உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 1

பகுதி 1 · 1 / 2

**தொழில்துறை பற்றி**

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

**உரை : 1**

**நாள் : 21.03.1963**

**கலைஞர் மு. கருணாநிதி :** சட்டமன்றத் துணைத் தலைவர் அவர்களே, இன்று தொழில்துறை மானியத்தின்மீது எதிர்க்கட்சி நண்பர்கள் தந்திருக்கிற வெட்டுப் பிரேரணைகளை ஆதரித்து என் கருத்துக்களை இங்கு கூற விரும்புகிறேன். எனக்கு முன் பேசிய ஆளுங்கட்சி அம்மையார் அவர்கள் கோவை மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சி அடைய ஆரம்பித்து தற்போது ஒரு மந்தமான நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது மாவட்டத்தைப்பற்றிமட்டும் குறிப்பிட்டார்கள். நாங்கள் இந்த மாநிலத்தைப் பொறுத்தே குறிப்பிடுகிறோம். அவ்வளவுதான் “மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது தொழில் வளர்ச்சியில்”, என்று அம்மையார் அவர்கள் கூறிய அந்த வாக்கியத்தின் அடிப்படையில்தான் என் பேச்சு இங்கு அமைகிறது என்பதை முதலில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேசிய எங்கள் தோழர்கள் அனைவரும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்திய நேரத்தில் ஆளும் கட்சியில் உள்ள நண்பர்கள் எல்லாம் இது பழைய பல்லவி, ஒருவர் பல்லவியை ஆரம்பித்தார், மதியழகன் அனுபல்லவிக்கு வந்திருக்கிறார் என்று நண்பர் மாதா கவுடர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நாங்கள் பல்லவி, அனுபல்லவி என்ற

நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் டெல்லிக்குப் போய் சண்டை போடாமல் சரணம் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதற்காக வருந்துகிறேன்.

தொழில்துறை மானியத்தின்மீது பேசுகிற நேரத்தில் பின்தங்கிக் கிடக்கிற தமிழகத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு மேலும் பல தொழில் நிலையங்களை உருவாக்கவும், தொழில் துறையில் அதிக கவனம் செலுத்தவேண்டுமென்றுதான் நாங்கள் கூறுகிறோம். வடக்கு தெற்கு என்று பேசுகிற காரணத்தினால் வடக்கு என்ற திசையின்மீதே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கோபம் என்று யாரும் கருதிவிடக் கூடாது.

எங்கள் கழகத் தோழர் சீராமுலு அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் இங்கு பேசியபோது குறிப்பிட்டார்கள், “தெற்கு சேலம் வாழ்கிறது, வடக்கு சேலம் வாடுகிறது”, என்று. இன்றையதினம் பேசிய ஆளும் கட்சியைச் சார்ந்த ராஜாராம் அவர்கள் தென் ஆற்காடு மாவட்டத்தில் “தெற்குப் பகுதி வாழ்கிறது, வடக்குப் பகுதி வாடுகிறது” என்று குறிப்பிட்டார்கள்.

ஆகவே இந்தப் பிரச்சினை ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் எழுகிற பிரச்சினையே தவிர திசையைப் பொறுத்து ஏற்படுகிற நிலை அல்ல.

தொழில் துறையில் பின்தங்கிக் கிடக்கிற தென்னகம் தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிற முயற்சிகள் இவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். நம் தொழில்துறை அமைச்சர் அவர்கள் சுலபமாகச் சொல்லிவிடுவார்கள். நேற்று திரு. அரங்கண்ணல் அவர்கள் பேசியபோது அதற்குப் பதில் கூறிய அமைச்சர் “பிரசங்கங்களால் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது”, என்று குறிப்பிட்டார்கள். சட்ட மன்றம் என்று ஒன்று கூடி இங்கு விவாதம் நடைபெறுவதற்குக் காரணமே இங்குச் சொல்லப்படுகிற கருத்துக்கள் அமைச்சர்களின் உள்ளத்தில் பதிந்து அந்தந்த வட்டார உறுப்பினர்கள் இங்கு எடுத்துக் கூறும் குறைகளுக்கு பரிகாரம் காணப்படவேண்டும் என்பதுதான்.

அவற்றைத் தொகுத்து நம் மாநில அமைச்சர்கள் டெல்லியில் இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி ஆவன செய்யவேண்டுமென்பதற்காகத்தானேயன்றி வேறு அல்ல.

அப்படி என்ன தமிழகம் பின்தங்கிக் கிடக்கிறதா என்று கேட்டவர்களுக்கு சில புள்ளிவிவரங்களை என்னால் தர முடியும். பம்பாய் மாநிலத்தில் இருப்பவர்களில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 43. அவர்களால் பாதுகாக்கப்படவேண்டியவர்கள் 57 பேர்கள். தமிழகத்தில் சம்பாதிப்பவர்கள் 31. அந்த 31 பேர்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் 69 பேர்கள் இருக்கிறார்கள். இதை மறந்துவிடக் கூடாது. தமிழகத்தில் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கிற விவசாயியின் ஆண்டு வருவாயை விட வட மாநிலங்களிலுள்ள உழவனின் வருவாய் ஏறத்தாழ 200 ரூபாய் அதிகமாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மூன்றாவது திட்ட இறுதியில் தொழில்துறை வருமானம் இந்தியாவில் கிழக்குப் பகுதியில் 54.60 சதவிகிதமாக உயரும். அகில இந்திய தொழில்துறை வருமானமும் 34.94 சதவிகிதமாக உயரும். ஆனால் தென்னகத்தில் 17.90 சதவிகிதம்தான் இருக்கும். இது சமநிலையில்லாத முறையில் பிரதேசங்களை வளர்ப்பதன் போக்கு. இது இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் ஒப்பினியன் பொருளாதார அறிக்கையில் இருப்பதாகும்.

குறிப்பாக பிரதேச வருமானம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போமானால் 1950-51 லிருந்து 1965-66 வரை உள்ளதை கவனிப்போம். ஆந்திராவை எடுத்துக்கொண்டால் 73.31 சதவிகிதம், கேரளாவில் 63.53 சதவிகிதம், தமிழகத்தில் 79.61 சதவிகிதம், மைசூரில் 82.01 சதவிகிதம், ஒரிசாவில் 229.37 சதவிகிதம், பஞ்சாபில் 189.75 சதவிகிதம், டெல்லியில் 177.03 சதவிகிதம் இருக்கின்றன. தமிழகத்தின் வருமானம் 79.61 சதவிகிதம்தான். இது பொருளாதார அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

பிரதேச வாரியாக தொழிற்துறையில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு நபரின் சராசரி வருமானம் எவ்வளவு என்று பார்க்கலாம். ஆந்திராவில் 31.24 சதவிகிதம், கேரளாவில் 12.70 சதவிகிதம், மைசூரில் 29.56 சதவிகிதம், ஒரிசாவில் 166.77 சதவிகிதம், டெல்லியில் 60.19 சதவிகிதம், தமிழகத்தில் 39.99 சதவிகிதம் என்ற நிலையை காண்கிறோம். தமிழகத்தைவிட குறைந்திருக்கிற வட மாநிலங்களின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடாமல் அதிகமாக உள்ள மாநிலங்களோடு ஒப்பிடுகிறீர்களே, இது உங்கள் பிரச்சாரத்திற்காக அல்லவா என்று தொழில் அமைச்சர் அவர்கள் சொல்லக்கூடும்.

“தம்மில் மெலியாரை நோக்கித்

தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க!”

என்று காட்டப்படுகிற தத்துவப் பொன்மொழியை அரசியல் துறையில் இழுக்க வேண்டாம். சராசரி வருமானம் பிற மாநிலங்களில் எவ்வளவு உயர்வாக இருக்கிறது, தமிழகத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டுவது, நாம் எந்தளவு பின்தங்கிக் கிடக்கிறோம் என்பதை எண்ணி நம் தொழில் வளத்தையும், பொருளாதார வளத்தையும் பெருக்கிக் கொள்வதற்காகத்தான். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பது பேராசைக்காரனிடம் கூற வேண்டிய உபதேசமே தவிர, பெரும் பசிக்காரனிடம் சொல்லும் பழமொழியாக இருத்தல் கூடாது.

“கிட்டாதாயின் வெட்டெனமற” என்பதை டெல்லியைக் கேட்டுப்பார்த்து அவர்கள் தர மறுத்த பிறகு நீங்கள் கையாளும் அறிவுரையாகக் கொள்ளாமல் “முயற்சி திருவினையாக்கும்” என்ற முனைப்புடனும் “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உற்றுபவர்” என்று கனம் உறுப்பினர் ஈரோட்டார் கூறிய குறள் வழிக்கிணங்கவும் செயல்படவேண்டும் எனக் கூறுவேன்.

தமிழகத் தொழில்துறை வளர டெல்லியிடம் மேலும் போராடுங்கள்.