மறத்தி
பகுதி 1 · 1 / 5
காவிரிதந்த தமிழகத்துப் புது மணலில்
களம் அமைத்துச் சேரசோழ பாண்டிமன்னர்
கோபுரத்துக் கலசத்தில் யார்கொடிதான் பறப்பதென்று,
இன்றுபோல் ...
போர்தொடுத்துக் கொண்டிருந்த காலமது; அந்நாளில்
ஓர் களத்தில்,
தாய்நாடுகாக்கத் தாவிப்பாய்ந்து செத்தார்
தந்தை என்ற சேதிகேட்டு, தணல்வீழ் மெழுகானாள்
தமிழகத்துக் கிளியொருத்தி!
அனல்போலும் கண்ணுடனே, அயலூர் சென்றிருந்த,
அவள்கணவனும் வந்திட்டான்!
புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி
தந்திட்டாள்!
தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய் என்றான்.
இல்லை அன்பா!
முல்லைசூழ் இந்நாட்டுப் படையிலோர் வீரர் குறைந்திட்டால்.
நல்ல உடையிலோர் கிழிசல் வந்தது போலன்றோ?
இனித் தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்;
அடைபட்ட கண்ணீர், அணை உடைத்ததாம் என்றாள்.
அவன்,
குகைவிட்டுக் கிளம்பும் ஒரு புலியென,
புகைவிட்டுக் குமுறும் எரிமலையென,
பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான்;
சூளுரைத்தான் சுடர்முகம் தூக்கினான்;
