உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 1

பகுதி 2 · 2 / 2

தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளருடைய நலன் மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். தொழிலாளருடைய வளமும், தொழிலாளருடைய நலமும் பாதுகாக்கப்பட்டால்தான், அவர்களுடைய உரிமைகள் ஒழுங்காக அளிக்கப்பட்டால்தான், தொழிலாளர்களுடைய வாழ்வில் நிம்மதி இருந்தால்தான், தொழில் துறையில் நாம் எதிர்பார்க்கிற உற்பத்தி பெருகவும், நாடு பொருளாதாரத்தில் முன்னேறவும் வழிவகை காண முடியும். இந்தியாவில் மண்ணியல், சுரங்க இயல், கனி இயல் ஆகியவற்றிற்கான சங்கத்தின் அறிக்கை கூறுகிறது, இந்தியத் தொழிலாளிக்கும் வேறு நாடுகளில் இருக்கிற தொழிலாளிக்கும் உள்ள திறமையைப்பற்றி.

அந்த அறிக்கையில், ஒரு நாளுக்கு ஒரு ஆங்கில நாட்டுத் தொழிலாளி 6 டன்னும், ஜெர்மானிய நாட்டுத் தொழிலாளி 8.99 டன்னும், அமெரிக்கத் தொழிலாளி 21.68 டன்னும், இந்திய தொழிலாளி 2.7 டன்னும்தான் அகழ்ந்து எடுக்கிறார்கள் என்று சுரங்க இயல், மண் இயல், கனி இயல் சங்கத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதை நான் சொல்லுவதற்குக் காரணம், இந்தியத் தொழிலாளி ஏன் இந்த அளவுக்குத் திறமைக்

குறைவாக உற்பத்தியை - அது மண் இயல், கனி இயல், சுரங்க இயல் துறையில் மாத்திரம் அல்ல, பஞ்சாலை ஆகட்டும், சணல் தொழிற்சாலையில் ஆகட்டும், அல்லது காகிதத் தொழிற்சாலையில் ஆகட்டும், படைப்புத் திறன் ஏன் இந்தியத் தொழிலாளிக்குக் குறைந்திருக்கிறது என்பதை ஆராயவேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான். அவனுடைய உடல் வலு சரியாக இல்லை. உடல் வலுவைப் பேணி பாதுகாக்கின்ற அளவுக்கு ஊதியம் இல்லை என்று காரணம் காட்டப்படுகிறது.

அதையும் உடனடியாக ஆய்ந்து அறிந்து அரசு அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய தினம் நெருக்கடி நிலைமையை உத்தேசித்து சிலபல தொழிலாளர்களுடைய கோரிக்கைகள், நியாயமான கோரிக்கைகளாக இருந்தால்கூட, அவைகளை நெருக்கடி நிலைமையிலே கூடுமான வரையில் ஒத்தி வைப்பது என்று தொழிற் சங்கங்களெல்லாம் முடிவு எடுத்திருக்கின்றன. அதற்கு தொழிலதிபர்களும் ஒத்துழைப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் தொழிலதிபர்கள் சொன்னபடி நடக்கவில்லை. நேற்றைய தினம் கூடிய தமிழ்நாடு இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகக் குழுவின் தீர்மானத்தை எடுத்துப் பார்த்தால் இந்த பல்வேறு வரிகளின் மொத்தச் சுமையும் ஏழை தொழிலாளர்கள் மீதே விழும் என்று குறிப்பிட்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ராஜ்யத்தில் தொழில் உறவு முறை மோசமடைந்து வருவதாக நிர்வாகக் கமிட்டி கருதி, தொழில் அமைதித் தீர்மானத்தைப்பற்றி தொழில் அதிபர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை என்று தமிழ்நாடு இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

கடைசியாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், சென்னையில் உள்ள பி. அண்ட் சி. மில்லில் சிக்கனச் சீரமைப்பைத் தொடர்ந்து, ஆட்குறைப்பு செய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டுவிட்டு, ஜவுளித் தொழில் ஊதிய போர்டு சிபாரிசுக்கு ஏற்பவோ, சிக்கனச் சீரமைப்பு இல்லை என்று, பி. அண்ட் சி. மில் நிர்வாகம் இந்த சீரமைப்பின் பேரால் பல தொழிலாளர்களை இன்றைய தினம் வேலையை விட்டு நீக்கியிருப்பதைக் கண்டிக்கிற வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

தொழிலாளர் வாழ்வு பாதிக்கப்பட்டால், தொழிலாளர்களுடைய உள்ளம் வாடுவதற்கான நிலைமைகள் தோன்றுமேயானால், நாம் எதிர்பார்க்கிற உற்பத்தி

அதுவும் இந்த நெருக்கடியான நிலையில் நாம் எய்த முடியுமா, நாம் அடைய முடியுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனக்கு முன் பேசிய கனம் மதியழகன் அவர்கள் தொழில் துறை பெரும்பாலும் தனியார்துறை வசமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். இந்த மாமன்றத்தில் 1957-ம் ஆண்டிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் இடம் பெற்ற நேரத்திலிருந்து, பொதுத் துறையை வளர்க்க வேண்டுமென்றும், தனியார் துறைக்கு ஆக்கம் அளிக்கிற போக்கினை அரசினர் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்திக் கொண்டு வந்திருக்கிறோம்.

எந்த தனிப்பட்ட முதலாளியும் நாட்டில் இருக்கிற ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தொழிலை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தோடு ஆரம்பிப்பதில்லை. லாப நோக்கத்தோடு, தனக்கு எவ்வளவு லாபம் கிட்டும் என்று லாபக் கணக்கைப் பார்த்துக் கொண்டுதான் முதலாளி வர்க்கத்தினர், தனியார் துறையில் தொழிலில் ஈடுபடுகிறார்கள். தனியார் தொழில்களுக்கு அரசாங்கம் எல்லாச் சலுகைகளையும் தந்து, தனியார் துறையை மேலும் மேலும் ஊக்கப்படுத்திக்கொண்டு போவதும், கேட்டால், இதற்கு பெயர்தான் ஆவடி சோஷலிசம் என்று கூறுவதும், இந்த கலப்பட பொருளாதாரம்தான் காங்கிரஸ் கட்சியின் தத்துவம் என்று கூறுவதும், உள்ளபடியே முற்போக்கு சக்திகளால் ஒத்துக்கொள்ளக் கூடிய நிலை அல்ல என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தனியார் துறைக்கு அரசினர் மூலம் தரப்படுகிற கடன் அல்லது நிதிக் கார்ப்பொரேஷன் மூலம் தரப்படுகின்ற உதவிகள் எப்படி எப்படி தரப்படுகிறது என்றால் யாரோ சில வேண்டியவர்களுக்கு, அதிகாரத்திலே இருப்பவர்களுக்கும் அந்த முதலாளிகளுக்கும் உள்ள தொடர்பு, சொந்தம், பந்தம், பாசம், இவைகளை வைத்துத்தான் தரப்படுகிறது என்று நான் சொன்னால் அதை இந்த அமைச்சரவை உளமார மறுக்க முடியாது என்று நான் கூறிக்கொள்வேன். அந்த நிலை இங்கு மாத்திரம் இல்லை.

இந்தியாவிலேயே, இந்த நிதைக் கமிஷன்பற்றி ஆராய்வதற்காக, திருமதி. சுசேதா கிருபாலானி, 1955-ம் ஆண்டில் என்று கருதுகிறேன், அப்போது போடப்பட்ட குழுவுக்குத் தலைவராக இருந்த அவர்களே இதைச் சொல்லியிருக்கிறார்கள். வேண்டியவர்களுக்கு இப்படிப்பட்ட உதவிகள் தரப்பட்டு, தனிப்பட்ட முதலாளிகளுக்குச்

சலுகைகள் தரப்படுகின்றன என்று அவர்கள் அந்தக் குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

ஆகவே தனியார்துறை நீக்கப்பட்டு, பொதுத் துறைக்கு இந்த சர்க்கார் தங்களை இழுத்துக்கொள்ள வேண்டுமென்று நான் மிக மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்வேன்.

அமைச்சர் சொல்லலாம், தனியார் துறையில் பணம் இருக்கிறது அவர்களிடத்தில்; நாமும் கொஞ்சம் பணம் கொடுக்கிறோம்; ஆகவே தொழில் துறையை விருத்தி செய்யக்கூடிய நிலையில் அவர்களுடைய முதலீடு உள்ளது, உதவி செய்யக்கூடிய நிலையில் உள்ளது நாங்கள் தரும் பணம் என்று. நான் அவர்களுக்கு யோசனை வழங்குவேன். அமைச்சர் அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வேன். ஏன் அரசாங்கம் ஒரு தொழிலுக்கு 50 சதவீதம் முதலீடு செய்து, மிச்சம் உள்ள பணத்தைப் பொது மக்களிடத்தில் வசூலிக்கக் கூடாது?

பொது மக்கள் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார்களா? பங்குதாரர்களாகச் சேர மாட்டார்களா? இன்றைய தினம் பொது மக்கள் பங்குதாரர்களாகச் சேரவில்லையா? தனிப்பட்டவர்கள் ஆரம்பிக்கிற தொழில்களில் பொது மக்கள் பங்கெடுத்துக்கொண்டு அவர்களையே நம்பிப் பங்குப் பணம் போடுகிற நேரத்தில், நம்பிக்கையும், நாணயமும் நிறைந்த சர்க்காரை நம்பிப் பொது மக்கள் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கருதுகிறார்களா? பொது மக்கள் பணம் சரி பகுதி அல்லது நிர்ணயிக்கிற பகுதி பொது மக்களிடத்திலிருந்து பெற்று, அரசினர் இன்ன சதவீதம் தருவது என்று நிர்ணயித்து பொது மக்களும் அரசினரும் சேர்ந்தாவது பொதுத் துறைத் தொழில்களை நடத்தலாம்.

இப்படி ஒரு முறையையும் இத்துடன் அரசினர் எல்லாத் துறைகளையும் எடுத்து நடத்துவது என்ற இன்னொரு முறையையும் இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

சென்ற ஆண்டு அமைச்சர் அவர்கள் பதில் சொல்லுகிற நேரத்தில் குறிப்பிட்டார்கள், தனியார் துறையில் அவர்கள் நடத்துகிற பெரிய தொழில்களில் பெரும் லாபம் அடைந்தாலும், பெருமளவுக்கு வரி போட்டுப் பிடுங்கிக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், தும்பை விட்டு

விட்டு வாலைப் பிடிக்கிறோம்; நேராக மூக்கைத் தொடுவதற்கு பதில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறோம் என்கிற வாதமாகத்தான் எங்களுக்குத் தெரிகிறது. ஆகவே தொழில் துறையைப் பொறுத்தவரையில் பொதுத் துறைக்கு, தீவிரமாக, அவசர அவசரமாக இந்தத் துறை மாற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடைசியாக பொருளாதாரத் திட்டத்தை அகில இந்திய ரீதியில் வைத்திருக்கிற காரணத்தினால்தான் சில பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. முன்னேற முடியாத காரணத்தை எடுத்துக் கூறும்போது, எங்களால் மாத்திரம் சொல்லப்படுகிற கருத்து அல்ல, அமைச்சராக வீற்றிருந்து, தற்சமயம் ஆளும் கட்சி உறுப்பினராக இருக்கிற மதிப்புக்குரிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், நேற்று அல்ல, சென்ற கிழமை அல்ல, 1955-ல் சொல்லியிருக்கிறார்.

“நம் ராஜ்யத்தில் எவ்வளவு வரி போட முடியுமோ, அந்த அளவுக்குப் போட்டாகிவிட்டது. மத்திய சர்க்காரிடமிருந்து கிடைப்பது அதிகமாயில்லை. மத்திய சர்க்காரிடம் உதவி வேண்டும் என்று கேட்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் குறைவு. தலைவிதி என்று நினைத்துக்கொண்டு நாம் சும்மா இருந்து விடுகிறோம். மத்திய சர்க்காரிடம் இதை வற்புறுத்த வேண்டும். அழுகிற பிள்ளைக்குத்தான் ஏதாவது கிடைக்கும். ஆகையினால் தமிழ் நாட்டு மக்கள் அதிகக் கூச்சல் போட வேண்டும்.

அப்போதுதான் ஏதாவது கிடைக்கும். நமது மந்திரிகள் மத்திய சர்க்காரிடம் சண்டை பிடித்து வெற்றி காண வேண்டும்” என்று 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் நாள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கூறியிருக்கிறார்.

ராஜா சர் முத்தையா செட்டியார், காங்கிரஸ் கட்சிக்கு இன்றைக்கு மிக மிக வேண்டியப் பிரமுகர், அவர் சொல்லியிருக்கிறார், “இங்கே உட்கார்ந்துகொண்டு பேசிப் பிரயோசனமில்லை, டில்லிக்குச் செல்லுங்கள், அங்கு சென்று சண்டை போடுங்கள், டில்லிக்குச் செல்லுங்கள், டில்லி சலோ, டில்லி சலோ” என்று இந்த மன்றத்தில் பல தடவை குறிப்பிட்டிருக்கிறார்.

அவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்தால், நாங்கள் மாத்திரம்தான் சொல்லுகிறோம் என்பதில்லை. அந்தந்த

மாவட்டத்திற்கு, அந்தந்தப்பகுதிகளுக்கு இன்னின்ன தொழிற்சாலைகள் வேண்டும் என்று எதிர் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்களும் உங்களைப் பார்த்து தைரியமாகக் கேட்கிறபோது, அந்த தைரியத்தை பெற்று, டில்லி சென்று, தெளிவாக, தைரியமாக வாதாடி, தமிழகம் வாழ்வதற்கு, தமிழகத்தில் தொழில்கள் சிறப்பதற்கு, தொழில்கள் மூலம் தமிழகம் வளம் பெறுவதற்கு, தமிழக மக்களுடைய வாழ்க்கை நலம் பெறுவதற்கு, உறுதுணையாக இந்த அமைச்சரவை போராட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை முடிக்கின்றேன்.