உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

தலைகேட்டான் தம்பி

பகுதி 5 · 5 / 5

தம்பியவன் கழுத்தறுத்தாய் -தலையறுத்துத் தருபவர்க்குப்

பொன்பரிசு தருவதாக வாக்களித்தாய் -

அவன் தலையறுத்த வாள் இதுதான்

தந்திடுவாய்ப் பரிசை” என்றார்.

அண்ணனின் வாள் கண்டான் -

வாள்முனையில் செங்குருதி தனைக் கண்டான்.

வீழ்ந்தாயோ அண்ணா! என்று வீறிட்டு அலறிவிட்டான்

விஷ உள்ளம் - வெறியுள்ளம்-

அண்ணன் உயிர்தந்த செய்தியாலே

வெடிவைத்த மலைபோலச் சிதறிற்று - வெள்ளையுள்ளம்

தம்பியுள்ளம் வாய்விட்டுக் கதறிற்று.

“ஆவிதரநேரிடினும் அருந்தமிழ்க்கே தருவேனென்று

காவியுடைக் குமணனவன் கானகத்தில் உரைத்திட்ட பொன்மொழியை

பாவி நீ புரிந்திட்ட பாதகத்தால் யான் கற்றேன்

தாவி நீ ஓடிச்சென்று அன்னவனின் தாள்பணிந்தால்

தமையன் உயிரல்ல; தமிழுக்கே உயிர் வந்துவிடும்

தயங்காமல் வந்துவிடு; தடவிப்பார் வாள்முனையை!

ரத்தமல்ல; செவ்வண்ணம்” என்றுரைத்தார்

ஏன் நிற்பான் இளங் குமணன்?

தேன் விற்பார் தமைச் சுற்றும் ஈக்கள்போல்

வான் தமிழால் கவிதை பின்னும் புலவர்கூட்டம்

வட்டமிடும் குமணமன்னன் காலடியில்

வணங்கி வீழ்ந்தான்- வள்ளல் தழுவிக் கொண்டான்

தமிழ்ச் சாத்தனார்க்குத் தலையைக் கொடையாய்த் தரச் சம்மதித்தோன்

தம்பிக்கும் ஒரு மன்னிப்பைக் கொடையாய்த் தந்தான்

தம்பி, குடையைத் தந்தான் தனக்கினி வேண்டாமென்று;

அதனை அண்ணன் தமிழுக் கீந்தான்!