உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 4

பகுதி 1 · 1 / 4

**உரை : 4**

**நாள் : 18.04.1990**

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றும், இன்றும் தொழில் துறை மானியத்தின் மீது அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தொகுத்து வழங்கி, தமிழகத்திலே மேலும் தொழில் துறையை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்த அரசுக்குக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உரையாற்றத் தொடங்கிய சுப்பிரமணியன் அவர்களிலிருந்து, நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் குமரி அனந்தன் அவர்கள் வரையில் பேசிய அனைவரும் தமிழகத்திலே தொழில் துறை வளர்ச்சிக்குப் பல ஆக்கப் பூர்வமான கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். நண்பர் உகம்சந்த் அவர்கள் மாத்திரம் எப்படியாவது ஒரு குறையை இந்த அரசின்மீது சொல்லவேண்டும் என்று சுற்றிச்சுற்றிப் பார்த்து, அந்த முயற்சியிலேயே கடைசி வரை நின்று தன்னுடைய உரையை அவர் நிறைவு செய்து இருக்கிறார்.

அவர் இந்த அரசைக் குறைகூற வேண்டும் எப்படியாவது என்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியை நான் தடுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை, மாறாக அதிலும் ஏதாவது இந்த அரசு தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் இருக்குமானால் அதனையும் நான் ஏற்றுக்கொண்டு அதன்படி தொழில் துறையை வளர்ப்பதற்கு இந்த அரசு பாடுபடும், பணியாற்றும் என்ற உறுதியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தத் தொழில் வளர்ச்சிக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகக் குறைவாக இருக்கிறது என்று நேற்றையதினம்

உரையாற்றிய நண்பர் பூவராகன் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் இந்த இரண்டு மானியங்களிலே ஒதுக்கப்பட்ட தொகையை மாத்திரம்தான் கணக்கிட்டு குறிப்பிட்டார்கள். மானியக் கோரிக்கை எண். 24 தொழில்கள் என்ற தலைப்பிலே, 6.53 கோடி ரூபாயும், மானியக்கோரிக்கை எண். 51 தொழில் வளர்ச்சி குறித்த மூலதனச் செலவு என்ற தலைப்பில் 22.24 கோடி ரூபாயை மாத்திரம் கணக்கிட்டு 28 கோடி ரூபாய்தான் என்று வருத்தப்பட்டார்கள்.

ஆனால் இப்பொழுது விவாதிக்கப்படாத கோரிக்கை எண். 59 மாநில அரசு வழங்கும் கடன்களும் முன் பணங்களும் என்ற தலைப்பில் 19 கோடி ரூபாயையும் சேர்த்தால் 47.77 கோடி ரூபாய் ஆகிறது. அது மாத்திரம் அல்ல. அரசு உத்திரவாதத்தோடு வெளிச் சந்தையிலே 4.37 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இதனையும் கூட்டினால் 1990-91ஆம் ஆண்டு மொத்த ஒதுக்கீடு 52.14 கோடி ரூபாய் ஆகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1989-90 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கப்பட்ட தொகை 44.29 கோடி ரூபாய்க்கு மாறாக இப்போது 52.14 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதை நான் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். மாநில அரசு நேரடியாக தொழில்களில் மூலதனத்தைப் போடுவதைவிட மிக அதிக அளவில் தொழில்களை ஊக்குவிப்பதில்தான் அக்கறை காட்டுகிறது என்பதை இந்த அவையிலே உள்ள மாண்புமிகு உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவார்கள்.

எனவே, அரசுத் தரப்பிலே வழங்கப்படுகின்ற ஒதுக்கீடு இந்த அளவில் இருந்தாலும்கூட ஏனைய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், அரசு தொழில் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகின்ற இந்தத் தொகைகளையும், மூலதனத் தொகைகளையும் ஈக்குவிட்டி, இவைகளையெல்லாம் கூட்டிப்பார்த்தால் தொழில்களுக்கான ஒதுக்கீடு நம்முடைய மாநிலத்திலே அதிகமாகவே இருக்கிறது என்பதை உணரக்கூடும். இந்த அரசினுடைய தொழில் கொள்கையைப் பற்றி கடந்த ஆண்டு இந்த மானியத்திலே நான் எடுத்துக்கூறியிருக்கிறேன்.

இன்றைக்கும் அதை நினைவூட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நம்முடைய நண்பர் பொன்னுசாமி அவர்கள் நேற்றைய தினம் பேசும்போது, தனியார் தொழிலை எல்லாம் நாம் இன்றைக்கு உருக்குலைக்கிறோம். அவர்களை விரட்டியடிக்கிறோம். தனியார் தொழில் தொடங்கவே அஞ்சுகிறார்கள் என்ற கருத்துப்பட்ட சில செய்திகளை இங்கே எடுத்துச் சொன்னார். அப்போதே நான் அதற்கு மறுப்பு உரைத்திருக்கிறேன் என்றாலும் கூட, இந்த அரசைப் பொறுத்தவரையில் ‘ஜாயின்ட் செக்டார்’ என்கிற அந்த ஒரு நிலையோடு, கடந்த ஆண்டில் ‘அசோசியேட் செக்டார்’ என்கிற இன்னொரு நிலையையும் உருவாக்கி ஜாயின்ட் செக்டாரிலே அரசினுடைய பங்காக 20 விழுக்காடும், அசோசியேட் செக்டாரிலே 11 விழுக்காடும் என்று அப்படிப்பட்ட தொழில்களைத் தனியார் துறையோடு சேர்ந்து கூட்டு முயற்சியாகச் செய்வது என்று அறிவிக்கப்பட்டது.

அந்த விழுக்காடுகள் அதிகமாக உள்ள அரசு பங்கினைக்கூட ‘டிஸ்இன்வெஸ்ட்மெண்ட்’ என்கிற முறையிலே உரிய நேரத்தில் பெற்று வேறு புதிய தொழில்களுக்கு அந்தத் தொகையை வழங்குகின்ற திட்டத்தையும் ஏற்கெனவே நாம் அறிவித்திருக்கின்றோம்.

எனவே, 26 விழுக்காடு என்பது அரசின் பங்கு என்று சொன்னால், ஏதோ அரசு என்பது எங்கேயோ இருக்கிறது என்று யாரும் கருதிக்கொள்ளக்கூடாது. அரசின் பங்காக 26 சதவிகிதம் என்பது மக்களின் பங்குதான். 26 சதவிகிதம் அரசின் பங்கு. 25 சதவிகிதம் தனியார் துறையிலே அவர்களுடைய பங்கு. அஃதன்னியில் மீதமுள்ள சதவிகிதம் அத்தனையும் பொது மக்களுடைய ஷேர். அவர்களுடைய பங்குத்தொகைகள். எனவே, பொதுமக்களுடைய பங்குத்தொகை, அரசினுடைய பங்குத்தொகை இந்த இரண்டும் பொதுமக்களுடைய பங்குத்தொகைதான்.

‘அரசு’ என்று நாம் தனித்துக் குறிப்பிடுச் சொன்னாலும் கூட, அது மக்களுடைய பங்குத்தொகைதான். அப்படிப்பட்ட மக்களின் பங்குத்தொகை அதிகமாக இருக்கின்ற நிலையில் உரிய பங்குத்தொகைகூட இல்லாமல், அதைவிடக் குறைவான பங்குத் தொகையை வைத்துக்கொண்டு முழு ஆதிக்கத்தையும் ஒரு தொழிலிலே நடத்தவேண்டும் என்று எண்ணுகின்ற தனியார்களை இந்த அரசு நிச்சயமாக சகித்துக் கொள்ளாது. அதனால்தான் கடந்த சில பல ஆண்டுகளாக, ஒரு நிறுவனம் - அவர்கள் குறிப்பிட்ட

அந்த நிறுவனத்தில் தலைவராகவும் அந்தக் குடும்பத்தவர் அதிலே எம்.டி.யாகவும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவருடைய மகன் என்கிற அளவிலே ஒரு நிலை ஏற்பட்டபோது, அவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்ட வேண்டிய கடமை எங்களுக்கு உருவானது.

மத்திய அரசு 1976 ஆம் ஆண்டிலேயே ஒரு அறிவிப்பைச் செய்தது. கூட்டுத் துறை நிறுவனங்களில் அரசு சார்பில் தலைவரை நியமிக்கவேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு 76 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. அந்த அடிப்படையிலேதான் அரசாங்கத்தினுடைய அதிகத் தொகையைப் பயன்படுத்திக்கொண்டு, அரசுக்கு எந்தவிதமான பிரதிநிதித்துவமும் இல்லாத ஒரு நிலைமை இருக்கக்கூடாது என்று நாங்கள் நடவடிக்கைகளை இன்றைக்குத் தொடங்கியிருக்கிறோமே அல்லாமல், ஏதோ ஒரு நிறுவனத்திலே ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை வைத்து, எல்லா தனியார் நிறுவனங்களும் அஞ்சத் தேவையில்லை என்பதையும், ஆனால் இதேமுறை கடைப்பிடிக்கப்படுகிற தனியார் நிறுவனம் எதுவாக இருந்தாலும் கூட அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதையும், இதுதான் தொழில் துறையிலே அரசாங்கத்தினுடைய திட்டவட்டமான கொள்கை என்பதையும் நான் தெரிவிக்கப் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இங்கே நேற்றைய தினம் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். ஆட்சிக்கு வந்து 15 மாதம் ஆகிறது. எத்தனை தொழிற்சாலைகளை நீங்கள் கண்டீர்கள் என்று எல்லாம் கேட்டார்கள். தொழிற்சாலைகள் என்பது இன்றைக்கு அடிக்கல் நாட்டி நாளையதினம் உற்பத்தியைத் தொடங்குகின்ற அளவிற்கு மாய, மந்திர ஜாலங்களால் அமையக் கூடியவைகள் அல்ல. ஒரு தொழிற்சாலை அமைவது என்றால் அதற்கான ஆய்வுகள், அதற்கான ஏற்பாடுகள், முதலீடுகள் இத்தனையும் நடைபெற்று ஒரு தொழிற்சாலை அமைய வேண்டி இருக்கிறது.

அந்த வகையில் நான் கடந்த ஆண்டு அறிவித்து இருக்கிறேன். இந்த ஆட்சி தோன்றுவதற்கு முன்பு, முன்பு இருந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் நின்று போன தொழிற்சாலைகளைக்கூட

கடந்தகால ஆட்சி அறிவித்தது என்பதற்காக அவைகளை விட்டு விடாமல் அந்தத் தொழிற்சாலைகளை எல்லாம் தொடங்கி அதற்காக 62.3 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. அதனுடைய விவரங்களைச் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாடு மக்னீசியம் அண்டு மெரையின் கெமிக்கல்ஸ், வாலிநோக்கத்தில் 9.60 கோடி ரூபாய் செலவில் டிட்கோ மட்டும் ஈடுபட்டு செய்யக்கூடிய தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலை உப்புக் கழிவு நீரிலிருந்து மக்னீசியம் உலோகம் தயாரிக்கும் தொழிற்சாலை.

இந்த உலோகம் அணுமின் உற்பத்திற்குப் பயன்படக்கூடிய ஒன்று ஆகும். இங்கே உற்பத்தி தொடங்கப்பட்டாகிவிட்டது. இது ஏற்கெனவே இருந்த அரசு அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உறங்கிக் கிடந்த ஒன்று, இப்போது உற்பத்தியைத் தொடங்கி இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து, டைட்டான் வாட்சஸ். ஏற்கெனவே கடிகாரம் செய்கின்ற அந்தத் தொழில் மட்டும் ஓசூரில் தொடங்கியது. அதற்கு கேசஸ் அண்டு பிரிசிஷன்ஸ் என்கிற அந்தத் திட்டத்தை ஏறத்தாழ 30 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் சிப்காட் தொழில் வளாகத்திலே நிறுவப்பட்டு டிட்கோ நிறுவனமும், டாட்டா நிறுவனமும் இணைந்து கூட்டுத் துறையில் கடிகாரம் தயாரிக்கின்றது. இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்ற கடிகாரங்கள்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனை ஆகின்றன என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்தக் கடிகாரங்களுக்குத் தேவையான கேசஸ், அதாவது கூடுகளை வெளிநாட்டிலிருந்து இது வரையிலே அங்கே இறக்குமதி செய்து இருந்த நிலையை மாற்றி அவைகளை அங்கேயே தயாரிப்பதற்கான அளவிலே அந்தத் தொழிற்சாலை இப்போது 30 கோடி ரூபாய் அளவிலே விரிவு படுத்தப்பட்டு இருக்கிறது இந்த ஆண்டில்.

சக்தி சோயாஸ் லிமிடெட், கூட்டுத் துறை. டிட்கோவும் சக்தி நிறுவனமும் இணைந்து 22.48 கோடி ரூபாய் மூலதனத்தில் பொள்ளாச்சிக்கு அருகிலே நிறுவப்பட்டுள்ளது. சோயாவிலிருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை இது. தயாரிப்புப்

பணியும் தொடங்கி விட்டது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த ஆண்டிலே உற்பத்தியைத் தொடங்க உள்ள தொழில்கள் பற்றிய விவரங்களைத் தர விரும்புகிறேன். யூ.பி. பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட், 80.65 கோடி ரூபாய் மூலதனத்தில் மணலியில் கூட்டுத் துறையில் தொடங்கப்படும் தொழிற்சாலை ஆகும். அது, கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிவடையும் தருவாயில் உள்ளன. யந்திரங்கள் பொருத்தப்படுகின்ற பணி இன்னும் 2 மாதத்தில் முடிவுறும். பால்யூல்ஸ் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற் சாலை அது.

பிளாஸ்டிக் தொழிற்சாலை போன்றவைகளுக்கும் மற்றும் வேறு சில தொழில்களுக்கும் பால்யூல்ஸ் பயன்படக் கூடிய பொருள் ஆகும்.

அடுத்து, ஐந்தாவதாக தமிழ்நாடு டெலி கம்யூனிகேஷன் லிமிடெட், மத்திய அரசும், மாநில அரசும் கூட்டு முயற்சியில் தொலைபேசிக் கம்பி மற்றும் தொலைபேசிக்கு வேண்டிய சில உபகரணங்கள் உற்பத்தி செய்கின்ற ஒரு தொழிற்சாலை. 23.30 கோடி ரூபாய் செலவில் அரக்கோணத்திலே அமைந்துள்ள தொழிற்சாலை இது. மாநில அரசு 25 சதவீதமும், மத்திய அரசு 26 சதவீதமும் இதிலே பங்கு பெறுகின்றன. 1989 ஆம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, ஜூலை 90-க்குள் இயந்திரங்கள் வந்து சேர்ந்து தொழில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு அந்த வேலைகள் விரைந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

ஆறாவதாக, சங்கம் அலுமினியம் லிமிடெட். தேன்கனிக் கோட்டையில் 10.35 கோடி ரூபாய் முதலீட்டில் கூட்டுத் துறையில் ஆரம்பிக்கப்படுகின்ற தொழிற்சாலை. அலுமினியத்தால் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் இங்கே உற்பத்தி ஆக இருக்கின்றன. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயந்திரங்கள் செப்டம்பர் மாதம் பொருத்தப்பட்டு டிசம்பர் திங்களில் உற்பத்தி தொடங்க இருக்கிறது.

ஏழாவதாக, இன்டகிரேட்டட் வாட்டர் புரூப்பிங் லிமிடெட் 4.62 கோடி ரூபாய் செலவில் அலமாதி கிராமத்தில் செங்கை - அண்ணா மாவட்டத்தில் கூட்டுத் துறையில் தொடங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் எல்லாம் ஆரம்பமாகிவிட்டன. இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. விரைவிலே அந்தத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கும்.

எட்டாவதாக, நார்த் ஆர்க்காட் லெதர்ஸ் லிமிடெட், ரூபாய் 1.60 கோடி செலவில் கலணிப்பாக்கத்தில், வாணியம் பாடிக்கு அருகே இந்தத் தோல் பதனிடும் தொழிற்சாலை தொடங்கப்பட்டு இருக்கிறது. கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இதுவும் ஒரு கூட்டுத்துறை நிறுவனம் ஆகும்.

அடுத்து, பணிகள் தொடங்கி நடைபெறும், இன்னும் முடிவடையாத நிலையிலே இருக்கிற தொழிற்சாலைகள் என்று எடுத்துக் கொண்டால் - 9-ஆவதாக “டைனா லேம்ப்ஸ் அண்ட் கிளாஸ் ஒர்க்ஸ்” என்பது கும்மிடிப்பூண்டிக்கு அருகே ரூ. 42.70 கோடி செலவில் கூட்டுத் துறையில் டிட்கோவும், டைனாவிஷனும் சேர்ந்து தொடங்கும் தொழிற்சாலை ஆகும். இங்கே மின் விளக்குக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கிறார்கள். இதற்கு ஐ.டி.பி.ஐ. கடன் வழங்கவும் அனுமதி தரப்பட்டு விட்டது.

விரைவில் இந்தப் பணிகள் தொடங்க இருக்கின்றன.

10-ஆவதாக ரிலையன்ஸ் செராமிக்ஸ், மதுராந்தகத்தில் ரூ. 20.40 கோடி செலவில் கூட்டுத்துறையில் டிட்கோ, லைட் ரூஃபிங்ஸ், ரிலையன்ஸ் செராமிக் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து மெருகூட்டப்பட்ட தரை மற்றும் சுவர் ஓடுகள் தயாரிக்கின்ற தொழிற்சாலை. ஐ.டி.பி.ஐ. கடன் இதற்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு அது தன்னுடைய உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது.

11-ஆவதாக உஷ்டாதே பயோடெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் கடலூரில் ரூ. 20 கோடி மூலதனத்தில் செயற்கை இனிப்பு தயாரிக்கின்ற தொழிற்சாலை கூட்டுத் துறையில் டிட்கோ நிறுவனமும் கல்கத்தாவைச் சேர்ந்த உஷ்டாதே என்று நிறுவனமும் சேர்ந்து நடத்தும் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. அண்மையில்தான் நான் அடிக்கல் நாட்டு விழாவிற்குச் சென்று இருந்தேன்.

கழக அரசு மீண்டும் வந்து அறிவிக்கப்பட்ட பணிகள், நடைபெற்று வருகின்ற தொழிற்சாலைகள் - 12-ஆவதாக - பில் கோ கிளாஸ் கம்பெனி லிமிடெட், புவனகிரியில் ரூ. 17.90 கோடி செலவில் கூட்டுத் துறையில் தொடங்கப்படும் தொழிற்சாலை. நிலம் கையகப்படுத்தப்பட்டு 27-8-1989 அன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே ஷீட் கிளாஸ்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

பதின்மூன்றாவதாக Dandeck Agro Chemicals Limited கடலூரிலே ரூ. 5.48 கோடி செலவிலே கூட்டுத் துறையில், நிறுவப்பட உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை ஆகும். இதுவும் 27-8-1989-லே அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.