சட்டமன்ற மேலவையில்
பகுதி 3 · 3 / 3
வேண்டும்? ஒரு நாலு பேரைப் பிடிக்க வேண்டும். யாராவது கட்சியிலே காழ்ப்புணர்ச்சியால் வெளியேறியவர்கள் இருக்கின்றார்களா என்று பார்த்து, அல்லது அப்படி இல்லாவிட்டால்கூட நாலு பேரைத் தேடிப் பிடித்து அவரிடத்திலே ஒரு புகார் ஒன்று தயாரித்துக் கொடுத்து அதைக்கொண்டு வந்து என்னிடத்திலே கொடு. நான் விசாரணைக் குழு வைக்கிறேன். வைத்தவுடனே மந்திரிகள் ராஜினாமாச் செய்வார்கள். மந்திரிகள் ராஜினாமா செய்து விட்டால், அங்கு இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் சிதறிப் போவார்கள்.
பிறகு ஒரிசாவிலேபோல ஆகும். அல்லது வேறு மாநிலம்போல ஆகும். பிறகு அங்கு ஜனாதிபதி ஆட்சி வரும் என்பார்கள்.
ஆகவே தனக்குப் பிடிக்காத ஆட்சி எந்த மாநிலத்திலே இருந்தாலும், அதைக் கவிழ்த்துவிட, குலைத்துவிட, சீரழித்துவிட மத்திய சர்க்கார் கையிலே இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சொல்லுகின்றேன்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அல்ல; நாளைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்—நல்ல காலமாக வராது—வந்தாலும், வேறு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மத்திய சர்க்காருக்கு விரோதமான ஒரு கட்சியினுடைய ஆட்சி மாநிலத்திலே இருக்கின்ற நேரத்தில் அதைக் கவிழ்க்க வேண்டுமென்று மத்தியிலே இருக்கின்றவர்கள் சர்வாதிகார எண்ணம் கொண்டு, ஜனநாயகப் போர்வையில் இருக்கின்ற பிரதமரும் மற்றவர்களும் எண்ணுவார்களானால், அந்த மாநிலத்திலே 4 பேரைப் பிடித்துப் புகார் கொடுக்கச் சொல்லி அதிலே விசாரணை வைத்து அதன் காரணமாக அந்த அமைச்சர்கள் பதவி விலகச் செய்து, அங்கே ஒரு கிளர்ச்சி ஏற்படுத்தி, அந்த அரசைக் கவிழ்த்துவிட முடியும்.
நம்முடைய சில உறுப்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் இங்கே ஒருமுறை பேசுகிற நேரத்தில் எடுத்துக் காட்டினார்கள். அதைத்தான் அப்போது சிங்தேவ் அவர்கள், சுதந்திரக் கட்சியினுடைய அமைச்சர், ஒரிசாவினுடைய முதலவர். அப்போதே சுட்டிக்காட்டினார்கள். அண்ணா அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். என் மீது விசாரணை என்றால் சட்டமன்றம் இருக்கிறது. பிரதமர் மீது விசாரணை என்றால் நாடாளுமன்றம் இருக்கிறது. பிரதமர் மீது விசாரிக்கத் தனியாக ஒரு விசாரணைக் குழு போட முடியாது என்பது எப்படிச் சரியோ, அதேபோல மத்திய சர்க்கார் ஒரு விசாரணைக் குழுவை இங்கே அமைக்க முடியாது என்பதும் சரியானதாகும்.
ஆகவே தான் இன்னும் மெத்த வேதனையோடு ம. பொ. சி. அவர்கள் இங்கே சொன்னார்கள். இப்படிப் ஒரு விசாரணைக் குழு போடவேண்டிய நிலைமையை பொது வாழ்வில் சில பேர் ஏற்படுத்தி விட்டார்களே! இப்படிப்பட்ட புகார்ப் புழுதி கிளப்பப்பட்டு விட்டதே! இருந்தாலும் இந்த அரசு துணிச்சலோடும்,
நேர்மையோடும், நிதானத்தோடும் இப்படிப்பட்ட விசாரணைக்குழு போட முன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொன்னார்கள்.
இப்படித்தான் இன்றைக்கு அந்த விசாரணைக்குழு போடுவதற்கான சட்டத்தை, அந்த வரைவினை நாம் கொண்டு வந்திருக்கிறோம். நான் இன்னும்கூடச் சொல்வேன் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போலத் திருத்தங்கள் இன்னின்னவை தேவை என்பதை எடுத்துச் சொல்லி அவைகளைக் கலந்து ஆலோசிப்பதற்கு நல்ல வாய்ப்பினை அளிக்க சட்ட அமைப்புச் சீருக்கு உதவியாக இருப்பது தான் இங்கே இருக்கிற ஸ்தாபன காங்கிரசானாலும், சுதந்திரக் கட்சியானாலும், நம்முடைய ஆளும் காங்கிரசானாலும், கம்யூனிஸ்ட் கட்சியானாலும், மற்றக்கட்சிகளுடைய பொறுப்பாக இருக்க வேண்டுமென்று இங்கே எடுத்துக் காட்டி...
விரும்புகிறேன்.
நமது எதிர்ப்பு
விவசாய வருமான வரியைப் பற்றி இங்கே சர்ச்சை எழுந்தது. திரு சாமிநாதன் அவர்களும், திரு நாராயணசாமி அவர்களும் இப்போது பேசிய நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். இந்த விவசாய வருமான வரி தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளைப் பாதிக்கக்கூடும் என்கிற ஒரு கருத்தை நான் ஏற்கெனவே எடுத்துச் சொல்லியிருக்கிறேன், டில்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலும் கூட விவசாய வருமான வரியை அவர்கள் சேர்த்துக் கொள்வதற்கு மாநிலச் சார்பாக நான் மறுப்புத் தெரிவித்திருக்கின்றேன்.
அதற்குப் பிறகும் விவசாய வருமான வரி இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் காண்கிறோம். ஆகவே விவசாயிகளுடைய ஊக்கத்தை இது இங்கே பாதித்து விடுமோ என்ற அச்சம் இருக்கிற காரணத்தினால், ஒருவேளை மத்திய அரசு இதைக் கைவிடக்கூடும். அப்படிக் கைவிடாவிட்டால் நாம் மத்திய அரசிடத்திலே உரிமையோடு கேட்டால், இங்கே இருக்கிற விவசாய வருமான வரியை வைத்துத்தான் நீங்கள் உங்களுடைய வரியைப் பெருக்கிக் கொள்கிறீர்கள்; வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறீர்கள்!
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் இப்போது போடப்பட்டிருக்கிற இந்த விவசாய வருமான வரியில் இப்போதுள்ள நில—விவசாயம் அல்லாத வருமானம் 5 ஆயிரம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு விவசாயத்தில் எவ்வளவு வருமானம் வந்தாலும் வரி கிடையாது. மத்திய சர்க்காருக்கு வரி கிடையாது. விவசாயிகளுக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் மாநில சர்க்காருக்கு வரி இருக்கிறது. ஆனால் 5 ஆயிரம் ரூபாய் தான்
விவசாயம் அல்லாத வருமானம் என்றால் அவர்களுக்கு விவசாயத் துறையில் இருந்து வரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 6 ஆயிரம் ரூபாய் என்றால் மத்திய அரசிற்கு வரி தர வேண்டும். விவசாயம் இல்லாத வருமானம் 6 ஆயிரம் என்றால் வரி தர வேண்டும். 6 ஆயிரம் ரூபாய்க்கு 110 ரூபாய் வரி தர வேண்டும், வருமான வரி. அந்த 6 ஆயிரம் ரூபாயோடு விவசாய வருமானம் 5 ஆயிரம் சேர்ந்தால் 11 ஆயிரம் ரூபாயானால் அதிலே சிலாப் சிஸ்டம் அமைந்து 187 ரூபாய் வரி தர வேண்டும்.
6 ஆயிரம் ரூபாய் விவசாயம் அல்லாத வருமானம் உள்ளவர்கள் 110 ரூபாய் வரி கொடுத்தார்கள். இப்பொழுது விவசாயத்திலே அவர்களுக்கு 5 ஆயிரம் வருமானம் வருமானால் 110 கொடுத்தவர்கள் 187 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆக 77 ரூபாய் அதிகமாக வரி கொடுக்க வேண்டும். இது இங்கே இருக்கிற விவசாயத்தினுடைய அடிப்படையில் போடப்படுகிற வரி என்ற காரணத்தினால் இதைக் கணக்கிலே எடுத்து அந்த 77 ரூபாயைத் தமிழ் நாட்டிற்குக் கொடுத்து விடுங்கள் என்று நாம் தமிழ்நாடு அரசு சார்பாக மத்திய அரசை வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மத்திய அரசும் இது வருகிற காரணத்தினால் தானே 110, 187 ஆக ஆகிறது என்பதை மனத்திலே வைத்து ஆவன செய்யுமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
தியாசாபிகல் சொசைட்டி விவகாரம்
திரு வசந்தபாய் அவர்கள் பேசுகிற நேரத்தில் தியாசாபிகல் சொசைட்டியைப் பற்றிச் சொன்னார்கள். அந்தச் சொசைட்டி ஏற்கெனவே வைத்துக் கொண்டிருக்கிற நிலம் 296 ஏக்கரா. அந்த 296 ஏக்கராவில் 106 ஏக்கரா நிலத்தை வீட்டு வசதி வாரியம் எடுத்துத் தென் சென்னை வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டலாம் என்று 71-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அரசு அணுகியது. அந்த நிலத்தைத் தியாசாபிகல் சொசைட்டியில் சங்கத்தினர் கொடுக்க மறுப்புத் தெரிவித்தார்கள்.
மறுப்புத் தெரிவித்ததும் அதைப் பற்றி மாநில அரசு பரிசீலனை தொடங்கியவுடன் என்ன செய்தார்கள் என்றால், அப்போது நடந்த வேலைதான் மிகுந்த சங்கடமானது. வீட்டு வசதி வாரியத்திற்கு அதைக் கொடுக்கக் கூடாது என்று மறுப்புத் தெரிவித்து விட்டு இடையிலே என்ன செய்தார்கள் என்றால் 56-1; 56-2 என்கிற சர்வேயில் 1½ கிரவுண்டில் இருந்து 3 கிரவுண்டு வரை 191 கிரவுண்டுகளாக மனை ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வீதம் சென்னையிலே உள்ள தனிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு, சென்னை ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்திற்கு விற்றுப் பத்திரம் ஒன்றினை எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
வீட்டு வசதி
வாரியம் அதைக் கையகப்படுத்துகிற நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள 4—6—1971 முதல் 8—6—1971-க்குள் தனிப்பட்ட நிறுவனமான ரியல் எஸ்டேட்டுக்கு அவசர அவசரமாகப் பத்திரம் ஒன்றினை எழுதிக் கொடுத்து கலெக்டர் மூலம் நமக்குத் தெரிய வந்தது. இது உண்மையா அல்லவா என்பதற்கு அத்தாட்சி சொல்ல வேண்டுமானால், அந்த ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு ஒரு முறையீடு செய்து கொண்டார்கள் ஜூலை 1972-ல்.
என்ன முறையீடு என்றால், வீட்டு வசதி வாரியம் அந்த சொசைட்டியினுடைய நிலத்தைக் கையகப்படுத்த உத்தேசித்து இருக்கிறதாம்; அதிலே நாங்கள் 191 கிரவுண்ட் நிலத்தை வாங்கி இருக்கிறோம். அதை விட்டு விட்டுக் கையகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர்கள் அரசுக்கு ஒரு முறையீட்டைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே தான் இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு இருக்கிற சங்கடத்தை, தயக்கத்தை, மறுப்பைத் தெரிவிக்கிற நேரத்தில்—அரசு அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிற நேரத்தில்—இடையில் 191 கிரவுண்டுகளை விற்று விட்டிருப்பது என்பது சரியானதல்ல.
ஒரு பெரிய புனிதமான சொசைட்டி என்று சொல்கிற இந்த சொசைட்டி சார்பாக இந்தத் தவறு நடைபெற்று இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
**திரு கே. ராஜாராம் :—** அவர்கள் வாங்கினதா இந்த நிலம்? அல்லது சர்க்கார் அசைன் பண்ணினதா?
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :—** அது பழைய நிலம். அந்த விவரங்கள் அவ்வளவாக எனக்குத் தெரியாது.
திண்டுக்கல் தேர்தல்
கடைசியாகத் திண்டுக்கல்லைப் பற்றிச் சொன்னார்கள். திண்டுக்கல் தேர்தலுக்குத் தேதி வைக்கவில்லை. முதலிலேயே திண்டுக்கல்லில் திராவிட முன்னேற்றக் கழகம் அழிந்து விடும், தோற்று விடும், கவிழ்ந்து விடும் என்று எல்லாக் கட்சிகளும் சொன்னார்கள். ஆளும் காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, எல்லாக் கட்சிக் காரர்களும் சொன்னார்கள். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு சாமிநாதன் தன்னைச் சொல்லவில்லை என்று வருத்தப்படுகிறார்.
தோற்று விடும், தோற்று விடுமென்றார்கள். பிறகு கொஞ்ச நாளுக்குப் பிறகு, 10 நாள் பரபரப்பு அடங்கிய பிறகு, திண்டுக்கல்லிலே தவறான வாக்குகள் பதிவாகி விட்டன என்று சொன்னார்கள்.
நான் சட்டப்பேரவையிலே சொன்னேன். ஒரு இலட்சம் வாக்குகள் தவறான வாக்குகள் என்று சொன்னார்கள். ஒரு இலட்சம் வாக்குகள் இல்லை. மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள். அந்த வாக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன. நாகர்கோவில் தேர்தலிலே கிட்டத்தட்ட 50 ஆயிரம் சேர்க்கப்பட்ட வாக்குகள், உப தேர்தலுக்காகச் சேர்க்கப்பட்டன. அதைப் பற்றியெல்லாம் பிரச்சினை எழவில்லை. யாரும் எழுப்பவில்லை. ஆனால் இங்கே 11 ஆயிரம் வாக்குகள் சேர்க்கப்பட்ட நேரத்தில் இவ்வளவு பெரிய பிரச்சினையாகி இருக்கிறார்களே என்று நான் சட்டசபையிலே கூட எடுத்துச் சொன்னேன்.
இதற்காக அங்கிருந்து ஒரு அதிகாரிகூட வந்தார். யாரும் எதிர்க்கவில்லை வந்ததை. தாராளமாக வரட்டும், வந்து பரிசீலிக்கட்டும் என்று விட்டுவிட்டோம். அவர்களும் வந்தார்கள். நிருபர்கள் கேட்டார்கள். ஒரு இலட்சம் வாக்குகள் தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதாக நிருபர்கள் கேட்டார்கள். கேட்டதற்கு அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார்:—ஒரு இலட்சம் வாக்குகள் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர்கள், முகவரிகள் இருக்க வேண்டுமே; அவைகளெல்லாம் எதுவும் இல்லையே என்று அவர்கள் சொன்னார்கள்.
அதற்கு மேல் அவர் சொன்னால் அரசியலாகிவிடும் என்பதற்காக—ஒரு அதிகாரி எந்த முறையிலே சொல்ல வேண்டுமோ அந்த முறையிலே அதிகாரி சொன்னார்; ஒரு இலட்சம் வாக்குகளுக்கு முகவரி கிடையாது, பெயர் கிடையாது என்று சொன்னார். அதற்குப் பிறகும் எனக்கு உள்ளபடியே வருத்தம்; நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர், திண்டுக்கல்லில் ஒரு கூட்டத்தில் பேசுகிற நேரத்தில், அவர்களுடைய கட்சித்தலைவர்களோடு சேர்ந்து கொண்டு பேசுகிற நேரத்தில், ஏதோ வாக்காளர் பட்டியலில் தவறு நடந்து விட்டதாகச் சொல்கிறார்கள் என்றால்—உள்ளபடியே நான் வேதனைப்படுகிறேன்.
கேட்டால் திரு சாமிநாதன் அவர்கள் சொன்னது போல சொல்லக் கூடும்—என்னுடைய சூழ்நிலை அப்படி நான் சொன்னேன் என்று அவர்கள் சொல்லக் கூடும். 11 ஆயிரம் பேரில் 4 பேர், 5 பேர், 10 பேர் ஏதோ தவறு செய்திருப்பார்களானால் அதற்காக அவர்களுடைய நாளை நீட்டித்துக் கொடுத்திருக்கிறார்கள். நாளும் நீட்டிக்கப் பட்டு அதுவும் அறிவிக்கப்பட்டது. தவறு இருந்தால் திருத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து பிறகும் இப்படித் தேவையில்லாத ஒரு பிரசாரம் செய்வது முறையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் இதைச் சொல்லுகிறோம். ஆட்சேபண மனுக்கள் வந்திருப்பது சட்ட அமைச்சர் சொல்வது 300 மனுக்கள் தான். இப்படி 11 ஆயிரம் என்பதில் 30
மனுக்கள் தான் வந்திருக்கின்றன. ஆட்சேபண மனுக்கள் இருந்தால் கொடுங்கள் என்று நாள் நீட்டிக்கப்பட்டது.
**திரு கே. ராஜாராம் :—** ஆட்சேபண மனுக்கள் கொடுத்தவர்கள் நேரில் வந்து சொன்னதைத் தான் நான் சொல்கிறேனே தவிர நானாக இட்டுக் கட்டிக் சொன்னதில்லை. நேரில் வந்து அவர்கள் பொறுப்போடு சொன்னதைத் தான் நான் எடுத்துச் சொன்னேனே தவிர சொல்லாததை நாங்களாகச் சொல்வதில் அர்த்தமில்லை. சட்ட அமைச்சர் சொல்கிறார்கள் 300 ஆட்சேபண மனுக்கள் வந்திருக்கின்றன என்கிறார்கள். என்னிடம் நேரில் வந்து 4, 5 பேர் சொன்னார்கள், இன்னின்ன குறைகள் ஏற்பட்டிருப்பதாக.
அதைத்தான் நான் எடுத்துச் சொன்னேனே ஒழிய வேறு இல்லை.
மாற்றம்!
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :—** பிறகு அதிகாரிகளையெல்லாம் மாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். திருச்சியிலே கூட அதிகாரி மாற்றப்பட்டிருக்கிறார் ஒரு வாரத்திற்கு முன்பு. சென்னையிலே போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள் ஒரு வாரத்திற்குள்ளாக. ஆகவே அதிகாரிகளை மாற்றுவது இயல்பாக எப்போதும் நடைபெறுகிற காரியமேயல்லாமல் வேறல்ல! இன்னும் தேர்தலுக்குத் தேதியே வைக்க வில்லை. எந்த விதமான காரியமும் நடைபெறவில்லை.
அதற்குள்ளாகத் திண்டுக்கல், கள்ள வாக்கு, இலட்சம் வாக்கு, தவறான வாக்கு என்றெல்லாம் சொல்லுவதால் பொறுப்பான அரசியல் கட்சிகளை நடத்த முடியாது.
இதில் எனக்கு இன்னொரு வேடிக்கை. நம்முடைய திரு பொன்னப்பநாடார் பேரவையிலே சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களெல்லாம் சொல்லுகிறார்கள். அவர்களுடைய ஏடுகளெல்லாம் எழுதுகின்றன. மத்திய சர்க்காரிலிருந்து போலீஸ் வர வேண்டும் தேர்தல் நடத்த. மத்திய சர்க்கார் அதிகாரிகள் வந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று, திடீரென்று இவர்களுக்கு மத்திய சர்க்கார் பற்றி எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
அதே மத்திய சர்க்கார் நடத்திய தேர்தல்தான் 71-ஆம் ஆண்டிற்கான தேர்தல். இப்போது இருக்கின்ற ஸ்தாபன காங்கிரஸ் காரர்களெல்லாம் சேர்ந்து கொண்டு பேசினார்கள். அதிலே ஒரு ரசாயன மையை வைத்து விட்டார்கள். ரஷ்யாவிலிருந்து அந்த மை வந்தது. ஆகவேதான் ஜெயித்து விட்டார்கள் என்று சொன்னார்கள். இப்போது இவர்கள் அழைப்பதற்கு என்ன காரணம். அவர்கள் வந்தால் அந்த மையோடு வர மாட்டார்களா? என்ன காரணம்? எனக்குப் புரியவில்லை,
இப்படி எதற்கெடுத்தாலும் மாநிலத்தினுடைய உரிமைகளைக் கொண்டு போய் நாமே வலுவினிலே மத்திய சர்க்காருடைய கையில் கொடுப்பது முறையானது அல்ல. மத்திய சர்க்காருக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றன. சில பொறுப்புக்களை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் கேட்கின்ற மாநில சுயாட்சியில் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கு, இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு, இந்தியாவினுடைய பலத்திற்கு, ஊறுதேடாத வகையில் பொறுப்புக்கள், அதிகாரங்கள், உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்று சொல்லுகிறோம்.
அதே நேரத்தில், இன்றைக்கு இருக்கின்ற நிலைமைகளை நாம் உணர்ந்து கொள்ளவும், அந்த நிலைமைகளுக்கேற்ப நடக்கவும் தயாராக இருக்கின்றோம். வேண்டுமென்றே, எதற்கெடுத்தாலும் மத்திய சர்க்கார் வரவேண்டும், மத்திய சர்க்கார் அதிகாரி வர வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தால், அது மாநில உரிமைகளைத் தாமே குழி தோண்டி புதைப்பதற்குச் சமமாகிவிடும்.
திராவிட முன்னேற்றக்கழகமே இந்த உலகம் உள்ளளவும் ஆண்டு கொண்டு இருக்கப்போகிறது, வேறு கட்சி இங்கே வரவே வர முடியாது என்ற எண்ணத்திலே, தவறுக் கருத்துக் கொண்டு, மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று நான் மாண்புமிகு எதிர்க் கட்சியினுடைய தலைவரையும் கேட்டுக் கொள்வேன். காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்வேன். ஆகவே மாநிலத்தினுடைய உரிமைகள் முக்கியமாக இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காகத்தான் நான் இங்கு இந்த நிதி நில அறிக்கையிலே நம் உரிமைகள் எந்தெந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன என்பதை விவரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
இந்த அறிக்கையின் மீது, இந்த மன்றத்தினுடைய நல்லறிவு வாய்ந்த பெரியவர்கள், சான்றோர்கள், தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, இந்த அரசினுடைய காரியத்திற்காக ஊக்க உணர்ச்சி தருகின்ற வகையிலே உதவியதற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவில் முடிப்பதற்கு முன்பு நம்முடைய அடிகளார் அவர்கள் ஆலயப் பணியாளர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய பராங்குசம் அவர்கள் காங்கி மஸ்தூர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள், தொடர்புடைய அமைச்சர்கள் இருவரும் விரைவிலேயே கலந்து பேசி முடிவெடுத்து, பேரவையிலும், மேலவையிலும் நல்ல முடிவுகள் அறிவிப்பார்கள் என்று அவர்கள் இருவருக்கும் சொல்லி, இந்த அளவிலே முடிக்கின்றேன்.
வணக்கம்.
