உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 77 · 77 / 77

சர்வாதிகாரச் சல்லாப உல்லாசங்கள்!

சப்ர கூட மஞ்சத்தில்

எதேச்சாதிகாரத்தின்

ஏகபோகக் கேளிக்கைகள் - அந்த

இன்பக் கூத்தின் இடையே யாரும்

'இம்' என்றால் சிறைவாசம்!

'ஏன்' என்றால் வனவாசம்!

அஃதோர் வாழைமரம்!

அதன் கன்றே அதனைச் சாய்க்கும்!

ஏனோ தெரியவில்லை-

ஜனநாயக ஆலமரம்,

அந்த மண்ணில் விழுது விடுவதேயில்லை!

ஏன் தெரியவில்லை?

அடிமரத்தை வெட்டித்தான்

ஆணிவேரையும் பிடுங்கிவிட்டார்களே!

இந்தியாவின் கங்குகளில்

இரு நாடுகள் முளைத்தன!

அங்கே.

இரத்தக் கழனியில்தான்

ஆட்சிப் பயிர்கள் விளைகின்றன!

முடிந்தது வாழ்வு முஜிபூருக்கென்று

வடிந்தது குருதி நம் விழிகளில் எல்லாம்!

ஆனால்

விடிந்தது ஒரு நாள்! வங்க பூமி

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

மலர்ந்தது! மலர்ந்தது! மகிழ்ந்தது உலகு!

வங்க பந்து என வாழ்த்தினர் அவரை -

அந்தத்

தங்கபந்துவின் தலையைப் பந்தாய்

தரையில் உருட்டி ஆடிக்களித்தனர்!

இதோ இன்னொரு பந்தாட்டம்;

வங்கதேச விளையாட்டு அரங்கில்!

ஜியாவுர் ரகிமானின் கபாலப்பந்து

"கோல் கீப்ப"ரைத் தாண்டி

சதிவலையில் சிக்கி உருண்டு

இரும்புக் கம்பத்தில் மோதி உடைந்தது!

சர்வாதிகாரம்;

அஃதோர் வாழைமரம் -

அதன் கன்றே அதனைச் சாய்க்கும்!

வங்க தேசத்தில்

ஜனநாயக வாடை கொஞ்சம் வீசியது

அதனையும் தடுத்து

இராணுவ தர்பாருக்கு

இரத்தினக் கம்பளம்

விரித்திடும் வேலை வேகமாய் நடக்கிறது!

சில நாடுகள் இருக்கின்றன!

அங்கே;

ஜனநாயகக் குழந்தை

"ஜனிப்பதே" இல்லை!

தப்பித்தவறி பிறந்து தவழ்ந்தால்

தலையை நறுக்கிச் "சூப்பு" செய்வார்!

இதுவே இன்று,

வங்கம் வழங்கும்

வேதனைச் செய்தி!

உன் காலணியை வாழ்த்துகிறாய்

ஐம்பத்தி ஏழு பிறந்த நாள் இன்றுன்

அன்பின் அடிமை பிறந்த நாள் இன்று!

நடந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதும்

நடக்கும் பாதையில் வழுவாதிருப்பதும்

அரிமா நோக்கெனப் புகல்வர் அறிஞர்

அடியேன் அரிமா அல்ல எனினும்

கடந்த வழியைக் கருத்தில் கொண்டு

தொடர்ந்து புரிவேன் தமிழினத் தொண்டு!

கோளிலி என்பது எனை விதைத்த ஊர்-திருக்

குவளையூர் என்றும் தீந்தமிழ் பேசும்!

நாற்றுப் பயிராய் அவ்வூர் வளர்ந்து - தென்றல்

காற்றுத் தமிழை திருஆரூர் பயின்றேன்!

ஈரோட்டுப் பள்ளியில் இனமானக் கல்வி - அறிவுத்

தேரோட்டிக் காஞ்சியில் இலட்சியக் கல்வி!

இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்க

முந்திக் கிளம்பிய தமிழர் படையில்

இளைஞர் அணியை அன்றே கண்டு

இரண்டறக் கலந்தேன் இயக்க நடப்பில்!

அன்று முதல் இன்று வரை

அய்யா பெரியார் அணைப்பு!

ஆரத்தழுவிடும்

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

அண்ணாவின் ஈர இதய நனைப்பு!

அன்பு உடன்பிறப்பே! எனக்கு

உனையின்றி வேறென்ன நினைப்பு!

தண்டவாளத்தில் படுத்த போதும்-

தனிமைச் சிறையில் வறுத்தபோதும் -

கண்ட அண்ணன் வடித்த கண்ணீர் - என்

களைப்பைத் தீர்க்கத் தெளித்த பன்னீர்!

ஆண்டு இருபதைக் கடந்த வயதில்

பாண்டியில் என்னை வதைத்த காலை

தந்தை பெரியார் தடவிய மருந்தே

சிந்தை குளிர்ந்த அமுத விருந்தாம்!

என்

அஞ்சுகத்தாய் முத்துவேலர்

எனைப்பெற்ற போது-

இசைபாடி மகிழ்விப்பான்

இவனென்று காத்திருந்தார்!

இவனோ;

வசைபாடும் அரசியலின் மத்தியிலே

வசமாகச் சிக்கிக் கொண்டான்!

இலட்சியமென்பது:

எட்டிப்பறித்திடும் மல்லிகையல்ல!

ஏறிப்பறித்திடும் மாங்காயும் தேங்காயுமல்ல!

எதிர்நீச்சல்! எரிமலைமேல் கொடி நாட்டல்!

இடையில் தோன்றிடும் ஆட்சி என்பது

நடையில் தோன்றிடும் களைப்பு நீங்க

இயற்கை வழங்கிடும் நிழற்கொடையென்று

இலட்சியப் பயணம் தொடர்தல் வேண்டும்!

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

அற்றகுளத்து அறநீர்ப் பறவைகள்

உற்றார் உறவினர் போல நடித்து

பற்றுக் கொண்ட பதவியைத் தேடி

விற்றுக் கொண்டார் தம்மை எனினும்

வில்லில் கணையாய் இருப்போம் என்றும்

வேலின் முனையாய் வாழ்வோம் என்றும்

சொல்லில் உறுதி காக்கும் கூட்டம்

கல்லில் எழுத்தாய் மின்னிடும் போது

கவலை எதற்கு எனக்கு?

கழகம் தான் நமக்குக் கிழக்கு!

குதிரை, கீழேதள்ளிக் குழியும்

பறித்தது என்பர்! இங்கே நம்மைக்

குதிரையாக்கிச் சவாரி செய்தோர்

நமக்கே குழிபறிக்க வந்தகதை!

ஏறிய ஏணியை உதைத்த கதை!

நன்றி கொன்ற கதை!

கதையாகப் போன இத்தனை வதைகளையும்

கண்மணியே! உடன்பிறப்பே!

உனை நினைத்தே தாங்கிக் கொண்டேன்!

வாழ்த்துக்கின்றாய் என்னை!

வணங்குகின்றேன் உன்னை!

நீ வாழ்த்துவது; கிரீடத்தையல்ல!

கிரீடம் இருந்தாலும் இல்லா

விட்டாலும் வாழ்த்தும் பண்பு

கொண்ட உடன் பிறப்பு நீ!

உனக்காக உழைக்கின்ற இந்தக்

காலணியை வாழ்த்துகின்றாய்!

⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧

இதற்குத்தான் மெருகு போடுகின்றாய்!

ஏழை எளிய உடன் பிறப்பு நீ!

தேய்ந்தாலும் இந்தக் காலணியை

ஓய்ந்துபோ என விடமாட்டாய்!

உனைவிட்டு அகலாமல்

ஓய்வின்றி உழைப்பதற்கே

உறுதி சொல்வேன்;

உடன் பிறப்பே இந்தப் பிறந்த நாளில்!

(கலைஞர் தனது 58-வது பிறந்தநாள்

செய்தியாக எழுதியது)