் எரிசாம்பலைப் பயன்படுத்தி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருள் (Construction Blocks) தயாரிக்க முன்வரும் தொழில் முனைவோருக்குத் தக்க உதவிகள் செய்திட அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயங்கொண்டத்திலே நிலக்கரி நிறுவனம். இது நீண்ட காலமாக தீர்க்கப்படாதப் பெரிய பிரச்சினை. 1991-ல் பதிவு செய்யப்பட்ட ஜெயங்கொண்டம் நிலக்கரி நிறுவனம் முந்தைய அரசினுடைய அணுகுமுறை காரணமாகத் தொடங்கப்படாமல் அறிவிப்பு நிலையிலேயே இருக்கின்றது. ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாமலேயே நிலக்கரியைத் தோண்டி எடுப்பதற்கும், தேவப்படும் இயந்திரங்களை வழங்குவதற்கும் முந்தைய அரசில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த அரசினால் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
டெண்டர் கோராமல் அந்த அரசு ஜெயங்கொண்டம் நிலக்கரி நிறுவனத்துக்கான பணிகளை ஒப்படைக்க முன்வந்தபோது, இந்த அரசு பொறுப்பேற்றது. பின்னர் அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆண்டொன்றுக்கு
4 மில்லியன் டன் நிலக்கரியையும், 500 மெகாவாட் மின்சாரத்தையும் குறைந்த விலைக்கு, வழங்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இந்தத் திட்டத்திற்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
சிங்கப்பூரிலே இருக்கிற சிங்கப்பூர் இந்திய வர்த்தகக் கழகம் - Singapore Indian Chamber of Commerce - என்கிற அமைப்பு, தமிழ்நாட்டில், முதலீடு செய்வதைப்பற்றி சிங்கப்பூரில் இருக்கும் தொழில் முனைவோருக்குத் தகவல்கள் கொடுக்கும் ஒரு சாளரமாகச் (Window) செயல்பட ஒத்துக் கொண்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய அரசு அதிகாரிகள், தொழில் முனைவோர்கள் கொண்ட ஒரு குழு சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கே உள்ளவர்களோடு கலந்து பேசி அவர்கள் இதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.
இதற்காக இந்த அமைப்புடன் ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டு இருக்கிறது என்பதையும், இந்த முயற்சிகள் தமிழகத்திலே சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீடுகள் வந்தடைவதற்குத் தூண்டுகோலாக அமையும் என்பதையும் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
டிட்கோவின் புதிய திட்டங்கள். புதிய எண்ணூர் துறைமுகத்தின் சுற்றுப்புறங்களில் சுமார் 7,000 ஏக்கர் நிலப்பரப்பில் பெட்ரோகெமிக்கல் பூங்கா ஒன்று நிறுவப்படும். கழிவுநீரைச் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தும் வகையில் நல்ல நீராக மாற்ற சுத்திகரிக்கும் நிலையங்கள் அங்கு அமைக்கப்படும்.
எஸ்.கே.எம். குரூப் நிறுவனத்துடன் இணைந்து 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முட்டைப் பதப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
நேஷனல் பிளைவுட் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சார்ந்த சையம்பெல்கம்ப் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து 150 கோடி ரூபாய்ச் செலவில் கரும்புச்
சக்கையிலிருந்து சிறு பலகைகள் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்டு இரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
நார்வே நாட்டைச் சார்ந்த நார்ஸ்கே ஹைட்ரோ நிறுவனத்துடன் இணைந்து பி.வி.சி. குழாய்க்குத் தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தாகிவிட்டது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
7,500 கோடி ரூபாய் முதலீட்டில், நாப்தா கிராக்கர்ஸ் மற்றும் ஒலிபின்ஸ் (Naphtha Crackers & Olefins) வளாகம் ஒன்று அமைக்கப்படும்.
சென்னை ஏற்றுமதி வளாகத்தில் 27 கோடி ரூபாய்ச் செலவில் 100 சதவீத ஏற்றுமதியுடன் இணைத் துறையில் செயல்படுத்தக்கூடிய உலோகக் குழல் விளக்கு (ஹேலைடு லாம்ப்) தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது.
ஓசூர் பகுதியில் மலர் வளர்ப்புத் திட்டம் பல நிறைவேற்றப்பட்டு வருவதால், அத்திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அங்கு 75 கோடி ரூபாய்ச் செலவில் குளிரூட்டு வசதி, குளிரூட்டப்பட்ட வாகன வசதி முதலியவைகளைக் கொண்ட மையம் ஒன்று அமைக்கப்படும்.
டிட்கோவுடன் இணைந்து ஈஸ்ட் பாலி புரொபிலின் Biaxially oriented poly propylene - (Bopp) பிஸ்பினால்-ஏ (Bisphenol-A) - மற்றும் சக்தியூட்டப்பட்ட கரி ஆகியவற்றைத் தயாரிக்க 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்சாலை அமைக்கப்படும்.
பெயர்பெற்ற லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் டிட்கோவின் இணை நிறுவனமான சிஸ்கால் (Siscal) மூலமாக 450 கோடி ரூபாய் முதலீட்டில் தேனிரும்புத் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. 210 கோடி ரூபாய் மதிப்பில், இரும்புத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு ஜனவரித் திங்கள் வாக்கில் உற்பத்தியைத் தொடங்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
1,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் தாமிரத் தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. அந்தத் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள், அந்த எதிர்ப்பின் காரணமாக அரசு எடுத்த முயற்சிகள் - தொழிற்சாலையும் நடக்கவேண்டும், தொழிற்சாலையிலிருந்து வருகிற கழிவுப் பொருள்கள் காரணமாக மக்களும் பாதிக்கப்படக் கூடாது, மீனவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்று எடுத்த முயற்சியின் அடிப்படையில், அந்தத் தொல்லைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு, தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மணலியில் கூட்டுத் துறையில் ரூ. 50 கோடியில் பல்க்டிரக் இண்டார்மீடியட்ஸ் தொழிற்சாலை அமைக்கப்படும்.
70 கோடி ரூபாய் முதலீட்டில் இண்டஸ்ட்ரியல் என்சைம் தொழிற்சாலை தொடங்கப்படும்.
'டான்சம்' நிறுவனம் மூலம் விருத்தாசலத்தில் 1.4 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டு ஒன்றுக்கு 1,920 டன் உயர்தர அலுமினிய கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடப்பாண்டில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கன்னியாகுமரியில் ரப்பர் தொழிலைப் பற்றி நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் மணி அவர்களும், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் மோசஸ் அவர்களும் எடுத்துச்சொல்லி, எப்படி ஊருக்குப் போவோம் என்றெல்லாம் கேட்டார்கள். தைரியமாக நீங்கள் ஊருக்குச் செல்லலாம், நானும் பல ஆண்டு காலமாக அங்கே எப்படியும் ரப்பர் தொழிற்சாலை வந்தே தீர வேண்டுமென்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ரப்பர் தொழிற்சாலை என்ற காரணத்தால் அது நீண்டு கொண்டே போகிறது.
(சிரிப்பு) எனவே, இந்த ஆண்டில் எப்படியும் தொழிற்சாலை வர நான் விடேன் தொடேன் என்று முயற்சி மேற்கொள்வேன், அதுதான் எனக்கு முதல் வேலை என்பதை கன்னியாகுமரியில் உள்ள மக்களுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
அதைப்போலவே திருமதி காஞ்சனா கமலநாதன் அவர்கள் முன்வரிசையில் உள்ளவர்களுக்குத்தான் எல்லாவற்றையும் வழங்குகிறீர்கள், நான் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் பின்னால் இருங்கள், பின்னாக இருக்காதீர்கள் என்று மட்டும் அவர்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, இனிமேல் பின்னாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு, மாம்பழத் தொழிற்சாலை நிச்சயமாக கிருஷ்ணகிரியில் அமையும் என்ற வாக்குறுதியைத் தந்து, இந்த அளவில், இந்த மானியத்தில் உரையாற்றிய, கருத்துக்களைத் தந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டு, வெட்டுப் பிரேரணைகளை எல்லாம் திரும்பப் பெற்று இந்த மானியத்தில் கோரப்பட்டுள்ள தொகையை அனுமதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டு அமர்கிறேன்.
நன்றி, வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).
