தென்னவன் காதை
பகுதி 1 · 1 / 10
குறுந்தாடி, குள்ளத்தாடி, நெடுந்தாடி, வெள்ளைத்தாடி
இப்படிப் பல தாடியுடனே......
புராண அங்காடி விரித்துப் புளிக்கும் பழங்காடி சுவைத்துப்
போதையேறிக் கூத்தாடும் பூசுரர்கள் கூட்டம்...
மாசு, மறு அற்றிருந்த மண்டிலத்தின் ஓரம்
மாடுகளை, ஆடுகளை மனிதர்களை வெட்டிப் பிண
மேடுகளை வேள்விக்கென குவித்துவந்த வேளை!
ஆரியரின் படையெடுப்பால்... இல்லை...
இடை நெளிவால்—கடை விழியால்—இருடிகளின்
இன்பரச பானத்தால்—இருண்டுவிட்ட தென்புலத்தில்
எற்றிவிட்ட விளக்கு போல
எழுந்து நின்றான் இலங்கை வேந்தன்!
அவன் சரிதம் சொல்வதென்றால்... தசையெல்லாம்
ஆடுதய்யோ! திசையெட்டும் புகழ் சேர்த்த
தென்னிலங்கைக் கோமான் திராவிடரின் மூதாதை!
பழத்தமிழின் பால் பற்றுதலை வைத்தநம்பாட்டன்.
★
கண்ணுக்குள் பாவை போல் இலங்கைத் தீவு.
கருவிழிதான் ஆழ் கடல்கள்! தமிழ்
மண்ணுக்குப் புகழ் தந்த பெருவீரன்.
உருவில் சிங்கம், உள்ளம் தங்கம்! யாழ்ப்
பண்ணுக்கு யாரும் நிகரில்லையென வாழ்ந்த
யாழ்ப்பாணத் திருநாட்டான்—மலைத் தமிழன்!
அவன் துணைவி, வண்டமரும் பூங்குழலாள்
மண்டோதரி—மாதர் குல மாணிக்கம்—எதிர் வீணை மீட்டும்
பேச்சுக்காரி!... இராவணனின் யாழோசை
