சட்டப் பேரவையில்
பகுதி 7 · 7 / 7
கேரள நில உச்சவரம்புச் சட்டத்தைப் பொறுத்தவரையிலும்—விதிவிலக்குகள் தமிழ்நாட்டிலே எவை எவைக்கு அளித்திருக்கின்றோம்—கேரளத்திலே எவை எவைக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்பதை நான் ஆராய்ந்து பார்த்தேன்.
தமிழ்நாட்டிலே மாநில மத்திய அரசின் நிலங்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் நிலங்கள் விதிவிலக்கு. கேரளத்திலே மாநில மத்திய அரசின் நிலத்திற்கு விதிவிலக்கு.
தமிழ்நாட்டிலே அரசின் உத்தரவு பெற்ற தொழிற் சாலை, வாணிப நில நிறுவனங்கள்—விதிவிலக்கு. கேரளத்திலே தொழிற்சாலைகளும் வாணிப நிறுவனங்களும்—விதிவிலக்கு.
தமிழகத்திலே மலைத் தோட்டம் விதிவிலக்கு. கேரளத்திலே மலைத்தோட்டம் விதிவிலக்கு.
தமிழகத்திலே கோயில், மசூதி, மாதாகோவில், அற நிலையங்களின் நிலங்கள் விதிவிலக்கு. கேரளத்திலே கோயில், மசூதி, மாதாகோவில் நிலங்கள் விதிவிலக்கு.
தமிழ்நாட்டில் நிலங்கள் வைத்திருக்கும் ஆலயங்கள் கோயில்கள் 1—3—72-க்குப் பிறகு மேலும் நிலம் வாங்க முடியாது என்று இருக்கிறது. கேரளத்திலே இருப்பதாகத் தெரியவில்லை.
பழத் தோட்டங்கள், தோப்புகள் 1—7—59-ல் இருந்த நிலம் மட்டும் தமிழ்நாட்டிலே விதிவிலக்கு. கேரளத்திலே தனியார் காடுகள் விதிவிலக்கு.
பூதான நிலங்களுக்குத் தமிழ்நாட்டில் விதிவிலக்கு, கேரளத்திலும் விதிவிலக்கு.
தமிழ்நாட்டில் பல்கலைக் கழக நிலங்கள் விதிவிலக்கு. கேரளத்தில் பல்கலைக் கழக நிலங்கள் விதிவிலக்கு.
தமிழ்நாட்டில் கல்லூரிக்கு 40 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். உயர்நிலைப் பள்ளிக்கு 20 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். ஆரம்ப அல்லது உயர்தர ஆரம்பப் பள்ளிக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். மாணவர் விடுதிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், தொழிற் பள்ளிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், விவசாயப் பள்ளிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், அனாதை இல்லத்திற்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், பிற டிரஸ்டுகளுக்கு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இன்றைக்கு இருக்கிறது.
கல்வி நிலையங்கள், டிரஸ்டுகள் கேரளத்தில் விதிவிலக்கு.
ஆகவே உச்சவரம்பைப் பொறுத்தவரையில் கேரளாவிலிருந்து நாம் மிகவும் பின்தங்கிவிடவில்லை என்பதையும், சில விஷயங்களில் நாம் கொஞ்சம் முற்போக்காக இருக்கிறோம் என்பதையும் நான் நம்முடைய மணலி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
**திரு சுப்பு :** துணைத் தலைவர் அவர்களே, நாங்கள் சொல்வது எல்லாம் உச்சவரம்புச் சட்டத்தைப்பற்றி அல்ல. அந்தச் சட்டத்திற்குப் பின்னால் கொண்டுவரப்பட்ட லேண்ட் ரிஃபார்ம் ஆக்ட்ஸ் 1969-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 1970-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அமலுக்கு வந்து இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி நிலத்தை உழுபவன் அந்த நிலத்திற்கு உரிமையாளனாகிவிடுகிறான். இடைத்தரகர் வர்க்கமே எடுக்கப்பட்டிருக்கிறது.
கோயில் நிலமாக
இருந்தாலும் அவனுக்குச் சொந்தம் உண்டு. ஆனால் அதில் அந்த விதிவிலக்குகளில் எல்லாம் விடப்பட்டுப்போகின்றன. அந்தச் சட்டத்தைப்பற்றித்தான் நாங்கள் சொல்கிறோம். நீங்கள் அதைச் சொல்லவில்லை.
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** எல்லாம் சேர்ந்த சட்டத்தைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். இணைப்புச் சட்டம் பற்றித்தான் நான் சொல்கிறேன். குத்தகைதாரர் சட்டம்பற்றி விரிவாக விவாதிக்க இருக்கிறோம்.
திரு சுப்பு அவர்கள் கூடச் சொன்னார்கள். அங்கே குத்தகைதாரர்கள் சட்டத்திலே உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். நஷ்ட ஈடு அங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. முறைகள், வகைகள் எல்லாம் வேறுபாடாக இருக்கின்றன. குத்தகைதாரர்கள் சட்டம்பற்றி நாம் அதிகமாக விவாதிக்க இருக்கிறோம். அப்பொழுது பேசிக்கொள்ளலாம் என்பதால் இத்தோடு விட்டுவிட விரும்புகிறேன்.
நம்முடைய மணலி அவர்களுடைய பேச்சில் பெரும்பாலும், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு நிறைந்த அறிவுரைகளையெல்லாம் வழங்கினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘குன்றின் மேலிட்ட விளக்கு’ என்ற புத்தகத்தை நீங்கள் எல்லாரும் படிக்கவேண்டுமென்று திரு மணலி அவர்கள் சிபாரிசு செய்தார்கள். திரு மணலி அவர்கள் எப்பொழுது இப்படி மாறினார் என்று எனக்குப் புரியவில்லை. எந்தப் புத்தகமானாலும், ஒரு கட்சியை யானாலும், கடைசியிலே என்ன கருத்தைச் சொல்லி முடிக்கிறார்களோ அதுதான் அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர், அல்லது தலைவர், அல்லது எழுத்தாளர், அல்லது கட்சியை யாளரின் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
குன்றின் மேலிட்ட விளக்கு
‘குன்றின் மேலிட்ட விளக்கு’ என்ற புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் “திருப்பரங்குன்றம் மாநாடு கண்டவர்கள், அங்கனம் கூறத் துணியார். திராவிட நாட்டைத் திராவிடர்க்கும் திருப்படையொன்று உண்டு என்பதைத் திருப்பரங்குன்றம் மாநாடு காட்டிற்று! எங்கிருந்து கிடைத்தது இந்த எழுச்சி நிலை? ‘தம்பி’ எல்லாம் உன் வீரத்தின் விளைவு. எழுச்சியின் பயன். உழைப்பினில் விளைந்த உயர்வு. வாழ்த்து கூறேன் உன்னை.
வளர்க நின் ஆர்வம்! வெல்க திராவிடம்! அண்ணன் அண்ணாதுரை” என்று எழுதி முடிக்கிறார். இதை இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று திரு மணலி அவர்கள் சொல்வது எனக்குப் புதிராக இருக்கிறது. இதை
மீண்டும் படியுங்கள், இதன்படி நடவுங்கள் என்று திரு மணலி அவர்கள் ஏன் சொன்னார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
**திரு மணலி கந்தசாமி :** மாண்புமிகு கலைஞர் அவர்கள் ரொம்ப லாவகமாக எனக்கு ஒரு கேள்வி போட்டிருக்கிறார்கள். நான் குறிப்பிட்டது எல்லாம் அந்தப் புத்தகத்திலே பொது வாழ்வில் எப்படி யிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிற நீதிகளையெல்லாம் தி.மு.க. உறுப்பினர்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்பதுதானே தவிர, அந்தப் புத்தகம் பூராவையும் ஒப்புக்கொண்டதாகக் கூறவில்லை. இன்றைக்கு உங்களுடைய நிலைமையும் மாறியிருக்கிறது.
நீங்கள் திராவிட நாடு திராவிடர்க்கே என்று சொன்ன நிலையிலே எல்லாம் இன்றைக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாழ்விலே அதிலே குறிப்பிடப்பட்ட நீதிகள், ஒழுக்கம் இவைகளையெல்லாம் நீங்கள் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள் என்றுதான் சொன்னேன்.
**மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி :** பொது வாழ்விலே இருக்கிறவர்கள் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து அந்தக் கட்சியையே அழிப்பதற்கு முனையக்கூடாது என்ற கருத்தையும் ‘குன்றின் மேலிட்ட விளக்கு’ என்ற புத்தகத்திலே அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு உங்களோடு உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. உறுப்பினர் திரு கே. எம். சுப்பிரமணியம் அவர்கள் நான் ஏ.டி.எம்.கே.யில் சேர்ந்தபிறகு அண்ணா அவர்களின் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தேன் என்று சொன்னார்கள். நான் உள்ளபடியே ரொம்ப வருத்தப்படுகிறேன். படித்துப் பார்த்துவிட்டு அதனுள் கவரப்பட்டு ஒரு கட்சிக்குச் செல்வதுதான் முறையே தவிர, ஒரு கட்சியிலே சேர்ந்துவிட்டுப்பிறகு அந்தக் கட்சியினுடைய கொள்கை புனிதமானது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
அவர் எல்லாப் புத்தகத்தையும் படித்து இருப்பார் என்று கருதுகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில்—அவர் அதைப் படித்திருப்பாரோ என்னவோ எனக்குத் தெரியாது—அதிலே,
என்று எழுதியிருக்கிறார்கள் ‘ஆரிய மாயை’ என்ற புத்தகத்தில். அதை அவர்கள் படிக்கவில்லை என்று கருதுகிறேன். நல்ல பொருத்தமான அட்டையெல்லாம் போடப்பட்டு இருக்கிறது இந்தப் புத்தகம்.
முடிப்புரை
இந்த நிதிநிலை அறிக்கையில் நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சியின் தலைவர்களும், அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் எடுத்து வைத்த பல அரிய கருத்துக்களைப் பற்றியெல்லாம் நான் இங்கே நீண்ட நேரம் என்னுடைய விளக்கங்களை அளித்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும் அந்த நெருக்கடிகளையெல்லாம் சமாளிக்கின்ற அளவிற்கும், தமிழ்நாட்டுப் பெருமக்களுடைய ஒத்துழைப்பைப் பெறுகின்ற அளவிற்கும், நெருக்கடிகளை அலட்சியப்படுத்தாமல், அவைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை என்று உணர்ந்து செயல்படும் அளவிற்கும் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்திருக்கிறது என்பதையும் இந்தப் பதிலுரையில் நான் தேவையான அளவிற்குச் சுட்டிக்காட்டி யிருக்கிறேன்.
அந்த வகையிலே தங்களுடைய கருத்துக்களைச் சொன்னதன் மூலமாக இந்த நிதிநிலை அறிக்கையை, நிறைவுசெய்த எல்லாக் கட்சியின் தலைவர்களுக்கும், மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு இந்த அளவில் அமைகின்றேன்.
