உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

சட்டமன்ற மேலவையில்

பகுதி 1 · 1 / 3

சட்டமன்ற மேலவையில்

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** மாண்புமிகு மேலவைத் தலைவர்களே, இந்த மன்றத்தில் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் மீது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உட்பட 42 உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை வழங்கியிருக்கின்றார்கள். இந்த அவையிலே மொத்தமுள்ள 62 உறுப்பினர்களில் 42 உறுப்பினர்கள் கருத்துக்களை வழங்கி, இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் நல்ல பல யோசனைகளையும், நாட்டிலே இருக்கிற நிலைமைகளையும் இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அவர்களுடைய உரையைத் தொடங்கும்போது இந்த நிதிநிலை அறிக்கை வைக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தது என்று குறிப்பிட்டு, ஆனால் இடையிலே இரண்டு நாட்களாக ஆசிரியர்களுடைய கிளர்ச்சியின் காரணமாக அமைதியிழந்த ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். அவர்களுக்கு இந்த ஆசிரியர்கள் கிளர்ச்சி பற்றிய எல்லா உண்மைகளும் நிச்சயமாகத் தெரியும்.

நேற்று நம்முடைய நண்பர் ஆறுமுகசாமி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். எதிர்க்கட்சிகளானாலும், ஆளும் கட்சிகளானாலும் மக்களைப் பயிற்சியளிக்கின்ற முறையிலே, மக்களுக்கு நல்ல விஷயங்களை விளக்குகின்ற முறையிலே பாடுபட வேண்டுமென்று சொன்னார்கள். அவருடைய பேச்சைப் பொறுத்த வரையில், நேற்றைய தினம் அவர்கள் இந்தியாவை ஆளுகின்ற கட்சியின் சார்பிலும் இல்லாமல், அல்லது இங்கே எதிர்க்கட்சியினுடைய சார்பிலும் இல்லாமல், கிட்டத்தட்ட திரு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் நிலைமையில் இருந்து, சில பிரச்சினைகளை ஆராய்ந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர், ஆசிரியர்கள் கிளர்ச்சியினுடைய உண்மை விவரங்கள், அனைத்தும் தெரிந்து

கொண்டிருந்தும் கூட, ஆசிரியர்களுடைய உண்மையான பிரதிநிதிகளோடு முதலமைச்சரும், கல்வியமைச்சரும் பேச வேண்டுமென்று சொன்னது கிளர்ச்சி செய்கின்ற .........

**திரு கே. ராஜாராம் நாயுடு :** தவறான அர்த்தத்திற்குப் போய் விடக்கூடாது முதல்வர் அவர்கள். அவர்களுடைய பிரதிநிதி என்று ஒப்புக் கொள்கிறவர்களே அவர்கள் அனுப்ப வேண்டும் என்று சொன்னேன்.

**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** அவர்கள் சொன்னது, ஒரு வேளை நாங்கள்—நானும், கல்வியமைச்சரும்—உண்மையான பிரதிநிதிகளோடு பேசவில்லையோ என்கிற ஒரு தவறான பொருளைக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் குறிப்பிடுகின்றேன். 5-ந் தேதியன்று என்னையும், கல்வியமைச்சரையும் சந்தித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களுடைய சங்கத்தின் தலைவரும், பொதுச் செயலாளரும், அவர்களோடு கூடிய ஒரு சில நிர்வாகிகளும்தான் சந்தித்திருக்கிறார்கள்.

இதைவிட உண்மையான பிரதிநிதிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கின்ற வேடிக்கை; கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கிளர்ச்சிகள் நடைபெறுவது என்பது ஒரு முறை. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இருக்கின்ற துர்ப்பாக்கியமான சூழ்நிலை—கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகும், நம் பெருமைக்குரிய இதுபோன்ற மாமன்றத்தில் அறிவித்து விட்ட பிறகும், அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்று இந்த மாமன்றத்தில் உள்ள மிகத் தகுதி வாய்ந்த பெரியவர்களை எதிரில் வைத்துக்கொண்டு உறுதியாகச் சொன்ன பிறகும், எங்கள் ஆறு கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை, தீர்க்கப்படவில்லை என்று ஆசிரியர்களுடைய சங்கத்தினர் செய்திகள் வெளியிடுவதும், அவைகளைப் பற்றி நாட்டிலே இருக்கின்ற நல்லவர்கள் எந்த விதமான கருத்தையும் அறிவிக்காமல், ஒரு வேளை இந்தக் கிளர்ச்சி நடந்தால் இது ஒரு வகையில் அரசியல் இலாபமாக இருக்கட்டும் என்கிற எண்ணத்தில் மெளனமாக இருப்பதும், நம் எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்ன நாட்டின் எதிர்கால நன்மைக்கு உகந்ததல்ல என்பதை நான் மிகுந்த பணிவன்போடு தெரிவித்துக்கொள்வேன்.

சில நல்ல காரியங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், கிளர்ச்சி நடத்துகிறார்கள் என்றால் அந்த ஆசிரியர்களைக் தூண்டிவிடுகின்றவர்கள் அல்லது ஆசிரியர்கள் சங்கத்திலே எப்படியோ வந்து புகுந்துவிட்டவர்கள், அதன் மூலமாக விளம்பரம் தேட விரும்புகிறவர்கள் அல்லது மேற்படி ஆசிரியர்களை அவர்கள் பால் கவர்ந்து கொள்ள, இழுத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

நடனமாடிய எமன்

இது எப்படி இருக்கிறது என்றால் நேற்றையத் தினம், நம்முடைய அவையிலே இருந்து மறைந்த கலைஞர் டி. கே. சண்முகம் எழுதிய “எனது நாடக வாழ்க்கை” என்ற புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சுமார் 40 ஆண்டுக் காலத்திற்கு முன்பு விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணறு என்ற இடத்திற்கு அவர் மிகச் சிறுவனாக இருந்தபோது நாடகம் ஆடுவதற்கு அந்த நாடகக் குழுவோடு சென்றாராம்.

அவர் மிகச் சிறியவனாக இருந்து நாரதர் வேடம் போட்டுக்கூடிய நிலைமை அப்போது. அந்த ஊரிலே மின்சார விளக்குகள் கிடையாது. அரிக்கேன் விளக்குகள், பெட்ரோமாக்ஸ் விளக்குகள், இவைகளை வைத்துக்கொண்டு, நாடகம் நடத்தியிருக்கிறார்கள் ஏராளமான கூட்டம். கூட்டம் எப்படி வந்தது என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். சுவரொட்டிகள் அச்சிட்டோ, துண்டு விளம்பரங்கள் செய்தோ அல்லாமல், இரவு 8 மணிக்கு அந்த ஊரில் பொது இடத்திலே ஒரு வெடியுண்டு வைத்து வெடிப்பார்களாம்.

படக் என்று ஓசை கேட்டது பக்கத்து ஊரில் உள்ளவர்களெல்லாம் அங்கே நாடகம் நடப்பதாக அறிந்து குழுமி விடுவார்களாம்.

ஒருநாள் நாடகம் ஆரம்பமாகி நீண்ட நேரம் ஆகியும் மக்களிடமிருந்து எந்த ரசனையும் வரவில்லையாம். கைதட்டலும் இல்லையாம். நாடகத்தினுடைய அதிபர், டி. கே. சண்முகம் அவர்களை அழைத்து “நீ சீனுக்குப் போனால் வழக்கமாகக் கைதட்டு வரும். அதைப் போல நீ சீனுக்குப் போ” என்று சொல்லி நாரதரை வேடிக்கைக் காட்டிக்கு அனுப்பினாராம்.

இது கை தட்டலை எதிர்பார்த்துத்தான். நல்ல பாட்டுப் பாடிக்கொண்டு வந்தார். கைதட்டல் எதுவும் இல்லை. அயர்ந்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி விட்டார்.

அடுத்த காட்சி எமதர்மன் காட்சி. எமதர்மன் வழக்கத்திற்கு மாறாக நடனம் ஆடிக்கொண்டு காட்சியிலே பிரவேசித்தாராம். உடனே நாடக ரசிகர்கள் எல்லாம் கைதட்டி, ஆரவாரத்தோடு வரவேற்றார்களாம். அது என்ன என்பதை டி. கே. சண்முகம் விளக்கியிருக்கிறார்கள். “என்றைக்கும் நடனம் ஆடாத எமதர்மன் திடீரென நடனம்

ஆரம்பித்தவுடன் எல்லோரும் ரசித்தார்கள்” என்று அந்த வாழ்க்கைக் குறிப்பிலே அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதைப் போல நல்ல பாட்டுப் பாடுகிற நாரதர் வந்தால் ரசிக்கின்ற காலமாக இல்லாமல், ஆட்டம் ஆடுகிற எமதர்மன் வந்தால் சில பேர் ரசிப்பார்கள் என்று நிலைமையை எண்ணி, இன்றைக்கு, ஆசிரியப் பெருமக்கள் இதுபோன்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நான் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆசிரியர்கள் கிளர்ச்சியைப் பற்றித் தவறான கருத்துக்களை யாராவது கொண்டிருப்பார்களானால் அவர்களுக்கும் சொல்ல மெத்தவும் கடமைப்பட்டிருக்கின்றேன்.

வரிக்கு வாய்ப்பில்லையா?

இந்த நிதிநிலை அறிக்கையில் நம்முடைய நண்பர் சாய்நாதன் அவர்கள் பேசும்போது வரியில்லா பட்ஜெட் தயாரித்திருப்பதற்காக மகிழ்ச்சி அடைய முடியாது என்று குறிப்பிட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களும் அதைத்தான் சொன்னார்கள். ஆளும் கட்சியின் சார்பிலோ, அல்லது

தோழமைக் கட்சிகளின் சார்பிலோ வரியில்லாமல் இந்த வரவு செலவுத் திட்டம் அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்பது தவறல்ல. அதே நேரத்தில் இந்த ஆண்டு வரியில்லாத நிதிநிலை அறிக்கை ஒன்று கொடுத்துவிட்ட காரணத்தினாலேயே என்றைக்குமே வரி போடாமல் இருந்து விடுவோம் என்பதும் சரியல்ல. வரி போடுவதற்கே இடம் இல்லை என்று சாய்நாதன் அவர்கள் சொன்னார்கள். கொஞ்சம் நிதி இலாகாவும் மற்ற இலாகாக்களும் ஆழ்ந்து கவனித்தால், தேட ஆரம்பித்தால், இடம் கிடைக்காமல் போய் விடாது, ஆனால் அப்படிக் கிடைக்கின்ற இடங்கள் தாங்கக் கூடிய இடங்களாக இருக்கின்றதா என்று பார்த்துத்தான் இந்த அரசு வரியைப் போடும் என்பதையும், நான் தெரிவித்துக்கொள்வேன்.

தனிநபர் வருமானம்

அவர்கள் ஒரு கணக்கைச் சொன்னார்கள். தனிநபர் வருமானம் 397 ரூபாய். முன்பு ரூ. 370-ஆக இருந்தது. அப்போது தனிநபர் வரி செலுத்த வேண்டியது ரூ. 39-ஆக இருந்தது. இப்போது ரூ. 70 அல்லது 75-ஆக ஆகிவிட்டது என்று சொன்னார்கள். இதெல்லாம் ஒரு பெருக்கல், வகுத்தல் கணக்கேயல்லாமல், தனிநபர் வருமானம் ரூ. 397 என்று சொல்லுகின்ற நேரத்தில் தமிழ்நாட்டிலேயிருக்கின்ற 4 கோடி மக்களும், ஒவ்வொருவரும் 397 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

நானே, திரு சாமிநாதனே அல்லது இன்னொரு சாதாரணமாக இருக்கக்கூடியவரையோ எடுத்துக்கொண்டு, என்னுடைய வருமானம் 20 ரூபாய், சாமிநாதன் வருமானம் 10 ரூபாய், இன்னொருவருடைய வருமானம் 3 ரூபாய் என்று கணக்கிட்டு, 20+10+3=33 ஆக மூன்று பேருக்குமாக 11 ரூபாய் என்றால் எனக்கு 9 ரூபாய் குறையலாம், சாமிநாதனுக்கு ஒரு ரூபாய் குறையலாம்; ஆனால் அந்த 3 ரூபாய் சம்பாதிப்பவருக்கு 8 ரூபாய் அதிகமாகிவிட்டது என்று பொருளல்ல. அதைப் போலவேதான் 75 ரூபாய் தலைக்கு இப்போது வரி ஏறிவிட்டது என்று சொன்னாலும், அப்படித் தனிநபர் வருமானத்தில் 397 ஒரு அளவாக 4 கோடி மக்களிலே ஒவ்வொருவருக்கும் இல்லையோ, அதைப் போல வரி 4 கோடி மக்களில் ஒவ்வொருவருக்கும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்த நேரத்திலே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

வரியில்லாத வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்த நீங்கள் ஏன் பங்களாதேஷ் வரியைத் தூக்கியிருக்கக் கூடாது என்று நம்முடைய நண்பர் தாமோதரன் அவர்களும், பெரியவர் கிருஷ்ணசாமி நாயுடு அவர்களும் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர்களும் கேட்டார்கள். பங்களாதேஷ் வரியைப் பொறுத்தவரையில், போடுகிற நேரத்தில் கூட, இதை பங்களாதேஷ் வரி என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் இப்படியொரு நேரம் வருமென்று முன்

கூட்டியே தெரிந்து, பாதுகாப்புக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் என்று பொதுவாகத்தான் இந்த வரியை நாம் போட்டோம்.

ஆகவே, இப்போது பாதுகாப்பும் தேவை; வளர்ச்சிப் பணிகளும் தேவை. இந்த மாநிலத்திலும், மைசூர் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும், இந்த வரி தொடர்ந்து இருந்து வருகிறது. பஞ்சாபில் இதை எஜுகேஷனல் செஸ், கல்வி செஸ் என்று மாற்றியமைத்திருக்கிறார்கள். இராஜஸ்தானத்தில் வரட்சி வரி என்று மாற்றியமைத்திருக்கிறார்கள். பங்களா தேஷ் வரியை மத்திய அரசு எடுத்துவிட்டார்களே, இங்கே ஏன் எடுக்கவில்லை என்று சில பேர் கேட்டார்கள்.

மத்திய அரசிலே எடுத்த முறைப்படி எடுப்பதானால், இங்கேயும் எடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அங்கே ரூ. 290 கோடிக்கு மேல் வரியைப் போட்டுவிட்டு பங்களா தேஷ் வரியை எடுத்தார்கள். இங்கேயும் இந்த அவை அனுமதிக்குமேயானால், அப்படி வேறொரு வரியை அறிமுகப்படுத்திவிட்டு, பங்களா தேஷ் வரியை எடுக்க இயலும். இப்போதைக்கு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். அதிலே மத்திய அரசுக்கு ஒரு பங்கைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஆகவே எடுத்துவிட்டால் என்ன என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டுக்கொள்வதற்காக மத்திய அரசுக்கு இந்தப் பங்கைக் கொடுக்காமல், நாமே அதைச் சேர்த்து, அடுத்த ஆண்டிலிருந்து எடுத்துக்கொள்வது என்கிற முடிவுக்கு இந்த அரசு வந்திருக்கிறது என்பதை மாத்திரம் நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொலைதூரப் பேருந்தில் வருவாய்

எதிர்க்கட்சித் தலைவர்கள் இரண்டொரு வேறுபாடுகள் பட்ஜெட் மெமோராண்டத்திலே இருப்பதாக எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அதைச் சரியாகக் கூர்ந்து கவனித்திருப்பார்களேயானால் அந்த சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்காது. ‘லாங் டிஸ்டன்ஸ் பஸ்ஸஸ்’, ‘டிஸ்ட்ரிக்ட் சர்வீஸ்’ ஆக இரண்டுக்கும் 1972-73 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ. 680 லட்சம் வருவாய் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருத்த மதிப்பீட்டில் இவற்றை இரண்டாகப் பிரித்து இப்போது நாம் போட்டிருக்கிறோம்.

அவர்கள் அதிலே பார்க்கத் தவறியதாக நான் எண்ணுகிறேன். லாங் டிஸ்டன்ஸ் சர்வீசில் ரூ. 620 இலட்சம் போட்டிருக்கிறது. பட்ஜெட் எஸ்டிமேட்டில் ரிவைஸ்ட் எஸ்டிமேட்டில் அதைப் பிரித்து லாங் டிஸ்டன்ஸ் சர்வீசில் ரூ. 462 இலட்சம், டிஸ்ட்ரிக்ட் சர்வீசில் ரூ. 362 இலட்சம் போட்டு ரூ. 825 இலட்சமாக அதிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பக்கம் 71-ல் அது குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆகவே, 1973-74 பட்ஜெட் எஸ்டிமேட்டில் அது ரூ. 10 கோடியாக உயருமேயல்லாமல் குறையாது என்பதையும் நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்வேன். 1972-73 எஸ்டிமேட்டில் ரூ. 680-ஐ எடுக்காமல் அப்படியே போட்டிருப்பதால் அதற்கு நேராக இருக்கிற 462 குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எண்ணிவிட்டார்களென்று நான் கருதுகின்றேன்.

இன்னொன்றைச் சொன்னார்கள். பஞ்சாயத்து யூனியன்களுக்கும்—ஊராட்சி ஒன்றியங்களுக்கும். நான் சென்ற ஆண்டு அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும் ரூ. 117 லட்சம் தான் ஒதுக்கியிருக்கிறீர்கள். பல கோடி ரூபாய் செலவு செய்யும் இந்த இலாகாவில் ரூ. 117 இலட்சம் ஒதுக்கியிருக்கிறீர்களே, இது நியாயமா” என்று அவர்கள் கேட்டார்கள்.

அதுவும் ஒருதவறான அடிப்படையிலே தான் அவர்கள் கேட்டதாக நான் விளக்க விரும்புகிறேன். ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த ரூ. 117 இலட்சம் கொடுத்திருப்பது புதிய பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு மாத்திரம் தான். ஊராட்சி ஒன்றியங்கள் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு இணை மானியங்கள் தருவதற்காகத்தான் இந்த ரூ. 117 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் ஊதியங்களுக்குத் தரப்படும் தொகை பக்கம் 101-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரூ. 35 கோடிக்கு மேல் கல்வி மானியத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தரப்படுகிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்வேன். ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அந்தத் தவறான கருத்துக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதற்காக இந்த விளக்கங்களை நான் அளித்தேன்.

இங்கே மாண்புமிகு உறுப்பினர் சுந்தரேசத் தேவர் அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். 1962-ல் ரூ. 5·84 கோடி போலீஸ் துறைக்குச் செலவழிக்கப்பட்டது. 1966-67-ல் ரூ. 8·45 கோடி ரூபாயாகச் செலவழித்து, இன்றைக்கு ரூ. 22·75 கோடி செலவழிக்கப்படுகிறது. போலீஸ்காரர்களுக்கு இந்த நாட்டில் ஏன் இவ்வளவு ஏற்றமென்று அவர்கள் கேட்டார்கள். இந்த ஏற்றம் படிப்படியாக வந்த ஏற்றமே தவிர வேறு அல்ல என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1959-60-ல் ரூ. 5 கோடி அளவில் ஒதுக்கப்பட்டது. அவர்கள் தவறாகச் சொன்னார்கள் ரூ. 8 கோடி என்று. அல்ல, 1966-67-ல் ரூ. 10 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஆக 7 ஆண்டுகளில் ரூ. 5 கோடி என்பது ரூ. 10 கோடியாக இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. அடுத்த 7 ஆண்டுகளில் அந்த ரூ. 10 கோடி—அவர்கள் சொன்ன ரூ. 22 கோடியாக அல்ல—ரூ. 20 கோடியாக, மீண்டும் இரண்டு மடங்குதான் உயர்ந்திருக்கிறதே

அல்லாமல் அதிகமல்ல. அவர்கள் ரூ. 22 கோடி என்று சொன்னது தீயணைப்புப் படைகளுக்குச் செலவழிக்கப்படுகின்ற ரூ. 2 கோடியைச் சேர்த்து அவர்கள் தவறாகச் சொன்னார்கள். இன்னும் தீயணைப்புப் படைகள் தேவை என்று நாட்டிலேயிருந்து முறையீடு வந்துகொண்டிருக்கிற நேரத்தில் அவைகளை நாம் நிச்சயமாகக் குறைப்பதற்கில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குழப்புவது யார்?

இந்த நேரத்தில் மக்களை நம்பிக்கைக்கும், பீதிக்கும் ஆளாக்காமல் வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் இருக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, ஆளும் கட்சிகளுக்கே இருக்கிறதாவென்று நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர்—பழைய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் கேட்கக்கூடும்; சுதந்திரக் கட்சியின் தலைவர் கேட்கக்கூடும்; முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கேட்கக்கூடும்; திரு ஏ. ஆர். தாமோதரன் அவர்களும், திரு ராஜா அய்யர் அவர்களும் கேட்கக்கூடும்.

ஆனால் நான் மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்வேன். மத்தியிலுள்ள அமைச்சர்கள் திடீர் திடீரென்று இங்கு நிலைமைகள் சீர்பட்டு வருகின்ற நேரத்தில் மக்களுடைய உள்ளத்தைக் குழப்புவதைப் போல ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.